திருப்பாதிரிப்புலியூர் பதிகம்

0

–சுரேஜமீ

 ​
இறைவன்: பாடலீஸ்வரர்
இறைவி:   கோதைநாயகி

 

patirippuliyur

காப்பு
நம்பினார்ப் பாடிடுவர் இப்பதிகம் தோன்றிநாதர்
கும்பிட்டு மகிழ்வர் நிறை!

தடையறு பதிகம்
திருஞான சம்பந்தர் தேவாரம் பாடியுந்தன்
பெருமை பறைசாற்றிப் பாதம் பணிந்திட்டார்
திருப்பா திரிப்புலி யூருறை மன்னவனே
ஒருபா உனைப்பாட வைத்திட்டாய் என்னை! (1)

கல்லோடு அப்பரைக் கடலினிலே வீசிடினும்
தில்லாய்க் கரைசேர்ந்தார் தோன்றிநாதர் அண்டியதால்
நில்லாத் துயரமுமே நீங்கிடும் நின்னருளால்
இல்லா இனிஇல்லை ஈசன் இருப்பிடத்தில்! (2)

வேண்டியுனைக் கேட்கின்றேன் பாப்புலிவாழ் ஈசனே
தாண்டத் தடைகளையும் தன்மையுடன் நேசனே
யாண்டும் மகிழ்திருக்க யாவரும் நலமிருக்கத்
தூண்டும் மதிதனையே கோதை மணவாளா! (3)

கடைஞாலுர் வாழ்கின்ற காசிநகர் வாசனைக்
கடைத்தேறப் பற்றிடுவாய்க் கச்சிதமாய் ஈசனை
எடைதேற்றி வாழுமொரு மாக்களைத் தள்ளித்
தடைகளைந்து வெற்றிநடை போட்டிடவே நாளும்! (4)

அன்று உனைத்தொழுத அக்னி சாட்சியாக
என்றும் தமிழ்போற்றும் அகத்தியர் காட்சியாக
இன்று உறுதியுடன் உன்னடியைப் போற்றுகிறேன்
நன்று எனக்கருள்வாய் நாயகனே வேண்டுகிறேன்! (5)

வந்திடுவர் பாப்புலியோர் நின்கருணை வேண்டித்
தந்திடுவர் சம்மதமாய்த் தன்னையுமே நின்று
ஐந்தெழுத்து மந்திரத்தால் உன்புகழைப் பாடி
சிந்திடுவர் பக்திரசம் பாரினிலே என்றும்! (6)

எப்பிறப்பில் யான்செய்த புண்ணியமோ சொல்வாய்
இப்பிறப்பில் உந்தன் திருத்தலத்தைச் சேர
ஒப்பிலா நின்பாதம் போற்றிடவே என்றும்
தப்பிலா செய்துவிடு தோன்றாத் துணைநாதா! (7)

எந்தையாய் எப்போதும் என்னருகே நீயிருக்க
மந்தையாய் மானுடத்தில் மரிக்காமல் நானிருக்க
விந்தையாம் உன்நாமம் செப்பிட்டுப் பொழுதிருக்கச்
சிந்தையால் வென்றிடுவேன் சிக்கல்கள் தானிருக்க! (8)

நம்பிவந்த உத்தமர்தம் நெஞ்சினிலே நீயமர்ந்து
வெம்பும் அவருள்ளம் வேண்டுவது தந்துவிடு
தெம்பாம் சிவநாமம் சிந்தையிலே தைத்திட்டு
எம்மான் அருள்செய்ய என்றுமுனை யாம்தொழவே! (9)

திக்கெட்டும் நிற்பவனே தில்லை நடராசனே
இக்கட்டு வந்திடுமோ நின்னடிச் சரணார்க்குப்
பாக்கட்டு சேர்த்திட்டேன் பாம்பணியும் நாதா
வாக்கெடா வண்ணம் ​எமையென்றும் ​ காப்பாய் (10)

(இப்பதிகம் பாடுவோர் வேண்டுவன கிட்டும்படி ஈசன் அருளும், தமிழின் கொடையும் இருக்கக் கடவது)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *