மீனாட்சி பாலகணேஷ்

மன்றிடை நின்றாடுவோன்தமை ஆட்டுமயில்!

am2

பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் அனைத்துமே அபாரமான கற்பனை வளமும் கருத்தும் செறிந்த பாடல்களாலும், அணிநயம், சந்தநயம், போன்றன நிறைந்த செய்யுட்களாலும் அமைக்கப்பட்டவையாகும். பாடிய புலவோர்கள், கவிஞர்கள் மட்டுமின்றி இறை அடியார்களாகவும், பக்திநெறியில் சிறந்து விளங்குபவர்களாகவும் இருந்தனர். எல்லையற்ற பரம்பொருளை ஒரு சிறு குழந்தையாக்கி அன்புசெய்து கொண்டாடி நமக்கு அளவிறந்த அருமையான பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியங்களை அளித்ததும் இவர்களே.

am
பல்வேறு தலங்களில் உறைந்து அருள்பாலிக்கும் அன்னை தெய்வமாம் பராசக்தியின் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களில் பல பருவங்களிலும் சிவபெருமானின் திருவிளையாடல்கள் அழகுறப் பாடப்பெறும். அவ்வண்ணலின் நடனத்தைப் போற்றிப் பாடாத அடியார்களான புலவர்களே இல்லை எனலாம். அண்ணலின் நடனத்திற்கேற்ப அன்னையவள் கைத்தாளம் கொட்டுவாள் எனத் தாலப்பருவத்திலும், உன்மத்த நடனமாடி அவளிழைக்கும் சிற்றிலை அழிப்பவனாகவும், இன்னும் பலவிதங்களிலும் அவன் வருணிக்கப் பெறுகிறான்.

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பல சிறந்த பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றித் தமிழன்னைக்கு அர்ப்பணித்தவர். இவற்றுள் ஒன்றான திருத்தவத்துறை பெருந்திருப்பிராட்டியார் மீதான பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்களைக் காணலாமே! இவை செங்கீரைப் பருவத்திற்கானவை.

am1
எவ்வாறு, எவற்றை எப்பொழுது செய்ய வேண்டும் எனக் கணவனை ஆட்டிவைக்கும் மகளிர் உண்டு. அவளுடைய கைப்பாவை என அக்கணவர்மார்கள் கூறப்படுவர். இதே கருத்தினை நகைச்சுவையாகக் கையாண்டு, மன்றிடை நடனமாடும் அம்பலவாணனை ஆட்டுவிக்கும் மயில் என இப்பெருந்திருவினைப் புகழ்கிறார் பிள்ளையவர்கள். அவ்வமயம், ஐயனின் நடனத்தையும் அதன் சூக்குமப்பொருளையும் அழகுற வருணிக்கிறார்.

ஐயனின் சடை கனத்ததும், அழகு நிறைந்ததுமான பவளநிறம்கொண்ட செஞ்சடை. பாதாள கங்கை அங்கு குடிகொண்டுள்ளாள்; அவள் அங்குள்ள இளம் பிறைமதியுடன் சேர்ந்து துள்ளிக்குதிக்கிறாள்; ஐயனின் திருநடனத்தினால்தான் இது நடைபெறுகின்றது! அண்ணல் காதிலணிந்துள்ள சங்கக்குழைகள் அசைந்தாடுகின்றன. புருவங்கள் நெரிந்து வளைந்து அசைகின்றன. அவனுடைய இதழ்களில் குறுமுறுவல் பூத்து அது நிலவொளியாகக் காண்கின்றது. நடனமாடுபவனின் உடல் அசைவினால் அத்துணைப் பொருட்களும் அசைகின்றன.

அவனுடைய அழகிய உடலைத் தழுவிய கொன்றைமாலை, வெண்மையான மண்டையோடுகளாலான மாலை, உடலைச் சுற்றிய அரவமாகிய பாம்பு, திரண்ட தோள்கள், திருவயிறு இவையெல்லாவற்றையும் கடந்து நின்று ஒளிவீசுகிறது. திருவடிகளிலணிந்த மணி நூபுரம் ஒலிக்க, உடுக்கை ஏந்திய கை படைப்பினைச் செய்ய, அமைந்த கரம் அடைக்கலம் தந்தருளவும், தழலேந்திய கரம் அழித்தலைச் செய்யவும், ஊன்றிய மலர்ப்பாதம் மறைக்கும் திரோதம் எனும் தொழிலைச் செய்யவும், எடுத்த அழகிய திருவடி, ‘இதனைப் பற்றிக்கொள், உனக்கு முத்தி,’ என அருளும்வகையில் உயர்த்தி விளக்கி ஒரு மன்றிடையில்- உலகம் எனும் அரங்கில்- நின்றாடும் ஒருவன் தன்னை ஆட்டிவைக்கும் மயிலாக விளங்குகிறாள் பெருந்திருப்பிராட்டி.

அவள் செல்வங்கள் கொழிக்கும் தவத்துறை எனும் ஊரின்கண் உறையும் கருணைப்பிராட்டி ஆவாள். தேன்நிறைந்த மலர்மாலைகளை அணிந்த மென்மையான பெண்ணமுதம் போன்றவள்; அவளைச் செங்கீரையாடுமாறு வேண்டுகிறார் புலவர்.

குருவார் துகிர்ச்சடை திசைத்தட வரக்கங்கை
குழமதியி னோடுதுள்ளக் –
குழையசை தரத்திருப் புருவமுரி தரவெழுங்
குறுமூர னிலவெறிப்ப,
மருவார் கடுக்கைவெண் டலையரவு திண்டோள்
வயிற்றுயல் வரக்கதிர்த்து –
மணிநூ புரங்குமு றிடப்படைப் பேற்றதுடி
வாய்த்ததிதி யபயமாய்த்த,
லுருவார் கொழுந்தழ றிரோதமூன் றியதா
ளுவப்பரு ளெடுத்ததாளி –
லோங்கத் தெரித்துமன் றிடையென்று நின்றாட
வொருவர்தமை யாட்டுமயிலே,
திருவார் தவத்துறைக் கருணைப் பிராட்டிநீ
செங்கீரை யாடியருளே –
தேமலர்க் கண்ணிபுனை கோமளப் பெண்ணமுது
செங்கீரை யாடியருளே.

(திருத்தவத்துறை பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை)

இங்கு பிள்ளையவர்கள் உண்மைவிளக்கப் பாடலொன்றின் (திருவதிகை மனவாசகம் கடந்தார்) கருத்தை அழகாக எடுத்தாண்டிருப்பது மிக அருமையாக உள்ளது. சிவமும் சக்தியும் இணைந்துதான் பிரபஞ்சத்தினை உருவாக்கிக் காத்து, அருளி, நீக்கி, மறைத்து, அழித்து ஆடுகின்றனர். இப்பிரபஞ்சப் பெருநடனத்தின் சாட்சியாக அம்மை விளங்குகிறாள் எனும்பொருள் இதன்கண் அழகுற மறைந்துள்ளது.

தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் — ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.

(உண்மைவிளக்கம்)

***********

சின்னஞ்சிறு பெண்குழந்தை தவழ்ந்தாடி வருகிறாள். இவள் பெருந்திருப்பிராட்டி. இவளைச் சார்ந்த அனைத்தும் ஆடுகின்றன. விரும்பத்தக்க அழகிய திருவடிகளில் – பட்டுப் பாதங்களில் வயிரத் தண்டை அணிவித்துள்ளாள் தாய்; தவழும் குழந்தையின் கால்களில் அது நெருங்கி ஒலிசெய்கின்றது. இது அழகிய தாமரைமலரில் அன்னப்பறவை அமர்ந்து மகிழ்ந்து ஆடுவதனை ஒத்திருக்கிறது என்கிறார். கம்பைநதியில் அன்னை சிவலிங்கம் அமைத்து வழிபட்டகாலை, வெள்ளப்பெருக்கு வந்தபோது, அச்சிவலிங்கத்தைக் காப்பாற்ற இறுக அணைத்துக் கொண்டமையால் அதில் அன்னையின் முலைத்தழும்பும், கைவளைத்தழும்பும் உண்டாயின. அதனை இப்போது நினைவு கூர்கிறார். அந்த விடைக்கொடியவரின் திருமேனிக்கு வளைத்தழும்பு கொடுத்தோம் எனப் பெருமை பேசுவதுபோல கையில் ஒலிக்கும் அழகான வளைகள் ஒலிசெய்தபடி ஆடுகின்றன. முடியில் அன்னை அணிவித்த சூழியம் எனும் அணிகலன் ஆடுகின்றதாம். முகத்தில் எழும் குறுமுறுவல் மலரைப்போல விரிந்து ஆடுகின்றது. முழுமைபெற்ற நிலவின் வடிவத்தில் முத்துக்கள் அமைந்தனபோல, முகமாகிய நிலவில் நுண்மையான சிறு வியர்வைத்துளிகள் பொருந்தி ஆடுகின்றன. சிறு குழந்தையல்லவா? ஓயாது தவழ்ந்தாடினால் வியர்க்காதா?

இக்குழந்தை அடியார்களுடைய உள்ளத்தில் விரும்பிக் குடிபுகுபவள்; நன்மையற்றவற்றை மாற்றி நல்லனவாக்கி அருளும் திருத்தவத்துறை நாயகியாகிய பெருந்திருவே! செங்கீரையாடுகவே! என வேண்டுகிறார் புலவர்.

அன்னை செங்கீரையாடுங்கால் அனைத்துப்பொருட்களும் உடன் ஆடுகின்றன. பராசக்தியின் இயக்கத்தால் மட்டுமே இவ்வுலகம் செயல்படும் என இப்பாடல் சூக்குமமாகத் தெரிவித்தருளுகின்றது!

சந்தநயமும் செறிந்த பாடல்.

கடிமலர் முளரியி லெகினம் வதிந்து
கலித்தா டுதல்பொருவக்
காமரு சீறடி வயிரத் தண்டை
கஞன்று கலித்தாடக்
கொடிவிடை யார்திரு மேனிச்சுவடு
கொடுத்த திறங்கூறிக்
கூறிக் குமுறுதல் போல வொலிக்குங்
கோலவளை களுமாட
முடியுறு சூழிய மாட எழுங்குறு
முறுவன் மலர்ந்தாட
முழுமதி முத்தென முகமதி நுண்டுளி
மொய்குறு வியராட
அடிய ருளம்குடி புகுமொரு சுந்தரி
யாடுக செங்கீரை
அவத்துறை மாற்று தவத்துறை நாயகி
யாடுக செங்கீரை.

(திருத்தவத்துறை பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ் – செங்கீரைப்பருவம் – மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை)

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

_

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *