செண்பக ஜெகதீசன்

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை யுள்ளதாங் கேடு. (திருக்குறள் -889: உட்பகை) 

புதுக் கவிதையில்…

எள்ளின் பிளவளவு
மிகச் சிறிதளவே இருந்தாலும்
உட்பகை,
அரசையே அழிக்கவல்ல
கேடு அதில்
அதிக அளவில் நிறைந்திருக்கும்…! 

குறும்பாவில்…

உருவில் சிறிதாய் எள்பிளவுபோலிருந்தாலும்,
உட்பகையில் நிறைந்திருக்கும்
ஊறு செய்யும் கேடு…! 

மரபுக் கவிதையில்…

உருவில் சிறிய எள்ளதனின்
     -உள்ளே யிருக்கும் பிளவதுபோல்
உருவம் சிறிதா யிருந்தாலும்
   -உட்பகை யென்னும் பெருங்கேடு,
திருவே யுருவாம் மன்னருக்கும்
  -தீங்கு செய்தே அழித்துவிடும்
திருட்டு குணத்தைப் பெருமளவில்
  -தாங்கி யிருக்கும் அறிவீரே…! 

லிமரைக்கூ…

மிகச்சிறிது எள்ளின் பிளவு,
இவ்வளவிருக்கும் உட்பகையிலுமுண்டு அழிக்குங்கேடு
மிகவும் அதிகமாம் அளவு…! 

கிராமிய பாணியில்…

நல்லதில்ல நல்லதில்ல
உள்பகதான் நல்லதில்ல,
வாழ்க்கயில அரசாச்சியில
உள்பகதான் நல்லதில்ல… 

எள்ளுக்குள்ள இருக்குஞ்சின்ன
பௌவுபோலச் சின்னதாத்தான்
உள்பகயே இருந்தாலும்,
ஒலகத்தயே அழிக்கத்தக்க
கேடதுல நெறஞ்சிருக்கும்,
பெருமளவு நெறஞ்சிருக்கும்… 

அதால,
நல்லதில்ல நல்லதில்ல
உள்பகதான் நல்லதில்ல,
வாழ்க்கயில அரசாச்சியில
உள்பகதான் நல்லதில்ல…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *