எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

     

      புலம்பெயர்ந்து வந்தாலும் புலனெல்லாம் பிறந்தமண்ணில் 

             நலங்கள்பல இங்கிருந்தும் நம்மனமோ வெறுமைநிலை

        உளம்மகிழ வாழவெண்ணி உழைக்கின்றோம் ஓய்தலின்றி

             உளமகிழ்வோ சிலநேரம்  உளநெகிழ்வோ பலநேரம் 

        மனம்முழுக்க ஊரையெண்ணி மெளனித்தே நிற்கிறதே !

 

      நீர்கண்ட இடமெல்லாம் நீந்திநாம் களித்திருந்தோம்

            யாரென்ன கொடுத்தாலும் நாம்விரும்பி அதையுண்டோம்

      தார்ரோட்டில் ஓடிநின்றோம் தலைநிறைய எண்ணெய் வைத்தோம்

             கார்ப்பயணம் இல்லாமல் கால்நடையாய் சென்றுவந்தோம் !

 

      ஓடிநிற்போம் பாடிநிற்போம் உடல்முழுக்க வியர்வைவரும்

              ஒடியல்கூழ் குடித்துவிடின் உற்சாகம் தேடிவரும் 

      பனங்கிழங்கு பனாட்டு  பனங்குட்டான் பால்றொட்டி 

              பாங்காக சுவைத்தபடி பந்தாடி மகிழ்ந்துநிற்போம் !

 

      சைக்கிளை எடுத்துக்கொண்டு சவாரி போய்வருவோம்

             சந்தோஷம் மனமெல்லாம் தானாக வந்துநிற்கும்

      சைவத்தார் கடைவடையை சட்டினியில் தொட்டுநின்று

              சகலரும் சுவைத்தநிலை சரித்திரமாய் போச்சுதிப்போ !

 

     எங்களது கல்லூரி அருகிலுள்ள கடையதனில்

          இடியப்பம் இடிசம்பல் இருப்பதுவோ சிலநாளே

    தங்கராசு அண்ணனது தாராள மனத்தாலே

           எங்களுக்கோ இடியப்பம் எப்படியோ கிடைத்துவிடும் ! 

 

     பாடசாலை விடுமுறையில் பலநண்பர் சேர்ந்தபடி

           கீரிமலைக் கேணிநோக்கி கிளம்பிடுவோம் சைக்கிளிலே

     கேணியிலும் குளித்திடுவோம் கிட்டவுள்ள கடலிலும்

            ஆசைதீர நீச்சலிட்டு அனைவருமே மகிழ்ந்துநிற்போம் !

 

      சித்திரையில் பட்டங்கட்டி திரளாகப் பறக்கவிட்ட

              சத்தமிட்டுக் கூத்தாடி சகலருமே நின்றிடுவோம்

      வட்டமிடும் பட்டமெலாம் வாவெனவே அழைக்குதென

             வண்ணக் கருவிழியால் வானத்தைப் பார்த்துநிற்போம் !

 

      போரென்னும் பெயராலே ஊரெல்லாம் ஓடியது

             ஊரிலுள்ள மக்களெலாம் உருக்குலைந்தும் போனார்கள்

      ஊரைவிட்டு பேரைவிட்டு உற்றாரை இழந்துவிட்டு

             யாருறவும் இல்லாத நாட்டிலிப்போ வசிக்கின்றோம் !

 

     எங்களது உழைக்கும்சக்தி எந்நாட்டில் இருந்தாலும்

           மங்காமல் இருப்பதனால் வாழுகிறோம் வீழாமல் 

    பொங்கிவரும் தமிழுணர்வால் எங்கள்தமிழ் வளர்க்கின்றோம்

           என்றாலும் தமிழ்பற்றி இன்னுமே எண்ணல்வேண்டும் !

         

        ஊரிலேவாழ்ந்த அந்த உவப்பில்லா காலமதை

             உள்ளமது நினைக்கையிலே ஒருவெறுமை தெரிகிறது 

      வசதியுடன் வாழ்ந்தாலும் வசந்தகாலம் மனம்முழுக்க

           வாழ்ந்துகொண்டே இருப்பதனை மறந்துவிட முடிவதில்லை !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *