அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். தைத்திருநாளை தன்னுள் அடக்கிக் கொண்ட இவ்வாரத்தில் உங்களோடு மடல் மூலம் உரையாடுவதில் மகிழ்கிறேன். உழவர் தம் திருநாளில், உழைப்பை நல்கி ஊரை உய்விக்கும் உன்னதத் தோழர்கள் உழைப்பின் பரிசினை உவந்து கொண்டாடும் தைத்திருநாளாம், தமிழர் திருநாளாம், தைப்பொங்கல் பொலிவுடன் பூத்திடும் வாரமிது. கடந்த பல வருடங்களாகத் தைப்பொங்கல் பண்டிகையைச் சென்னையில் கழிப்பது எம் வழக்கமாயிருந்தது. தைப்பொங்கல் காலத்தோடு இயைந்து வரும் சென்னைப் புத்தகத் திருவிழாவையும் கன்டு களிப்பதை வழமையாகக் கொண்டிருந்த எமது பிரயாண ஏற்பாடுகள் இவ்வருடம் சிறிது தாமதமாகையால் இம்முறை தைப்பொங்கல் திருநாளை லண்டனில் கழிக்க வேண்டியதொரு சூழல்.

இன்று அதவாது 12ஆம் திகதி மாலை 5 மணியளவில் பெய்ய ஆரம்பித்த பனிமழை எமது இல்லத்தின் தோட்டத்துப் பச்சையையும் வீட்டின் முற்றத்தையும் வெள்ளைக் கம்பளம் கொண்டு போர்த்தி விட்டது. இலைகளை இழந்து நிர்வாணமாய் நிற்கும் பனிக்கால மரங்களை இயற்கையன்னை பனிமழை எனும் வெள்ளையாடை கொண்டு மூடிவிட்ட அழகிய காட்சி காணுமிடமெங்கும் நிறைந்திருக்கிறது. தமிழர் தாயகமாம் தமிழகத்தில் ஆதவன் தன் கதிர்களால் அனைவரையும் தகித்துக் கொண்டிருக்க லண்டனில் பனிமழையால் மக்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது இயற்கை.

ஐக்கிய இராச்சியத்தின் முக்கியப் பிரதானமான ஒரு பேசப்படும் பொருளாக அனைவருக்கும் பிரமிப்பூட்டும் சாதனையாக இருந்துவருவது இங்கிலாந்தின் தேசியச் சுகாதார சேவையே! வாழ்வில் எத்தகைய நிலையிலிருப்போராகிலும் அவர்கள் பிரித்தானியப் பிரஜைகளாக இருப்பின் அவர்களுக்கு அளிக்கப்படும் வைத்தியம் இலவசமானதாகவே இருக்கும் என்பதுவே தேசியச் சுகாதரச் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் மைய நோக்கமாகுமானால் இன்றோ அச்சுகாதார சேவை தனது அச்சாணியாகத் திகழும் அவ்விலவசமான வைத்தியத்தை அளிக்கும் முயற்சியில் மிகவும் தள்ளாட்டத்துக்கு உள்ளாகியே இருக்கிறது. இங்கிலாந்து அரசின் பொருளாதாரக் கொள்கை இறுக்கப்பட்டிருப்பதன் காரணமாகப் பொதுச் சேவைகளுக்கு அளிக்கப்படும் நிதித்தொகையின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது.

அதன் காரணமாகவும், ஐக்கிய இராச்சியத்தின் ஜனத்தொகையின் அளவின் அதிகரிப்பாலும், வைத்திய முன்னேற்றங்களின் காரணமாக மக்களின் வாழ்வுக் காலம் நீடிக்கப்பட்டிருப்பதாலும் இன்றைய இங்கிலாந்துத் தேசிய சுகாதாரச் சேவை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களின் முன்னால் ரெட் குரஸ் என்றழைக்கப்படும் சர்வதேசத் தொண்டு நிறுவனம் தேசிய சுகாதார சேவையின் பாதிப்பு வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் அடிப்படி மனித உரிமைகள் கூட நிறைவேற்றப்படமுடியாத ஒரு சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல டாக்டர்களைப் பிரதிநிதிப்படுத்தும் அமைப்பும், இங்கிலாந்தின் பல பகுதிகளின் தேசிய சுகாதாரச் சேவைகளின் நிர்வாகங்களைப் பிரதிநிதிப்படுத்தும் அமைப்பும் இதுவரைத் தாம் கண்டிராத அளவுக்குத் தேசியச் சுகாதார சேவை தனது சேவைகளை நோயாளிகளுக்கு அளிக்கும் முயற்சியில் பல பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது என்று கூறியுள்ளார்கள். இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் இங்கிலாந்து பிரதமர், மற்றும் தேசியச் சுகாதார சேவையை நிர்வகிக்கும் அமைச்சர் ஆகியோரின் வாசல் கதவுகளைத் தட்டுகின்றன. தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பிரதமர் “தேசியச் சுகாதார சேவைக்கு அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட நிதித்தொகை அவர்கள் கேட்ட தொகையிலும் பார்க்க அதிகமானது என்றும் ஒரு சில தேசிய சுகாதார அமைப்புகளின் கீழ் வரும் வைத்தியசாலைகளே சிக்கலைச் சந்தித்து வருகின்றன என்றும் அது அவர்களின் நிர்வகாம் சரிவர நிர்வகிக்கப்படாத காரணமே என்றும் கூறியுள்ளார். பிரதமர் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களின் மனக்கிலேசத்தை கணக்கிலெடுக்காமல் மேலோட்டமாக நடக்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் ஜனத்தொகை அதிகரிப்பு, அளவுக்கதிகமான வெளிநாட்டவரின் குடியேற்றம், இன்றைய காலகட்டத்தில் ஒருவரின் சராசரி வாழ்வின் காலம் முன்னைய காலங்களை விட அதிகரித்துள்ளது எனும் காரணங்களினால் நிச்சயம் தேசிய சுகாதாரச் சேவையின் தரத்தில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததே! ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மக்களின் அடிப்படைத் தேவைகள் எத்தகைய வகையில் நிறைவேற்றப்படுகிறது என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. அவ்வகையில் இங்கிலாந்தின் முன்னேற்றத்தின் மீதான அபிப்பிராயத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு அந்நாட்டின் அரசுக்கும், அவ்வரசின் தலைவருக்குமே முக்கியமான பொறுப்பாகும் என்பது நிதர்சனமான உண்மை.

என் அன்பு வாசக உள்ளங்கள் அனைவருக்கும் எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

அல்லும் பகலும் உழைத்திடும்
அன்புத்தோழர் விவசாயிகள்
கனவுகளைத் தேக்கி வாழ்வில்
காலமெல்லாம் வாழ்ந்திடுகிறார்

நாளை தமக்கு நலமாய் விடியும் எனும்
நம்பிக்கை நெஞ்சில் கொண்டு அவர்கள்
நாட்டின் உணவு வளம் செழித்திட
நலிவுற்றே உழைத்து தேய்ந்திட்டார்

மேடைகள் தோறும் முழங்கிடும் நல்ல
தலைவர்கள் உண்மையை உணர்ந்திட்டு
தரமான வாழ்வு விவசாயிகள் பெற்றிட
தந்திடுவாரோ நலமுள்ள திட்டங்கள்?

தைமகள் பிறந்திட்ட பொன்னாளில்
தைத்திருநாளாம் தமிழர் தம் திருநாளில்
பொங்கிடும் எம் தோழர் வீட்டுப் பானைகள்
பொழியட்டும் மகிழ்வதனை அவர்தம் வாழ்வினில்

உழைத்து வாழ்ந்திடும் தோழர்கள்
உன்னதமாய்ப் பெற்றிடட்டும் வெற்றிகள்
தைத்திருநாளில் என் அன்பு வாழ்த்துக்கள்
பொழிகின்றேன் அன்புத் தமிழ்ச் சொந்தங்களுக்கு!

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *