( எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … .அவுஸ்திரேலியா )

மடிமீது நான்கிடக்க
மலர்ந்தவிழி தனைப்பார்த்து
குடிமுழுதும் காக்கவந்த
குலசாமி எனவழைத்து
விரல்சூப்பும் எனைரசித்து
வேதனைகள் தனைமறக்கும்
எனதருமை அம்மாதான்
எப்போதும் என்தெய்வம் !

என்கண்ணில் நீர்கண்டால்
ஏங்கியவள் தவித்திடுவாள்
என்சிரிப்பைப் பார்த்தவுடன்
எல்லாமே மறந்திடுவாள்
என்எச்சில் தனையவளும்
இன்னமுது எனநினைப்பாள்
எப்படிநான் துப்பிடினும்
இருகரத்தால் ஏந்திநிற்பாள் !

பிடிவாதம் பிடித்தாலும்
பெருங்குறும்பு செய்தாலும்
கடிகின்ற உணர்வகற்றி
கருணையுடன் எனைவணைப்பாள்
அடியுதைகள் நான்கொடுக்க
அவள்மடியைத் தந்துநிற்கும்
அன்புநிறை அம்மாவே
அவனிதனில் என்தெய்வம் !

கோவிலுக்குச் சென்றாலும்
குலதெய்வம் பார்த்தாலும்
சாமியென அம்மாதான்
சன்னதியில் தெரிகின்றாள்
தூய்மைநிறை மனமுடையாள்
துன்பமெலாம் தாங்கிடுவாள்
வாய்மைநிறை அம்மாவை
வணங்குகின்றேன் மகிழ்வுடனே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *