எம்.ரிஷான் ஷெரீப்

irome_sharmila

            ‘நான் இருப்பேனா வாழ்வேனா என்பது பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. நாம் எல்லோரும் சாகத்தான் பிறந்திருக்கிறோம் என்பது உண்மை. என் ஆத்மா கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறது. நாம் நினைத்தபடி நாம் வாழ முடியாது; நினைத்தபடி சாகவும் முடியாது. எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. வாழ்வும் சாவும் அவன் கையில் இருக்கிறது. சாவு குறித்து எனக்கு எந்த அச்சமும் இல்லை. 

     இப்போது நான் செய்வதெல்லாம் கடவுளின் விருப்பமும் என் மக்களின் விருப்பமும்தான். ஒரு மனித உயிர் வாழும்போது அவனோ அவளோ பல தவறுகளைச் செய்யலாம். நம் பெற்றோர் நமக்குப் பிறப்பளித்தாலும் அவர்கள் குணங்கள் எல்லாம் நமக்குண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனது தாய் தந்தையிடம் வேண்டாத குணங்கள் உண்டு. அவர்கள் என்னை வளர்த்த போது அவர்கள் சரி என்று கருதிய முறையில் வளர்த்தார்கள். ஆனால் நான் வளர்ந்து பெரியவளாகி எது சரி, எது தவறு என்பதை உணர்ந்தபோது, அவர்கள் செய்ததில் எது சரி, எது தவறு என்பது எனக்குத் தெரிந்தது. அவற்றைத் திருத்தும் ஆசை ஏற்பட்டது. அதுபோலவே என் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.’

            சம கால வீர மங்கையான மணிப்பூர் இரோம் ஷர்மிளாவின் மேற்படி கருத்து சாவை எதிர்கொள்வது பற்றிய கேள்விக்கு பதிலாக அமைந்தது. வீர மங்கை. மனித மற்றும் சமூக உரிமை ஆர்வலர், அரசியலாளர் என அறியப்பட்டுள்ள அவர், மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி கடந்த பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்தவர்.

     அயல் தேசத்தவர்களின் சட்ட விரோதமான ஊடுருவலைத் தடுப்பதற்காக, 1958 ஆம் ஆண்டு முதல் மணிப்பூர் உள்ளிட்ட ஏழு வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் அந்த மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் முற்றுமுழுதாக ஆயுத மற்றும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச் சட்டம் வழங்குவதால் இராணுவம் மிக மோசமான வன்முறைகளை அம் மாநில பொதுமக்கள் மீது பிரயோகிக்க ஆரம்பித்தது. அம் மாநிலங்களில் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள்  எழுந்து கொண்டேயிருந்தன.

     இந்த நிலையில் ‘மலோம் படுகொலை’ என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படும், மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ஆயுதப் படையினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பொதுமக்களில் பத்துப் பேர் சுடப்பட்டு இறந்த சம்பவம், 2000.11.02 அன்று நிகழ்ந்தது.

     அந்தப் பிரதேசத்தின் கால்நடை சேவகரொருவரின் மகளான இரோம் ஷர்மிளா, மணிப்பூரின் வரலாற்றில் இருண்ட தினமாகப் பதியப்பட்டிருக்கும் அன்று முதல்,  தனது இருபத்தெட்டாம் வயதில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். போராளி என சந்தேகத்திற்கிடமாகக் கைது செய்யப்படும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை, (1958-AFSPA) மீளப்பெற வேண்டும் என்பதே இவரது முதன்மையான கோரிக்கையாக அமைந்தது.

rea_arrested

     உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள்ளாக, தற்கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையால்  அவர் கைது செய்யப்பட்டார். தற்கொலை முயற்சிக்கு, இந்திய சட்டத்தின் பிரகாரம் ஒரு வருடமே சிறைத்தண்டனை வழங்க இயலும் என்பதால், நீதித்துறை காவலில் இருந்தவரை, ஒரு வருடத்திலேயே விடுவித்து, பின்னர் பல்வேறுபட்ட வழக்குகளில் மீண்டும் கைது செய்தது. இவ்வாறு திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருந்தது. இடையில், சிறையில் வைத்து காவல்துறையினர் ஷர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு புகட்ட முனைந்ததும், மூக்கு வழியாக ஆகாரம் செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

            நிலைமை இவ்வாறிருக்கையில், தனது பதினாறு வருட கால உண்ணாவிரதப் போராட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 09 ஆம் திகதியன்று முடித்துக் கொள்ளப் போவதாக திடீரென்று நேற்று அறிவித்திருக்கிறார் இரோம் ஷர்மிளா. அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் மணிப்பூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த முடிவை எடுத்திருக்கிறார் எனத் தெரிய வருகிறது.

            ‘எனது உண்ணாவிரதத்தால் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. எனவே அரசியலில் இணைந்து அதன் மூலமாக எனது போராட்டத்தை தொடருவேன்.’ எனக் குறிப்பிட்டிருக்கும் வீர மங்கையின் இத்திடீர் முடிவு அவரது சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கு ஆனந்தத்தையும், அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது.

     இன்றும் கூட அந்த மாநிலங்களில் இந்திய இராணுவத்தால் மிக மோசமான வன்முறைகள் தினந்தோறும் பொதுமக்கள் மீது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசின் மீதுள்ள அச்சம் காரணமாக ஊடகங்கள் இவ் வன்முறைகளை வெளிக்கொண்டு வருவதில்லை.

     உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் இரோம் ஷர்மிளாவின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். பதினாறு வருடங்களாக அவரது போராட்டத்துக்கு செவி சாய்க்காத அரசு, இனியும் செவி சாய்க்கும் என்ற நம்பிக்கை துளியுமில்லை. பதினாறு வருடங்கள் உண்ணாமல், குடிக்காமல் ஒரு பெண்ணால் மன உறுதியுடன் போராட முடியுமானால், அதே மன உறுதியுடன் அரசியலிலும் நுழைந்து, நிச்சயமாக தனது மக்களின் நல்வாழ்வுக்காக ஒன்றிணைந்து அவ் வீர மங்கை போராடலாம். அது மிகவும் மகோன்னதமான வெற்றியையே தரும்.

     பெண்களை பலவீனமான ஆத்மாக்கள் எனச் சொல்லிப் புறந்தள்ளி வைக்கிறோம். ஆனால், ஏழு மாநிலங்களின் அதிகாரச் சூழ்நிலையை, அதன் அவல நிலையை, அங்கு மக்கள் அனுபவிக்கும் துயரங்களை சர்வதேசத்தின் முன்னால் எடுத்துச் செல்ல, அதற்காக உயிரைக் கொடுக்கத் துணிந்து போராட ஒரு பெண்ணால் முடிந்திருக்கிறது. பதினாறு வருடங்கள் இடைவிடாப் போராட்டம். இடைக்கிடையே அந்தகாரச் சிறை வாசம்.

இறுதியாக இக் கணத்தில் எழுத்தாளர் அம்பை மொழிபெயர்த்த இரோம் ஷர்மிளாவின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.

சிறை உலகை

என்னால் மறக்க முடியவில்லை

பறவைகள் சிறகடிக்கும்போது
விழிகளில் நீர் பொங்கும்
நடக்க முடியாத இந்தக் கால்கள் எதற்கு
என்னும் கேள்வி எழும்
பார்க்க முடியாத விழிகள் பயனற்றவை
எனக் கூவத் தோன்றும்

என்னைப் போன்றவர்கள்
கண்ணில்படாமல் மறைந்துவிடு ஓ சிறையே!

உன் வலிமையான சங்கிலிகளின் கொடுமையில்
வாழ்க்கைகள் சிதறுண்டன
உன்னால்தான் கடவுளுக்குச் சாபம்
உன்னால்தான் அதிகாரத்தை
நாங்கள் வெறுக்கிறோம்.

எம்.ரிஷான் ஷெரீப்

27.07.2016

mrishanshareef@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *