நிர்மலா ராகவன்

என்றோ செய்த பாவபுண்ணியங்கள்

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2-1-1

பள்ளி விடுமுறை வந்தால், எங்கள் பாட்டி வீட்டில் குழந்தைகளும் பெரியவர்களுமாக வெளியூர்களிலிருந்து பலர் வந்து தங்கிவிடுவோம்.

முப்பது, நாற்பது பேருக்கு வேண்டுமே என்று வழக்கத்தைவிட முப்பது மடங்கு பால் வாங்க முடியுமா? தயிரில் நிறைய தண்ணீர்விட்டு, நீர்மோராக்கிவிடுவார்கள். `மோர்தான்!’ என்று சத்தியம் செய்தால்தான் நம்ப முடியும். அப்படி ஒரு திரவமாக இருக்கும்.

அதைச் சாப்பிடப் பிடிக்காமல், நான் ஒருமுறை துணிந்து, `பாட்டி! இன்னிக்கு ஒரே ஒரு நாள் எனக்கு மட்டும் கெட்டியா தயிர் குத்த முடியுமா?’ என்று கெஞ்சிக் கேட்டுவிட்டேன்.

பாட்டியின் பதில் உடனடியாக வந்தது: `நான் மாட்டேம்பா. பாரபட்சம் காட்டினா, அப்புறம் கடைசி காலத்திலே கை கால் விளங்காமப் போயிடும்!’

இப்படி ஏதாவது பயமுறுத்தி வைத்தால்தான் மனிதர்கள் ஒழுங்காக இருப்பார்கள் என்று யாராவது கட்டிவிட்ட கதையோ என்று அப்போது தோன்றியது. ஆனால், இறக்கும்வரை சமையல், தோட்ட வேலை என்று பாட்டி நன்றாகத்தான் இருந்தார்கள்.

வாழும்போது ஒருவரின் நடத்தை எப்படி இருக்கிறதோ, சாகும்வரை, இன்னும் சொல்லப்போனால், இறப்பிற்குப் பின்னும் அதன் பாதிப்பு இருக்கிறது. அதாவது, ஒருவருடைய சந்ததிகள் மூத்தவர்களின் செயலின் விளைவுகளை அனுபவிக்க நேர்கிறது.

நான் தமிழ்நாட்டுக்குப் போயிருந்தபோது, இளம் பெண்பாடகி ஒருத்தியின் இசைப்புலமையைப் பாராட்டினேன்.

“எல்லாம் ஒங்க ஆசிர்வாதம்,” என்றாள்.

`பெரியவர்களின் நல்வாழ்த்துகள் நன்மையை விளைவிக்கும் என்றால், ஒருவர் தீங்கு செய்தால்?’ என்று என் யோசனை போயிற்று.

கதை 1

`உங்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தபின், எதற்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டீர்கள்?” என்று வயது முதிர்ந்த உறவினர் ஒருவரைக் கேட்டேன்.

(நான் யாரைப் பார்த்தாலும், கன்னாபின்னாவென்று கேள்விகள் கேட்பேன். அனேகமாக, எவரும் பதிலளிக்கத் தயங்கியதில்லை. வெகு சிலரே ஆத்திரப்பட்டிருக்கிறார்கள்).

`ஆரஞ்சு பழத்தின் சக்கையை உறிஞ்சிவிட்டேன். சக்கையைத் தூக்கித்தானே போடணும்?” என்றார் அலட்சியமாக.

`சக்கை’ என்று அவர் வர்ணித்த முதல் மனைவி அவரை வெறுத்ததில் ஆச்சரியமில்லை. தான் ஒருத்தியாகவே பாடுபட்டு குழந்தைகளை வளர்க்க நேரிட்டபோது, தந்தையைப்பற்றி பெருமையாக எதுவும் சொல்ல முடியவில்லை. குழந்தைகளும் தான்தோன்றித்தனமாக வளர்ந்தார்கள். தாய் கவலைப்படவில்லை. `பெரியவர்கள் ஒழுங்காக இருந்தால்தானே அதைப் பார்த்து, அவர்கள் குழந்தைகளும் சரியாக வளர்வார்கள்!’ என்று அலட்சியமாகச் சொன்னார்.

வயதானபின், இரண்டாவது மனைவியையும் நிராதரவாக விடத் தயங்கவில்லை மனிதர்.

இப்படி சுயநலத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்நாள் முழுவதையும் கழித்துவிட்டவர்களின் அடுத்த தலைமுறைகள் பாவ மூட்டையைச் சுமக்கிறார்கள்.

கதை 2

பதின்ம வயதான தன் மகள்களை ஒத்த பெண்களை சிரிப்பும், வேடிக்கையுமாகப் பேசிக் கவர்வதே தான் ஆணாகப் பிறந்ததன் பலன் என்பதுபோல் நடந்துகொண்டார் அந்த மனிதர். பெண்களைச் சிரிக்க வைத்தால், அவர்களது எதிர்ப்பு குறைந்துவிடும், எளிதில் தன் வலையில் விழுந்துவிடுவார்கள் என்று அவர் போட்ட கணக்கு தப்பவில்லை. பெற்ற மகள்களே அவமானத்துடன் குறுகும்படி இருந்தது, `எல்லாப் பெண்களும் என் காதலிகள்தாம்!’ எனபது போலிருந்த அவரது நடத்தை. உறவினர்கள் அவரைத் தம் வீட்டில் சேர்க்கவே அஞ்சினார்கள்.

(மேல் நாடுகளில் இந்த சமாசாரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்களோ, என்னவோ! ஆனால், இந்தியாவில் இப்படி நடப்பது அறியாப்பெண்களின் மனநிலையை, அவர்களது எதிர்காலத்தை, பெரிதும் பாதிக்கும்).

அவரது காலம் முடிவதற்குள் தன் லீலைகளின் விளைவுகளை அவர் காணவேண்டிவந்தது. `தகாது’ என்று தெரிந்தே அடுக்கடுக்காக தவறு செய்வது எத்தனை தீய காரியம்!

மூன்று குழந்தைகளுக்குப் பிள்ளைப்பேறே கிட்டவில்லை. ஒருவனுக்கு ஆண்மை இல்லை. தப்பிப் பிறந்த பேரக்குழந்தைகளையும் அவரது வினை தொடர்ந்தது. பிறக்கும்போதே நோய். ஒருவனுக்குக் கல்யாணமான அன்றே மனைவி அவனுடன் வாழ மறுத்துப் போய்விட்டாள்.

`அப்பாவியான குழந்தைகள் எப்படித் துயர்ப்படுகிறார்கள்!’ என்று உறவினர்கள் பரிதாபப்பட்டாலும், அவர்களுக்கும் காரணம் தெரிந்தே இருந்தது. பல தாய்மார்களின் சாபம் சும்மா விடுமா!

வேறு சிலர், தம் நடத்தையில் மி்கக் கவனமாக இருப்பார்கள். `என்னைப்பற்றித் தவறாகப் பேச என்ன இருக்கிறது!’ என்ற மிதப்புடன், பிறரை ஓயாது விமர்சிப்பார்கள்.

கதை 3

விவரம் அறியாத வயதில் வத்சலாவை சற்று வயதானவருக்கு மணமுடித்தார்கள். அதனால் விளைந்த கலக்கமோ, குழப்பமோ, அவளுக்கு ஆண்-பெண் உறவைப்பற்றி கண்டபடி பேசுவதில் அளப்பற்ற ஆர்வம். அண்ணன்-தங்கை அன்பாக இருந்தால்கூட அவர்களுக்குள் தகாத உறவு இருக்கவேண்டும் என்று பேசுவாள்.

விளைவு: தன் இறுதிக்காலத்தில் இருபது ஆண்டுகள் படுத்த படுக்கையாக, அத்தியாவசியத் தேவைக்காக பேசக்கூட இயலாத நிலை ஏற்பட்டது. நாவைச் சரியான முறையில் பயன்படுத்தாத பாவமோ!

அம்மா இப்படிப் பேசுவதைக் கேட்டே வளர்ந்த ஆண்குழந்தைகள் பதின்ம வயதிலேயே `செக்ஸ்’ என்ற விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டி, பல சிறுமைகளுக்கு உள்ளாகி, நோய்வாய்ப்பட்டுப்போனார்கள். அதற்கு அடுத்த தலைமுறையிலும் பல கோளாறுகள்.

வயதானவர்களே போர்!

பெரும்பாலான இளைஞர்களுக்கு முதியோர் என்றால் இளக்காரம். தாம் என்றும் இளமையாகவேதான் இருக்கப்போகிறோம் என்ற மிதப்புடன் நடந்துகொள்வார்கள்.

அவர்களே மூப்படைந்ததும், அவர்கள் நடந்துகொண்டதைப்போலவே இளைஞர்கள் அவர்களை அலட்சியப்படுத்த, அதை மாற்றத் தெரியாது, வருத்தத்துடன் ஏற்பதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்?

சிறு வயதிலிருந்தே எனக்கு முதியவர்களுடன் பேசுவதும் பழகுவதும் பிடித்த சமாசாரம். `இவர்களுக்குத்தான் எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது!’ என்று பிரமிப்பாக இருக்கும்.

ஒரு முறை என் தாயின் அத்தை சென்னையிலிருந்த எங்கள் பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார். அவரை எப்படித் தனியாக ரயில் நிலையத்துக்கு அனுப்புவது என்ற பிரச்னை எழுந்தது. பதினைந்து நிமிடத்துக்குமேல் நடந்து போகவேண்டும். (அந்தக் காலத்தில் ஆட்டோ ரிக்ஷா கிடையாது)

என் பாட்டி பதின்ம வயதாக இருந்த என்னைச் சிபாரிசு செய்தார், `நிரு கையைப் பிடிச்சுண்டு போய், மெதுவா எல்லாத்தையும் காட்டி அழைச்சிண்டு போகும்!’ என்று.

நான் உடனே சம்மதித்தேன். வெளியில் அதிகம் போய்வர உடல் வலுவோ, வாய்ப்போ இல்லாதவர்கள், பாவம்!

என் வழக்கம்போல், சிறு குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல்,  பார்ப்பதையெல்லாம் விளக்கினேன்.

அத்தை பாட்டி அந்நாளை, அந்தச் சில நிமிடங்களை எவ்வளவு தூரம் மதித்தார்கள் என்று பதினேழு வருடங்களுக்குப்பின் தெரிந்தது.

“நீ அத்தைக்கு என்ன பண்ணினே? என்னை எப்போ பார்க்கிறபோதும், `நிர்மலாவுக்குக் கல்யாணமாகி, பதினோரு வருஷத்துக்கு அப்புறம் ஒரு பிள்ளைக்குழந்தை (ஆண்) பிறந்து, அதுவும் அல்பாயுசில போயிடுத்தாடி?’ன்னு அழறா!” என்று என் தாய் கேட்டபோதுதான் எனக்கு அந்தச் சம்பவமே நினைவில் வந்தது.

`எவ்வளவு அனாதரவாக உணர்ந்தால், இதைப்போய் நினைவு வைத்திருப்பார்கள்!’ என்ற பரிதாபம் ஏற்பட்டது.

முற்பகல் செய்யின்

சமீபத்தில் ஒரு மருத்துவர், `உங்களுக்கு எழுபது வயதுக்கு மேல் ஆகியும் ஒரு பல்கூட ஆடவில்லையா? ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற எந்த வியாதியும் கிடையாதா?’ என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டபோது, `என்றோ பெரியவர்கள் செய்த ஆசிர்வாதம்!’ என்றுதான் சொல்லத் தோன்றியது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *