எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

 

புலம்பெயர்ந்து சென்றாலும் புறப்பட்டு வந்திடுவார்

நலம்கிடைக்கும் நல்லூரான் நற்றிருவிழா காண்பதற்காய்

புலனைந்தும் தனைமறந்து புத்துணர்வு பெற்றுநிற்கும்

புதுமையினைப் பெற்றுவிட புறப்படுவார் அன்பரெலாம் !

 

வெள்ளைமணல் வீதியிலே விரதமுடன் அடியார்கள்

உள்ளமெலாம் உருகிநிற்க உருக்கமுடன் பாடிநின்றி

கள்ளமெலாம் களைந்துவிடு கந்தாவென அழைத்து

நல்லதமிழ் பாடிநிற்பார் நல்லூரான் சன்னிதியில் !

 

நாகரிகம் வந்தாலும் நல்லூரான் கோவிலிலே

நல்லதமிழ்ப் பண்பாடே நாளுமே மிளிர்ந்துநிற்கும்

நோயகல வீனைதீர நூறுமுறை அடியழித்துக்

காதலுடன் நல்லூரான் காலடியைப் போற்றிநிற்பார் !

 

முத்தமிழைத் தந்தகந்தன் அத்தமிழைக் கேட்பதற்காய்

எத்திக்கும் எதிரொலிக்கும் எழில்கொஞ்சும் எங்கள்தமிழ்

தமிழ்கேட்ட அனைவருமே தமைமறந்தே இருப்பார்கள்

இவையாவும் நல்லூரான் இருப்பிடத்தின் பெருமையன்றோ !

 

துறைதோய்ந்த நல்லறிஞர் துணிவுநிறை இளையோர்கள்

அவையேறித் தமிழ்சாற்றி அனைவருக்கும் விருந்தளிப்பார்

மறையுடனே திருமுறையும் மனம்சிறக்கச் செய்துநிற்கும்

மங்கலங்கள் நல்லூரான் மாக்கருணைக் கொடையன்றோ !

 

நல்லூரை நினைத்துவிடின் நம்மனத்தில் மாற்றம்வரும்

எல்லாமே எங்களுக்கு இறையெனவே எண்ணவரும்

நல்லசித்தர் பரம்பரையே நல்லூரில் உருவாச்சே

நாமுமங்கு சென்றுவிடின் நாளுமே நன்மைவரும் !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *