பவள சங்கரி

நம் தமிழ் மொழியின் சுவையை உணர முற்பட்டால் திகட்டத்திகட்ட சுவைக்க ஆயிரமாயிரம் விசயங்கள் உள்ளன. அதிலும் இலக்கணச்சுவையை அறிந்தோர் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனாலும் இலக்கணம் அதிகம் அறியாத என் போன்றோரும் கொண்டாட நிறையவே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த வஞ்சப்புகழ்ச்சி அணி. வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது ஒருவரைத் திட்டுவது போல் பாராட்டுவது. நம் ஆதிகாலப் புலவர்களில் மிகவும் குசும்பு படைத்தவர்கள் பலர்.. இரட்டுற மொழிதல் – சிலேடை அணிப் பாடல் என்ற ஒருவகை உள்ளது. அதில் வல்லவர் நம் கவி காளமேகப்புலவர். இவர் அம்மனையே வம்புக்கு இழுக்கிறார் என்றால் இந்தப் புலவர்களுக்கு அந்த தெய்வங்களே எவ்வளவு செல்லம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள் பாருங்கள். இவர் தில்லை சிவகாமி அம்மை மீது பாடிய வஞ்சப்புகழ்ச்சிப் பாடல் இதோ:

images-4மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!

இந்தப்பாடலில் வஞ்சப்புகழ்ச்சி மட்டுமன்றி இரு பொருள் தரும்படியாகவும் அமைந்துள்ளது பாருங்கள். முதலில் மேலோட்டமாக, திட்டுவது போல் உள்ள பொருளைப் பார்ப்போம்.

மதுரைவாசியான ஆடுமாடு மேய்க்கும் ஒருவனின் தங்கை தம் வீட்டைவிட்டு தில்லை நகரில் வசிக்கும் ஆடு மேய்ப்பவனுக்குத் துணைவியாகிவிட்டாள். ‘கோனான்’ என்பது இடையர் குலத்தோரின் பட்டப்பெயர். அதாவது ஆடு, மாடு மேய்க்கும் இடையர். கோட்டான் போல ஒரு மகனையும் பெற்றாள் அந்த சிற்றிடைச்சி. அதாவது சிறிய இடையர் குலப்பெண் என்று கிண்டலாகப் பாடுவது போல் உள்ள இந்தப்பாடலுக்கு இன்னொரு பொருளும் உண்டு. அதையும் பார்க்கலாம் ;

‘கோன்’ என்பதற்கு மன்னன், அரசன், தலைவன் என்று பல பொருள்கள் உள்ளன. ஆடு என்றால் நடனம் ஆடுவது என்ற பொருளும் உண்டல்லவா? ஆக ’ஆட்டுக்கோன்’ என்றால் ஆடலரசன் என்ற பொருள் வருகிறதல்லவா. தில்லை நடராசப்பெருமான் தான் ஆட்டுக்கோன். அதேபோல் மாட்டுக்கோன் என்பதற்கும் உட்பொருள் உண்டு. மாடு என்றால் செல்வம். செல்வத்திற்கு அதிபதியான ஆண்டவன், பெருமாள் அல்லவா. மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது பெருமாளின் தங்கை மதுரையை விட்டு தில்லைக்கு வந்து நடராசரின் மனைவியானாள் என்பதே முதல் இரண்டடியின் பொருள்.

அது சரி. அடுத்த ஈரடியில், குட்டிமரிக்க ஒரு கோட்டானைப் பெற்றாள் என்கிறாரே .. இங்குதான் நம் புலவர் தம் சொற்திறத்தைக் காட்டி விளையாடியிருக்கிறார். குட்டிமரிக்க என்றால் குட்டிகளைக் கிடையில் அமர்த்துவது என்று ஒரு பொருள் இருந்தாலும், கைகளை குறுக்கே வைத்து தலையில் குட்டிக்கொள்வது , அதாவது மரித்துக் குட்டுவது என்றும் மற்றொரு பொருள் உள்ளது. ‘மரித்து’ என்பதற்கு ‘நினைத்து’ என்ற பொருளில், விநாயகரை நினைத்து வணங்கும்போது குட்டிக்கொள்வதைக் குறிப்பால் உணர்த்தி, விநாயகரைப் பெற்றவள் என்கிறார்.

‘கோட்டானை’ என்ற சொல் கோடு + ஆனை என்ற இரண்டு சொற்களின் கூட்டணி. இங்கு கோடு என்பதற்கு யானைத்தந்தம் என்று பொருள் வருகிறது. அதாவது ஒரு தந்தமுடைய யானைமுகமுடைய விநாயகரைக் குறிப்பிடும் சொல்லே கோட்டானை என்ற பொருளாகிறது.

இறுதி அடியாக வருவது கட்டிமணிச் சிற்றிடைச்சி. கட்டி என்றால் பொன் என்று ஒரு பொருள் உண்டு. அதாவது பொன்னால் ஆன மணியைத் தம் சிற்றிடையில் (ஒட்டியாணம்) அணிந்தவள் அம்மை. இப்படி அழகாக சிவகாமி அன்னையை வர்ணித்துள்ளார்.

இன்றும் பல கவிஞர்கள் இந்த உத்தியைக் கையாண்டு இரட்டை அர்த்தப் பாடல்களும், வஞ்சப்புகழ்ச்சிப் பாடல்களும் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *