பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

14194241_1081118968608968_1196525621_n

santhy-mariappan5சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை என் விருப்பத்திற்கிணங்க நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தன் படங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். அவருக்கு என் நன்றி.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.09.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பி.கு. நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் அவர்கள் பயணத்தில் இருந்ததால் திங்களன்று வரவேண்டிய இந்த அறிவிப்பு சற்று கால தாமதமாக இன்று வந்துள்ளது. நண்பர்கள் வழமைபோல் தங்கள் சிறந்த படைப்புகளை பின்னூட்டமாக உள்ளிட்டு உற்சாகமளிக்க வேண்டுகிறோம். நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி (78)

  1. நம்பினோர் கெடுவதில்லை

    ஆனந்தம் வழிகிறது கண்ணீராய் கன்னத்தில்
    அடியெடுத்து நீ தளிர் நடை பயிலும் போது
    அதே சமயம் பதட்டமும் வருகிறது -உனது
    அந்த தளிர் நடை ஓட்டத்தின் வேகத்தைக் கண்டு

    இளம் கன்று போல் துள்ளி ஓடுகிறாய்
    இன்னமும் பயம் உன்னைத் தீண்டவில்லை
    நீ நன்றாக நடை பயிலும் வரை தினமும்
    நான் நிழலாக தொடருவேன் உன்னை

    பாதைகள் ரோஜா படுக்கை அல்ல‌
    பதம் பார்க்கும் முள்ளும்முண்டு அங்கு
    பயணித்து பாடம் கற்றவன் நான்
    பக்குவமாய் எடுத்து உரைக்க நானுள்ளேன்

    என் கை நீளுகிறது இன்று பாசத்துடன் உனக்காக‌
    உன் கை நீளும் அன்றொரு நாள் எனக்காக- எனும்
    நம்பிக்கையில் நாளை நகர்த்துகிறேன் -இந்த‌
    நம்பிக்கை நான் மட்டும் கூறவில்லை -இது
    நான் மறை தீர்ப்பும் கூட……

    அனுப்புனர்
    திருமதி ராதா

  2.     தந்தையின்  தந்தையானவரே  தாத்தா ஆவார் 

         பேரனின் செயல் கண்டு பெருமையடைவார் 

         பேரனை அழைத்துக்கொண்டு பூங்கா செல்கிறார்,

        அங்கே பல விளையாட்டுக்களை காண்பிக்கின்றார் !
     

        பேரனிடம் தனது முதுமையை இளமையாக்குகின்றார் 

        தவறி விழுந்திடுவானோ என்று கைகாட்டி நிறுத்துகின்றார் 

        உன் தந்தை என் சொல் மதியாமல் போகின்றார்  

        நீயாவது என் சொல்லை கேள் என கைநீட்டுகின்றார் 
     
     
        பட்டம், பதவியை விட நீ நல்லவனாய் இருக்க உதவுகின்றேன்
     
        நான் இறந்தபின் நெய்ப்பந்தமாவது  நீட்டுவாய் என நினைக்கின்றேன் ! 

        பேரன் தவறு செய்தால் செல்லமாக கண்டிக்கின்றார் 

       விழுந்து விட்டாலும் இருகை கொண்டு அணைக்கின்றார் 
     
     

       பிள்ளைகள் செய்யும் தவறுகளை பேரனால் மறக்கின்றார் 

       தன் வம்சாவளியினை தாங்கிச் செல்பவன் என நினைக்கின்றார் !

       முதுமையில் பிள்ளையைவிட பேரனிடத்தில் அன்பு அதிகம் 

      பிள்ளைகள் வெறுத்தாலும், பேரனை போற்றும் தாத்தாக்களே அதிகம்! 
                                                                                                                                       
         ரா. பார்த்தசாரதி              

  3. தொடரும் இனிய தலைமுறை
    பெயர் சொல்லும் பெயரன்(பேரன்)
    நம் பெயரை வைத்துக்கொள்ளும் பெயரன்
    பெருமை பேசும் பேத்தி
    கூடிவாழும் குலத்தின் குலக்குறியீடு
    மகனுக்கு நடைபயில்வித்த கால்களுக்கு
    நடை தளர்ந்த வயதில்
    நடைவண்டிகளாய் பேரன்கள்
    ஒடியாடும் சிறுபிள்ளையின் பேச்சு
    ஒடிந்த மனதிற்கு ஒத்தடம் போடும்
    நம் தாயின் சாயலும்
    தந்தையின் சாயலும்
    வாரிசுகளில் கண்டு மகிழும்
    தாத்தாவின் மனது
    தலையெடுக்கும் தலைமுறையினரை
    தடத்தில் அழைத்துச்செல்லும் கரங்களாக
    ஆச்சி …தாத்தா… அய்யா…… அப்பத்தா… ஆயா…
    பாட்டி…பாட்டையா…. மாமை…..
    விரல் பிடித்து வழிகாட்டும் பருவம் முதிர்ந்த பின்
    தாவி ஓடும் இளையதலைமுறையை
    தன் பாசவேர்களால் கட்டிப்போடுவார்
    கைநீட்டி கதைபேசும் மழலைகளை
    கை காட்டி வழிநடத்துவார்
    ஒவ்வொரு வீட்டிலும் வாழும் குலதெய்வங்கள்
    நம் பெற்றோரும்
    பெற்றோரின் பெற்றோரும்
    ஆலமரங்களாய் முன்னைய தலைமுறையினர்
    ஆதாரமாய் நம்மைக் காப்பர்.

  4. பழுத்த இலையின் பாசம்…

    பச்சை இலைகள் பார்க்காத
    பழுத்த இலைகள் பாசத்துடன்
    இச்சை கொண்டே ஏக்கத்தொடு
    இளைய தளிரைப் பார்த்திருக்கும்,
    நிச்சய மில்லாப் புவிவாழ்வில்
    நினைக்க மறந்த பிள்ளைக்குத்
    துச்ச மான தந்தையுமே
    தொடர்வார் பாசம் பேரனிடமே…!

    -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *