நாகேஸ்வரி அண்ணாமலை

அறிஞர் அண்ணா ஆரிய மாயையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல சினிமாவையும் பயன்படுத்தினார்.  இப்போது சினிமாவே மாயை ஆகிவிட்டது.

கபாலி படம் வெளிவருவதற்கு முன்பே எத்தனை ஆர்ப்பாட்டங்கள்.  சினிமா நடிகர்கள் மீது ஏன் இத்தனை மோகம் நம் மக்களுக்கு?  இவர்களுக்கு வேறு எதிலும் பிடிப்பில்லையா?  சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த மீடியம்தான்.  ஆனால் அதையே கதி என்று நினைத்து சினிமா நடிகர்களை வழிபடும் அளவுக்குச் சிலர் போவதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.  எங்கோ படித்த ஞாபகம்,.  தமிழ்நாட்டு அரசியலில் பங்கு வகிப்பவர்களில் முக்கால்வாசிப் பேர் சினிமாவோடு தொடர்புடையவர்கள் என்று.  தமிழ் அரசியல் கலாச்சாரம் இவ்வளவு கீழிறங்கிப் போய்விட்டதா?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் கடவுள் ஸ்தானத்திற்கே அவரை ஏற்றியிருக்கிறார்கள்.  மிகப் பெரிய கட் அவுட்டுகளைத் தியேட்டர் முன் நிறுத்தி அதற்குப் பால் அபிஷேகம் செய்திருக்கிறார்கள்.  கடவுள் சிலைகளுக்கே எந்த விதமான அபிஷேகமும் செய்யத் தேவையில்லை என்று பெரியார் சொன்னார்.  இவர்கள் மனிதர்களின் கட் அவுட்டுகளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.  எப்படிப்பட்ட அறியாமை!

ரஜினிகாந்த் என்னும் நடிகர் சிறந்த நடிகராக இருக்கலாம்.  மக்களை மகிழ்விப்பதில் பெரிய விற்பன்னராக இருக்கலாம்.  தினசரி வாழ்க்கையின் கஷ்டங்களை மறப்பதற்கு ஒரு மருந்தாக அவர் படங்கள் அமையலாம்.  எதுவாக இருந்தாலும் அவருடைய படம் வெளிவருவதற்கு முன்பே இப்படியா பித்தம் பிடித்து அலைவது?  படம் திரையிடப்படுவதற்கு முந்திய நாள் சென்னை நகரமே கபாலி என்ற மாயையில் உழன்றுகொண்டிருந்ததாக ஒரு பத்திரிக்கைச் செய்தி கூறியது.  கபாலி படத்தைப் பற்றி இந்து நாளிதழில் தேவைக்கு மேலேயே செய்திகள் வந்தன.  இதைப் பார்த்துப் பல வாசகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.  இந்து பத்திரிக்கை கூட இந்த அளவிற்குத் தன் தரத்தைத் தாழ்த்திக்கொள்ள வேண்டுமா என்பது இவர்களுடைய குற்றச்சாட்டு.  அதற்குப் பதில் அளிக்கும் முகமாக எழுத்தாளர் ஒருவர் இந்து பத்திரிக்கை சார்பில் மற்ற முக்கியமான செய்திகளை விட்டுவிட்டு இந்து கபாலி படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் நாட்டு மக்களை உற்சாகப்படுத்தும் ஒரு விஷயமாக இருப்பதால் இதை வெளியிட்டது சரியே என்றும் கூறுகிறார்.  மக்களில் பலர் அறியாமையால் ஒரு காரியம் செய்தால் பொறுப்புள்ள ஒரு பத்திரிக்கையும் இப்படிச் செய்ய வேண்டுமா?

ஒரு ஆட்டோ டிரைவர் எல்லா ரஜினி படங்களையும் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியையே பார்த்துவிடுவாராம்.  இப்போதும் அப்படிச் செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார்.  அவருடைய நண்பர் ஒருவர் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறாராம்.  அவரும் இவரைப்போல் ரஜினி படங்களை முதல் நாளே முதல் காட்சியையே பார்க்கும் வழக்கம் உடையவராம்.  ரஜினியின் கபாலி படம் வெளிவரும் அன்று அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பும் அளவுக்கு அவருடைய உடல்நலம் தேறியிருக்காது என்று அவரைக் கவனித்துவரும் மருத்துவர் கூறியிருக்கிறார்.  ஆனாலும் எப்படியாவது முதல் நாள் முதல் காட்சிக்கே கபாலி படத்தைப் பார்க்க வந்துவிடுவார் என்று அவருடைய நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அவரைப் பற்றிப் பெருமையாகக் கூறியிருக்கிறார்.  உடல்நலத்தைக்கூட கவனித்துக்கொள்ளாமல் ஒரு சினிமாப் படத்தைப் பார்ப்பதில் என்ன வீரம் இருக்கிறது?  இது கின்னஸ் புக்கில் இடம் பெறக் கூடிய சாதனைபோல் கூறுவது எவ்வளவு மடமை?

சினிமா மோகம் நம் மக்களைப் பிடித்து ஆட்டுவது மட்டுமல்ல,  சினிமாவில் நடப்பதை அப்படியே உண்மை வாழ்க்கையில் நடப்பதாக நினைத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க நினைக்கிறார்கள் சிலர்.  எல்லாப் படங்களிலும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களிடையே, வெவ்வேறு சமூக அந்தஸ்தில் உள்ளவர்களிடையே காதல் கனிந்து திருமணம் நடப்பதாகக் காட்டுகிறார்கள்.  உண்மை வாழ்க்கையில் நடப்பது என்ன?  வெவ்வேறு சமூக அந்தஸ்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை.  வீட்டு எஜமானன் மகனுக்கும் வேலைக்காரப் பெண்ணிற்கும் இடையே காதல் மலர்வதில்லை.  ஒரே சமூக அந்தஸ்தில் இருக்கும் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை.  இருவரையும் எப்படியாவது பிரிப்பது, இருவரையும் கொல்ல முயற்சிப்பது இவைதான் நடக்கின்றன.  சினிமாவில் நடப்பதுபோல் நிஜத்தில் உப்பரிகையில் வாழும் கதாநாயகி குடிசையில் உழலும் கதாநாயகனை மணந்துகொள்வதில்லை.  இந்த நிதர்சனத்தை ஏன் நம் இளைஞர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

படிக்காதவன் என்று ஒரு படம்.  2009-இல் வெளிவந்தது.  ஊரிலேயே பணக்காரப் பெண்ணை அவளுடைய கார் டிரைவர் கல்லூரிக்கு அழைத்துச் செல்கிறான்.  வழியில் காரில் ஏதோ கோளாறு ஏற்பட, சாதாரண வசதி உள்ள, படிக்காத ஒரு பையனிடம் அந்தப் பெண்ணைக் கல்லூரியில் விட்டுவிடச் சொல்கிறார் டிரைவர்.  அவள் கதாநாயகனின் ஸ்கூட்டரின் பின்னால் உட்கார்ந்தவுடனேயே கதாநாயகன் கனவு காண ஆரம்பித்து அதில் அவளோடு ஒரு டூயட் பாடுகிறான்.  கண்டதும் காதல் என்றாலும் இப்படியா.  இவன் படிக்காதவன் என்றாலும், வாழ்க்கையில் உருப்படியாக எதுவும் செய்யாதவன் என்றாலும் எப்படியாவது அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள் என்று அவனுடைய நண்பர்கள் அவனை உசுப்பிவிடுகிறார்கள்.  அவனும் உடனே அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறான்!

இந்தக் கதைதான் சமீபத்தில் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்ட சுவாதியின் கொலைக்கு ஆதாரமாக அமைந்தது எனலாம். சுவாதியைக் கொலைசெய்த ராம்குமார் எந்த வகையிலும் – அழகு, அறிவு, படிப்பு, சமூக அந்தஸ்து – அவளுக்கு நிகரானவன் இல்லை.  இருந்தாலும் படிக்காதவன் போன்ற படங்களின் தாக்கத்தால் அவள் எப்படியாவது தன்னைக் காதலிப்பாள் என்று நம்புகிறான்.  படத்தில் போலவே ராம்குமாரின் நண்பர்களும் ‘அவளை எப்படியாவது உன்னைக் காதலிக்கும்படிசெய்’ என்று உசுப்பிவிடுகிறார்கள்.  படிக்காதவன் போன்ற படங்கள் எடுக்கப் போய் சுவாதி போன்ற இளம்பெண்கள் கொலைசெய்யப்படுகிறார்கள்.  ராம்குமார் போன்ற பையன்களும் குற்றம் புரியத் தூண்டப்பட்டுச் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள்.

கபாலி படத்திற்கு பல நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டனவாம்.  இது இந்திய நிலை.  அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் கபாலி படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறதாம்.  சினிமா மாயையில் மூழ்கியிருப்பவர்கள் இந்தியாவில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் குடியேறியிருக்கும் இந்தியர்களும்தான் என்பது புலனாகிறது.

சினிமாத் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.  சினிமா மக்களை மயக்கும் ஒரு ஊடகம்.  அதைத் தயவுசெய்து தவறாக உபயோகித்து இளைஞர்களைத் திசை திருப்பாதீர்கள்.  சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் ‘தற்போது சமுதாயத்தில் நடக்கும் பல குற்றச் சம்பவங்களுக்கு சமீபத்திய திரைபடங்களின் தாக்கமே காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.  சினிமா மாயையில் இருக்கும் பாமர மக்களை ஆக்கபூர்வ செயல்களுக்குத் திருப்புங்களேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *