இலக்கியம்கவிதைகள்பத்திகள்

மார்கழி மணாளன் (11)

 

 

திருக்கண்ணன்மங்கை = அருள்மிகு பக்தவத்சலப்  பெருமாள்

ag

பாற்கடல் பூத்தவள் அன்புடை அலைமகள்

பாம்பணை படுத்தவன் பாதங்கள் நாடியே

பற்றினில் மற்றவை மறந்தே நோன்பிட

பற்றினாய் கைகளை பரமனே பரந்தாமா !

 

வெட்கிடும் கன்னியை விழியினில் ஏந்தியே

துடித்திடும் இதயத்தில் துணையாய் வைத்தாய்

அருளிடும் நேரத்தில் அன்னையின் கருணையும்

அளவின்றிக் கிடைத்திட அருளிய அச்சுதா !

 

மலரினில் மதுவினைத் தேடிடும் வண்டென

மரணத்தைத் தாண்டிய அமரர்கள் வந்தனர்

மங்கலம் தந்திடும் பாதங்கள் மையலில்

மனதினை இழந்தே மகிழ்ந்தனர் மாதவா !

 

மங்கையை மனதினில் நிறுத்திய மன்னனே

மலையினைக் கைகளில் ஏந்திய கண்ணனே

மானத்தைக் காத்திடத் துகிலினைத் தந்தாய்

மாடங்கள் கொடுத்திட அவலினைப் பெற்றாய் !

 

கர்ணனின் வல்லமை கைகொண்ட  காலனே

வருணனும் பிரம்மனும் வந்தனர் வேண்டியே !

மறுமையம் இம்மையும் கைகளில் ஏந்தியே

வறுமையில் வந்தேன் வளவனைத்  தேடியே !

 

ஒட்டிய பருக்கையைத் தட்டியே எடுத்தவள்

சட்டியில் அமுதினை அளவின்றித் தந்தாய்

பட்டியல் போடவோ பரமனே உன்னருள்

நெற்றியில் நினைவாய் நித்தமும் வந்தருள் !

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க