-மேகலா இராமமூர்த்தி

 

seawaves

கரைநோக்கிப் பாய்ந்துவரும் கடலலைகளைத் தன் ஒளிப்படப்பெட்டிக்குள் அடக்கி நம் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கிறார் திரு. ராமச்சந்திரன். இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன்.  இவ்விருவரும் நம் நன்றிக்கு உரியவர்கள்!

பொறுமைக்கு இலக்கணமான நிலமகளும், வாரி வழங்கும் வள்ளன்மைமிகு அலைமகளும், அவ்வப்போது தன்னிலை திரிந்து சீற்றம் கொண்டு, நிலநடுக்கத்தையும், ஆழிப்பேரலையையும் தோற்றுவித்து மக்களை நிலைகுலைய வைத்தாலும், பின்னர்ச் சீற்றம் தணிந்து, புவிவாழத் தம்மையே தந்துவிடும் தியாகவுள்ளத்தினர்!

நிலமகளும் அலைமகளும் அரவணைக்கும் இவ்வினியகாட்சியின் மாட்சியில் உளந்தொலைத்த நம் கவிஞர்கள், தம் கருத்துப்பெட்டகத்தை நம்முன் கடைவிரிக்கக் காத்திருக்கின்றனர்; அவற்றைக் கண்டுகளித்து மனமகிழத் தடையேது நமக்கு!

***

கடலில் தோன்றும் அலைகளைப் போன்றே நெஞ்சில் தோன்றிமறைகின்றன கணக்கற்ற ஆசை அலைகள். கொஞ்சுமொழிபேசிக் காதல்வளர்க்கும் இளையோர் தஞ்சம்புக ஏற்ற இடம் கவின்மிகு கடற்கரையே என்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி. 

நேரமும் அலையும் மனிதனுக்காகக் காத்திருக்காது
கடந்த காலமும், எய்த அம்பும் திரும்ப பெற முடியாது
ஆசையே அலைபோலே, எனப் பாடினான் கவிஞன் ,
அலையும் ஆசையும் செயலில் ஒன்றே என்றான் !
கடலைப் பார்த்தாலே, நெஞ்சினிலே எண்ண அலைகள் தோன்றிடுமே
[…]
கடலோரக் கவிதைக்கு என்றும் சிறப்புண்டு
கடல் அலை அருகினில் மக்கள் செல்வதுண்டு
மகிழ்ச்சியுடன் கடல் அலையில் கால்களை நனைப்பதுண்டு
கால் தடத்தில் மண் பெயர்ந்து தடம் பதிப்பதுண்டு !
நிலவும், மேகமும் ஒன்றையொன்று தழுவும் காட்சி
கடல் அலைகளுக்கு இதனை காண்பதே மகிழ்ச்சி
கடற்கரையே காதலர்களுக்கு ஓர் சொந்த வீடு
தனியே கொஞ்சுமொழி பேசிட, காதலர்க்கில்லை கட்டுப்பாடு !

*****

கடலலைகளுக்கும் மனத்தில் தோன்றும் எண்ணஅலைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பட்டியலிட்டு மனத்தின் ஆற்றல் கடலினும் பெரிது எனக் கண்டுரைக்கிறார் திரு. நீலமேகம் சஹஸ்ரநாமன்.

கடலின் அலைகள் ஓயாது
மனதின் எண்ணங்களின் அலைகளும் ஓயாது
கடலின் அடிப்பகுதியில் அமைதி நிலவுகின்றது
மனதின் அடிப்பகுதியிலும் ஆத்மா அமைதி நிலவுகின்றது
கடல் உறங்குவதில்லை
மனித மனமும் உறங்குவதில்லை
கடலின் அலைகலை கட்டுப்படுத்த முடியாது
தனி மனதின் எண்ணங்களின் அலைகளை கட்டுப்படுத்த முடியும்
தனி ஒரு மனிதன் தன் மனதை கட்டுப்படுத்தினால்
நெருப்பிலும் நடக்கலாம்
ஆகாயத்திலும் பறக்கலாம் மழையையும் வரவைழக்கலாம்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றியடையலாம்

*****

”மனிதனிடம் நல்ல மாற்றத்தை எதிர்பார்த்துக் கரைவந்த அலைகள் ஏமாற்றத்தைச் சந்தித்து விரக்தியோடு கடலுக்குத் திரும்பும் சோகக் காட்சியிது” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

மாறி யிருப்பான் மனிதனென்று
மீண்டும் அலைகள் கரைவந்தன,
ஏறி யிருக்குது கணக்கினிலே
எண்ணில் நில்லாக் குற்றங்கள்,
நாறிக் கிடக்குது நிலமெல்லாம்
நன்றி கெட்ட மனிதனாலே,
மாற மாட்டான் மனிதனென்று
மறுபடி சென்றன கடலுக்கே…!
 

*****

தன் முட்டாள்தனத்தாலும், மூர்க்க குணத்தாலும் தனக்குத்தானே தீங்கிழைத்துக்கொள்ளும் மனித இனத்துக்குக் கரையோரம் கிடக்கும் ’பாட்டில்’ (bottle) வழியாக எச்சரிக்கைவிடுக்கும் கடலைத் தன் ’பாட்டில்’ காட்சிப்படுத்தியிருக்கிறார் திரு. ஆனந்த்.

எனக்குள் என்னை
நம்பி இருக்கும்
உயிர்களுக்கு
ஏதும் நேரக்கூடாததென்று
எத்தனை முறை
உன்னை தூக்கி எறிவது ?
முட்டாளே மனிதனுக்குதான்
அறிவில்லை !
உனக்குமா ?
நீ மனிதனின்
நீர் தாகம் தீர்க்க
பிறந்தவன்
நான் இயற்கையின்
வாழ்வாதாரமாக
வந்தவன்….
என்னில் இருந்து
பிறந்தவன்
புதிது புதிதாய்
தீயவற்றை கண்டுபிடித்து
எனைத் தீர்க்கப்பார்கின்றான்….
என் மக்கள் என்று
பொறுக்கமாட்டேன்..
சொல்லி வை
கோபம் தலைக்கேறினால்
மறுபடியும் வருவேன்
சுனாமியாய்!

*****

’கடலாடு காதை’ பாடிய பண்டைத் தமிழினம் இன்று நாகரிகக் குப்பைகளால் கடலின் அழகிய உடலை அசுத்தப்படுத்தும் அவலங்கண்டு மனங்கசிகின்றார் முனைவர். மா. பத்ம பிரியா.

ஆதி முதல் ஆண்டாண்டு காலமாக
ஆழியே உன்னழகு
இலக்கியத்தின் பாடுபொருளாக
அகத்திய மாமுனி கமண்டலத்தில்
அடக்கிய மாக்கடலே!
சங்கச் சித்திரத்தில்
நெய்தல் நிலமாக வளம்பெற்ற அலைமகளே!
அற்றை நாளில்
கடற்கானல் சோலையில்
நண்டுலாவும் பாதையெல்லாம்
உயிர்ப்பித்த களவுக் காதல்
இற்றைப் பொழுதில்
நாகரிகக் குப்பையால்
களவாடிப் போனதென்ன?
காவியங்கள் பாடிய
கடலாடு காதைகள்
கதையாகிப் போனதென்ன?

அன்றொரு காலத்தில்
புண்ணிய தீர்த்தமாட
புனிதப் பயணம்
உன்னைத் தேடி
இன்றைய மானிடரோ
பிளாஸ்டிக் கழிவுகளால் உம்மை
கரைபடுத்த தயங்கவில்லை
சிறுமை செய்வோரிடம்
சினத்தைச் சுனாமியாகச் சுட்டினாலும்
உம்மை புறகணிக்கும்
உலகுக்கோர் மாமழை
உம்மால் தானே தரமுடியும்.
 

*****

”கடல்படு பொருள்களைக் கணக்கின்றி அள்ளித்தரும் கடலன்னை, மாந்தக்கூட்டம் மந்தபுத்திகொண்டு கழிவுகளை அள்ளிக்கொட்டித் தன்னை இழிவுபடுத்தினால் பொறுக்கமாட்டாள்; பொங்கியெழுவாள் சுனாமியாய்!” என்று வெகுண்டுரைக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

…பெரியவர் முதல்
சிறியவர் வரை
கால் நனைத்து
கடலைகளில்
களிப்புறுவர்

உணவுச்சுவை
உப்பைத் தருவது அந்த உப்பைத்தருவது கடல்
கடற்கரை அழகுதான்

தள்ளி நின்றால் காற்று
அள்ளித்தருவது உப்பு
வலை வீசினால் மீன்
மூச்சை அடக்கினால் முத்து

முன்னேறும் அலைகளில்
பின்னூட்டமிட தொணும்
விரிந்திடும் நெஞ்சம்
சுரந்திடும் கவிதை

இயற்கை காட்சியில்
தோய்ந்தே
வயப்படுவது
வாழ்க்கை நிலை

கழிவுகளை இட்டு
இழிவு படுத்தினால்
பொங்கி எழுவாள் கடல் கன்னி
பெரும் சுனாமியாய் அதில் சிக்கி
அனாதை ஆகும் உலகு…

***

கரைதழுவும் அலையழகை, அது சொல்லிச்செல்லும் செய்திகளைத் தம் கவிதைகளில் சிறப்பாய்ப் பொதிந்து தந்துள்ள கவிஞர் குழாமுக்குப் பாராட்டுக்கள்!

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதை!

வாழ்க்கையே போராட்டமாகி
வசந்தம்
இனி எனக்குக் கனாக்காலமே
எனச் சாவைத்தேடி
ஓடிய எனக்குக்
கடல்
தந்தது முற்றுப்புள்ளி!
கரையில்
நின்ற என் கால்களை ஸ்பரித்து முத்தமிட்டது அலைகள்!
அலையின்
அந்த ஸ்பரிசத்தில் வெடித்து சிதறியது ஒரு புரிதல்!மனிதா.. கடலில் உருவாகி, அலையாகி, ஓயாமல் முயன்று எழுகிறேன்
இது
சாதிக்கத் துடிக்கும் எழுச்சி!
கடலும்
அலையும் வேறல்ல
கவலையும்
வாழ்வும் வேறல்ல
இரண்டும்
பின்னிப் பிணைந்த இயற்கையே
முத்து,
சங்கு மட்டும் வாரி வருவதில்லை நான்
குப்பைகளையும்
சுமப்பது மட்டுமல்லாது பிணத்தையும்தான்!!
விருப்பு
வெறுப்பில்லாது… ஓயாது ஒழியாது ஓடிவந்து
கடலிலே
உருவாகிக் கரையைத் தொட்டதும்
கரைந்து
விடுகிறேன் கடலுக்குள்!
எனக்குள்
பேதமில்லை
குப்பையும்
முத்தும் ஒன்றே
எதையும்
பதுக்கி வைப்பதில்லை
கரை
சேர்ப்பதே என் கடமை
என்னைப்போல்
ஏற்றுக்கொள் எல்லாவற்றையும்
அப்பொழுது
வாழ்க்கையும் வசப்படும்
உன்னிடம்
வசந்தங்களும் வந்து சேரும்!

விலைமதிப்பற்ற முத்துக்களையும் முடைநாற்றமெடுக்கும் குப்பைகளையும், ஏன்…அழுகிமிதக்கும் பிணங்களையும்கூட முகஞ்சுளிக்காது தன்னகத்தே சுமந்துநிற்கின்றது இந்த அற்புதக் கடல்!” என்று கடலுக்குப் பாராட்டு மடலளிக்கிறார் திருமிகு. ராதா. கடலின் இந்த அருங்குணம், தெய்வச் சேக்கிழார் புகழ்ந்திடும், ”ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்கும்” சிவநேசச் செல்வர்களின் பெருங்குணத்தை நினைவூட்டுகின்றது எனக்கு!

கடலின் இயல்பைத் தன் கவிதையில் கவினுற வருணித்திருக்கும் திருமிகு. ராதாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்து மகிழ்கின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *