-மலர் சபா

மதுரைக் காண்டம்கட்டுரைக் காதை

மதுராபதித் தெய்வம் கண்ணகியின் பின்புறம் தோன்றிப் பேசுதல்

சடையில் இளம்பிறை நிலவைத்
தாங்கிய தலை உடையவள்;
குவளை மலரைப் போன்ற
மைதீட்டிய கண்கள் உடையவள்;      madurapathi
வெள்ளிய ஒளிபொருந்திய
முத்தைப் போன்ற முகம் உடையவள்;
கடைப்பல் வெளியே தோன்றும்
பவளம் போன்ற சிவந்த வாய் உடையவள்;
அந்த வாயினில் நிலவினைப் போல் ஒளிரும்
முத்துப்பல் வரிசை உடையவள்;

இடப்பாகம் இருளைப்போல் நீலநிறம் என்றாலும்
வலப்பாகம் தங்கம் போன்று ஒளிரும் மேனியுடையாள்;
இடக்கையில் பொன்னிறமான தாமரையையும்
வலக்கையில் கொடிய வாளையும் தாங்கியவள்;
வலக்காலில் வீரமான கழலும்
இடக்காலில் சிலம்பும் பூண்டவள்;
இத்தகைய தோற்றம் கொண்டவள்
மதுராபதித் தெய்வம்.

அந்தத் தெய்வம்,
சிறந்த முத்து மற்றும் துறையையுடைய
கொற்கை நகரத் தலைவனும்,
குமரியாற்றுத் துறையை உடையவனும்,
இமயமலையைத் தம் ஆட்சியின்
வடக்கு எல்லையாக உடையவனும்,
பொதிய மலையை உடையவனும் ஆகிய
பாண்டியர் குலம் தோன்றியது முதல்
அக்குடியைக் காத்து வருகின்றாள்.

அத்தெய்வம் இந்த நேரம்
அக்குடிக்கு நேர்ந்த துன்பம் கண்டு வருந்தினாள்;
வருந்திய அவள்,
இடதுமுலை திருகி மதுரையை எரியூட்டிக்
கணவனை இழந்த துன்பத்தோடு
மனம் பேதலித்துத் தடுமாறி நடந்த கண்ணகியை
நேர்எதிரே சந்திக்க அஞ்சி,
கண்ணகியின் பின்புறம் வந்து,
“பெண்ணே!
என் குறையைச் சற்றுக் கேள்”
எனக்கூறி நின்றனள்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *