Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்

இலக்கியங்களில் காதுகுத்துதல்

-முனைவா் பா.பொன்னி

தன்னைச் சுற்றி வாழும் மனிதா்களின் செயல்களைக்கண்டு தானும் அதனைப் போன்றே செய்ய முற்படுவது மனிதனின் இயல்பு. மனிதா்களின் இந்த இயல்பே சடங்கு முறைகளுக்குக் காரணமாக அமைகிறது. காதுகுத்துதல் என்பது முதன் முதலில் பழக்கமாகிப் பின்னர்  வழக்கமாகிச் சடங்காக மாறியிருக்கிறது. சடங்குகள் இருவகைப்படும். அவை மங்கலச் சடங்கு மற்றும் அமங்கலச் சடங்கு. இவற்றுள் மங்கலச் சடங்குகளுள் ஒன்றான காது குத்துதல் குறித்து இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

சங்க இலக்கியங்களில் காதணி அணிதல்

சங்க இலக்கியங்களில் காது குத்துதல் ஒரு சடங்காகப் பதிவு செய்யப்பட வில்லை. ஆடவரும் மகளிரும் தம் காதுகளை மலா்களைக் கொண்டும் அணிகலன்களைக் கொண்டும் அலங்கரித்த தன்மை இலக்கியங்களில் காணப்படுகின்றது.
சுடுநீா் வினைக் குழையின் ஞாலச் சிவந்த
கடிமலா்ப் பிண்டி தன் காதில் செரீஇ
  (பரி 12: 87-88)

இப்பாடலடிகளில் தலைவி அசோகின் சிவந்த புதுமலரை, தீயில் இட்டுச் சுட்டமையால் ஒளிமிக்க இயல்புடைய தொழிற் சிறப்புடைய காதணி போல் தொங்கும் படியாகத் தன் செவியில் செருகிக் கொண்டாள் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதன் வழி மகளிர் மலா்களைச் செவியில்சூடித் தம்மை அழகுபடுத்திக் கொண்டமையை அறியமுடிகிறது.

சாய்குழை பிண்டித் தளிர் காதில் தையினாள்
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்
குவளைக் குழைக்காதின் கோலச் செவி
(பரி 11:  95-98)  
என்ற பாடலடிகள் அசோகந் தளிரையும், குழையையும் அணிந்தமையைச் சுட்டுகின்றன.

மகளிர் குழை அணிதல்

மகளிர் அட்டிகை, இட்டடிக்கை, ஓலை, மாணிக்கஓலை, கடிப்பினை, கடுக்கன், கன்னப்பூ, குண்டலம், குணுக்கு, குதம்பை, குறடு, குழை, குவளை, கொப்பு, சன்னாவ தஞ்சம், சின்னப்பூ, செவிப்பூ, தடுப்பு, கொப்பு, சன்னாவ தஞ்சம், சின்னப்பூ, செவிப்பூ, தடுப்பு, தண்டட்டி, தாளுருவி, திரிசரி, தோடு, பொன்தோடு, மணித்தோடு, நவசரி, நவகண்டிகை, நாகபடம், பஞ்சசரி, பாம்படம், பாம்பணி, புகடி, மகரி, மஞ்சிகை மடல், மாத்திரை, முடுச்சு, முருகு, மேலீடு, வல்லிகை, வாளி போன்ற காதணிகளை அணிந்துள்ளனா்.  கடிப்பு என்னும் அணிகலனை தொடர்ந்து அணிந்து வர காதுமிக நீண்டதாக ஆகும் என்பா். இவற்றுள் குழை என்னும் அணிகலனே சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையான இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.

களிர் பல்வேறு வகையான குழைகளை அணிந்தமையை சங்க இலக்கியங்கள் வழி அறிலாகின்றது.

ஊசல் ஒண்குழை உடை வாய்த்தன்ன (நற் 286 :1)

கனங்குழைக்கு அமா்த்த சேயரி மழைக்கண் (நற் 16 : 9)

கயல் ஏா் உண்கண் கனங்குழை (நற் 316 : 3)

குழை மாண் ஒள் இழை (அகம் 6 : 7)

கொடுங்குழைக்கு அமர்த்த நோக்கம் (அகம் 3 : 17)

கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை (அகம் 236 : 12)

பனி பொலங் குழைத் தெறிப்ப (அகம் 351:12)

என்ற அடிகள்  மகளிர் குழை அணிந்தமையை விளக்குகின்றன.

ஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே (அகம் 253 : 26)

என்ற அடியில் மத்தகமணி அமைந்து விளங்கும் காதணி  சுட்டப்படுகிறது.

செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர ( அகம் 86 : 27 )

என்ற அடியில் சிவந்த ஒளி பொருந்திய குழை அணிந்தமை சுட்டப்படுகிறது.

ஆடவா் குழை அணிதல்

சங்க காலத்தில் ஆடவரும் குழை அணிந்தமையைக் காணலாகின்றது.

பலதேவன்  ஒரு காதில் குழை அணிந்தவனாகச் சுட்டப்படுவதனை

வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை ( பரி 1: 5 ) என்ற அடியால் அறியலாகின்றது.

குழையன் கோதையன் குறும் பைந் தொடியன் ( நற் 50 : 2 ) என்ற அடியும் ஆடவர் குழை அணிந்தமைக்குச் சான்றாக அமைகிறது.

பாலியல் உணா்வு

காதணி பாலியல் உணா்வின் வெளிப்பாடாகவும் அமைகிறது. தொல்காப்பியா் களவுக்கால மெய்ப்பாடுகளுள் ஒன்றாக காதொன்று களைதல் என்பதனைக் குறிப்பிடுகிறார். காதொன்று களைதல் என்பது, கூந்தலைப் போலன்றிக் காதிடைப்பெய்து அணியப்பெற்ற தோடு முதலிய அணிகளுள் ஒன்று நிற்ப மற்றொன்று நெகிழ்ந்து வீழ்தல். இதனைச் செவியில் பூட்டாது செருகிய தோடு ஒன்றைத் திருத்துவாள் போலக் கழற்றுதல்’ என்பர்.

தலைவனின் மார்பில் உற்ற முயக்கத்திடை நெரிந்த குழையுடையவளாக பரத்தை திகழ்ந்தாள் என்பதனை

மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை (நற் 20:9) என்ற பாடலடி விளக்குகின்றது.

பக்தி இலக்கியத்தில் காதுகுத்துதல்

சங்க காலத்தில் அழகிற்காக அணியப்பட்ட காதணி பக்திஇலக்கிய காலத்தில் சடங்காக மாற்றம் பெறுகிறது.

காரிகை யார்க்கு முனக்கு மிழுக்குற்றென்
காதுகள் வீங்கி யெரியில்
தாரியா தாகில் தலைநொந்தி டுமென்று
விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியில் பிள்ளைக ளெல்லாரும் காது
பெருக்கித் திரியவும் காண்டி
ஏர்விடை செற்றிளங் கன்றெறிந் திட்ட
இருடீகே சாஎன்றன் கண்ணே (பெரியாழ்வார் திருமொழி 2 : 3- 10) என்ற பாசுரம் காதுபெருக்குதல் என்ற பெயரில் குழந்தைகளுக்கு காதுகுத்தியமையை விளக்குகிறது.

நாட்டுப்புறப்பாடல்களில் காதுகுத்துதல்

ஆண்குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் காதுகுத்தும் மரபு பிற்காலத்தில் தமிழரிடையே வளா்ச்சிபெற்றது. “குழந்தைக்குச் சிறுகாயம் ஏற்படாவிட்டால் எமன் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிடுவான் என்ற நம்பிக்கையின் காரணமாகக் காதுகுத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் தோன்றியிருக்க வேண்டும். காதுகுத்தும் வழக்கம் தமிழ்நாடு மட்டுமின்றி, ஆசியா, எகிப்து போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. காதுகுத்தும்போது ஏதேனும்  உலோகத்தையும் அணிவிப்பா். தீமைதரும் ஆவிகள் தலை,வாய்,மூக்கு, காது ஆகிய உறுப்புகள் வழியாக எளிதில் புகுந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஏதேனும் ஓா் உலோகத்தை அணிவித்தால் காது வழியாகத் தீ ஆவி நுழைவதைத் தடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இப்பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். காதுகுத்தும் சடங்கிற்கு இத்தகைய நம்பிக்கைகள் அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது”. (சு.சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு ப. 195)

மேலும் “குழந்தையின் உடலில் காயம் ஏற்படுத்துவதால் தீய ஆவிகளினால் துன்பம் உண்டாகாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இச்சடங்கு தோன்றியது என்பா்” (ஞானசேகரன் மக்கள்வாழ்வில் மந்திரச் சடங்குகள் ப.23) தீய ஆவிகளின் தாக்குதலிலிருந்து குழந்தைகளைக் காக்க ஏற்பட்ட இச்சடங்கு காலமாற்றத்தால் பெண்ணுக்குப் பிறந்தவீட்டுடன் நெருக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் வீட்டில் நடத்தும் விழாவாக மாற்றம்பெற்றது எனலாம்.

மாம்பிஞ்சு கொண்டு
மதுரைசிமிக்கி கொண்டு
காதுகுத்த வாராக
கனகமுடி உங்களம்மான் (தமிழர் நாட்டுப்பாடல்கள் ப. 101) என்ற நாட்டுப்புறப்பாடலடிகள் காதுகுத்துவதில் மாமனின் சிறப்பிடத்தை அறியத் தருகின்றன.

தற்காலத்தில் காதுகுத்துதல்

தற்காலத்தில் காதுகுத்துதல் சடங்குமுறையாக மாற்றம் பெற்றாலும் அச்சடங்கிற்கு ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கருத்துகள் கூறப்படுகின்றன. ஆன்மீக ரீதியாக ’ஓ’ என்னும் காதுவடிவில் ’ம்’ என்னும் புள்ளி குத்தப் பெறுவதால் இயக்கம் – புனிதத்தன்மை கிடைக்கிறது என்பதை உணர்த்தவே இந்தக் காதுகுத்தல் இந்து சமயத்தவரிடையே உள்ளது என்பா். அறிவியல்ரீதியாக தங்கம் போன்ற உலோகங்களின் வழியாகத் தண்ணீர் வந்து நம் உடலில் படும்போது நம் உடல் நலத்துக்கு உகந்தது என்பா். மேலும் காதுகுத்துவதால் ஹிரணியா, ஹைடிரோசல் முதலிய நோய்கள் வராது என்றும் குறிப்பிடுவா்.

சங்ககாலத்தில் காதணிகள் அழகிற்கென அணியப்பட்டன. பக்தி இலக்கிய காலத்தில் அது சடங்காக மாற்றம் பெற்றது. பிற்காலத்தில் பெண்களுக்குப் பிறந்த வீட்டுடனான தொடர்பிற்காகவும் தாய்மாமனின் முதன்மைக்காகவும் நடத்தப்படும் சடங்காகவும், பெண்களுக்கான சீா்முறைகளில் இடம்பெறும் சடங்காகவும் மாறியது. இக்காதுகுத்துதல் அறிவியல் முறைப்படி உடல்நலனுக்கு ஏற்றதாகவும் அமைகிறது.

*****

-முனைவா் பா.பொன்னி
உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா்

எஸ்எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
சிவகாசி.

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

  1. மிகவும் நன்று. நல்ல தகவல்கள்.வாழ்த்துகள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க