இசைக்கவி ரமணன்

திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை  – 10

kural-4-1-1

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை (09)

 

எட்டுக் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள், தத்தமக்குரிய செயல்களைச் செய்யாத ஐம்பொறிகளைப் போலப் பயனற்றவையாகும்.

கோள் இல் = கொள்ளுவது கோள். கிரகங்களுக்கும் பொருந்தும். கிரஹணம் = பற்றுதல். பாணிக் கிரஹணம் = கைத்தலம் பற்றுதல்

பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் கர்மேந்திரியங்கள். Sensory organ. புலன்கள் ஞானேந்திரியங்கள். பொறிவைத்துப் பிடித்தல்! Senses

 

இலக்கணம்

குணத்தான்-குணங்களை உடையவன்.  ஆண்பால் படர்க்கை (third person) பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் இவற்றின் அடியால் வருபெயர்.  இங்கே குணத்தின் அடிப்படையால் வரும் பெயர்.

 

ண் இருக்கிறது. ஆனால், கண்ணா பார்க்கிறது? இல்லை, கண்வழியே பார்ப்பது நாம்.

நாமா பார்க்கிறோம்? நம்மைப் பார்க்க வைக்கின்ற மஹாசக்தி ஒன்று உள்ளது அல்லவா?

ய: சக்‌ஷுஷா ந பச்யதி யேன சக்ஷுகும்ஸதி பச்யதி

ததேவ ப்ரம்ம த்வம் வித்தி நேதம் யதிதம் உபாஸதே (கேனோபநிடதம்)

 

எதைக் கண்ணால் பார்க்க முடியாதோ, எது கண்ணைப் பார்க்கச் செய்கிறதோ அதுவே ப்ரம்மம் என்றறி, என்கிறது கேனோபநிடதம். இது, மற்ற எல்லாப் புலன்களுக்கும் பொறிகளுக்கும் அவயவங்களுக்கும் பொருந்தும் என்பதை விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. அந்த மஹாசக்திதான், கண்ணன் சொல்கின்ற `க்ஷேத்ரக்ஞன்.` என் குருநாதர் சொல்கின்ற ‘Truth of the inner fellow.’ ஆக, அவன் இல்லையென்றால், அவன் அருளில்லையென்றால், நாம் எதையும் பார்க்கவோ, கேட்கவோ, முகரவோ, சுவைக்கவோ, தொட்டறியவோ முடியாது. இது இந்தக் குறளின் அடிப்படைப் பொருள்.

இனி, வள்ளுவர் அடுத்த அடிக்கு இட்டுச் செல்வதைப் பார்ப்போம்.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவை புலன்கள் எனப்படும். இவை senses எனப்படும். மெய், வாய், கண், மூக்கு, செவி இவை பொறிகள் எனப்படும். இவைதான் ஞானேந்திரியங்கள் எனக் குறிக்கப்படுகின்றன. (உபத்ரம், பாணி, பாதம், பாயுரு, வாக்கு என்பவை கன்மேந்திரியங்கள்)

பொறிகள் கருவிகளே. அவை தன்னிச்சையாக இயங்க முடியாது. புலன்களோடு பொருந்தியிருப்பதால் மட்டுமே அவை தத்தம் அமைப்புக்கேற்பத் தொழிற்படுகின்றன. காது என்கின்ற கருவி, கர்மேந்திரியம், கேட்டல் என்னும் சக்தியோடு பொருந்தியிருக்கும்போதுதான் நம்மால் ஒலியைக் கேட்க முடிகிறது. இல்லையேல் காது கேட்காது. எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது எதிரே நடப்பவர் கண்ணில் படுவதில்லை. ஒருவர் கூப்பிடுவது காதுகளில் விழுவதில்லை. உறக்கத்திலிருந்து நம்மை எழுப்ப, சும்மா தொட்டால் போதுமானதாக இருக்கிறதோ? உலுக்க வேண்டியிருக்கிறதே! கவலையில், நாவுக்குச் சுவை தெரிவதில்லை. உறக்கத்தில் ஏது வாசனை?

பில் கேட்ஸ், தன் கைப்படத் தயாரித்துப் பரிசளித்த கணினியே என்றாலும், `ப்ளக்`கை மின்சார இணைப்போடு செருகாமல் அது இயங்குமா? கணினிதான் பொறி. (கணிப்பொறி என்று சரியாய்த்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்!) மின்சாரம், புலன். பில் கேட்ஸ் நாம். இறைவன் பில்லுக்குப் பாட்டனுக்கும் பாட்டன். எனவே, புலன்களும் பொறிகளும் இணைந்திருக்கும்போதுதான் இயக்கம் சரிவர நடக்கின்றது. இல்லையெனில், உயிரும் உணர்வும் இருந்தும் அவை இல்லாதது போலவே நாம் ஜடமாக இருக்கும் அவலத்திற்கு வாய்ப்பு இருக்கிறது.

பொறி என்பது கருவி; அதற்கு அறிவுடைமை, விவேகம், பிரத்யட்சம் என்றெல்லாம் கூடப் பொருள்கள் உண்டு. புலன் என்பது அறிவு. குழம்ப வேண்டாம்! பல இடங்களில் பொறி, புலன் இவை ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. நாம் இங்கே புரிந்துகொள்ள வேண்டியது இதுதான். புலன் – பொறி, இவை இணைப்போடிருந்தால்தான் அந்தந்தப் பொறிக்கான தொழில் நடைபெறுகிறது. அதாவது, பொறி, புலனோடு பொருந்தியிருக்க வேண்டும்.

கண், பார்த்தல் என்னும் அறிவுச் சக்தியோடு இணைந்திருக்க வேண்டும். இல்லையெனில், அது குணமற்றதே.

இந்த இயக்கத்திற்குக் காரணம் பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான், வாலறிவன். அவனை வணங்கித்தான் நம்மில் எதுவும், நம் மூலம் எதுவும், நம்மாலும் சீராக இயங்க முடியும். புலன்களோடு பொருந்திக் கொள்ளாத பொறிகள் எப்படிப் பயனற்றவையோ, அதுபோலவே எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளை வணங்காத தலை, அதாவது மனித வாழ்க்கை பயனில்லை என்கிறார்.

நம் பிஞ்சுவிரல், வள்ளுவரின் உள்ளங்கையின் வெதுவெதுப்பை நிலையாக அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமோர் அடியெடுத்து வைக்கலாமே!

ல்லாப் பொறிகளுமே புறம்நோக்கித்தான் பொருத்தப்பட்டிருக்கின்றன. புலன்களும் பொறிகளும் சேர்ந்து புறப்பொருட்களோடு ஓயாமல் தொடர்புகொண்டபடிதான் இருக்கின்றன. இந்தத் தொடர்புகளே, நம் சித்தத்தில் பாளம் பாளமாகப் பதிந்திருக்கும் பழைய வாசனைகளைக் கிளறி, அவை ஆசைகளாய் எழுந்து, அதன்பின்னே நாம் சென்று விழுகிறோம். காற்று வந்த ஜன்னல் வழியே நாம் கீழே விழுவதுபோல், நமக்கு வந்த தபால்களின் குவியலில் நாமே மூழ்கிப் போவதுபோல், புலன்கள், பொறிகள் இவற்றின் இயற்கையான இயக்கத்தில், நாம் தொலைந்துபோகிறோம். வாழ்க்கை என்பது பிரகிருதி நம்மோடு ஆடும் ஆட்டமே. நாம் இன்பம், துன்பம் என்று சொல்வதெல்லாம், நாம் பிரகிருதியில் காணும் அனுபவங்களே. இதை உணர்ந்தவன் இன்பத்தில் ஆடுவதுமில்லை; துன்பத்தில் வீழ்வதுமில்லை. இவையிரண்டுமே இந்திரியங்களின் விளையாட்டு; அவற்றின் பின்னே இருக்கும் மனத்தின் ஓயாத சஞ்சலம்; இவையெதுவும் மேலானவை அல்ல, உண்மையல்ல, நிரந்தரமல்ல; எனவே இவை நானல்ல என்றும் உணர்ந்து, தனது இதயக் கமலத்தில் இடைவிடாது பேரொளியாய் வீற்றிருக்கும் இறைவனைச் சரணெய்துகிறான். அங்கே, ஆசாமி, சாமியாகிறான்!

வள்ளுவர் நம்மை அழைத்துச் செல்லும் தொலைவு, அளக்க முடியாதது!

சொல்லுக்குச் சொல் பொருள்கண்டு சுவைப்போம்.

 

(1) கோள்

ஒப்புரவினால் வரும் கேடெனெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து (22 ஒப்புரவு 220)

பரோபகாரத்தால் நமக்குக் கேடு வருமாயின், அந்தக் கேடு, நம்மையே விற்றுப் பெறத்தக்கது.

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்க துடைத்து (78 படைச்செருக்கு 78)

தன்னை ஆதரித்த மன்னனின் கண்முன்னே, அவன் விழிநீர் சொரிய, போர்க்களத்தில் மாய்வது என்பது, கெஞ்சியேனும் பெறத்தக்கது.

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை (106 இரவு 1059)

பிச்சை கேட்டுப் பொருள்கொள்வோர் இல்லாத போது கொடுப்பவருக்குப் புகழ் ஏது?

இந்த மூன்று குறள்களிலும், கோள் என்றால் கொள்ளுதல் என்று பொருள் வருகிறது.

 

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

செய்யாமை மாசற்றார் கோள் (32 இன்னா செய்யாமை 311)

சிற்ப்பைத்தரும் செல்வம் பெறுவதாயிருந்தாலும் இன்னொருவருக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதே குற்றமற்ற நெஞ்சினரின் கொள்கை.

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள் (32. இன்னா செய்யாமை 312)

ஒருவன் தம் மீது பகைகொண்டு துன்பம் புரிந்தாலும், திரும்ப அவனுக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதே குற்றமற்ற நெஞ்சினரின் கொள்கை.

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள் (65 சொல்வன்மை 646)

தான், பிறர் விரும்பும்படி சொல்லி, பிறர் சொல்லும்போது அதன் பயனை ஆராய்தல் குற்றமற்ற நெஞ்சினரின் கொள்கை.

ஊறொரால், உற்றபின் ஒல்காமை, இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் (67 வினைத்திட்பம் 662)

இந்த மூன்று குறள்களிலும் கோள் என்பது கொள்கை என்னும் பொருளில் வந்தது. கொள்கை என்பது துணிபு (முடிவு) என்றும் சொல்லப்படும்.

 

(2) பொறி

 

பொறிவாயில் என்றபோதும் பொறியில் என்னும்போதும் பொறி என்பது ஐம்பொறி என்னும் பொருளில் வருகிறது.

பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி (62 ஆள்வினை உடைமை 618)

அனுபவிக்கும் ஊழ் இல்லாது போதல் பழியாகாது. ஆனால், அறிவோடு முயற்சி எடுக்காதிருப்பதே பழி.

இந்தக் குறளில் பொறி என்பது விதி அல்லது ஊழ் என்னும் பொருளில் வருகிறது.

 

கோளில் பொறியில். பொறியில் = பொறியின் = பொறிபோல என்று பொருள் புரிந்துகொள்ள வேண்டும்.

(3) தாள்

 

கடவுள் வாழ்த்தில் காணப்படும் தாள் என்னும் சொல் அடி என்னும் பொருளில்தான் வருகிறது. அஃதல்லாமல்,

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு (22 ஒப்புரவறிதல் 212)

உழைத்துச் சம்பாதிப்பது உரியவர்க்கு உதவுதற்கே.

மடியுளாள் மாமுகடி என்ப, மடியிலான்

தாளுளாள் தாமரையினாள் (62 ஆள்வினையுடைமை 617)

மூதேவி சோம்பலிலும், திருமகள் முயற்சியிலும் வாழ்கிறாள்.

தெண்ணீர் அடுபுற்கை யாயினும், தாள்தந்தது

உண்ணலி னூங்கியது இல் (107 இரவச்சம் 1065)

நீர்த்த கஞ்சியானாலும், அது தான் உழைத்துச் சமைத்ததானால், அதைவிட உயர்ந்தது இல்லை.

இந்த மூன்று குறள்களில் தாள் என்பது முயற்சி என்னும் பொருளில் வருகிறது. மேலும்,

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னும் செருக்கு (62 ஆள்வினையுடைமை 613)

பிறருக்கு உதவும் மேலான நிலைமை, முயற்சி என்னும் பண்பில்தான் உள்ளது

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை

வாளாண்மை போலக் கெடும் (ஆள்வினையுடைமை 614)

முயற்சி இல்லாதவன் செய்யும் உதவி, பேடியின் கையில் வாளைப் போல.

இவ்விரண்டு குறள்களிலும் தாள், தாளாண்மையாகி, முயற்சி என்னும் பண்பு என்று பொருள் படுகிறது.

 

(4) தலை

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிது. (02 வான்சிறப்பு 16)

மழையில்லை என்றால் புல்கூடத் தலைகாட்ட முடியாது.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை (49 காலம் அறிதல் 488)

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும். அவர் காலம் முடியும்போது அவர் தலை கீழே விழும்

இங்கே தலை என்பது முடி என்னும் பொருளில்தான் வருகிறது.

 

ஐம்புலத்தார் ஓம்பல் தலை (5:இல்வாழ்க்கை:43) முயல்வாருள் எல்லாம் தலை (5:இல்வாழ்க்கை:47)  மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை (6:வாழ்க்கைத் துணைநலம்:57) இகழ்வார்ப் பொறுத்தல் தலை (16:பொறையுடைமை:151) என்பன போன்ற (இன்னும் நிறைய உண்டு) குறள்களில் தலை என்பது முதன்மை, சிறப்பு என்னும் பொருளில் வருகிறது.

 

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின் (12:நடுவுநிலைமை:119)

இங்கே, தலை என்பது உறுதி என்று பொருள்படும்.

 

`தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்,` என்னும் பாரதியின் அமர வாசகம் இங்கே ஓரத் தக்கது.

 

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (36:மெய்யுணர்தல்:357)

இங்கே தலை என்பது தெளிவு என்று பொருள்படும்.

தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்ளாத பொறிகளால் பயனில்லை. அதுபோலத்தான் எட்டு குணங்களை உடைய இறைவனின் தாளை வணங்காத தலை. தலை என்பது இங்கே உடம்பையல்ல, மனிதனின் வாழ்வையே சுட்டுகிறது.

ஆக,

கொள்ள வேண்டியது அவன் தாள்களை

கொள்கை என்பது அவன் தாள்களைப் பற்றிக்கொள்வதே

பொறிகள் நமக்கு வாய்த்திருப்பது அவன் தாள்களில் பொருத்திக்கொள்ளவே

ழ் என்பது உயிரான அவன் தாள்களைச் சரணெய்தியே தீரும். `ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்` என்று இளங்கோ அடிகள் பேசும்போது அங்கே தீவினை குறிக்கப்படுகிறது. திருவள்ளுவரின் ஊழ் என்பது நல்வினை, தீவினை இரண்டும் சேர்ந்தது. பிறப்பும் இறப்பும் இல்லாத பெருநிலை எய்துதற்கு நல்வினையும் ஒரு தடையே ஆதலின் `இருள்சேர் இருவினை` என்றார். எனவே, இறைவனின் தாள்களைச் சரணெய்தினால், விளைவுகளுக்குக் காரணமான ஊழ் தீரும், ஒருமை நேரும் என்று புரிந்துகொள்கிறோம். வினை என்றால் செயல். செயல் நேர்ந்தால் விளைவு என்னும் பயன் எழுந்தே தீரும். அது வினையாற்றியவனைப் பற்றத்தான் செய்யும். நமது வினைகளின் ஒட்டுமொத்தமான விளைவுகளின் தொகுதி, அவை விளையும் ரீதி, விதம், இவற்றுக்கே விதி என்று பெயர். அது, விதிக்கு உட்படாத, எந்த விதிக்கும் மூலமான இறைவனின் திருவடிகளைப் பற்றித்தான் தீரும் என்பதே வள்ளுவர் நமக்குக் கற்பிக்கும் பாடம்.

தாள் பணிவதே நம் முயற்சி என்னும் கடன்

தாளைப் பணிவதே முயற்சி என்னும் பண்புக்கு முத்திரை

தாள்களே தலைக்கான இடம்.

தாள் பணிவதே முதன்மைக் கடன்

தாள் பணிந்து வாழ்வதே தலையாய சிறப்பு

தாள்களில் உறுதியாக நிற்கவே தலை

தாள்பணிந்து வருவதே தெளிவு.

(5) எண்

 

எண் என்றால் கணக்கு, தருக்கம்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு (40:கல்வி:392)

எண் என்று சொல்லப்படும் அறிவியலும் (Science) எழுத்து என்று சொல்லப்படும் கலை இயலும் (Arts) உண்மையாக வாழ்கின்றவர்கட்குக் கண்கள் என்று சொல்லுவார்கள்.

எண் என்றால் எண்ணம்

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு, எஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல் (91: பெண்வழிச் சேறல்:910)

சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

எண் என்றால் எளிமை

எண்பொரு ளாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு (43:அறிவுடைமை:424)

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும் (55:செங்கோன்மை:548)

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு (76:பொருள்செயல்வகை:760)

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு (100:பண்புடைமை:991)

ஆக,

கணக்கு, தருக்கம் எல்லாம் கடவுளின் பாதத்தில் முடிகின்றன. நெஞ்சுறுதி என்பது இறைவனின் தாள்களில் நிலைத்து நிற்பதே.

இறைவனே நெருங்குதற்கு எளியன். அவன்தாள் பணிந்தால் எதுவுமே எளிமையாகிவிடும்.

இனி

எண்குணத்தான் தாள் என்னும்போது குணம், வடிவம் உடைய கடவுளை மக்கள் வழிபடுவது வள்ளுவருக்கு ஏற்புடையதுதான் என்று தோன்றுகிறது.

இப்போது எண்குணத்தான் என்றாரே, அந்த எட்டுக் குணங்கள் என்னவென்று பார்ப்போம்:

சுயேச்சையானவன், தூய்மையே உடம்பானவன், இயற்கை உணர்வினன், அனைத்தும் அறிந்தவன், இயல்பாகவே பற்று நீங்கியவன், பேரருள் கொண்டவன், எல்லையில்லா ஆற்றல் உடையவன், அளவற்ற இன்பமுடையவன் என்று சைவாகமம் கூறும்.

அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் அட்டமா சித்திகளே இறைவனின் எண்குணம் என்றொரு கூற்றுண்டு.

அநந்த ஞானம், அநந்த வீரியம், அநந்த குணம், அநந்த தரிசனம், பெயரில்லான், கோத்திரமில்லான், அவாவில்லான், அழியா இயல்புடையான் என்று இன்னொரு வரிசை கூறும்.

இன்னும் சிறப்பான பொருளும் இதற்குண்டு….

இது ஒன்பதாவது குறள். இதற்கு முன் சென்ற எட்டுக் குறள்களிலும் இறைவனது எட்டுக் குணங்கள் கூறப்பட்டுள்ளன:

  1. ஆதிபகவன் = இறை இறைவன். ஐஸ்வரியம், வீரியம், புகழ், ஞானம், திரு, வைராக்கியம் இவை பகம் என்னும் சொல்லுக்குப் பொருளாகும். உலகத்துக்கு அவனே முதல்
  2. வாலறிவன் = தூய அறிவே வடிவானவன் pure, effulgent intelligence
  3. மலர்மிசை ஏகினான் = இதய மலரில் உறைவோன். நினைத்தால் உள்ளே தெரிபவன்
  4. வேண்டுதல் வேண்டாமை இலான் = அனைத்திலும் சமமாயிருப்பவன். விருப்பு வெறுப்பற்றவன்
  5. இருள்சேர் இருவினையும் சேரான் = நன்மை, தீமை பயக்கும் வினைகளுக்கு அப்பாற்பட்டவன். வினையிலான், வினையின் மூலம் எய்த முடியாதவன்
  6. பொறிவாயில் ஐந்தவித்தான் = புலன்கள், பொறிகள் என்னும் வரம்பில்லான். பொறிகளுக்கு மூலமாய் ஆனால் பொறிகளின் தொடர்பின்றியே இருப்பவன்
  7. தனக்குவமை இல்லாதான் = ஒப்பு, உயர்வு, நிகரில்லான். தனக்கு இணையில்லாத பெருமை உடையான்
  8. அறவாழி அந்தணன் = தருமக் கடல், அதில் தெப்பம். அறத்தின் இருப்பிடம், அருளாளன்
  9. எண்குணத்தான் – மேலே குறிப்பிட்ட எட்டு குணங்களுடையான்

 தொடருவோம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *