-மேகலா இராமமூர்த்தி

தூளியில் துயிலுகின்ற இந்தத் தூமலரின் தோற்றம், உறங்கிக்கொண்டே ஆடும் ஆனந்த நடனமாய்க் காட்சிதந்து நம்மைக் கிறங்க வைக்கின்றது!

childinhammock

இவ்வழகிய புகைப்படத்தை அருமையாய் எடுத்திருக்கும் திரு. யெஸ்மெக்கிற்கும், இதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் நம் நன்றி!

இவ்வாரக் கவிதைப் போட்டிக்கு வந்துள்ள கவிதைகள் அடுத்து நம் பார்வைக்கு!

*****

”பெரியவர்கள் செய்யும் பித்தலாட்டங்களை இந்தப் புதுமலர் கண்ணுறாமல் கண்வளர்வதே நல்லது; அதனை எழுப்பாதே!” என அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

எழுப்பாதே…

பிள்ளை உறங்கட்டும்,
பெரியவர்களே அதை
எழுப்பவேண்டாம்..

பார்க்கவேண்டாம் அது
நீங்கள் படும் பாட்டை-
பணத்துக்காக..

மனிதம் மறந்து
பணத்தை நினைக்கும்
மனது அதற்கு வரவேண்டாம்..

இறப்பு மறந்து
இரக்கமின்றி அதைக்
கறக்கும் வழிகளை அது
காணவேண்டாம்..

சேர்த்த பணத்தை
நன்றாய்ச்
செலவிடாமல்,
மண்ணில் புதைத்து
மண்ணில் புதைவதைக்
கண்ணில் காணவேண்டாம்..

தூயதை மறந்து
தீயதை வளர்க்கும்
பணம்படுத்தும் பாட்டை அது
பார்க்கவே வேண்டாம்..

அதனால்,
பிள்ளை உறங்கட்டும்,
பெரியவர்களே அதை
எழுப்பவேண்டாம்…!

*****

இவ்வாரத்தின் சிறந்த கவிதையை இனிக் காண்போம்!

துயிலெனும் தூக்கம்
இறைவன் நமக்களித்த இலவசப் பரிசு – தூக்கம்
இமைகள் மூடி நமக்குள் நாமே தொலையக் கிட்டும் சுகம்
துயிலின்
முடிவு விழிப்பா இல்லை
விழிப்பின் முடிவு துயிலாஇது
இயற்கை நமக்கு விடும் விடுகதை
இரண்டும் இருளும் ஒளியுமாய் ஓயாமல்
நம்மைச் சுற்றி உலா வரும் உண்மை
துயில்லில்லா வாழ்வு துயரமே அது போல்
விழிப்பில்லா வாழ்வும் அதி துயரமே
அளவோடு கொள்ளும் துயிலும் விழிப்பும் கொள்ள
வாழ்வும் வளமாகும் என் நாளுமே!
பொய்த் தூக்கம், பெருந்தூக்கம், அரைத்தூக்கம்
ஆழ்நிலைத் தூக்கம் பகல் தூக்கமெனப் பல வகை உண்டு
தூங்காது தூங்கி இருக்கும் நிலையோ
மெய்யடியார்கள் கண்ட கலை
மானிடர் கொள்வது அறியா துயில் ஆனால்
மாதவன் கொண்டது ஆலிலையில் அறிதுயில்
ஆழ்துயிலில் துளிர் விட்ட அரிய சிந்தனைகளே
அறிஞர்கள் கண்ட அரும் பெரும் கண்டு பிடிப்புகள்
அறியாப் பருவம் வரை வந்த ஆழ்ந்த தூக்கம்
பருவம் வர வரப் பறப்பது ஏனோ
இனி வரம் ஒன்று கேட்கிறேன் இறைவா!
வரும் நாட்களில் குழந்தையைப் போல் தூங்கவே!

”ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்?” என்று வினவுகின்றார் பட்டினத்தாரின் பரம அடியாரான பத்திரகிரியார் எனும் சித்தர். தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவதெல்லாம் சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியப்படுபவை; சாமானியர்க்கு அல்ல!

கவலையும் முதுமையும் மனித உறக்கத்தின் அளவைக் குறைத்துவிடும் வாள் போன்றவை. கவலையின் வலையில் சிக்கிக்கொள்ளாத மழலையர் மட்டுமே மகிழ்ச்சியாய் உறங்கும் பேறுபெற்றவர்கள். அக்குழந்தைமையை இறைவனிடம் வரமாய் வேண்டும் திருமிகு. ராதா விஸ்வநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்திருக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞருக்கு!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *