-மேகலா இராமமூர்த்தி

திரு. அருண் வீரப்பன் எடுத்திருக்கும் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளிப்பதிவாளருக்கும் தேர்வாளருக்கும் நம் நன்றிகள்!

saintchildren

முதியோர் மேற்கொள்ளவேண்டிய துறவை மழலையர் மேற்கொண்டிருப்பதைக் காணும்போது நம் மனம் சிந்தனையில் ஆழ்கின்றது. ஆசைகளைப் பணயம் வைத்து இவர்கள் மேற்கொண்டிருக்கும் துறவுப் பயணம் வெற்றிப் பயணமா அல்லது வெற்றுப் பயணமா? விடை காலதேவனின் கையில்!

சரி…சிந்தனை வளமிகு நம் கவிஞர்கள் இது குறித்து என்ன எண்ணுகிறார்கள் எனக் கண்டுவருவோம்!

*****

பொய்ம்மையை பெருக்கிப் பொழுதினைச் சுருக்காமல் மெய்ம்மையைத் தேடிப் புத்தனின் வழியில் பயணப்படும் இந்த இளம் துறவிகளை வாழ்த்திப் போற்றுகின்றார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.

துறவின் தொடக்கம் இந்த
துள்ளித் திரியும் பருவத்தில்
உலகில் கால் பதிக்கும் முன்னே அதனை
உதறித் தள்ளிய ஒரு விடிவெள்ளியின் வெற்றிச் சிரிப்பு
பொய்மையைப் பெருக்கி
பொழுதினைச் சுருக்காமல் புறப்பட்ட பிஞ்சுகள்
புத்தனின் அறவழிச் சாலையில்
பூத்துக் குலுங்க நடப்படும் நாற்றுகள்
புறவழ்வில் காண இயலாத உண்மையை
அகத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப் போகும் ஞான குஞ்சுகள்
தவத்திற்கே தவம் செய்ய வேண்டும் இவ் வேள்வியில்
தானாகத் தன்னை தாரை வார்க்கும் ஆஹூதிகள்
பார்வையாளரே நாம் இங்கு தவிர இப்
பாலகரை வாழ்த்தத் தவற வேண்டாம்!
 

*****

துறவின் மிக்கதோர் அறமில்லை என்றுணர்ந்து மனத்தை அடக்கி மாண்போடு வாழப் பழகும் சிறார் இவர்கள் என்கிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

ஊனோடு உயிர் ஒளி பெற்றிட
உயர்ந்தோர் சொன்ன மந்திரம்
துன்பம் அறுத்துப் பேரின்பம் பெற
துறவறம் பூணுதலே
சிறந்த அறமாகக்கொண்டு
எண்ணித்துணிந்தார் சிறுவர்கள்
மனதை அடக்குவது கடினம் அந்த
மாண்பான செயலைச் செய்ய பயிற்சி எடுக்கிறார்
சிறுவயதிலேயே
ஐம்பொறி புலன்களை
நெறிப்படுத்த ஐந்து வயதிலேயே வளைக்கிறார்கள்
அறத்தின் மிக்க உறுதியில்லை
துறவறத்தை மிக்க வேறு இல்லை

*****

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை!

துறவென்பது

உறவின் நிலையறிந்து,
வாழ்வின்
உண்மைப் பொருள் தெரிந்து
துறவு துளிர்க்கவேண்டும்,
அது
தூயதாய் இருக்கவேண்டும்!

அறியாத சிறுவயதில்
பிள்ளைகள் தலையில்,
அறியாமையால் ஏற்றும்
துறவுச் சுமை
தருவதில்லை பயனெதுவுமே

அது
அவர்களுக்கு ஒரு
வேடிக்கை விளையாட்டே…!

துறவு என்பதை வாழ்வின் இறுதிநிலையாகவே கண்டனர் வாழ்வியல் அனுபவத்தில் தேர்ந்த நம் தமிழ்மக்கள்.

”காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ்
சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி
சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.”
என்று தமிழரின் தலையாய இலக்கணநூல் தொல்காப்பியம் இயம்புவதும் அதுவே!

பிரமசரியம், கிருகஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் என்ற வடவர் வாழ்வியல்முறையும் அதனையே வழிமொழியக் காணலாம்.

ஆகவே, துறவுநிலை என்றால் என்னவென்றே அறியாத இளம்பிள்ளைகளை அவ்வறத்தில் ஈடுபடுத்துவது பலவந்தமான திணிப்பே; அவர்களுக்கு அதுவும் ஓர் வேடிக்கை விளையாட்டே என்ற உண்மையைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *