செண்பக ஜெகதீசன்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
. (திருக்குறள்-926: கள்ளுண்ணாமை) 

புதுக் கவிதையில்…

பொழுதும் உறங்குவோரும்
பிணமும் வேறல்ல,
அதுபோல்தான்
கள்ளுண்பவர் ஒப்பாவார்
நஞ்சுண்பவர்க்கே…! 

குறும்பாவில்…

பிணம்போல்வர் பொழுதும் உறங்குபவர்,
கள்ளுண்பவர் கருதப்படுவர்
நஞ்சுண்பவராய்…! 

மரபுக் கவிதையில்…

காலம் நேரம் பாராமல்
   -கடமை யேதும் செய்யாமல்,
ஞாலம் மறந்தே உறங்குவோரெலாம்
   -நிச்சய மாகப் பிணமேதான்,
சாலப் பொருத்தமாய்ச் சொல்லிடலாம்
   -சற்றும் நலமதை யெண்ணாமல்
ஆலம் உண்பதற் கொப்பாமே
   -அற்பக் கள்ளை உண்பதுவே…! 

லிமரைக்கூ…

அதிகமாய்த் தூங்கினாலது பிணம்,
அளவேதுமின்றிக் கள்ளைக் குடிப்போர்க்கு
அதுகாட்டும் நஞ்சினது குணம்…! 

கிராமிய பாணியில்…

ஒறங்காத நீயும் ஒறங்காத
ஒழைக்காம எப்பவும் ஒறங்காத,
ஒறக்கம் ஒனக்கு அதிகமானா
ஒனக்கும் பொணத்துக்கும் வித்தியாசமில்ல… 

அதுபோல
குடிக்காத குடிக்காத
கள்ள நீயும் குடிக்காத,
கண்ணுமண்ணு தெரியாம
கள்ள நீயும் குடிச்சியண்ணா
அது
வெசத்தக் குடிச்சது போலவும்… 

அதால
குடிக்காத குடிக்காத
கள்ள நீயும் குடிக்காத…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *