பவள சங்கரி

anthi

தீமைகளை அழிக்கவும், தீயவர்களை ஒடுக்கவும் கோபாவேசம் கொண்டு பொங்கி எழுபவள் அன்னை பத்ரகாளி. திருவக்கரை, தில்லை, திருவாலங்காடு, மதுரை ஆகிய தலங்களில் உக்கிரமாகக் காட்சியளிக்கும் காளி அன்னை சினந்தணிந்த அன்பு அன்னையாக புதுச்சேரியிலும், மதுரகாளியாகவும், சிறுவாச்சூரில் லலித காளியாகவும் அருள்பாலிக்கிறாள். அந்தியூர் எனும் அரிய தலத்திலும் சாந்த நாயகியாக அமர்ந்து அருள்புரிகிறாள்.

anth1

பொதுவாக நாட்டுப்புறப் பாடல்கள், வில்லுப்பாட்டுகள், கும்மிப் பாடல்கள் போன்றவைகள் பத்ரகாளியம்மனை சிவபெருமானின் துணைவியாக, பராசக்தியின் அம்சமாகவும், திருமாலின் இளைய சகோதரியாகவும் குறிக்கப்படுவதால் சைவம், வைணவம் என இரண்டையும் பாலமாக இணைக்கும் தெய்வம் அன்னை பத்ரகாளி எனக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தாய்த்தெய்வம் என்று மக்களால் அன்பாக போற்றப்படும் பத்ரகாளியன்னை, மாகாளி, ஓம் காளி, கொற்றவை, எல்லைப் பிடாரி, பத்ரகாளி என பல்வேறு திருநாமங்கள்கொண்டு போற்றப்படுகிறாள். காளி என்றால் கறுத்தவள் என்றும் பொருள்படும். பீடையை அறுப்பவள் பிடாரியானாள். தீமைகளை, தீயவர்களை, தீய  எண்ணங்களை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுபவர்கள் பேராண்மை பெற்று விளங்க எண்ணுவோர் காளியை வழிபடுகின்றனர். அதாவது அன்னை அருள்வடிவாய் காட்சியளிக்கும்போது பவானியாகவும், ஆண் சக்தியாக அருள்பாலிக்கும்போது துர்க்கையாகவும் விளங்குகிறாள் என்கின்றனர் ஆன்றோர். அந்த வகையில் பழம்பெரும் நகரமான அந்தியூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் சகல செல்வங்களும் அருளும் வடிவுடை அன்னையாகத் திகழ்கிறாள். இவள் வீற்றிருக்கும் ஆலயமோ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது!

anth4

ஈரோட்டிலிருந்து வடக்கு புறம் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அந்தியூர். செல்லீசுவரர் திருக்கோவில் மற்றும் அழகராசப் பெருமாள் திருக்கோவிலும் அருகிருக்க இக்கோவில் அந்தியூர் கோட்டையின் உட்புறத்தில் மேற்குப் புறமாக அமைந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடன், கொங்கர்களும் தனியாட்சி செய்துவந்த நாடு கொங்கு நாடு என்பது. 24 உட்பிரிவுகள் கொண்ட கொங்கு நாட்டில், பவானி ஆற்றின் வடபுறம் உள்ள வடகொங்கு வடகரை நாடு என்பதும் ஒன்றாகும். இந்த வடகரை நாட்டின் தலைநகராக இருந்தது அந்தியூர்.

கொங்கு நாட்டின் வடக்கு எல்லையாக இருப்பது பர்கூர் மலைத்தொடர். சங்க காலச் சிறப்புமிக்க நகரங்களில் முக்கியமானது அந்தியூர். அக நானூறு எனும் சங்க இலக்கியத்தின் 71 ஆம் பாடலைப் பாடிய ‘அந்தி இளங்கீரனார்’ என்ற புலவர் அந்தியூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து இவ்வூரின் பழமையை அறிய முடிகிறது. பண்டைக் காலத்தில் மூன்று சுற்றுகளுடன் அகழிப்பாதுகாப்பும் கொண்ட வராக நதிக்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்கோட்டை இன்று அழிந்துவிட்டாலும் கோவில்கள் இவ்வூரின் பழம்பெருமையை எடுத்துரைக்கின்றன.

அந்தியூரின் தென்கிழக்கு மூலையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயம். கோவிலின் முன்புறம் அறுபது அடி நீளமுள்ள குண்டம் காணலாம். குண்டத்தின் மேற்குப்புறம் கம்பீரமான வடிவுடைய பெரியதொரு கணபதியைக் காணலாம். திருக்கோவில் வாயிலில் அழகும், அச்சமும் ஒருங்கே அமையப்பெற்ற கம்பீரத் தோற்றத்துடன் இரண்டு பூதகணங்கள் காவல்புரியும் காட்சி மெய்சிலிர்க்கச்செய்பவை. மகாமண்டபத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் திருவுருவங்கள் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.

anth9

அன்னை பத்ரகாளியின் திருக்கோவில் அர்த்த மண்டபத்தில் அன்னையின் உற்சவ மூர்த்தம் பொங்கும் புன்னகை தவழ வீற்றிருக்கிறாள். கருவறையில் மகிசாசுரமர்த்தினியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெண்களுக்கு மாங்கல்ய வரம் அருள்பவள் அன்னை என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. அன்னை எட்டு கைகளில், உடுக்கை, கட்கம், கபாலம், சூலம் ஏந்தி, சுடர்விட்டு பரவும் தீச்சுவாலைகள்கொண்ட தலை, மண்டை ஓடு, கிரீடம், மகிசனின் தலைமேல் கால்களை ஊன்றியபடி, நாகம், மணி, கிண்ணத்துடன் அருள்பாலிக்கிறாள்.

களப்பலி வீரர் சிற்பம்! – நவகண்டம்

anth6anth7

மூதுபுகழ் கொண்ட கொங்கு நாட்டில் வீரப்பெண்மணிகளின் வரலாறு எண்ணற்றவை. தங்கள் நாட்டு மன்னன் போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தங்கள் தலையை வெட்டி வெற்றித் தெய்வமாகிய காளி அன்னைக்கு காணிக்கையாக்கும் வழமை இருந்துள்ளது. கி.பி. 1265 – 1285 காலத்திய ராஜகேசரி வர்மன் என்கிற வீரபாண்டித் தேவரின் கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாக உள்ளன. அவ்வழக்கத்தின்படி பெண் வீரர்களும் தங்களையே களப்பலி கொடுத்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக அந்தியூர் சிறீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் தமது தலையைத் தாமே வெட்டிக்கொண்டு பலி கொடுக்கும் வீரப்பெண்மணிகளின் சிலைகள் கேட்பாரற்று குப்பைமேட்டில் மண்ணில் புதைந்து கிடக்கும் அவலத்தைப் பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது.. பழம்பெரும் ஆலயங்கள் புதுப்பிக்கப்படும்போது இதுபோன்று வரலாற்று ஆவணங்களின் அருமை தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுகின்றன.

anth3

வேண்டியவருக்கு வேண்டியபடி வரமருளும் அன்னை அந்தியூர் பத்ரகாளியம்மன் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குபவள். ஆயிரம் கண்ணுடையவள் அன்னை என்று பார் போற்றக்காரணம் தீவினை எங்கு எவ்வடிவில் நடந்தாலும் அதைத் தடுத்து பக்தர்களை ஆட்கொண்டு நல்லறம் காத்து நிற்கிறாள் என்பதாலேயே.

பக்தர்களைக் காப்பதில் அம்மனின் கருணைக்கு முன்பு எந்த சக்தியும் ஈடாகாது. ஒரு முறை, அந்தியூரின் வடக்கே உள்ள எண்ணமங்கலம் என்னும் இடத்தில் இளம் பெண் ஒருத்தி கணவனால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியிருந்தாள். கணவனின் கொடுமையை தாங்க முடியாத ஒரு நிலையில் தன் கைக்குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து விட்டாள். அன்னை இவ்வாலயத்தின் பூசாரியின் கனவில் தோன்றி அதனை உணரச்செய்ய அந்த பூசாரியும் உடனே எழுந்து ஓடிவந்து கிணற்றில் குதித்த அந்த பெண்ணையும், குழந்தையையும் தக்க தருணத்தில் ஓடி வந்து காப்பாற்றிவிட்டார். இந்தச் சம்பவத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். இன்றும் இதுபோன்று அம்மன் பக்தர்களின் கனவில்  வந்து பலன் சொல்வதாக மிகுந்த நம்பிக்கை உலவுகிறது. அம்மன் தலையின்மீது பூ வைத்து வாக்கு கேட்பதும் நடைபெறுகிறது. நாள்தோறும் அம்மனுக்கு நான்கு கால வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.

anth2

சிங்கத்தை வாகனமாகக் கொண்ட இக்காளிதேவி தாய்த் தெய்வம் என்று கருதப்படுபவள். இவள் கொற்றவை என்றும், சாமுண்டா, பத்ரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள். பத்ரகாளி அன்னையின்  கோவில்கள் அனைத்தும் வடக்கு முகமாக அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. காளியன்னை ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு திருநாமம் கொண்டு அழைக்கப்பெறுகிறாள். மாகாளி, ஓம் காளி, எண்ணெய்முத்துக்காளி, சீலக்காளி, கல்கத்தா காளி, கடுக்காளி, பாதாள காளி, கரிய காளியம்மன், வீரகாளி, வீரசூரகாளி, வீரமாகாளி, பொங்காளியம்மன், உச்சினி மாகாளி போன்றவை. அபிதான சிந்தாமணி, தமிழ் அகராதிகள் போன்றவைகளும் காளிதேவியின் பல்வேறு திருநாமங்கள் குறித்து  தெரிவிக்கின்றன.

சப்தகன்னிமார்
சப்தகன்னிமார்

மதலோலை எனும் தேவலோகப் பெண், துருவாச முனிவரின் சாபத்தின்படி அம்பரன், அம்பன் என்ற இரு அசுரர்களை மக்களாகப் பெற்றிருக்கிறாள். அவர்கள் இருவரும் அசுர குணத்தின்படி ஊரில் பல பெண்களுடன் திருமணம் செய்துகொள்ளாமலே உறவு வைத்திருந்தனர். இந்தச் செயல்கண்டு வெகுண்ட தேவர்கள் சிவபெருமானிடன் முறையிட்டனர். சிவபெருமான் அவ்விரு அசுரர்களையும் அழிக்கும்பொருட்டு உமாதேவியாரை, மைத்துனர் திருமாலுடன் அனுப்பிவைத்தார். அந்த அசுரர்களை அழிக்க அருள் வடிவான அன்னை உமாதேவியார் கோபாவேசமான பத்ரகாளி உருவெடுத்து அவ்வசுரர்களை அழித்தார் என்கிறது புராணம்.

திருவிழாக்கள்:

ஆண்டுதோறும் பங்குனித் திங்களில், அருள்மிகு பத்ரகாளியம்மன் குண்டம் பெருந்திருவிழா  மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்து இத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.

நவராத்திரி விழா 9 நாட்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருவாதிரை விழா, சித்ரா பௌர்ணமி, தீர்த்தக் குடவிழா, துர்காச்டமி – 108 சங்கு வைத்து பூசை செய்வது போன்ற விழாக்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

காளி வழிபாட்டிற்குரிய நாள் செவ்வாய் கிழமையென்றும்,  எந்த நோயையும் தீர்க்க வல்லவள் என்றும் சிவபுராணம் கூறுகிறது.

anth8

பத்ரகாளி அம்மன் கருவறைச் சுவர்களில் ‘மீன் சின்னங்கள்’ பொறிக்கப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கல்வெட்டு ஆய்வின்படி இக்கோவில் கட்டப்பட்டது கி.பி.1265 – 1285 என்பதால் அக்காலகட்டத்தில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்கள் யாரேனும் இக்கோவிலை அமைத்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *