-க.பிரகாஷ்  

     tiruvalluvarவள்ளுவர்காலச் சமுதாயத்தின் தன்மையை அவர்தம் நூலிலிருந்தே உய்த்துணரலாம். உழவுத் தொழிலைத் தலைமையாகக் கொண்ட மருதநிலச் சமுதாயத்தில் நாகரிகம் நிலைகொண்டு கோனாட்சி வேர்விட்டிருந்த சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருந்த சமுதாயத்தில் தமிழர்கள் வாழ்ந்த நிலையினைக் குறளில் காண்கிறோம். வள்ளுவர் காலத்தில் பொருட் செல்வத்தால் பெருமை எய்திய சிலர் இருந்தனர். அன்றாடம் குடல் கழுவுவதற்கு வழிதெரியாத, ஆலாய்ப் பறந்த ஏழைகளாகப் பலர் இருந்தனர். “கரவாது உவந்து ஈயும்” என்ற குறளில் குறிப்பிடுவதுபோலச் செல்வர் சிலரைக் கண்டிருக்கிறார். “ஈட்டம் இவறி இசை வேண்டா” என்ற குறளில் பூமிக்குப் பாரமாய் வந்த பிறவிகளையும் அறிந்துள்ளார். தொழில் பிரிவினை தலைமுறை தலைமுறையாகத் தொடர்வதாலும் குலங்களை நாகரிகச் சமுதாயத்தின் அங்கங்களாக அமைந்த ஏற்பாட்டின் மூலம் சாதி முறை இன்றிய சமுதாயத்தில் வள்ளுவர் வாழ்ந்தார். முல்லை நிலத்திலேயே ஆயருக்கு அடங்கிய பாணன் துடியன், பறையன், கடம்பன் என்றும் குடிகள் வாழ்ந்தனர் என்பது மாங்குடிகிழார் பாடல் ( புறம் 335) விளங்கும்.  மருதநிலச் சமுதாயத்தில் இந்தக் குடிவகைகள் பல்கிப் பெருகியது இயல்பே.

     கொடுங்கோல் மன்னர்களும் அறம்பேணாச் செல்வர்களும் போலித் துறவிகளும் இன்னோரன்ன பிறரும் சமுதாயத்தின் சத்ருக்கள் என்பதை உணர்த்தும். அந்தத் தீயோருக்கு இடமில்லாததும் மாநிலம் எங்கும் மக்கட் பண்பு மலர்ந்து மணம் வீசுவதுமான புதுமைச் சமுதாயத்தை தோற்றுவிக்கும் பேரார்வத்தால் உந்தப்பட்டே வள்ளுவர் தம் நூலைப் படைத்தார்.

     அற உணர்வில் எழும் உலகப் பொதுமைக்கு ஊறுநேராத வண்ணம் அவர் இமைகொட்டா விழிப்போடு தற்காத்துக் கொள்ளும் தகைமை போற்றுதற்கு உரியது. தமிழை வாழ்வித்த மூவரில் ஒருவரான வள்ளுவர் தமிழையோ தமிழ் நாட்டையோ ஓரிடத்திலேனும் குறித்தாரில்லை. “அருள் தமிழ் ஆற்றல்”, “தென்தமிழ் ஆற்றல்”, என்று சிலப்பதிகாரத்தில் – இளங்கோவடிகள் கவிக்கூற்றிலேயே ஆற்றுவார்.  வள்ளுவர் படைவீரத்தைப் பற்றிப் பேசும் போதோ நாட்டு வளத்தைப் பற்றிப் பேசும்போதோ தமிழை உவமையாகக் குறிப்பிட்டிருக்கலாம். காதலைப் பற்றிப் பேசும்போது மலரின் மென்மையை உவமையாகக் கொள்வதைப்போல் தமிழின் இனிமையைச் சுட்டியிருக்கலாம். ஆனால் சாதி, சமயம், நாடு, மொழி முதலிய எல்லைகள் அனைத்தையும் கடந்த மனிதகுல நல நாட்டம் மணிகளின் ஊடே செல்லும் பொன்னூல்போல் திருக்குறள் பாக்கள் அனைத்தையும் ஊடுருவி நிற்கிறது என்று பாரதி கூறுவார்.

    “வரும் குணத்தாலும் செயலாலும் கீழ்மை இல்லா
     தார் கீழ்மக்கள் ஆகார்”

     யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை – பாரதி தமிழ்.

     “கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்
     இரவாமை கோடி யுறும்”

     உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

     “ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
     தோற்றம் நிலக்குப் பொறை”

     சேர்த்து வைப்பதையே விரும்பும் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்.

     கராவது        –    (இருப்பதை) ஒளிக்காது
     கண்      –    (சமுதாயத்தின்) கண் போன்றவர்
     ஈட்டம்         –    பொருளைத் திரட்டுவதை
     இவறி    –    பேராசைகொண்டு
     இசை          –    புகழ்

“மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்
கீழ்இருந்தும் 
கீழ்அல்லார் கீழ் அல்லவர்” 

     மேல் நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.

     கலைஞர்களும் அறிஞர்களும் சமுதாயத்தில் பிறந்து வளர்கிறார்கள். அவர்கள் சமுதாய வாழ்வின் நினைவுகளையோ அனுபவங்களையோ புறக்கணித்துவிட்டு வெறுமையில் கற்பனை செய்யவோ, சிந்திக்கவோ முடியாது. ஒருவருடைய சிந்தனை, உணர்ச்சி, கற்பனை எல்லாம் அவர் சமூகவாழ்வில் பெறும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. சமுதாயமோ ஒரே நிலையில் இருப்பதில்லை. அது மாறுகிறது; வளர்கிறது. காலந்தோறும் மாறுதலும் சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கில் கருத்துக்கள் மாறுதல் அடைவதும் பண்பாடு செம்மையுறுவதும் வரலாற்று ஆசிரியர் ஒப்பும் உண்மைகளாகும். நாம் இதை ஓர் உதாரணத்தால் உணர்ந்து கொள்ளலாம். சுதந்திரம் அல்லது உரிமை என்று கருத்து காலப்போக்கில் செழுமையடைந்து வருவதை நாம் நன்கறிவோம். சட்டமன்றக் குடியாட்சி முறையே உரிமைக்கு உத்தரவாதம் என்ற கருத்து நூற்றாண்டுகட்கு முன்னர் நிலைப்பெற்று விளங்கியது.

நெடிது நோக்கும் நோன்மை படைத்த கார்ல்மார்க்ஸ் போன்ற அறிஞர் சிலரே அக்கருத்தின் தவற்றை அக்காலத்தில் உணர்த்திருந்தனர். ஆனால் சோஷலிஸச் சமுதாயத்தில் தான் சட்டமன்றக் குடியாட்சி முறையும் உரிமைக்கு உறுதி தேடுமென்ற சிந்தனை இக்கால மக்களில் பெரும்பாலோரை ஆட்டிப்படைத்து வருகிறது. எனவே திருக்குறளை வாழ்வியல் மட்டும் அல்லாமல் அரசியல் போன்ற பல்நோக்க முறையில் வகுத்துள்ளார் வள்ளுவர்.

 ***

பார்வை : 

திருக்குறள் ஒரு சமுதாயப் பார்வை –
டாக்டர் .எஸ் இராமகிருஷ்ணன்
திருக்குறள்     – டாக்டர் மு. வரதராசனார்

 *** 

க.பிரகாஷ் எம்.ஏ, எம்பிஃல்,
தமிழ்த்துறை
தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *