அடியாரேயாயினும் உழைப்போரே உன்னதம் பெறுவர்!

0

பவள சங்கரி

appar_thirunavukkarasar-95x300ஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் ஏழாம் நூற்றாண்டின் இடையில் சமக்காலத்தில் வாழ்ந்த திருத்தொண்டர்கள். இவர்கள் இறை வழிபாட்டிற்காக திருவீழிமிழலையில் தங்கியிருந்த காலத்தில் அந்த நாட்டில், மழையின்மைக் காரணமாக பெரும் பஞ்சம் ஏற்பட்டு, உயிர்கள் அனைத்தும் பசியால் வாடி வருந்தியிருந்தன. அடியார்களும் துயர்மிக உற்ற நிலையில் ஆண்டவனிடம் முறையிட்டு வேண்டினர். இதனையறிந்த திருஞானசம்பந்தப்பிள்ளையார், `கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ?’ என்று மனம் நொந்தவாறே, இறைவனை நினைந்துறுகியவாறே உறங்கச் செல்கிறார். எம்பெருமானார் பிள்ளையின் துயர் பொறுக்கவில்லை போலும்! அவர்தம் கனவில் தோன்றி, மக்கள், மாக்கள் துயர் தீர்க்கும்பொருட்டு ஆலயத்தில் உள்ள கிழக்கு, மேற்கு பலிபீடங்களில் இருவருக்கும் பொற்காசுகள் அளித்துள்ளதாகக் கூறுகிறார். விழித்தெழுந்த ஞானசம்பந்தப்பெருமான், அப்பரடிகளையும் உடன் அழைத்துக்கொண்டு ஆண்டவன் அருளியவாறு பலிபீடம் நோக்கிச்செல்கிறார். கிழக்கு பலிபீடத்தில் சம்பந்தப்பெருமானும், மேற்குப் பலிபீடத்தில் அப்பர் பெருமானும் காசு பெற்று உயிரினங்களின் துயர் துடைக்க மேவுகிறார்கள். அவரவர் திருமடங்களுக்குச் சென்று அடியவர்களுக்கும் அமுதளிக்க விரைகின்றனர். இங்குதான் வினை விடுபடுகிறது. அப்பர் பெருமானின் திருமடத்தில் விரைவாகவும், சம்பந்தப்பெருமானின் திருமடத்தில் காலம் தாழ்ந்தும் திருவமுது அளிக்கப்படுகிறது. இதையறிந்த சம்பந்தப்பிள்ளையார் அதற்குரிய பொறுப்பாளர்களை அழைத்து காரணம் வினவுகிறார். அவர்களும், சம்பந்தப்பெருமானின் பொற்காசுகள் மாற்று குறைந்ததாக இருந்ததால் அதனை மாற்றி பொருட்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதே காரணம் என்று கூறுகிறார். ஓய்வின்றி உழவாரப்பணி செய்து நொந்து போயிருக்கும் அப்பர் பெருமானாருக்கு மேலும் துன்பம் நேரக்கூடாது என்றுதானோ நல்ல காசுகளை அளித்துள்ளார் எம்பெருமானார் என்று உணர்ந்த சம்பந்தப்பிள்ளையார் மறுநாள் ஆலயம் சென்று `வாசிதீரவே காசு நல்குவீர்` என்ற கீழ்கண்ட திருப்பதிகம் பாடி இறைவனை மனம் குளிரச்செய்து தாமும் நற்காசினைப்பெற்று அடியார்களுக்கு விரைவில் தக்க சமயத்தில் உணவளித்து மகிழ்வித்து தாமும் மனமகிழ்ந்தார். இறையருளால் சில நாட்களிலேயே மழைவளம் பெற்று நாடும் செழித்து, பஞ்சமும் நீங்கி, மக்களும் நலமாக வாழ்ந்தனர்.

வாசிதீரவே, காசு நல்குவீர்;sambandhar1
மாசுஇல் மிழலையீர்; ஏசல் இல்லையே

இறைவர் ஆயினீர்; மறைகொள் மிழலையீர்;
கறைகொள் காசினை, முறைமை நல்குமே

செய்யமேனியீர்; மெய்கொள் மிழலையீர்;
பைகொள் அரவினீர்;உய்ய நல்குமே

நீறு பூசினீர்; ஏறு அது ஏறினீர்;
கூறு மிழலையீர்;பேறும் அருளுமே

காமன்வேவ, ஓர் தூமக் கண்ணினீர்;
நாம மிழலையீர்; சேமம் நல்குமே

பிணிகொள் சடையினீர்; மணிகொள் மிடறினீர்;
அணிகொள் மிழலையீர்; பணிகொண்டு அருளுமே

மங்கை பங்கினீர்; துங்க மிழலையீர்;
கங்கை முடியினீர்; சங்கை தவிர்மினே

அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்;
பரக்கும் மிழலையீர்; கரக்கை தவிர்மினே

அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்;
இயலும் மிழலையீர்; பயனும் அருளுமே

பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்;
வெறிகொள் மிழலையீர்; பிரிவது அரியதே

காழிமா நகர் வாழி சம்பந்தன்,
வீழிமிழலை மேல், தாழும் மொழிகளே

பி.கு. செய்தொழில்களில் இலாபம் பெருகுவதற்கும், கடினமான வழக்குகளிலும் வெற்றி பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் இது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *