எழுவகைப் பெண்கள்: 8. பெண் உடலியல் வேதத்தைத் துறந்தோம் – மறந்தோம்

0

அவ்வை மகள்

மூலாதாரம் என்கிறீர்களே அது பற்றி மேலும் விளக்கமுடியுமா என்றவரிடம், “மூலாதாரத்தை விளக்கவேண்டுமெனில், அதற்கு நான் அவ்வையைத் துணைக்கழைக்க வேண்டும். அவ்வை எங்கள் ஊரில் ஒரு சிறப்பு மிக்க பெண் புலவர் – விவேகி” என்றேன்.

“விவேகி என்று நீங்கள் சொன்னதும் எனக்குப் பெண்களின் விவேகம் பற்றிய எண்ணம் எழுந்தது அதுபற்றி பேசிவிட்டு மூலாதாரம் பற்றிப் பேசலாமா அல்லது மூலாதாரம் பற்றிப் பெண்களின் விவேகம் பற்றிப் பேசலாமா?” என்றார்.

“ஏறக்குறைய நானும் அதே மனோநிலையில் தான் இருந்தேன். நான் உங்களைச் சந்திக்கும் முன்பு, ஒரு ஆண் போலீஸ் அதிகாரியைச் சந்தித்துப் பேசினேன். பெண்களின் விவேகம் பற்றி அவர் சொன்னவற்றை என் சிந்தனையில் தடம் பதித்து வைத்திருக்கிறேன்.

உங்களிடமும் பெண்களின் விவேகம் பற்றிப் பேசவே எண்ணியிருந்தேன். நீங்களே அதனை முன்வைத்ததற்கு நன்றி. மூலாதாரம் பற்றிப் பேசிவிட்டு விவேகத்திற்கு வருவோமே!” என்று தொடர்ந்தேன்.

மூலாதாரம் என்பதனை Ultimate Origin என்றேன் அல்லவா?. மூலாதாரம் என்பதில், மூலம் மற்றும் ஆதாரம் ஆகிய இரண்டு தனிப்பெரும் சொற்கள் அடக்கம். இந்த இரண்டு சொற்களும் சொற்பச் சொற்கள் அல்ல வெளிப்பார்வைக்கு எளிமையாய் இருப்பினும் இவை பன்முகப் பரிமாணம் கொண்ட பவித்ரமான நுட்பச் சொற்கள்.

முதலில், “மூலம்” எனும் சொல்லை கவனிப்போம். மூலம் என்றால் அதற்கு ஐந்து பிரதானமான அர்த்தங்கள் உண்டு. ஒன்று: Starting Point; இரண்டு: Roots; மூன்று:Seedling; நான்கு: Passage; ஐந்து: Gate. தமிழில் முறையே, அடிப்படைப் புள்ளி, வேர்கள், நாற்று, வழி, வாயில் ஆகியன.

“வேர்கள்” என்று பார்த்தால் முவ்விதமான வேர்கள் இருக்கின்றன: (1) ஆணி வேர் (Tap Rot); (2) சல்லி வேர் (fibrous Root); (3) இணை வேர் (Adventitious Root) .

ஆதாரம் என்பதும் ஒருபன்முகச் சொல். Foundation அல்லது Basement அல்லது Anchor அல்லது Basic Constructional Frame அல்லது Fundamental Structural Unit எனப்பொருள்படும். இவற்றை முறையே தமிழில், அஸ்திவாரம்/கடை கால், அடித்தளம், நங்கூரம், அடிப்படைக் கட்டிடச் சட்டம், அடிப்படை அச்சு என்று கூறலாம்.

பெரினியம் என்பது நான் மேற்குறிப்பிட்ட பன்முகங்களிலும் மூலமாகவும் ஆதாரமாகவும் செயல்படுவதால் அதற்கு மூலாதாரம் என்று பெயர். ஆணின் மறை உறுப்புச் சந்தியும் கூட, பெரினியம் என்றேதான் அழைக்கப்படுகிறது என்றாலும், பொதுவாக, மூலாதாரம் எனும்போது அது பெண்ணின் பெரினியத்தையே பெரிதும் குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது. இது ஏனெனில் ஆணின் பெரினியத்திற்கு சிருஷ்டி ஆற்றல் கிடையாது. அங்கே ஜனனம் நிகழ்வதில்லை. சொல்லப்போனால், பெண்ணின் பெரினியத்தை சிருஷ்டி அடுப்பு என்றும் அக்கினி குண்டம் என்றும் அழைக்கின்றனர். அக்கினி என்றால் Fire – அது தீ – நெருப்பு – வெப்பக்கனல்.

ஆணின் பெரினியத்தில் அக்கினி இல்லை – வெப்பம் என்பது விந்து உற்பத்திக்கு எதிரி. ஆணின் சொந்த உடலின் வெப்பத்தைக் கூட விந்து உற்பத்தி தாங்காது என்பதால் அவனது உடலில், ஆணுறுப்பு உடலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கிறது. உடலின் வெப்பம் ஆணுறுப்பில் இடிக்காமல் (Conduction) – படராமல் (Convection), வீசாமல் (Radiation) இருக்க இயற்கை செய்துள்ள ஏற்பாடு இது.

ஆனால், சிருஷ்டி ஆற்றலின் கர்த்தாவான பெண்ணுக்கோ, அவளுடலினுள்ளே அவள், உயிருள்ள உருவங்களைச் சமைக்கும் பணி – பணிக்கப்பட்டிருக்கிறது.

தனது கருவிலே ஒரு ஆன்மாவிற்கு, உயிரூட்டி, அதற்கு உடல் சமைக்கும் பணி அவளுடையது. அந்த சமையல் பணிக்கு அக்கினி வேண்டும் அல்லவா? அதுதான் இந்த அக்கினி – உண்மையில் – பெண்ணுக்கு பெரினியக் குழியில், சிருஷ்டிக்கென, அதி வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது.

“கொஞ்சம் இதை “this heat requirement” மேலும் விளக்க இயலுமா/” என்றார்.

கொஞ்சம் அடிப்படையிலிருந்து வந்தால் இது விளங்கும். விலங்கின சிருஷ்டியில் இருவித சிருஷ்டி வகைகள் உள்ளன – ஒன்று முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது மற்றொன்று குட்டி போடுவது. முன்னதை Oviparous Germination என்போம்; பின்னதை, Viviparous Germination என்போம்.

தவளை, பாம்பு, பல்லி, ஆமை, பறவைகள் ஆகியன முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதைப் பார்த்திருப்பீர்களே. தவளையின் முட்டை நீருக்குமேலே மிதக்கும் பாசிக்கு மேலே அமர்ந்துகொண்டு ஒய்யாரமாய் மிதந்தபடி வெயில் காயும், ஆமையின் முட்டையும், பாம்பு மற்றும் பல்லியின் முட்டையும் மணலுக்குக் கீழே வெப்பம் காணும்- பறவைகளோ முட்டைமேல் அமர்ந்து அமர்ந்து – அடைகாத்துச் சூடேற்றி முட்டைக்கு வெப்பம் ஊட்டும். இந்தக் காட்சிகள் எல்லாம் சிருஷ்டிக்கு வெப்பம் தேவை என்பதை விளக்கவில்லையா? தவளை, பாம்பு, பல்லி, ஆமை ஆகியன குளிர் இரத்தப் பிராணிகள் – அவைகளுக்கு நிறைய சூடு தேவை. பறவைகளோ குறைவெப்ப இரத்தப் பிராணிகள் அவைகளுக்கு சாதாரண வெளிப்புறச் சூட்டோடு – கொஞ்சம் தாயின் வெப்ப ஒத்தடமும் தேவை.

மனிதன் எனும் உயிரியோ – உயர்வெப்ப இரத்தப் பிராணி – அதிகக்கடினமான – அதிக அழுத்தமான – அதிக பொருண்மை கொண்ட உடல் கொண்ட உயிரி – அதுவும் முட்டையாக மனிதன் வெளியே இடப்படுவதில்லை – முட்டையிலிருந்து மனிதன் பொரிக்கப்படுவதில்லை. பெண்ணின் உள்ளேயே கருஉருவாகி – உள்ளேயே – அது வளர்ந்து – சிசுவாகி – வெளிவரத் தயரான அந்த ஒரு நாளில், கருவறையின் உள்ளிருந்து வெளியே பிரசவமாகும் – குட்டி அல்லவா மனித உயிரி? எனவே மனித சிசுவை உருவாக்குவதற்கு உண்மையிலேயே அதிக வெப்பம் தேவைப்படுகிறது என்பது புரிகிறது அல்லவா?

எனவேதான், படைத்தல் தொழிலின் எழுவாயும், பய நிலையும், செயபடுபொருளுமாயும் இருக்கிற பெரினியத்தின் குழியிலே பெண்ணுக்கு, அவளது படைப்புத் தொழிலுக்குத் தேவையான எரிபொருள் வார்க்கப்பட்டிருக்கிறது. எனவே பெண்ணின் பெரினியக்குழி உண்மையிலேயே ஒரு அக்கினி குண்டத்தைப் போன்றது என்பதை அறிவியல் வழியாகவும் உணரமுடிகிறது.

“சரி, இந்த அக்கினிக்கு குண்டம் , ஒரு பெண் குழந்தை பிறக்கும்போதே இருக்கிறதா?” என்றார்

“ஆம் இருக்கிறது” ஆனால் அது சும்மா கிடக்கிறது வெறுமனே, அவள் பருவம் எய்தும் வரையில்.

ஒரு பெண்குழந்தை ருதுவாகும் அந்தத் தருணம்தான் இந்த எரிபொருள் அவளுடலிலே தனக்குத்தானே சுயம்புவாய் உள்ளிருந்து வார்க்கப்படுகிறது . இயற்கை அமைப்பில் – இறைமாட்சிமையின் ஒப்பற்ற ஏற்பாடு இது. உயிர்களைச் சமைக்கும் இறைவனின் மகத்தான பணியில் இறைவனின் பிரதிநிதியாகப் பெண் இயங்குவதால், எங்கள் தமிழ்க் கலாச்சரத்தில், ருதுவாகும் பெண்ணைப் பற்றிக் குறிப்பிட்டால், “பெண் சமைந்திருக்கிறாள்” என்பர். இந்த வழக்கு மொழியின் எளிமையையும் நயத்தையும் மட்டுமல்ல பெண் குழந்தை ருதுவாகும் நிகழ்வை, மஞ்சள் நீராட்டு விழா என்று ஒரு விழாவாக எடுக்கும், ஒப்பற்ற பெண் உடலியல் புரிந்து கொள்ளலையும் எங்கள் சமுதாயத்தில் பார்க்க முடியும்.

சமுதாயத்தில் உள்ள பெண் ருதுவாகுவது என்பது – “எங்கள் – சமுதாயத்துக்கு, எங்கள் மாநிலத்திற்கு, எங்கள் நாட்டுக்கு எதிர்கால சந்ததிகள் வருவது உறுதி – எங்கள் குலம் வாழும் – எங்கள் மண்ணுக்கு என்றும் தாழ்வில்லை!” என்று அப்பெண்ணின் குடும்பம் மட்டுமல்ல அந்த பெண்ணைச் சுற்றியுள்ள சிறு சமுதாயமே குதூகலிக்கும் ஒரு மனிதவள வைபவம் இது. இது பெருந்தன்மையோடு விசாலப் பார்வையோடு பார்க்கப்படவேண்டிய விஷயம். மட்டமான எண்ணங்கள் இங்கு கூடாது.

“எனக்கு ஸ்ரீலங்கன் நண்பர் இருந்தார் அவரும் இந்த “female puberty ritual” பற்றிச் சொன்னார்” என்றார் அந்த இராணுவ அதிகாரி.

ஸ்ரீ லங்காவும் தமிழ்க்கலாச்சாரம் உள்ள ஒரு நாடு தானே – ஒரு காலத்தில் – கடல் கொள்ளாது – மண்ணோடு மண்ணாய் நாமும் ஸ்ரீலங்காவும் ஒன்றாகவே இருந்திருக்கிறோமே. அங்கும் தமிழர்கள் இருந்தனர் – இன்னமும் இத்தனை நடந்தும் அங்கு தமிழர் இருக்கின்றனர் – எனவே அங்கும் மஞ்சள் நீராட்டு விழா நடக்க நிறையவே சாத்தியக் கூறுகள் உள்ளன. பொதுவாக, தமிழ்க் கலாச்சாரம் உள்ள அல்லது பரவியிருக்கிற இடங்களில் இந்தச் சடங்குகள் நடப்பதோ அல்லது பேசப்படுவதோ இயல்புதான். மலேசியாவில் கொண்டாடுகிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் பலரும் கூட, தாங்கள் வாழும் நாடுகளில் இன்றும் கூட இந்த வைபவத்தைக் கொண்டடாடுகிறார்கள்.

ஆனால் – நான் இதைச் சொல்கிறேன் என்று நீங்கள் தவறாக எண்ணக்கூடாது. “I had had very wrong notions about this female puberty ritual; when my Sri Lankan friend told me about it – I and other friends laughed and cut very nasty jokes at him – I was also very young at that time!’ என்றார்.

சார், உங்களுக்கு ஏற்பட்டிருந்த தவறான அபிப்ராயத்திற்கு உண்மையில் என்ன காரணம் என்று சொல்லமுடியுமா? என்றேன்.

“சடங்குகளுக்குள்ளே உண்மைகள் உள்ளன என்பதை உணராத அறியாமை” என்றார்.
சரியாகவே சொன்னீர்கள் – இந்த அறியாமை நிறைய பேரிடம் உள்ளது – அதுவும் பெண்கள் பற்றிய விஷயம் என்றால் எல்லோருக்கும் அது புரட்டிப் பேசவும் புரட்டு பேசவும் சல்லீசான விஷயமாகப் போய்விட்டது. இதில் இன்றைய எங்கள் சமுதாயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இன்றைய எங்கள் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் எங்கள் கலாச்சாரத்தின், உண்மைகளை உணவுபோல் ஊட்ட வசதி வாய்ப்புகள் உருவாக வேண்டும். காளான்கள் போல் மலிந்துகிடக்கிற கீழ்த்தரமான பெண் வர்ணனைகளும் – அதனால் மனிதர்கள் பெறுகிற அற்பமான இழி இன்பங்களும் சாடப்பட வேண்டும் – கண்டிக்கப்பட வேண்டும் – தண்டிக்கப்பட வேண்டும்!” என்றேன்.

“Amen – True – True – True” என்று கைகூப்பி வணக்கம் சொன்னார். நன்றி பாராட்டினேன் அவரது உண்மை விளம்பலுக்காக.

கடவுள் சாட்சியாக உண்மை – உண்மை – உண்மை!” என்று சொன்னவர், இந்த மஞ்சள் நீராட்டு விழாவில் வேறென்ன நான் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

நமது உரையாடலே பெண்ணின் உடலியலைப் பற்றியது – குறிப்பாக நாம் இன்றைய பணி செய்யும் பெண்களின் – இடை – தொடை – கால் பற்றிப் பேசிக்கொண்டு வருகிறோம். எனவே மஞ்சள் நீராட்டு விழாவில் பெண் உடலியல் சார்ந்த சாராம்சங்களைக் கொஞ்சம் கவனிக்கலாம் என்றேன்.

மஞ்சள் நீராட்டு விழாவில், ருதுவான பெண்குழந்தையின் இடுப்பெலும்பு உறுதிப்பட அதற்குரிய ஊட்டச்சத்து உணவுகள் – குறிப்பாக – உளுந்து எனப்படும் – Black gram கொண்டு தயாரிக்கப் பட்ட களி அவளுக்குத் தரப்படும். வெல்லப்பாகில் வறுத்த வேர்க்கடலை சேர்த்தது செய்த உருண்டைகளும் , பொரிவிளங்காய் உருண்டைகளும் தருவர். பொரிவிளங்காய் உருண்டை என்பது பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய இருவகைப் பருப்புக்களும் , கோதுமை, அரிசி ஆகிய இருவகை தானியங்களும் வறுத்து – இடித்து – அதில் பசு நெய் – வெல்லம், ஏலக்காய் – சுக்கு ஆகிய நறுமணம் மிக்க மருத்துவ நலம் தரும் திரவியங்களும் சேர்த்து உருட்டிச் செய்வது. இதைத்தவிர முட்டையின் வெள்ளை தரப்படும். புலால் மறுக்கப்படும். கீரை வகைகள் அதிகம் சேர்க்கப்படும் – இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை சேர்த்துச் செய்த கேழ்வரகு ரொட்டி தரப்படும் – இரும்புச் சட்டியில் செய்த விறுவிறுப்பான புளிக்குழம்பு சோற்றுடன் பிசைந்து தரப்படும். உளுந்து அப்பளம் அதனுடன் தரப்படும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இளநீரும் – இஞ்சி கருவேப்பிலை, வறுத்த வெந்தயத்தின் பொடி கலந்த மோர் தொடர்ந்து வழங்கப்படும். அவித்த உணவுகளே அதிகம் இருக்கும் – நார்ச்சத்து உணவில் கட்டாயம் மிகும் – பழங்கள் தப்பாமல் இருக்கும் – குழந்தைக்கு மலச்சிக்கலோ வேறு எந்த உபாதையோ நிகழாமல் பார்த்துக் கொள்வர்.

தன் உடலில் ஏற்பட்டிருக்கிற – ஏற்பட்டுக்கொண்டிருக்கிற மாற்றங்களை அப்பெண் குழந்தை, தானே சுதந்திரமாய் அறிந்து கொள்ளும்படியாக – அவளுக்குத் தனிமைச் சுதந்திரம் வழங்கப்படும் – அவளுக்கென்று தனியிடம் வழங்கப்படும் – அவளை எவரும் வீணே தொந்திரவு செய்வது தடுக்கப்படும். தாயோ – மூத்த சகோதரியோ அல்லது பிற மூத்தப் பெண்மணிகளோ மட்டுமே அவளது தனியிடத்தத்துக்குள் நுழையமுடியும் – அதுவும் – அவர்கள், தான் வருவதை அவளுக்கு உணர்த்திய பின்னரே நுழைவர். திடீரென நுழைந்து அதனால் – அவள் எவ்விதத்திலும் அதிர்ச்சி அடையக்கூடாது என்பதிலே அனைவரும் கவனம் வைப்பர். ஒவ்வொரு நாளும் சிறிதளவு எள்ளுருண்டை தருவர். இந்த எள்ளுருண்டை வறுத்த எள்ளும் வெல்லமும் சேர்த்து தயாரிக்கப்படுவது. பெண் குழந்தையின் இரத்தப்போக்கில் இரத்தக்கட்டிகள் இடையூறு செய்யாமல் இலகுவாய் வெளியேற உதவும் உணவார்ந்த மருந்து இது. மேலும், மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு கட்டாயம் தாம்பூலம் அருந்தச் சொல்வர். தாம்பூலம் – வெற்றிலை, சிறிதளவு பாக்கு, இலவங்கம், வெள்ளரி விதை , ஜாபத்திரி போன்ற பொருட்களோடு துளி சுண்ணமும் கலந்தது. அக்குழந்தைக்கு ஜீரண சக்தியும் கால்சிய சக்தியும் ஒருங்கே கிடைக்க இது உதவும்.

ஒவ்வொரு காலையும் மாலையும், தாயோ அல்லது வேறு ஒரு மூத்தப் பெண்மணியோ அப்பெண்ணுக்கு உடைமாற்ற உதவுவர். அவளுக்கு அழகாய்த் தலைவாரி – பூமுடித்து – முகம் திருத்தி – அவளது இருப்பிடத்தைச் சுத்தம் செய்து – கோலமிட்டு விளக்கேற்றி வைப்பர். உடைமாற்றும் முன் அவளது இடுப்பின் திருவெலும்பில் – வறுத்த தவிடு கொண்டு ஒத்தடம் தருவர். அங்கு இரத்த ஓட்டம் சீர்படுவதற்காக. இடைப்பட்ட பகல் வேளையில் அப்பெண்குழந்தையை ஒரு மணி நேரம் தூங்கச் சொல்லுவார்கள். அதிக நேரம் தூங்காமல் தடுப்பார்கள் – ஏனெனில் இரவு தூக்கம் கெட்டுவிடுமே! பகலில் மூத்த பெண்மணிகளில் யாராவது ஓரிருவர் அவளுடன் போய் – தாயம் – கல்லுக்காய் -பல்லாங்குழி -பரமபதம் ஆகிய விளையாட்டுக்கள் ஆடுவர். புதிய கோலங்கள் வரைவர். அப்போது – அக்குழந்தையுடன் பேச்சுக் கொடுத்து அவளுக்கு ஏதேனும் உபாதை இருக்கிறதா – அசவுகரியங்கள் ஏதேனும் இருக்கிறதா எனவும் விசாரித்து அறிந்து கொள்வர். அவளை கழிப்பிடத்துக்கு அழைத்துக்கொண்டு சென்று வருவர். ஒவ்வொரு இரவும், தாயோ அல்லது பாட்டியோ அக்குழந்தையுடன் உறங்குவர். ஒன்பது நாள் கழிய – பத்தாம் நாள் – அவரவர் குல ஒழுக்கத்த்துக்கு ஏற்ப மஞ்சள் நீராட்டுவிழா வைபவம் நிகழும் – மஞ்சள் கரைக்கப்பட்டப் புனித நீரில் குழந்தையை, சுமங்கலிகள் எனப்படும் மங்கல மங்கையர் நீராட்டுவர் வெல்லமும் அரிசி மாவும் சேர்த்து அவித்துச் செய்வதான பிட்டு எனும் உணவைச் சுற்றுவர் – திருஷ்டி கழிப்பர். சுற்றமும் நட்பும், சமூக அன்பர்களும், சூழவந்திருந்து குழந்தையை வாழ்த்துவர் -பல்வகையான பரிசுகள் வழங்குவர். குழந்தை வீட்டுக்குள் புஷ்பவதியாக வலது கால் எடுத்து வைத்து நுழைவாள்.

மிக சுவாரசியமாக இருக்கிறதே! “Blackgram என்று சொன்னீர்களே அதற்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா?” என்றார்.

உளுந்து மாவு என்பது எலும்பு உளுத்துப்போகாமல் உறுதிப்படுத்தும் தன்மை உடையது. எங்கள் கலாச்சாரத்தில் தமிழ் மருத்துவம் என்கிற தனி மருத்துவம் உண்டு. அதனை நாட்டு மருத்துவம் என்றும் சொல்லுவர். எங்கள் நாட்டு மருத்துவத்தில், எலும்பு முறிவுக்கு உளுந்துமாவைப் பயன்படுத்தியே முறிந்த எலும்புகளை இணைப்பர் – Plaster of Parris பயன்படுத்துவது கிடையாது. எங்கள் ஊரின் கோட்டைகளும் பல கோயில்களும் உளுந்துமாவை சிமெண்ட் ஆகப் பயன்படுத்தியே கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த சிமெண்ட் தயாரிக்க உளுந்து மாவுடன் சுண்ணப்பொடியையும் கள்ளிப்பாலையும் – கோழி முட்டையின் வெள்ளைக் கருவையும் கலந்தே உருவாக்கியதாகவும் அறிகிறோம்.

“நீங்கள் உங்கள் பெண் குழந்தைக்கான உணவு வகைகளில் jaggery எனப்படும் வெல்லத்தை அதிகம் பயன்படுத்த்துவதாக உணர்ந்தேன். சர்க்கரையைப் பயன்படுத்தாமல் வெல்லத்தைப் பயன்படுத்த்துவது ஏன்?” என்றார்.

வெள்ளைச் சர்க்கரையின் பலாபலன்களை இன்று இவ்வுலகமே உணர்ந்து விட்டது – வெள்ளைச் சர்க்கரை அழிவின் தொடக்கம் – இதனை எங்கள் மூதாதையர் அன்றே அறிந்து கொண்டிருந்தனர் என்றே சொல்லவேண்டும். எனவே வெல்லப் பழக்கம் எங்களிடம் வெகுகாலமாக இருந்து வருகிறது. இந்த வெல்ல வகைகளில் ஒருபடி மேலே போய் – பனைவெல்லம் பயன்படுத்தும் பாரம்பரியமும் எங்களிடம் உள்ளது. இயன்ற போதெல்லாம் பனைவெல்லம் பயன்படுத்துவோம். வெல்லம் – என்பது – வெளுக்கப்படாத – இயற்கைச் சர்க்கரை – இதில் நார்ச்சத்துடன் நிறைய உயிர்ச் சத்துக்கள் உள்ளன. மேலும் குடலுக்கும் – கல்லீரலுக்கும் இணக்கமானது. குடலில் ஓட்டைகள் ஏற்பட்ட நோயாளிக்கு தமிழ் மருத்துவ முறையில், வெல்லம் மூலமாகவே அறுவைச் சிகிச்சை இன்றி, குடலை ஒட்டவைத்ததாக – குணப்படுத்தியதாக அறிகிறோம். இன்றும் கூட, எங்கள் வீடுகளில், நாங்கள் பயன்படுத்தும் மட்பாண்டங்களோ – சிமெண்டாலான தொட்டிகளோ வீரல் விட்டாலோ உடைந்தாலோ சுண்ணமும் வெள்ளமும் கலந்து பூசி ஓட்டையை அடைத்துவிடுவார்கள்.

வெல்லம் நல்லது என்பதற்காக, வெல்லத்தையே முழு உணவாய்க் கொள்ளமுடியாது. அதனைத் தேவைப்படும்போது தேவைப்படும் அளவில் மட்டுமே பயன்படுத்தும் கட்டுப்பாடும் இருந்தது.

“அப்படியென்றால், உனக்குள் தமிழ்ப்பெண்கள் மிகுந்த பலசாலிகளாக – மிகுந்த ஆரோக்கியம் கொண்டவர்களாக இருக்கவேண்டுமே!”

“அப்படித்தான் பலகாலம் இருந்திருக்கிறது. புலியையும் கூட முறத்தால் துரத்தியிருக்கிற வீரப்பெண்களாகவே எங்கள் பெண்கள் இருந்திருக்கின்றனர்”என்றேன்.

“இப்போதும் உங்கள் பெண்கள் அதே பலத்தோடு இருக்கவேண்டுமே!” என்றார்.

துரதிருஷ்டவசமாக, உங்கள் கேள்விக்கு நான், “இல்லை” என்ற பதில் சொல்லவேண்டி இருக்கிறது. இன்று இடுப்பு மற்றும் கீழ் முதுகுப்பகுதி வியாதிகள் எனும் உடல் நலக்குறைபாட்டுடன் இருக்கும் பெண்களின் உலக எண்ணிக்கையில் எங்கள் பெண்கள் கவனம் பெற்றிருக்கிறார்கள்.

அதிர்ந்தார் – உண்மையாகவா? இது எவ்வாறு நிகழ்ந்தது – என்ன காரணம் என்றார்.

அவ்வை எனும் தெய்வப் பெண்மணி, பெண்களுக்கான எங்களுக்காய் எழுதிவைத்துவிட்டுப்போன விநாயகர் அகவல் எனும் மருத்துவ -பெண் உடலியல் வேதத்தைத் துறந்தோம் – மறந்தோம் – எங்கள் பெண் குழந்தைகளுக்கு – அந்த வேதத்தைச் சொல்லிக்கொடுக்கும் கடமையில் தவறினோம்- விநாயகர் அகவல் எனப்படும் பெண் உடல்நல மருத்துவ வேதத்தின் ஒழுக்க நெறிப்படி எங்கள் மூதாதையர்கள் எங்களுக்காய் ஏற்படுத்தி வைத்திருந்த அன்றாடப் பழக்கவழக்கங்களைத் தூக்கி எறிந்தோம். சுருங்கச் சொன்னால், Modernism எனப்படும் படுமாயையான கவர்ச்சியில் மூழ்கித்தொலைந்தோம்.

பெண்கள், தமது மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தை அவள் அறிந்து எங்களுக்குச் சொன்னதை உதாசீனம் செய்தோம். இன்றைய நிலைக்கு நாங்களே காரணம். சொல்லப்போனால், கடந்த முப்பது ஆண்டுகளில், எங்களையும் நாங்கள் சரியாய் கவனித்துக் கொள்ளவில்லை எங்கள் பெண் குழந்தைகளையும் நாங்கள் சரியாய் கவனித்துக் கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்.

மேலும் பேசுவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *