இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 34

0

மீனாட்சி பாலகணேஷ்

பதம் கண்ணிலெடுத்தணைக்க வருக!

am
ஒரு பிஞ்சான செல்லக்குழந்தை நம்மோடு இருந்துவிட்டால் போதும்; வாழ்வின் மகத்தான பேரின்பம் அதுவேதான். அதற்கு அலங்காரம் செய்வதும், அழகு பார்ப்பதும், விளையாடுவதும், உணவு ஊட்டுவதும், கொஞ்சுவதுமாக, நேரம் போவதே தெரியாது. நேரம் போதவும் போதாது!

‘மக்கள் மெய்தீண்டல் உடற்கு இன்பம்,’ ‘குழலினிது யாழினிது என்பார் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர்,’ எனவெல்லாம் மக்கட்செல்வத்தைப் பெருமைப்படுத்திப் பேசினார் வள்ளுவர். இந்தக்கருத்தை மிக அழகாக விளக்கும் பிள்ளைத்தமிழ்ப் பாடல் ஒன்று- இதில் திருமலைக்குமரனை, குழந்தை முருகனை செங்கோட்டை கவிராச பண்டாரத்தையா எனும் அடியார், (பக்தர், புலவர்) தாயாகமாறிப் போற்றி மகிழ்கிறார். மெய்தீண்டும் இன்பத்தை மிக நுட்பமாக அனுபவித்து, விவரித்து மகிழ்கிறார்.

“குழந்தாய், உனக்குப் புத்தம் புதுப்பட்டாடை அணிவிப்பேன்,”- புலவர் பெருமான் தோயாத துகில் என்கிறார். அதாவது நீரில் தோய்த்து நனைத்து பழையதாக்காத- தோயாத புதுத்துகில்; தாய்க்கு அதில் ஒரு பெருமகிழ்ச்சி; புத்தாடையைத் தன் கண்போலும் போற்றும் குழந்தைக்கு அணிவிப்பதில் அவளுக்குப் பேரானந்தம் பிறக்கின்றது.

“தோயாத் துகிலும் அரைவடமும் சுற்ற வருக வருகவே.”

“அரையில், அதாவது இடையில் பொன்னரைஞாண் அணிவிப்பேன்.” சின்னஞ்சிறு குழந்தையல்லவா? வாயிலிருந்து எச்சில்நீர் ஒழுகுகின்றது. அதனைத் துடைக்க அன்னையின் கைகள் பரபரக்கின்றன. “கண்ணே, இங்கேவா, உன் வாயைத் துடைத்து விடுகிறேன்,” என ஆசையாக அழைக்கிறாள்.

“சுரந்து வடியும் கடைவாய்நீர் துடைக்க வருக வருகவே.” இங்கு அருவருப்பிற்கே இடமில்லை. இந்த எச்சில்நீர் அவளுக்கு அமுதம் போன்றதல்லவா?

முருகனைத் தாயாக ஈன்றவள் கங்கை; சிவபிரானின் முகத்தின் ஆறுபொறிகளினின்றும் தோன்றிய அறுமுகனை, அக்கினிதேவன் கொண்டுசேர்க்க, அவற்றின் உக்கிரத்தைத் தாயாகப் பொறுத்து, சரவணப் பொய்கையில் ஆறு குழவிகளைக் கொண்டு சேர்த்த முதல் அன்னை கங்கையல்லவா? அதனால்தான், “தாயாய் ஈன்ற கங்கையின் நல்ல நீரில் நீராட்டுகிறேன், வா அப்பா,” என அழைக்கிறாளாம் இந்தத்தாய்.

“ஆயாய் ஈன்ற கங்கைநன்னீர் ஆட்ட வருக வருகவே.”

am1
சிறுகுழந்தைகளின் கையொரு அழகு, கண்ணொரு அழகு, முகமோர் அழகு, பாதமும் ஒரு அழகு அல்லவோ? குழந்தையை உடலோடு அணைத்துப் புல்கும்போது, அந்தப்பூப்போன்ற தாமரைப்பிஞ்சுப் பட்டுப் பாதத்தினை மட்டுமாவது கண்ணோடு எடுத்து அணைத்துக் கொள்ளவேண்டும் (கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும்) எனும் ஆசை பிறக்கும் அல்லவா? அதைத்தான் சொற்களில் வடிக்கிறார் இங்கு!

“அருமைப் பதம்என் கண்ணிலெடுத் தணைக்க வருக வருகவே.”

 அடுத்து முலைப்பால் அருத்துவிப்பதனைக் கூறுகிறார். “தடைப்படாது பெருகும் முலைப்பாலை அருந்த வருக,” எனும்போது, அது எப்போதும் தங்குதடையின்றி மகவிற்குக் கிடைக்கும் அமுதம் என்று பொருள் கொள்ளவேண்டும்.

“வீயாதொழுகும் திருமுலைப்பால் மிசைய வருக வருகவே.” அருமைக்குழந்தையை நினைக்கும்போதே அவளிடம் பால் பெருகி வழியுமே!

“வீணையின் நாதம் தெவிட்டும்; நீ கூறும் மழலைமொழி கேட்கக்கேட்கத் திகட்டாது; ஆகவே அதனைத் தொடர்ந்து என்னிடம் பேசவேண்டி ஓடோடி வருவாயாக. மேலும் அந்த மழலைபேசும் வாயால் எனக்கு அழுத்தமான ஒரு முத்தத்தினைத்தர வேண்டும் (ஆணிமுத்தம்);

“வீணை தெவிட்ட மழலைமொழி விள்ள வருக வருகவே.
வாயால் எனக்கோர் ஆணிமுத்தம் வழங்க வருக வருகவே.”

“இதற்காகவெல்லாம் நீ என்னிடம் வரவேண்டும் அப்பா! அருள்தருவதும், நிலையானதுமான திருமலை மீது உறையும் முருகனல்லவோ நீ! குழந்தாய்! வருவாயாக,” என அன்னைபோன்று வேண்டி நிற்கிறார்.

தோயாத் துகிலும் அரைவடமும்
சுற்ற வருக வருகவே
சுரந்து வடியும் கடைவாய்நீர்
துடைக்க வருக வருகவே
ஆயாய் ஈன்ற கங்கைநன்னீர்
ஆட்ட வருக வருகவே
அருமைப் பதம்என் கண்ணிலெடுத்
தணைக்க வருக வருகவே.
வீயாதொழுகும் திருமுலைப்பால்
மிசைய வருக வருகவே
வீணை தெவிட்ட மழலைமொழி
விள்ள வருக வருகவே.
வாயால் எனக்கோ ராணிமுத்தம்
வழங்க வருக வருகவே
வரதச் சரதத் திருமலையின்
மழலைக் குழவி வருகவே.

(திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்- வாரானைப்பருவம்- செங்கோட்டை கவிராச பண்டாரத்தையா)

am2
தளர்நடை பயிலும் குழந்தையை இன்னும் ஓடியாடுமாறு ஊக்குவிக்க அழகான சிறுதேர் ஒன்றினைச் செய்வித்து, அலங்கரித்து, பட்டுக் கயிற்றினை அதில்கட்டி, அதனை இழுத்தோடச் செய்வார்கள் அன்னைமார். குழந்தை முருகனின் அன்னையரும் இதற்கு விலக்கல்லவே! அன்னைகொடுத்த அழகுச் சிறுதேரை உருட்டிவருகிறான் அக்குமரன். பார்க்கும் கண்கள் பரவசத்தில் களிக்க, உள்ளம் பூரிக்க, வாயிலிருந்து வாழ்த்துக்கள் பிறந்து சொரிகின்றன.

‘மங்கலம் நிறைந்த மடமைபொருந்திய பிடியாகிய தெய்வயானை இடப்புறமும், குறவர்மகளான கொடிபோன்ற வள்ளியம்மை மற்றொரு பக்கத்திலும் இருந்து சீர்பெற்று வாழ்க!’

‘மங்கல மடப்பிடி குறக்கொடி இடத்தினும்
வலத்தினும் இருந்துவாழ்க.’

‘நீ ஊர்ந்துசெல்லும் மாமயிலானது வாழ்க!’ அதன் மேல் முருகன் அமர்ந்துள்ளான். அவனது நூபுரமணிந்த திருவடிகள் அழகுற இலங்க அவையும் வாழ்க!’

‘மாமயிலும் வாழ்கஅதன் மேலிலகு நூபுரம்

வனைந்தசே வடியும்வாழ்க.’

‘அற்புதமான ஒளிபொங்கிடும்வண்ணம் விளங்கும் திருவாபரணமான முப்புரிநூலினைப் புனைந்து சிறக்கின்ற உனது திருமார்பு வாழ்க!’

‘பொங்கொளி தயங்குதிரு ஆபரண முந்நூல்
புனைந்திடுபொன் மார்பும்வாழ்க.’

‘எப்போதும் அன்பர்களைக் காப்பதற்காகப் போர்செய்யத் தயாராக இருக்கும் கூர்வேலும் உந்தன் ஈராறு பன்னிரண்டு திருக்கைகளும் பன்னிரண்டு திரண்ட அழகான தோள்களும் வாழ்க!’

‘போர்வேலும் ஈராறு செங்கையும் பன்னிரு
புயங்கள்சுந் தரமும்வாழ்க.’

‘கருணைபொழிகின்ற கண்கள் ஆறிரண்டு பனிரெண்டும் அழகான ஆறு திருமுகங்களின் அருளும் வாழ்க.’ இங்கு ஒன்றினை நோக்க வேண்டும். ஆறுமுகத்தழகு எனாமல் அருள் என்கின்றார். முகத்தின் அழகு பொலிவது அது பொழியும் அருளினால்தான். ஆகவேதான் அருள் வாழ்க என வாழ்த்தினார்.

‘தங்குகரு ணைக்கண்கள் ஆறிரண் டுந்திருச்
சண்முகத் தருளும்வாழ்க.’

‘காதுகளில் தொங்கித் தாழ்ந்தாடும் குழைகள் முந்நான்கு பன்னிரண்டாம்! அவற்றுடன் பவளவாய் ஆறும் சேர, சிரத்தில் பொருந்தும் திருமகுடமும் இனிது வாழ்க,’ என்கிறார். இங்கு ‘மகுடம் வாழ்க’ எனில் அம்மகுடத்தைப் புனைந்த தலைவன் எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும்!

‘தாழ்குழைமுந் நான்கினொடு பவளவா யாறுடன்
நடமகுட மினிதுவாழ்க.’

‘நீ ஆளும் திருநாட்டில் மாதந்தோறும் மும்மாரி பொழிந்து பயிர்கள் செழித்து உயிர்கள் மகிழட்டும். உனது கொடியில் பொலியும் சேவல் வாழ்க! இவ்வாறு அனைத்தும் வாழ நீ சிறுதேரினை உருட்டுவாயாக! சிவஞானம் எனும் முத்தியைத் தருபவன் நீயே! ஆறுமுகன் சிவனின் வடிவமேயல்லவா? அதனால் சிவபிரானைப்போன்றே முத்தியையும் அளிக்க வல்லவன் என்கிறார். திருமாமலையில் உறையும் குமரனே நீ சிறுதேரினை உருட்டியருளுக!’

‘திங்கண்மும் மாரிபொழி யச்சேவல் வாழ்கநீ
சிறுதேர் உருட்டியருளே.
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே.’

இவ்வாறெல்லாம் வாழ்த்தி தாயின் நிலையில் நின்று திருமலை முருகனைச் சிறுதேருருட்ட வேண்டுகிறார் புலவர்.

மங்கல மடப்பிடி குறக்கொடி இடத்தினும்
வலத்தினும் இருந்துவாழ்க
மாமயிலும் வாழ்கஅதன் மேலிலகு நூபுரம்
வனைந்தசே வடியும்வாழ்க
பொங்கொளி தயங்குதிரு ஆபரண முந்நூல்
புனைந்திடுபொன் மார்பும்வாழ்க
போர்வேலும் ஈராறு செங்கையும் பன்னிரு
புயங்கள்சுந் தரமும்வாழ்க
தங்குகரு ணைக்கண்கள் ஆறிரண் டுந்திருச்
சண்முகத் தருளும்வாழ்க
தாழ்குழைமுந் நான்கினொடு பவளவா யாறுடன்
நடமகுட மினிதுவாழ்க
திங்கண்மும் மாரிபொழி யச்சேவல் வாழ்கநீ
சிறுதேர் உருட்டியருளே.
சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
சிறுதேர் உருட்டியருளே.

(திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்- சிறுதேர்ப்பருவம்- செங்கோட்டை கவிராச பண்டாரத்தையா)

ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் பாடிய புலவரின் கற்பனை, கண்ணோட்டத்திற்கேற்பவும், அவருடைய பக்திப்பெருக்கின் விளக்கமாகவும், அன்பின் வெளிப்பாடாகவும் அமைந்து பயில்வோருக்கு பேரானந்தத்தினை விளைவிக்கின்றது. அதனால்தானோ என்னவோ, முருகன் மேலும் பார்வதி அன்னைமீதும் பலப்பல பிள்ளைத்தமிழ்கள் (வெவ்வேறு தலங்களுக்கானவை) இயற்றப்பட்டபோதும், அவை சொற்சுவை, பொருட்சுவை, கற்பனைவளம் சிறந்து விளங்குவதனால் புதுமைகுன்றாது விளங்குகின்றன. இதுவும் இறையருள் வெளிப்பாடே எனலாம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *