வீட்டுச்சூழ்நிலைகளும் கற்றலும் (5)

education

ஒரு உண்மை நிகழ்ச்சி ..

மூன்றாவது வகுப்பில் படிக்கும் தங்கள் மகனோடு ஒரு பெற்றோர் மனநல மருத்துவரைக் காணச் செல்கின்றனர். அவரோடு நேர்காணலுக்காக நேரம் கிடைத்ததும் அந்த நிபுணர் பெற்றோர்களிடம் வந்த காரணத்தைப் பற்றி விளக்கம் கேட்கிறார். உடனே தாயார் “என் மகனுக்கு என்ன குறையென்று தெரியவில்லை. அவன் மனநிலையில் என்ன பாதிப்பு என்று தெரியவில்லை. அதனால்தான் உங்களிடம் அழைத்து வந்தேன்” என்று விளக்கம் தருகின்றார். அதைக்கேட்ட அந்த மருத்துவருக்கு ஆச்சரியம் சேர்ந்த கோபம் உண்டாகிறது. ஏனெனில், அவரைச் சந்திப்பதற்கு முன்னாலாயே பெற்றோர்கள் அந்தக் குழந்தைக்கு ஏதோ மனநல பாதிப்பு என்ற கருத்துக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டது மட்டுமின்றி முடிவுக்கும் வந்துள்ளனர்.

பொறுமையுடன் அந்த மருத்துவர் “நீங்களாகவே எப்படி இந்தக் கருத்துக்கு இடம் கொடுத்தீர்கள்?” என்று கேட்க உடனே தந்தை “மேடம், இவனால் நன்றாகப் படிக்க முடியும். பரீட்சைகளில் 80-90 மதிப்பெண்கள் வாங்க முடியும். ஆனால் இவனுக்கு கிடைப்பது என்னவோ 40 முதல் 50 மதிப்பெண்களே ! அதனால்தான் உங்களிடம் அழைத்து வந்தோம்” என்று பதிலுரைக்க அந்த மருத்துவருக்கு ஒரே வருத்தம். எப்படி ஒரு குழந்தையின் மதிப்பெண்களை முன்னிறுத்தி அவர்களுடைய மனநிலையையே பெற்றோர்கள் தவறாக முடிவெடுக்கின்றனர் என்று என்னிடம் அங்கலாய்த்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்தது உண்டு. ஒரு குழந்தையின் ஆர்வங்களையும் கற்றலின் சூழ்நிலைகளையும் விருப்பு வெறுப்புக்களை அறியாமல் தேர்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்களை மட்டும் வைத்து ஒரு மாணவன் புத்திசாலியா இல்லையா என்பதை நிரூபிக்க முடியாது. அவ்வாறு செய்தல் தவறானது மட்டுமல்ல முட்டாள்தனமானது. பல நேரங்களில் பெற்றோர்கள் சமுதாயப்  போக்குகளையும் சமுதாயத்தில் உள்ள கடும் போட்டிகளையும் சுட்டிக்காட்டி அவற்றிற்கு இவர்களைத் தயார் செய்ய வேண்டாமா என்ற கருத்தை முன்வைக்கின்றனர். அவர்களுடைய ஆதங்கத்தில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அந்தக் கடும் போட்டியான சூழ்நிலைக்குத் தயார் செய்ய அவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியையும் தன்னம்பிக்கையையும் மற்றும் ஆக்கத்திறன்களையும் வளர்க்க வேண்டும்.

கற்றலின்போது சிறுவர் சிறுமிகளுக்குத் தடைகள் இருந்தால் அதை ஆலோசகர்கள் மூலமாக அறிந்துகொள்ளுதல் நல்லதே.  ஆனால் சிறு இயலாமைகளை பெருத்தப்படுத்தி அவர்களை மற்றவர்களின் திறன்களோடு ஒப்பிட்டு தாழ்மைப்படுத்துதல் அவர்களுடய பிற்கால வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. பல நேரங்களில் இந்தக் குறைகளை சிறிய உடற்பயிற்சி மற்றும் கவனப் பயிற்சிகள் மூலமாக சரிப்படுத்த முடியும்.

நியூட்டன், ஐன்ஸ்டீன், வால்ட் டிஸ்னி, நெப்போலியன், சர்ச்சில், கிரகாம் பெல், போர்ட் போன்ற பலருக்கு கற்றலில் குறைகள் இருந்திருக்கின்றன. அவர்களுடைய ஆசிரியர்கள் இந்த மாணவர்களை கற்றலில் விருப்பம் இல்லாதவர்களாகவும், திறமைக்குறைவானவர்களாகவும், கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாகவும், வாழ்க்கையில் முன்னேறத்  தகுதியில்லாதவர்களாகவும் அழைத்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் செய்த சாதனைகள் உலகையே வியப்படையச் செய்திருக்கின்றன.

பள்ளியில் கணித ஆசிரியராக இருந்து பள்ளி முதல்வரான ஒரு அன்பர் தனது ஒரே மகன் கணக்கில் அறுபது மதிப்பெண்களுக்கு மேல் வாங்கவில்லை என்ற காரணத்தால் அவனை வீட்டிலிருந்து விலக்கி  எட்டாம் வகுப்பிலேயே மற்றொரு பள்ளியின் விடுதியில் சேர்த்துவிட்டார். அந்த மாணவனுக்கு இந்தத் துன்புறுத்தலால் கணிதத்தின் மேலே ஒரு விதமான வெறுப்பே ஏற்பட்டுவிட்டது. அந்த மாணவன் பன்னிரெண்டாம் வகுப்புக்கு மேல் படிக்கமுடியாதபடி தோல்வியைத் தழுவிக்கொண்டு இருந்தான். ஆனால் அவன் திறமைகள் அவனை ஒரு “சகல கலா வல்லவனாக” உலகுக்கு வெளிக்காட்டியது. முதுகலை படிப்புப் படித்தவர்களை விட இவனுக்கு பொது அறிவும் திறனும் வாழ்க்கையின் சோதனைகளை சந்திக்கக் கூடிய திறனும் அமைந்தது. உறவினர்கள் அனைவரும் இவன் மட்டும் நன்றாகப் படித்திருந்தால் தொழில் துறையில் சாதனைகள் படைத்திருப்பான் என்று பாராட்ட ஆரம்பித்தனர். இது போன்ற பல முன்மாதிரிகளை நாம் வாழ்க்கையில் பல இடங்களில் சந்தித்துள்ளோம். இதற்க்கு  யார் காரணம் ?

பெற்றோர்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளின் திறன்களை அறிந்து வழிப்படுத்தி பாராட்டத் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் தன்னுடைய மகனுக்கு மருத்துவத்தில் எந்த ஈடுபாடுமில்லை என்று நன்கு அறிந்தும் பணத்தை அதிக அளவில் செலவழித்து அவனை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து மருத்துவராக்கிய நிலையில் அவருக்கு  அந்தத் தொழில் ஈடுபாடு இல்லாதது மட்டுமின்றி அதை வெறும் ஒரு வியாபாரமாக ஆக்கிய கதை வருத்தத்தை அளிக்கக்கூடிய ஒன்று.

குழந்தைகளின் ஆர்வங்களையும் ஈடுபாடுகளையும் விருப்பங்களையும் அறியாமல் அவர்களின் தரநிர்ணயம் செய்வது ஒரு தவறான செயல். இந்தத் தவறான செயல்களுக்கு கல்விக்கூடங்கள் எவ்வாறு   ஒத்துழைக்கின்றன என்று தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *