நிர்மலா ராகவன்

பரீட்சைப் பயம்

நலம்-1-2

`இது சாதாரண பள்ளிக்கூடப் பரீட்சைன்னு அலட்சியமா இருக்காதீங்க! இப்போ வாங்கற மார்க்கைத்தான் பப்ளிக் எக்ஸாமிலும் வாங்குவீங்க!’ பல மாணவர்களும் கேட்டு நடுங்கிய எச்சரிக்கை.

இப்படியெல்லாம் பயமுறுத்தினால்தான் மாணவர்கள் ஒழுங்காகப் படித்து, நல்ல மதிப்பெண்கள் வாங்குவார்கள், நமக்கும் மரியாதையோ, பதவி உயர்வோ கிடைக்கும் என்றெண்ணி பல ஆசிரியைகள் இம்முறையைக் கையாளுவார்கள். `படிப்பு’ என்றாலே பயம் உண்டாகும் என்பதுதான் உண்மை.

ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நான் புத்தகங்கள் படிப்பது கண்டு, `எப்படித்தான் உனக்குப் படிக்கப் பிடிக்கிறதோ!’ என்பார்கள் என்னுடன் வேலை பார்த்த சில ஆசிரியைகள். வேண்டுமென்றே வரவழைத்துக்கொண்ட அலட்சியமும், சிறிது பொறாமையும் அவர்கள் குரலில் ஒலிக்கும். `நாங்கள் பரீட்சைகளில் பாஸ் பண்ண மட்டும்தான் புத்தகங்களைத் தொடுவோம்!’ என்று பெருமை பேசுவார்கள்.

`ஆசிரியர்’ என்றாலே கண்டிப்பு மிக்கவர், அவரை நினைத்தாலே அச்சம் ஏற்பட வேண்டும் என்று எழுதப்படாத விதி ஒன்றைப் பலரும் கடைப்பிடிக்கின்றனர். பள்ளிப் படிப்புதான் என்றில்லை, இசையோ, நடனமோ கற்பிக்கும் ஆசிரியர்களும் இப்படி நடந்தால்தான் மாணவர்கள் விரைவில் கற்றுத் தேர்வார்கள் என்றே எண்ணுகிறார்கள்.

மலேசியாவில் எனக்கு அலெக்சாண்ட்ரா என்ற ஒரு சிநேகிதி இருந்தாள். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவள். அவளுடைய ஆறு வயதுப் பெண்ணுக்கு இந்திய முறைப்படி நாட்டியம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என்று ஓர் ஆசிரியையிடம் அழைத்துப் போனாளாம். அங்கு அந்த ஆசிரியை தன் மாணவியின் கன்னத்தில் அடித்துச் சொல்லிக் கொடுத்ததைப் பார்த்து, பெண், `I don’t know how to handle this!’ என்று கற்க மறுத்துவிட்டதாகச் சொன்னாள்.

“அடி வாங்கிய சிறுமியின் தாய் அருகிலேயே இருந்தாள். ஆனால், ஒன்றுமே நடக்காததுபோல் வாளாவிருந்து விட்டாளே!” என்று அதிசயப்பட்டாள் அலெக்சாண்ட்ரா. அவர்கள் நாட்டில் குழந்தைகளைப் பெற்றோர் அடிப்பதுகூட சட்டவிரோதம். `ஆசிரியை அடித்தால் எனக்குச் சமாளிக்கத் தெரியாதே!’ என்று பெண் பயந்ததில் என்ன அதிசயம்?

நம் நடன ஆசிரியைகள் தாம் இப்படிப் பயில்விக்கப்பட்டதால்தான் இன்று உயர்ந்திருக்கிறோம் என்று அதே முறையைக் கையாள்கிறார்கள்.
தாம் மிரட்டியோ, பயமுறுத்தியோ செய்தால்தான் மாணவர்கள் எதையும் செவ்வனே செய்வார்கள் என்று ஆசிரியர்கள் நினைக்கலாம். ஆனால், பாட்டு ஆசிரியை பயமுறுத்தினால் மேடையிலோ, பிறர் எதிரிலோ பாட ஆரம்பிக்கும்போது, தொண்டையை அடைத்துக்கொள்வதுபோல் இருக்கும். நாட்டியம் ஆடும் பெண்களோ, சற்றே விறைத்தாற்போல் இருப்பார்கள். கண்கள் அலையும் — தப்பாக ஏதாவது ஆடிவிட்டால், பிறகு ஆசிரியை எப்படித் திட்டுவாரோ என்ற பயத்தில். இதற்கெல்லாம் `STAGE FEAR!’ என்று சப்பைக்கட்டு கட்டிவிடுகிறோம். அதற்குக் காரணமான ஆசிரியைக்கு யார் எடுத்துச் சொல்வது!

எந்தப் போட்டியில் பார்த்தாலும், ஆரம்பத்தில் நன்றாகப் பாடுகிறவர்களோ, ஆடுகிறவர்களோ இறுதிச் சுற்றில் வெற்றி பெறுவதில்லை. அமைதியாக இருப்பவர்களோ, சிறுகச் சிறுக முன்னேறிக்கொண்டே வந்து, வெற்றிக்கோப்பையைப் பிடித்துவிடுவார்கள்.

இவர்களால் இவ்வளவு பெரிய சமாசாரத்தை எப்படிச் சாதாரணமாக ஏற்றுக்கொண்டு, படபடப்பில்லாமல் இயங்க முடிகிறது என்று பார்த்தால், அவர்களுடைய ஆசிரியைகள் சிரிப்பும், விளையாட்டுமாகச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். தவறிழைத்தால், கேலியோ, திட்டோ கிடையாது. பிற ஆசிரியர்களைப்பற்றி அவதூறாகப் பேசவும் மாட்டார்கள். இம்மாதிரி வகுப்புகளுக்கு குழந்தைகள் ஆர்வமாக வருவார்கள். கற்பது முதலில் மெதுவாகத்தான் இருக்கும். ஆனால், பந்தயத்தில் ஓடும் குதிரைபோல், விரைவிலேயே பல மடங்காக உயர்ந்து, பிறரைப் பின்தள்ளி விடுவார்கள். போட்டி, பொறாமையின்றி பிறருக்கு உதவவும் செய்வார்கள்.

குழந்தைகளுக்கு இயல்பாகவே எந்தக் காரியத்திலும் நீண்ட காலம் கவனம் செலுத்திக்கொண்டு இருக்க முடியாது. இது புரியாது, அவர்களைத் திட்டி, அடித்தால் அது கொடுமைதான்.

`ஆறு வயதுக் குழந்தைகளை மேடையில் ஆடப் பழக்கும்போது, தலையை அப்படியும் இப்படியும் திருப்புகிறார்களே!’ என்று அயரும் நடன ஆசிரியைகளுக்கு ஓர் ஆலோசனை: வீட்டில் சிறுமி ஆடும்போது, அவளுக்குப் பிடித்த பொம்மை ஒன்றைத் தாயின் கையில் கொடுத்து, `பொம்மையைப் பார்த்துக்கொண்டு ஆடு!’ என்று பழக்க வேண்டும். தாய் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தாலும், பொம்மையிலேயே கருத்தாக இருக்கும் சிறுமி தலையைத் திருப்ப மாட்டாள். எவ்வளவு பெரிய மண்டபமாக இருந்தாலும், பார்வை என்னவோ முன்னோக்கியே இருக்கும்.

நான் ஆரம்பப் பள்ளியில் படித்தபோது, குடுமி வைத்த ஆசிரியர்கள் மட்டும்தான். எல்லாரும் வகுப்பிலிருந்த பையன்களை அடிப்பார்கள் — கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லத் தெரியாத குற்றத்துக்காக. இல்லையேல், தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள்.

வாடிக்கையாக, என்னைப்போல் ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதில் கவனமின்றி எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்களை நாற்காலியின்மேல் நிற்கச் சொல்வார் ஓர் ஆசிரியர். அவ்வளவுதான். அடி கிடையாது. (எங்கள் வகுப்பில் நான் ஒருத்திதான் அப்படி நின்றதாக நினைவு).

எனக்கு இம்முறை நன்றாகப் பழகிப்போய், என் பெயரை ஆசிரியர் அழைக்க வேண்டியதுதான், நானே நாற்காலியின்மேல் ஏறி நின்றுவிடுவேன் — அவர் வேறு எதற்காகக் கூப்பிட்டிருந்தாலும். எல்லாரையும்விட உயரமாக இருக்கிறோமே என்று பெருமையாக இருக்கும். அதோடு, இனி ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனிக்க வேண்டாமே!

சும்மா நிற்க முடியுமா? என் கண்கள் அங்கும் இங்குமாக அலையும். என்னைப்போல் `உருப்படாத,’ குழந்தைகளுக்காக மேலே பார்க்கும் இடங்களில் எல்லாம் கூட்டல், பெருக்கல் கணக்கு, பழமொழி எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். அதனால்தானோ, என்னவோ, தமிழ், கணக்கு இரண்டும் எனக்கு மிகவும் கைவந்த பாடங்களாக ஆயின!

சிறு வயதாக இருந்தால் அப்படித்தான் எல்லாரும் திட்டுவார்கள் போலிருக்கிறது என்றெண்ணியதால், இம்மாதிரியான தண்டனை எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வயது சற்று கூடியதும், முன்னேற வேண்டும் என்ற துடிப்பில் கட்டொழுங்கு தானே வந்தது. அப்போது நான் என் இடைநிலைப்பள்ளி ஆசிரியைகளைப் போய் பார்த்தபோது, ஓயாமல் என்னை `ஒழுங்கீனம் பிடிச்ச பிள்ளை’ என்று நிந்தித்த ஆசிரியைகள் இருவர், `நீ நல்லா முன்னுக்கு வருவேன்னு அப்பவே தெரியும்,’ என்றார்கள்!

பாடங்களை மறந்த குற்றத்துக்காக தோப்புக்கரணம் போட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நன்மைதான் செய்திருக்கிறார்கள். அந்த `தண்டனை’ மூளையிலுள்ள நரம்புகளை வலுப்படுத்துவதால், இப்போது மேல் நாடுகளில் ஒரு வித யோகா என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறதே!
அடி வாங்கிய மாணவர்கள்தாம், பாவம், பரீட்சை சமயத்தில் படித்ததையெல்லாம் மறந்து விடுவார்கள். அதற்காக இன்னும் அடி. (கடந்ததை மறக்க முடியாது, கல்லூரி நாட்களில்கூட, `பரீட்சை’ என்றாலே வயிற்றுப்போக்கு ஏற்பட்டுத் துடித்த சிலரை நான் அறிவேன்).

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் அளிக்கும் தண்டனையைவிடக் கொடுமையானது, `படி, படி’ என்று உயிரை வாங்கும் பெற்றோரைப் பெற்றிருப்பது.

ஒரு தாய் `பெரிய பரீட்சை’ என்று நடுங்கி, இளைத்துப்போன மகளைப் பார்த்துப் பரிதாபப்பட்டுக் கேட்டாள்: `படிக்காமலிருந்தால் என்ன ஆகும்?’
`பரீட்சையில் தேர்ச்சி பெற முடியாது’.

`படித்தால்?’

`பாஸ் பண்ணலாம்!’

`அது போதுமே!’

இப்படி வளர்க்கப்பட்ட குழந்தை இயல்பாகவே கடினமாக உழைக்கும் — படபடப்பு இல்லாது. எத்தனை வயதானாலும் படிப்பதிலுள்ள ஆர்வமும் குன்றாது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *