நிர்மலா ராகவன்

“எனக்குப் பொறந்த பிள்ளைக்கு அப்பாவா! அந்த நாலு பேத்தில எவனோ ஒருத்தன்!” இடது கையை வீசி, அலட்சியமாகச் சொன்ன அந்தப் பெண் காளிக்குப் பதினாறு வயது என்றாளே இல்லத் தலைவி, மிஸ்.யியோ (YEO)! கூடவே நான்கைத் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றியது சங்கீதாவுக்கு.

சிறகு முளைக்குமுன் பறக்க ஆசைப்பட்டு, கூட்டிலிருந்து தரையில் விழுந்து, பூனை வாயில் மாட்டிக்கொள்ளும் பறவைக் குஞ்சுபோல்தான் இவளும்!

இவளுடைய நல்ல காலம், உடலெல்லாம் குருதியாக, நிலைகுலைந்த ஒற்றை ஆடையுடன் இலக்கின்றி தெருவில் ஓடிக்கொண்டிருந்தவளை காவல் துறையினர் பார்க்க நேரிட்டது.

பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அவ்விடம் கோலாலம்பூரின் மையப்பகுதியில் இருந்தது. பெரிய வளாகத்துக்குப் பொருத்தமில்லாத சிறு வீடு. ஆனால், தனி வீடு.

வாசலில் பெரிய மரம் ஒன்றின்கீழ் பிள்ளையார் வீற்றிருந்தார். மூன்றடி உயரத்தில் கம்பீரமான, கருங்கல் பிள்ளையார். இப்பெண்கள் திருந்தி, நல்வாழ்வு வாழவென அவரவர் மதப்படி பூசை நடத்துகிறார்கள்.

“எங்கப்பா ரொம்ப மட்டம்! அம்மா — அதைவிட!” தானே தெரிவித்தாள் காளி, தான் சீரழிந்ததை நியாயப்படுத்துவதுபோல்.

கற்பு வன்முறையில் சூறையாடப்பட்டிருந்த பெண்கள் திக்பிரமையாக நிற்பார்கள், அல்லது ஒரேயடியாக அழுது புலம்புவார்கள் என்றெல்லாம்தான் சங்கீதா படித்திருந்தாள். ஆனால் இந்தப் பெண்ணோ, தனக்கு நடந்தது சாதாரணமாக எல்லாரும் அனுபவிப்பதுதான் என்ற தோரணையில் அல்லவா பேசுகிறாள்!

“நான் இப்படித்தான் போவேன்னு எனக்குப் பன்னண்டு வயசிலேயே தெரியும்,” என்று தொடர்ந்தாள் காளி. “ஒருக்கா பக்கத்து வீட்டிலே எங்கம்மாவையும், அந்த வீட்டு ஆம்பளையையும் பாயில ஒண்ணா பாத்தேனா? அப்பவே தோணிப்போச்சு, இந்தமாதிரி அம்மாவுக்குப் பொறந்த நாம்பளும் கெட்டுத்தான் போவோம்னு!”

`சேற்றில் செந்தாமரை பூப்பதில்லையா?’ என்று இவளிடம் காலங்கடந்து கேட்டு என்ன பயன்! பெருமூச்சை அடக்கிக்கொண்டு, அவள் சொல்லிக்கொண்டே போனதைக் கேட்கத் தயாரானாள் சங்கீதா.

“எங்கப்பா வெஷம் கலந்த சம்சுத் தண்ணியைக் குடிச்சுட்டு, உசிரை விட்டாரு. `சனியன் விட்டுச்சு’ன்னு, தெகிரியமா அம்மா அநியாயம் பண்ண ஆரம்பிச்சாங்க. அதைப் பொறுக்கமுடியாம, பக்கத்து வீட்டு சொர்ணாக்கா அவங்க சோத்துக் கையை அதோ, இங்க வெட்டிட்டாங்க!” முழங்கைக்குக் கீழே காட்டினாள்.

சங்கீதா மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டாள். இவ்வளவு பயங்கரமான நிகழ்வுகளை இந்தப் பெண்ணால் எப்படி உணர்ச்சியற்ற குரலில் சொல்ல முடிகிறது? ஒரு வேளை, இந்தச் சின்ன வயதுக்குள் அளவுக்கு மீறிய துன்பத்தை அனுபவித்ததால், உணர்வுகள் மரத்துப்போய்விட்டனவோ!

மரத்தடி பிள்ளையாருக்கு ஆராதனையாகக் காட்டப்படும் கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக்கொள்வதற்குப் பதில், அதை அவசரமாக எடுத்து, வாயில் போட்டுக்கொள்வாளாமே காளி!

`அது ஒரு வித போதை! இவளுக்கு அந்தப் பழக்கம் இருந்திருக்கிறது!’ என்றாள் மிஸ்.யியோ.

அப்பழக்கத்தால்தான் எதையும் அசாதாரணமாக ஏற்க முடிகிறதோ இவளால்?
கதை நாராசமாக இருந்தது. ஆனால், வித்தியாசமான ஒன்றைக் கேட்கத்தானே இத்தனை பிரயாசைப்பட்டு, விசேட அனுமதி வாங்கி இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம்!

“அப்புறம்?” என்று ஊக்கினாள்.

“கை போனதும், அம்மா செஞ்சுக்கிட்டிருந்த தோட்ட (ரப்பர் எஸ்டேட்) வேலையும் போயிடுச்சு. எங்க மாமா வந்து, எங்க ரெண்டு பேத்தையும் டவுனுக்குக் கூட்டிட்டு வந்துட்டாரு!”

அடுத்து, அவள் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்ததைப்பற்றிச் சொல்லும்போது, காளியின் முகத்தில் சிறிது பிரகாசம் தோன்றியதைக் கவனித்தாள் சங்கீதா.

அந்த வயதில் தான் எந்தக் கவலையும் இல்லாது, பள்ளிக்கூடம், நீச்சல், சினிமா, பாட்டு கிளாஸ் என்று உல்லாசமாக வாழ்வைக் கழித்தது நினைவில் எழுகையில், சிறிது குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.

ஓர் ஆன்மா இவ்வுலகில் பிறக்குமுன், தான் சேரவேண்டிய அன்னையைத் தேடுமாம். அதனால்தான், இயற்கையிலேயே

பெற்றோரின் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள் சில குழந்தைகள்.

காளியின் ஆன்மா எதற்காக இப்படிப்பட்ட பெற்றோரைத் தெரிவு செய்தது? மீண்டும் இவ்வுலகிற்கு வரவேண்டும் என்ற ஆசை ஒன்றே பிரதானமாக இருக்க, எதுவுமே யோசிக்காது, கிடைத்த கருவுக்குள் அவசரமாகப் புகுந்துகொள்ளும் கோடானுகோடி உயிர்களுள் அவளுடையதும் ஒன்றோ?

சற்றுமுன் மலர்ந்திருந்த காளியின் முகம் மீண்டும் வாடியது. “அம்மாவும் மாமாவும் எப்பவும் என்னை ஏசிக்கிட்டே இருப்பாங்க. வேலை முடிஞ்சதும், நான் பஸ் பிடிச்சு, வீட்டுக்கு வரணும். அன்னாடம், மாமா வாசல்லேயே நின்னுக்கிட்டு, `எவனோடடி கும்மாளம் போட்டுட்டு வர்றே?’ன்னு கத்துவாரு!” குரல் விம்மியது.

“நீ எல்லாரோடேயும் கலகலப்பா பழகுவியா?” நாமும் ஏதாவது கேட்டால்தானே இவள் தொடர்ந்து பேசுவாள் என்று ஏதோ கேட்டுவைத்தாள் சங்கீதா.

“ஊகும், எனக்கு ரொம்ப பயம்! யார்கூடவும் பேசமாட்டேன்!”

“பின்னே.. ஏன் ஒங்க மாமா அப்படி..?”

“அதான் எனக்கும் தெரியல. வீட்டுக்கு ஏன் வர்றோம்னு இருக்கும்”.

`அந்த மாமாப்பயலுக்கு இந்த அறியாப் பெண்மீது ஒரு கண்ணாக இருக்குமோ?’ என்று சங்கீதாவின் எண்ணம் ஓடிற்று.

“எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு பாத்தா, அதுக்கும் பயம்! அப்பதான் ஆன்ட்டியைப் பாத்தேன்!” காளியின் முகத்தில் ஒரு சிறு ஒளிக்கீறல்.

`ஐயோ!’ என்றது சங்கீதாவின் உட்குரல்.

“தினமும் பஸ் ஸ்டாப்புக்கு வருவாங்க. என்மேல ரொம்ப இஷ்டம் அவங்களுக்கு. ரிப்பன், மணிமாலை எல்லாம் வாங்கிக் குடுப்பாங்க!”

அவள் கூறாமலேயே மேலே என்ன நடந்திருக்கும் என்று சங்கீதாவால் ஊகிக்க முடிந்தது. முன்பின் தெரியாதவள் ஒரு பருவப்பெண்மீது பரிவு காட்டுவது — தனக்கே இரையாகப்போகும் ஆட்டுக்கு இரை போடும் கரிசனம்தான்.

“ஆன்ட்டிக்கு என் வயசில ஒரு பொம்பளைப்புள்ள இருந்து, செத்துப்போச்சாம். அதான் என் கையைப் பிடிச்சுக்கிட்டு, ஆசை ஆசையா பேசுவாங்க. என்னைப் பாக்கிறப்போ எல்லாம், `எங்க வீட்டுக்கே வந்துடேன்’னு கூப்பிடுவாங்க. அம்மாகிட்டேயும், மாமாகிட்டேயும் ஏச்சுப்பேச்சு கேக்கறதுக்கு, இந்த ஆன்ட்டிகூடப் போனா, நல்லாயிருக்கும்னு தோணிச்சு. ஒரு நாள், வேலைக்குப் போகாம, அவங்ககூடப் போயிட்டேன்!” காளி சிரித்தாள், அபூர்வமாக. “ஆன்ட்டி வீட்டில நல்லா இருந்திச்சு”.
சங்கீதா மௌனமாக இருந்தாள். இந்தப் பெண்ணா வாயே திறக்காது என்றாள் இல்லத்தலைவி?!

“பேப்பர்ல என்னோட போட்டோ போட்டு, `காணும்’னு விளம்பரம் குடுத்தாங்க எங்க வீட்டில. ஆன்ட்டிதான் காட்டினாங்க. `என்னை அங்க அனுப்பிடாதீங்க, ஆன்ட்டி’ன்னு அழுதேன். நான் இல்லாம, அம்மாவுக்கும், மாமாவுக்கும் ஏச ஆள் கிடைக்கலபோல!”என்று வெறுப்பைக் கொட்டியவள், “ஆன்ட்டி வீட்டில ஏதாவது சாப்பிடக் குடுத்துக்கிட்டே இருப்பாங்க,” என்றாள், முகமலர்ச்சியுடன்.

`அதில்தான் போதை மருந்து கலந்திருப்பார்களோ?’

“எப்பவும் யாராச்சும் என்கூடவே..!”

தப்பித்துப் போகாமலிருக்க காவல்! இதுகூடப் புரியாமல், இந்த அப்பாவிப்பெண் சந்தோஷப்படுகிறாள்!

அடைத்துக்கொண்ட குரலைக் கனைத்துச் சரிசெய்ய முயன்று, தோல்வியுற்றவளாக, “எப்படி இங்கே வந்தே?” என்று கேட்டாள் சங்கீதா.

“நாலுபேர் ஒத்தர் மாத்தி ஒத்தரா என்மேல விழுந்தாங்களா..?”

“ஆன்ட்டி வீட்டிலேயா?”

“இல்ல. அங்க நெறைய்..ய மரங்க இருந்திச்சு,” என்றுதான் காளிக்குச் சொல்லத் தெரிந்தது. “நானும் அந்த தடியன்களோட சண்டை போட்டுப் பாத்தேன். முடியல. கத்த பயம். ஒருத்தன் கத்தியைக் காட்டிக்கிட்டு நின்னான்!” பயத்தில் இப்போதும் அவள் உடல் நடுங்கியது. “அப்புறமா, கைலியை எம்மேல தூக்கிப் போட்டுட்டு அவங்க ஓடிட்டாங்க. நானும் ஒரு பெரிய தெருவில ஓடினேன். போலீஸ் என்னைப் பிடிச்சு, சொந்தக்காரங்க எங்கே இருக்காங்கன்னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. நான் சொல்லல”. தான் மறக்க முயல்வதையே எல்லாரும் ஏனோ கேட்கிறார்களே என்ற பரிதவிப்பு அவளுடைய பேச்சின் வேகத்தில் தெரிந்தது.

மூச்சுவிடாமல் பேசிவிட்டு, சற்று நிறுத்தினாள். “ஆன்ட்டிதான் இங்க வந்து என்னைப் பாக்கறாங்க!”

“இங்கேயும் வர்றாங்களா!”

அவளடைந்த அதிர்ச்சி புரியாது, காளி உற்சாகமாகத் தலையாட்டினாள். “கேட்டுக்குள்ளே யாரையும் விடமாட்டாங்க. அதனால, நான் ஆசுபத்திரிக்கு காடியில போறப்போ, அவங்க தெருவுக்கு அந்தப் பக்கம் நின்னுக்கிட்டு கையாட்டுவாங்க!”

ஒருவர் மனந்திறந்து பேசும்போது அவரது போக்கிற்கே விட்டுவிட வேண்டும், நம் விருப்பு வெறுப்பை அவர்மீது திணிக்கக்கூடாது என்ற மனோதத்துவ நியதியை தாற்காலிகமாக மறந்தாள் சங்கீதா. “அவங்களை நம்பிப் போனதால, நீ பட்டதெல்லாம் போதாதா? இன்னும் என்ன, ஆன்ட்டி?” என்று படபடத்தாள். “அங்கே ஏன் போறே?”

“வேற எங்கே போறது! அவங்களுக்கு எம்மேல ரொம்ப இஷ்டம்!” மீண்டும் அதையே சொன்னாள்.

“ஐயோ, வேணாம்மா!” தன்னை மறந்து கத்தினாள் சங்கீதா. “ஒங்கம்மாகிட்ட போ!”

“அங்க எதுக்குப் போறது? அம்மாவுக்கு ஏசத்தான் தெரியும்!” என்று ஆங்காரமாகச் சொன்னவளின் குரல் தழதழத்தது. “இனிமே என்னை யார் கட்டிக்குவாங்க? இந்த ஒடம்பு இருக்கிறவரைக்கும் ஆன்ட்டிக்கு ஒழைச்சுப் போட்டுட்டுப் போறேன்!” தான் செய்யபோவது என்ன தொழில் என்று அவளுக்குத் தெரிந்தே இருந்தது வேதனையாக இருந்தது சங்கீதாவுக்கு.

“ஒன் பிள்ளை?”

“அந்தச் சனியனை யார்கிட்டயோ குடுத்துட்டாங்க!”

அந்த இல்லத்தின் வெளியே காரைச் செலுத்திக்கொண்டு போகையில், சங்கீதாவின் மனம் கனத்திருந்தது.

தன் முதல் பிரசவம் ஆகுமுன்னரே எவ்வளவு எதிர்பார்ப்புடன் தானும், கணவரும் குழந்தைக்கு வேண்டிய தொட்டில், சட்டைகள் என்று பார்த்துப் பார்த்து வாங்கினோம்!
காளி ஏன் இப்படி?

தாய்ப்பாசம் தெரியாது வளர்ந்திருந்ததால், தன் குழந்தைமீது அன்பு சுரக்கவில்லையோ?

அல்லது, அதற்கு உயிர் கொடுத்த, முகம் தெரியாத காமுகன்மேல் கொண்ட வெறுப்பு அவளை இப்படிப் பேசவைக்கிறதோ என்று யோசித்தாள் சங்கீதா.

தான் உருவான சூழ்நிலையில் அன்போ, இன்பமோ இல்லாது பிறக்கும் குழந்தை மகிழ்ச்சியோடு வளருமோ?

பெற்ற தாய்க்கே வேண்டாதவனாக, தன்மேலேயே வெறுப்புகொண்டு..! இன்னொரு கர்ணனா?

பிறந்தது பெண்ணாக இருந்தால், காளி செய்ததுபோல், தான் வழிதவறிப் போவதை நியாயப்படுத்துமோ?

பிறப்பின் அதிர்ச்சியை, பரம்பரைக் குணத்தை, வளர்ப்பால் மாற்றி அமைக்க முடியுமா?

ஓயாத எண்ண அலைகளால் அலைக்கழிக்கப்பட்டவளாக, இரண்டு தவறான திருப்பங்களுக்குப்பின் சங்கீதா வீடு திரும்பினாள்.

தோட்டத்தைக் கொத்திக்கொண்டிருந்த கணவர், அவளை வரவேற்கும் விதமாக, “தீபாவளி இதழுக்குக் கேட்டிருக்காங்கன்னு யாரையோ பேட்டி எடுக்கப் போனியே! கதை கிடைச்சுதா?”என்று கேட்டார்.

காளியின் கதையைச் சீரணிக்க இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும் என்று தோன்ற, அசுவாரசியமாகச் சூள் கொட்டிவிட்டு, உள்ளே போனாள் சங்கீதா.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *