நிர்மலா ராகவன்

இசை, ஸ்வரங்கள்

நலம்-2-1-1-1

இசை கேட்கப் பிடிக்காதவர்கள் யாராவது உண்டா? அதைப்பற்றி கொஞ்சம்.

ஏழு ஸ்வரங்கள்

ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு ஸ்வரங்கள் அனைத்தும் பறவை மற்றும் மிருகங்களின் ஒலியாகும். இவைகளின் அதிபதிகளுக்கு தனிப்பட்ட உரு இருக்கிறது. பிடித்த ஆடை ஆபரணங்கள், துணைவியர் எல்லாம் உண்டு.

ஸ என்ற முதல் ஸ்வரத்தை ஷட்ஜம் என்பார்கள். இது மயிலின் குரலை ஒத்திருக்கும். மயில் கத்தும்போது கர்ணகடூரமாக இருக்கிறதே என்று யோசித்தேன். ஆனால், உற்றுக் கேட்டபோது அந்த ஸ்வரம் புலனாகியது.

அடுத்து, ரி — ரிஷபம். எருதின் குரல்.
க — காந்தாரம். ஆட்டின் கனைப்பை அடிப்படையாகக் கொண்டது.
ம — மத்யமம். க்ரௌஞ்ச பறவை (நாரை).
ப — பஞ்சமம். குயிலின் கூவல்.
த — தைவதம். குதிரையின் கனைப்பு.
நி — நிஷாதம். யானையின் பிளிறல்.

இவைகளில் ஸ, ப இரண்டும் மாற்றமில்லாது, ஒரேமாதிரி இருக்கும். மற்றவைகளில் இரண்டு அல்லது மூன்று வகைகள் உண்டு. இவைகளை மாற்றி மாற்றி அமைக்கும்போது ராகங்கள் எழுகின்றன. நமது கர்னாடக இசையில் ஐந்து ஸ்வரங்களாவது இருந்தால்தான் அது ராகமாம்.

நான் எழுதுவதா!

`தமிழில் நாட்டியப் பாடல்கள் எழுதிக் கொடேன்!’ என்று என் மகள் கேட்டபோது, `அதெல்லாம் எனக்குத் தெரியாது!’ என்று முதலில் மறுத்தேன். கதை, கட்டுரை வேறு, கடவுள்மேல் பாடலமைப்பது வேறு. இல்லையா?

அவள் விடாமல் தொணதொணக்க, `விடமாட்டியே! எதைப்பற்றி?’ என்று கேட்டேன்.

பிரம்மாவால் உலகம் உருவான கதையை பல பக்கங்களில் தட்டச்சு செய்து, கெஞ்சும் பார்வையுடன் அளித்தாள்.

விக்கினம் எதுவும் வராமல் இருக்கவேண்டும் என்று பிள்ளையாரையும், `நீயே எழுதிக் கொடு!’ என்று கல்விக் கடவுள் சரஸ்வதியையும் வேண்டிக்கொண்டு, குருவையும் மானசீகமாக நமஸ்கரித்தேன்.

இரண்டு மணி நேரத்தில், யாரோ என் கையைப் பிடித்து எழுதுவதுபோல் பாதிப் பாட்டு, ஐந்து ராகங்களில், தயாராகிற்று.

கலைஞர்களின் கர்வமும் இசைத் தேவதைகளும்

எதையாவது கொஞ்சம் கற்றுவிட்டாலே பலருக்கும் கர்வம் வந்துவிடுகிறது. இசையில் ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் கர்வப்பட்டால் பாதிக்கப்படுகிறவர்கள் இசைத் தேவதைகள்தாம். (கற்க ஆரம்பித்தவர்கள் தவறு செய்வது இதில் சேர்த்தியில்லை).

கற்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே எனக்கு உணர்த்தப்பட்டது: `யாராவது பாடச்சொல்லிக் கேட்டால், பிகு செய்துகொள்ளாமல் உடனே பாட வேண்டும். சாக்குபோக்கு சொல்வது அகம்பாவம். தலை கனத்துப்போனால், கலை நம்மை விட்டுப் போய்விடும்!’

சற்றே புகழ்பெற்றபின், `எனக்கு எல்லாம் தெரியும்!’ என்ற கர்வத்துடன், அலட்சியமாகப் பாடுபவர்களுக்குத் திடீரென்று ஸ்ருதி இறங்கும். அல்லது தாளம் தப்பும். அதன் விளைவாக, ராகா, ராகினி என்ற பெயர்கொண்ட இசைத் தேவதைகளின் அங்கங்களில் சிறுகச் சிறுகக் குறைபாடுகள் உண்டாகும்.

ராகம், ஸ்வரத்துக்குரிய இசைத் தேவதைகளைப்பற்றிய ஒரு பாடலுக்கான தகவல்கள் ஆங்கிலத்தில் தற்செயலாகக் கிடைக்க, என் மகள் என்னிடம் கொடுத்தாள். `கையின்றி, காலின்றி’ என்று ஆரம்பித்தது நான் எழுத ஆரம்பித்த அப்பாடல்.

சில நாட்கள் கழித்து, கண்ணயர்ந்த உடனே, கண்பார்வை இல்லாது தடுமாறியபடி சிலர் என்முன் தோன்றுவதுபோல் ஒரு பயங்கரமான காட்சி. விழிப்பு வந்தது. இசைத் தேவதைகள்!

மறுநாள் என் மகளிடம் தெரிவித்தபோது, `உடல் குறை என்றால் கை காலில் மட்டும் ஊனம் என்பது கிடையாதே! கண்ணையும் சேர்த்துக்கொண்டிருக்க வேண்டுமே என்று நானே நினைத்தேன்!’ என்றாள்.

அதன்பின், யாராவது அலட்சியமாகப் பாடினாலோ, அரைகுறையாக நாட்டியம் ஆடினாலோ என் மனம் பதற, கண்ணை மூடிக்கொண்டு இந்த தேவதைகளுக்காகப் பிரார்த்திப்பது என் வழக்கமாயிற்று.

ருத்திரன் வந்தான்

அடுத்த வருடம் சிவராத்திரியின்போது அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கையில், `ருத்திரன் வந்தான்’ என்ற ஒரே வரி திரும்பத் திரும்ப இசையுடன் மனத்துள் கேட்க, விழிப்பு கொடுத்தது. `புதிய பாடல்!’ என்று உற்சாகத்துடன் எழுந்து, ஒரு நோட்டுப் புத்தக்கத்தை எடுத்து வந்து எழுத ஆரம்பித்தேன். அப்போது இரவு 11.50 மணி.

மின்சாரத் தடை

பத்து நிமிடங்கள் கழிந்து, சரியாக பன்னிரண்டு மணிக்கு எங்கள் பகுதியில் மின்சாரம் தடைபட்டது. பாட்டு என்னவோ வந்துகொண்டிருந்தது. விட்டால், காலையில் எதுவும் நினைவுக்கு வராது. ஆகவே, படுத்தபடி, அடுத்த வரி எங்கே ஆரம்பிக்கும் என்று உத்தேசமாக கட்டை விரலை அந்த இடத்தில் பதித்தபடி எழுதினேன்.

நடுவில் உறக்கம் மீண்டும் அடுத்த வரி. இப்படியே நான் பாட்டை எழுதி முடித்தபின், மின்சாரம் சீராகியது. அப்போது மணி 2.40.

நான் மனத்தெளிவுடன் இருந்தால், `இப்படி எழுதலாமே!’ என்ற எண்ணம் குறுக்கிட்டுக் கெடுத்திருக்கும். அந்த தடங்கல் எதுவும் இல்லாமல் இருக்க, முக்கால் தூக்கத்தில் எழுதியிருக்கிறேன்!
மறுநாள் காலை நான் எழுதியதைப் பார்த்தால் சிரிப்பு வந்தது. ஒரு வரிக்கு மேலேயே இன்னொன்று — என்ன வார்த்தைகள் என்று பிடிபடாமல். சில சமயம் நான்கு அங்குல இடைவெளியில் அடுத்த வரி!

கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் நல்லூரில் உள்ள காளி கோயிலில் நான் இதைப் பாடியபோது, `இந்த ஊரில் நடந்ததை யாரோ அப்படியே உங்களுக்குக் குடுத்திருக்கா!’ என்று வியந்தார் அர்ச்சகர்.
அந்தப் பாடலில், எனது பெயரைக்கொண்ட முத்திரை கிடையாது. யாரோ கொடுத்தது அல்லவா?

அடுத்தடுத்து வந்த நான்கு சிவராத்திரிகளில் ஒவ்வொரு முறையும் ஒரு சிவன் பாடல் வந்தது.

முத்திரை

பாட்டு வரும்போது வரும். என்ன ராகம் என்ற யோசனையெல்லாம் அப்போது எழாது. இசையுடன் வார்த்தைகள் தாமே வந்து விழும். `நான் எழுதுகிறேன்!’ என்ற பெருமைக்கே இடமில்லை. அதனால்தான், நான் வீட்டு வாசலில் நின்றிருந்தபோது, `முத்திரை போடு!’ என்று மறைந்த என் குருநாதரின் குரல் கேட்டபோது மிகவும் தயக்கமாக இருந்தது. பெருமையடித்துக் கொள்வது போலிருந்தது. (அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. அவர் இயற்றிய பாடல்களை வேறொருவர் சொந்தம் கொண்டாடிய கதை எனக்குத் தெரியும்).

பிள்ளையாருக்கு PERFECTION வேண்டும்

சிறு வயதிலிருந்தே இந்துக் கடவுள்கள்தாம் எனக்குப் பரிச்சயம். ஒரு பாடலை எழுதி முடிக்க இருபது நிமிடங்கள் ஆகலாம், அல்லது ஒன்றரை மாதங்கள் பிடிக்கலாம்.

என் அனுபவப்படி, முருகன் பாடல் சில நிமிடங்களில் பூர்த்தியாகும். (சமர்த்து!) தமிழ்க்கடவுள் அல்லவா?

அம்மன் பாடல்கள் என்னை அதிகம் யோசிக்கவிடாமல் எளிதாக, ஆனால் மிக நன்றாக அமையும். பதிவு செய்வதும் எளிது. சிவன் பாடல்கள் வேலை வாங்கும். பிள்ளையார்மேல் அமைந்த பாடல்களைத் திருத்தி, பதிவு செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பதினோரு வருடங்களுக்குமுன் எழுதிய விநாயகர் பாடல் ஒன்று இந்த வாரம்தான் சரியாகியது.

முழுப்பாடலும் சரியாக அமைந்தது என்பதற்கு அடையாளமாக மயிர்க்கூச்செறியும்.

புரியாததைப் புரியவைக்க

கோலாலம்பூரிலுள்ள ஒரு பெரிய மளிகைக் கடைக்குப் போயிருந்தபோது நடந்த சம்பவம் அது. யாரோ என்னைப் பின்னாலிருந்து தள்ளியதுபோன்ற ஓர் உணர்வு. திரும்பினேன். யாரும் இருக்கவில்லை. வேகமாக வழுக்கியபடி நகர்ந்து, பின் இடது புறம் திரும்பி அதே வேகத்தில் சற்றுத் தூரம் சென்றபின் கீழே விழுந்து, தரையில் வைக்கப்பட்டிருந்த ஐஸ் பெட்டியின்மேல் நெற்றி மோத, அப்படியே உட்கார்ந்துவிட்டேன். இரண்டு பேர் என்னைக் கைத்தாங்கலாகத் தூக்கி நாற்காலியில் உட்காரவைக்க, கல்லாவில் உட்கார்ந்திருந்த பெண்மணி `ஐஸ் வாங்கிட்டு வா!’ என்று அலறியது கேட்டது.

மூன்று நாட்கள் படுத்த படுக்கை. நெற்றியில் பெரிய வீக்கம். வலி உயிர் போயிற்று. எதுவும் யோசிக்க இயலாத நிலை.

அந்நாட்களில் யாரோ எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். அதன்பின், ஸ்வரங்களின் பேதங்களைப்பற்றி பல விஷயங்கள் புரிந்தன.

இன்னொரு விபத்து

ஒரு முறை லிஃப்டில் ஏறும்போது, திறந்திருந்த அதன் கதவு வேகமாக மூடி, என் நெற்றிப்பொட்டின் இரு புறங்களிலும் இடிக்க, வலி தாங்காது அலறினேன். இன்னும் வடு இருக்கிறது. (சாதாரணமாக, நாம் பாதி ஏறும்போது மூடிக்கொள்ளும் கதவு மீண்டும் திறந்து வழிவிடும்).

விளைவு: இசையைப்பற்றி மேலும் சற்றுத் தெளிவும், ஒரு நல்ல பாடலும் அமைந்தன. ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் பிரசவ வேதனை போல்தான்.

`இப்படியெல்லாம் என்னைக் கஷ்டப்படுத்தினால், இனிமே எழுத மாட்டேன், பார்!’ என்று முகமோ, உருவமோ அற்ற யாரையோ உரக்கத் திட்டினேன்!

`இப்படித்தான் வரும்!’ என்கிறார்கள், விஷயம் புரிந்தவர்கள்.

மணக்குள விநாயகர்

ஒரு முறை புதுச்சேரிக்குப் போயிருந்த அன்று மத்தியான உணவிற்குப்பின் `மணக்குள விநாயகா’ என்று பாடலொன்று மனதில் எழுந்தது.

அது என்ன வார்த்தை, `மணக்குள’ என்று?

அன்று மாலையே வங்கக் கடலருகே இருக்கும், (பாரதியார் எழுதியிருக்கும்) அந்தக் கோயிலுக்குப் போய் தலபுராணத்தைப் படித்தபோது, மணல், குளம் என்ற இரு வார்த்தைகள் மருவி இப்படி ஒரு புதிய வார்த்தையாக உருவெடுத்திருக்கிறது என்று புரிந்தது.

கதை

சில நூற்றாண்டுகளுக்குமுன்னர், பாண்டிச்சேரியை ஆண்டுகொண்டிருந்த பிரான்சு நாட்டு அதிகாரிக்கு வேலையாட்கள் கோயிலுக்குப் போய் கடவுளைக் கும்பிட்டு வருவதால் வேலைக்குத் தாமதமாக வருகிறார்கள் என்ற ஆத்திரம் எழுந்தது. அருகிலிருந்த கோயிலில் குடியிருந்த விநாயகர் கருங்கல் சிலையை கடலில் எறியும்படி கட்டளை பிறப்பித்தார். ஆனால், பிள்ளையார் மூழ்க மறுத்துவிட்டார்! பல முறை எறிந்தும், அச்சிலை மீண்டும் மீண்டும் மேலே எழுந்ததாம்.

அந்தப் பாடலும் ஜதி, பாதியில் வரும் சிட்டை ஸ்வரங்களுடன் சரியாக அமைய பத்து வருடங்களாகின.

எங்கு, எப்போது

கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்குப் போய் திரும்புகையிலேயே என் மனத்துள் பாட்டு எழும். அனேகமாக நடுநிசியில் அயர்ந்து உறங்குகையில், கனவில்போல் பாடல் கேட்கும். (நானே வலிய எழுதும் பாடல்கள் அவ்வளவு நன்றாக அமைவதில்லை).

புதிய ராகங்கள்

சில சமயம் தெரியாத, நான் கற்காத ராகத்தில்கூட பாடல்கள் அமையும்.

`அதெப்படி குரு சொல்லிக்கொடுக்காத ராகத்தில் பாட்டு எழுத முடியும்?’ என்று இசை வல்லுனர் ஒருவர் அதிசயப்பட்டார்.

யாரோ கொடுக்கிறார்கள். நான் கருவிதானே!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *