க. பாலசுப்பிரமணியன்

 

 

திருச்செம்பொன் செய் கோயில் -அருள்மிகு ஹேமரங்கப் பெருமாள் திருக்கோவில்

ag

கயிலையைச் சுமந்து Sவரம்பெற்ற இராவணனை

கைவீணை கலங்கிடவே காம்போதி இசைத்தவனை

கையேந்திக் கபடத்தால்  கற்புடையாள் கவர்ந்தவனை

கைகொண்ட வில்லாலே களம்கொண்ட அருளாளா !

 

அறமிழந்த அரசனையும் மனம்திருந்த அழைத்தவனே

அருளிழந்த அரக்கனையே இலக்காக்கி கொன்றபாவம்

அகம்விட்டு புறம்விட்டு நிலம்விட்டுச் சென்றிடவே

அகம்விட்ட  முனிவருக்கே மனமுவந்து பொன்தந்தாய் !

 

செம்பொன் பசுவொன்றைத் தானமாய் பெற்றவனும்

வந்தவினை அகன்றிடவே  பெற்றசெல்வம்  பெருகிடவே

செங்கமல நாயகியின் சிந்தைநிறைச்  சிங்காரனைச்

செம்பொன் சிலையாக்கிக்  கோயில் கொண்டான் !

 

மலையான துன்பம் மடைநீராய் வந்தாலும்

கலையாத நினைவோடு கணநேரம் நினைத்தாலே

நிலையாது  போகும் நின்னருளாலே நீர்வண்ணா !

சிலையாக இருந்தாலும் சிந்தையில் நிறைந்தவனே !

 

பொன்னான மேனியிலே பொன்னாடை படைத்தாலும்

பொன்னான மனமறியாப் பொல்லாத நெஞ்சங்கள்

புண்ணாகித் துடித்தாலும் நல்லோரின் நலம்நாடும்

நாரணனே ! நின்னடிகள் நினைத்தாலே பொன்னாமே !

 

பலியாடு போன்றென்னை கலிதீர்க்க வளர்த்தாயோ

நிலையாத செல்வத்தின் நிழலாகப்  படைத்தாயோ

மதியென்றும் புதிர்போட்டுச் சதிராட, பரந்தாமா !

கதியென்று வந்தேனே  கரைசேர அருள்வாயோ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *