கிரேசி மோகன்

——————————————

 

முன்னை எனையழைக்க மாற்றுப் பெயர்கூற
கண்ணை மகரந்தம் கூசிட -உன்னை
மேகலையால் கட்டிமலர் முண்டகத்தால் மொத்தியது
ஆகலையால் அற்றதோ அன்பு….(207)

ரதிநீ மனதில் ரமிக்கிறாய் என்று
பதிநீ புகன்றது பொய்யே -அதுவே
நிஜமானால் நிற்பேனா நெற்குதிராய் அந்தோ
எஜமான்தன் அஸ்திக்(கு) எதிர்….(208)

மறுவுலகு ஏகிடும் மன்மதா உந்தன்
அருகிருக்க நானும் அடைவேன் -வெறுவுலகு
ஆதலால் பூதலம் ஆனதுன் சாதலால்
காதலுன் கைரேகைக் கோடு….(209)

போதிரவு போர்த்திடும் போதிலே காதலியை
மோதிடும் மேக முழக்கத்தால் -காதலன்
காத்துக் கிடக்குமிடம் கூட்டிக் கலங்காது
சேர்த்துவிட யாரினி சொல்….(210)

கெண்டை விழிசிவந்து வண்டாய் சுழன்றிட
விண்டுரைக்கும் பேச்சில் விரகமுற -பெண்டிர்க்கு
கள்ளால் வரும்மதம் காமன்நீ இன்றி
பொல்லா குடிகாரன் பேச்சு….(211)

அங்கம் எரித்ததனால் ஆனாய் சரித்திரமாய்
தங்கும் மதிவிண் தரித்திரனாய்த் -தொங்குகிறான்
துக்கம் அனுஷ்டித்த தேய்பிறைதன் தன்மையை
வெக்கமுடன் விட்டான் வளர்ந்து….(212)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *