(   எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

 

 

சும்மாஇரு என்று சொல்லுவது எளிதாகும்

சும்மா இருப்பதுதான் சுகமான நிலையாகும்

சும்மா இருந்துவிட நினைக்கின்றார் யாவருமே

இம்மா நிலத்தினிலே என்றுமே உயர்ந்துநிற்பார் !

 

சும்மா இருப்பது சுமையான காரியமே

சுகம்கண்ட யாவருமே சும்மாஇருக்க மாட்டார்

சுழன்றோடும் மனத்தாலே சும்மா இருப்பதற்கு

சுதந்திரத்தைப் பெற்றுவிடல் சுகமான விஷயமல்ல !

 

சும்மா இருந்ததனால் சுமைவிட்டார் ஞானியர்கள்

இம்மா நிலத்தினிலே இவர்வணங்கும் பேறுபெற்றார்

சும்மா இருந்தபடி சுவாசத்தால் பலபெற்றார்

சுகமனைத்தும் துறந்ததனால் சும்மாவே இருந்தார்கள் !

 

சும்மா இருந்துவிட்டால் சோறுதான் கிடைத்திடுமா

சும்மா இருப்பதுதான் சோம்பலின் நிலையாகும்

சும்மா இருந்துவிட்டால் சுதந்திரம் கிடைத்திடுமா

சும்மாவை தூக்கியெறி துள்ளலுடன் வாழ்ந்திடலாம் !

 

சும்மா இருந்துவிடின் அம்மாவும் வெறுத்திடுவாள்

சும்மா இருந்துவிடின் துணையுமே துரத்திடுவாள்

சும்மா இருந்துவிடின் தோழமையும் கிட்டவரான்

சும்மா இருந்துவிடின் சுகத்துக்கே கேடாகும் !

 

சும்மா இருப்பாரை சொறிநாயும் நோக்காது

சும்மா இருப்பாரைச் சொந்தமுமே பார்க்காது

சும்மா இருப்பார்க்கு சொர்கமுமே நரகமாகும்

சும்மா இருப்பதற்கு சொல்லுகின்றார் பலகருத்தை !

 

சும்மா இருஎன்று சொல்லுகின்ற நிலையினிலே

சும்மா இருந்துவிடின் சோறுபற்றி நினைத்திடலாம்

சும்மா இருஎன்னும் பொருள்பொதிந்து பார்த்துவிடில்

இம்மா நிலத்திற்கது எட்டாத தத்துவமே !

 

தத்துவமாய் இருக்கின்ற தகைமையுடை சொல்லதனை

சாதாரண நிலையில் நாமெடுத்தால் வேறு அர்த்தம்

உள்விழுந்து நோக்கிவிடின் உயர்கருத்தை கொள்ளுவதால்

சும்மா நாமெண்ணிவிடும் சொல்லல்ல சும்மாயிரு !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *