மக்களாட்சிதானா இது?

0

பவள சங்கரி

தலையங்கம்

மக்களுக்காக ஆட்சி செய்கிறோம் என்பதையே நடுவண் அரசு மறந்துவிட்டது போலத்தோன்றுகிறது. மக்களுக்கு எந்தெந்த முறையில் சலுகைகளை ஏற்படுத்தி நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்துவது என்பது பற்றி சிந்திப்பதற்கு பதிலாக துக்ளக் ஆட்சியைப்போல் மக்களுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது சமீபகாலங்களில். திரையரங்குகளில் நுழைவுச்சீட்டை அதிக விலைக்கு விற்றால் தண்டனை என்று கூறி நியாய விலையில் அதை வாங்கி திரையரங்கு செல்வதற்கு வழிவகுத்திருந்த காலம் ஒன்றும் இருந்தது. மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் ஒருவருக்கு 120 உரூபாய் என்று முறைப்படுத்தி மக்களை கொள்ளையடிப்பதற்கு சட்டப்படி அனுமதியளித்தது நாம் அறிந்ததே. இதே போல இரயில்வே அமைச்சகமும்ச ட்டம் இயற்றியிருப்பது அல்லது ஆணை பிறப்பித்திருப்பது மிகவும் வேதனைக்குரிய செயல். இரயிலில் முன்பதிவு செய்யும் நுழைவுச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்றால் தண்டனை அல்லது அந்த நுழைவுச்சீட்டு செல்லாது என்று இருந்தது கனவாகிவிட்டது. பரீட்சார்த்த முறையில் அனுமதிக்கப்பட்ட Premium trains இன் வெற்றியே, இன்று அரசே Surging charges அல்லது Elasticity tickets, போன்ற புதிய முறையை அறிமுகப்படுத்த ஊக்கப்படுத்தியுள்ளது. சதாப்தி, ராஜஸ்தானி, துரந்தோ போன்ற இரயில்களில் 10 சதவிகிதம் மட்டுமே நியாயமான விலையாகவும், ஒவ்வொரு பத்து சதவிகிதம் நிறைவடைந்த பிறகு 10 சதவிகிதம் கட்டண அதிகரிப்பும், 50 சதவிகிதத்திற்குப் பிறகு மீதமுள்ள 50 சதவிகிதத்திற்கு ஒன்றரை மடங்கு கட்டணமாகவும் நிர்ணயித்துள்ளனர். அதாவது பணம் உள்ளவனுக்கே இனிய பயணம் என்னும் வகையில் உள்ளது இத்திட்டம்.

இன்றைய அறிவிப்பாக, இரயில்வேத்துறைக்கு இரண்டு நாட்களில் மட்டும் 1.6 கோடி அதிகப்படியான வருமானம் கிடைத்திருப்பதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி அல்ல. நடுத்தர மக்களும் உயர் கீழ்வருவாய் மக்களும் இனி இந்த வகையான புகைவண்டிகளை பயன்படுத்தவே முடியாது என்பது வேதனையான விசயம். அரசியல் சாசனத்தின்படி அனைவரும் சமம் என்ற நிலை மாறி பணம் இருப்பவனுக்கு மட்டுமே அரசின் சலுகைகள், சுகமான பயணங்கள் என்றால் இது எப்படி மக்களாட்சி நடக்கும் நாடாக இருக்க முடியும் என்ற ஐயம் எழாமல் இல்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *