–கிருத்திகா

அவன் இரண்டு நாட்களுக்குமுன்தான் எதிர் வீட்டுக்கு, அதாவது சோமுத் தாத்தாவின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்தான். யாரையும் கவரும் அழகு. இன்னும் என் கண்ணில் நிழலாடுகிறது அவனது கம்பீரமான நடையும், பார்வையும்…. அப்பப்பா!!

இனி அவன் இங்குதான் தங்கப்போகிறான் என்பதையும் தெரிந்து கொண்டாயிற்று…  உடனே சோமுத் தாத்தாவின் வீட்டுக்கு ஓட்டம் எடுக்க மனம் துடித்தது. முடியவில்லையே….!

என் வீட்டில் இருந்த நேரத்தைவிட அவர் வீட்டில் இருந்த நேரம்தான் அதிகம்… ஆனால் இந்த அம்மாவுக்கு என்னாயிற்று?? இதுவரை நான் அங்குச் செல்ல எந்தத் தடையும் சொல்லாதவர் அவன் வந்ததிலிருந்து அந்தப்பக்கம் பார்க்கக் கூட விடவில்லை…

என் வீட்டு ஜன்னலில் இருந்தே எத்தனை நாள் அவனைப் பார்ப்பது..? அவனது ஒவ்வொரு கண்சிமிட்டலும் ஆயிரம் கதைகள் சொல்கின்றதே… என் நண்பர்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை, முன்பைவிட அதிகநேரம் அங்கு தான் இருக்கிறார்கள்.

இதற்கு முடிவுகட்டியே ஆக வேண்டும்… என்ன செய்யலாம்??

இதுதான் சரியான திட்டம்… “அம்மா… நாளைக்கு எனக்கு பரீட்சை இருக்கு… இங்க இருந்தா எனக்கு டிவி பார்க்கத் தோணும்… நான் போய் மொட்டை மாடில உட்கார்ந்து படிக்கறேன்….”

“என்னடா தங்கம்.. இங்க வா.. உனக்கு உடம்பு சரியில்லையா..? படிக்கறன்னு சொல்ற… அதுகூடப் பரவாயில்லை… டிவி பார்க்காம படிக்கப் போறேன்னு சொல்றயே… அதுதான் நம்ப முடியல…    சரிடா தங்கம்.. நீ போய் நல்லாப் படி”

“நான் இனிமே நல்லாப் படிக்கணும்னு இருக்கேன்மா… அதான்…   சரிம்மா நான்போய்ப் படிக்கறேன்..” மனதுக்குள் ‘ப்ளான் சக்சஸ், இனிமே தினமும் நானும் அவன்கூடப் பேசலாம்….பழகலாம்..’

எப்படியோ, மாடிக்கு வந்தாயிற்று…. இனி அவனுடன் பழகுவதற்கு யாரும் தடை இல்லை… தினமும் அவனுடன் சைகையில் உரையாடினேன்…. அவன்தான் என்னைக் கண்டுகொள்ளவில்லை…

ஒருநாள் அம்மா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, சோமுத் தாத்தா வீட்டிற்கு அவனைப் பார்க்கச் சென்றேன்… முதலில் என்னைப் பார்த்தாலே கோபப்பட்டான்… இப்போதெல்லாம் அப்படி இல்லை…

இருவரும் அப்படி இணைபிரியாதவர்களாக ஆகிவிட்டோம். தினமும் அம்மாவிற்குத் தெரியாமல் போய்ப் பார்ப்பேன்…. அம்மா இல்லாத சமயத்தில் அவனை என்வீட்டிற்கு ஒரு முறை அழைத்து வந்தேன்…. அப்பாவும் தடை போடவில்லை….  நான் அப்பாவின் செல்லமாயிற்றே!!  அவர் என் மகிழ்ச்சிக்குத் தடைவிதிக்க மாட்டார்…

அவனோடு நான் பழகுவது அம்மாவுக்குத் தெரியாமல் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன்… இருந்தும், இன்று அங்கிருந்து வரும்போது பார்த்துவிட்டார்…

“அந்த நாய்கிட்ட போய் என்ன செய்ற..?  அந்த வீட்டுக்கு போகக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்…. இப்பதான் நீ மொட்ட மாடில போய்ப் படிச்ச அழகு புரியுது… நீ ஒண்ணும் குழந்தை இல்ல, ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிக் குடுக்க…. ”

முதுகிலும் பலமாக ரெண்டு வாங்கிக் கொண்டேன். அழுவதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்…?

அம்மாவுக்கு நாய்களைக் கண்டால் பிடிக்காது… அதனால்தான் எங்கள் வீட்டில் நாய்க்குட்டி இல்லை… அதற்காக எதிர்வீட்டு நாயைக் கொஞ்சக்கூட அனுமதி இல்லை….

நான் எட்டாம் வகுப்பில் படிக்கும் சின்னப் பையன் பாலுதான்… ஆனால் எனக்கும் குட்டிக்குட்டி ஆசைகள் உண்டு….!!!

அந்த எதிர்வீட்டு சோமுத் தாத்தாவின் டாமி… என்னவன்…!   அவன் எனக்கு வேண்டும்… அவனை விட்டுப் பிரியமாட்டேன்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அவன் என்னவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *