க. பாலசுப்பிரமணியன்

கற்றலும் மழலையர் பள்ளிகளும்

education-2-1-1-1

மழலைப் பருவம் என்பது நேரடியான புத்தகம் அல்லது குறிக்கோள்கள்,  நோக்கங்கள் சார்ந்த கற்றலுக்கு ஏதுவான பருவம் அல்ல. மழலையர் பருவ, உடல், மன, அறிவு வளர்ச்சியைப் பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிகள் இந்தக் கருத்தை நிலைநிறுத்துகின்றன. இந்தப் பருவத்தில் மூளையின் வளர்ச்சி அபரிமிதமாக ஏற்படுவதாகவும் கற்றலுக்கான அதிகப்படியான தாகத்தை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கற்றலின் போக்கு ஒருமுகமாக இருப்பதில்லை. ஆர்வமும் தேடலும் பன்முகப் பாங்காக உள்ளன. அவர்களின் கவனத்தின் கணிப்புகள், கால அவகாசங்கள், பரிமாணங்கள் அதிவேகத்தில் மாறுவதால் மூளையும் உணர்வுகளும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதில்லை. எனவே, அவர்களின் கற்றல் அதற்கு உகந்தாற்போல் அவர்களுடைய பன்முனைத் தேடல்களுக்குத் தேவையான உணர்வுசார்ந்த, அறிவுசார்ந்த உள்ளீட்டுகளை அளிப்பதாக இருத்தல் அவசியம்.

இதனைக் கருத்தில் கொண்டு கல்வி மற்றும் மனநல ஆராய்ச்சியாளர்கள் மழலையர்களுக்குத் திட்டமிட்ட கல்வி முறையை தருவதை விரும்புவதில்லை. அது அவர்களுடைய கற்றலின் இயல்புகளுக்கு மாறாக அமைவதாகக் கருதுகின்றனர். எனவே அவர்களுக்குத் தன்னிச்சையான விளையாட்டு சார்ந்த கற்றலுக்கு ஏதுவான சூழ்நிலைகளை ஏற்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

பொதுவாக மழலையர் பள்ளிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் இந்தக் கருத்தை ஆரோக்கியமான முறையில் நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. பல இடங்களில் மழலையர் பள்ளிகளின் இருப்புச் சூழ்நிலைகள் மோசமானதாக மட்டுமின்றி கவலைக்குரியதாகவும் அமைகின்றன. அவைகளை வெறும் குழந்தைப் பாதுகாப்பகங்களாகக் கருதுகின்றனர்

மழலையர் பள்ளிகளில் நடப்பு முறையில் காணப்படும் சில குறைகள்:

  1. இவைகள் பொதுவாக வீட்டின் ஒரு பகுதியிலோ அல்லது சில பகுதிகளிலோ அமைக்கப்படுவதால் அவை மழலையர்களின் கற்றலுக்கோ மனவளர்ச்சிக்கோ உகந்ததாக இருப்பதில்லை.
  2. பல இடங்களில் காற்று வெளிச்சம் ஆகியவை போதுமானதாக இருப்பதில்லை. இவைகள் மழலையர்களின் உடல் மனவளர்ச்சிக்கு தவறான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
  3. பல இடங்களில் சிறிய அறைகளில் அதிகமான மழலையர்களை வைத்திருப்பதால் அவர்கள் செயற்பாட்டிற்கான இடங்கள் கிடைப்பதில்லை. பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதற்கான சூழ்நிலை ஏற்படுகின்றது.
  4. பல இடங்களில் பயிற்சிபெற்ற மேற்பார்வையாளர்களோ அல்லது ஆசிரியர்களோ இருப்பதில்லை. ஆகவே மழலையர் மனவளர்ச்சி பற்றி அறியாது பள்ளிகள் “காப்பகங்களாகவோ” அல்லது நேரத்தை போக்குவதற்கான சில விளையாட்டு மைதானங்களாகவோ ஆகிவிடுகின்றன.
  5. மழலையர்களுக்கு கற்றலுக்கு ஏதுவான மொழி “தாய்மொழியே” என ஆராய்ச்சிகள் சொன்னாலும், பெற்றோர்களின் விருப்பங்களுக்காகவும், வியாபார மேன்மைக்காகவும் பிறமொழிசார்ந்த கல்வியில் கற்றலுக்கான சூழ்நிலை ஏற்படுத்தப்படுகின்றது. இது மழலையர்களுக்கு ஒருங்கிணைத்த உடல் மனவளர்ச்சிக்கு ஏதுவாக அமைவதில்லை. ஆயினும், சமுதாயப் போக்கில் நீந்திச்செல்லும் பெற்றோர்கள் பிறமொழிக் கல்விக்கு அதிகமாக வழிமொழிகின்றனர்.
  6. மழலையர்களுக்கு விளையாட்டு முறைகளில் கற்றலுக்கு உகந்த பாதுகாப்பான ஆர்வத்தைத் தூண்டுகின்ற பொருள்களும் பொம்மைகளும் உபகரணங்களும் இருப்பதில்லை.
  7. மழலையர்களின் மனநிலைகளுக்குத் தனிச்சுதந்திரம் இன்றி கட்டுப்பாடான சூழ்நிலைகளில் விதிக்கப்பட்ட முறைகளைப் பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் மன அழுத்தம் அமைந்த சூழ்நிலைகளில் வளர்கின்றனர்.

பொதுவாக சில மழலையர் காப்பகங்களில் (Day-Care Center /Creche ) குழந்தைகளை தூங்கவைப்பதற்காக சில இருமல் மருந்துகளை உபயோகிப்பதாகவும் பல மாதங்கள் முன்பு செய்திகள் வந்தன. இந்த நிகழ்வுகளுக்குக் காரணம் இந்த மாதிரியான நிலையங்களை சட்ட ரீதியாக ஒழுங்கு படுத்தாததுதான். இம்மாதிரியான காப்பகங்களை மருத்துவ மேற்பார்வைக்கான வசதிகள், சுகாதாரத் தரங்களுக்கான மேற்பார்வைகள் மற்றும் நல்ல முறையில் வழிநடத்துவதற்கான குறிப்பேடுகள் ஆகியவை இருத்தல் அவசியம். மழலைப் பருவத்தின் வளர்ச்சி பல நேரங்களில் வாழ்க்கை முழுவதற்கும் தேவையான நிரந்தரமான உணர்வுப் பதிவேடுகளை மூளையில் பதிப்பதால் இந்த பருவத்தை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் கையாளுதல் அவசியம். கற்றல் என்பது வெறும் புத்தக அறிவு மட்டும் அல்ல. உணர்வுகளின் தாக்கங்கள் உள்மனதில் ஏற்படுத்தும் பதிவுகளும் வாழ்க்கை வாழ்வதற்கான கற்றலே ஆகும். ஆகவேதான் இந்தப் பள்ளிகளில் ஆக்கப்பூர்வமான (positive atmosphere)  சூழ்நிலைகளை உருவாக்குதலும் காத்தலும் மேம்படுத்துதலும் அவசியம்.

சிறுவயதில் பள்ளிகளிலோ அல்லது வீடுகளிலோ ஏற்படும் சிறிய உணர்வுத் தாக்கங்கள்கூட அவர்களுடைய பிற்கால வாழ்க்கைப் போக்கையும் திசையையும் மாற்றி அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக மனநல மருத்துவர்கள் கருதுகின்றனர். ஆகவே இந்தப் பள்ளிகளிலும் காப்பகங்களிலும் தாய்மை உணர்வோடு கூடிய தொழில் திறன்களால் வலுப்படுத்தப்பட்ட, சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்ட, மன – உடல் நலன்களைப் பேணக்கூடிய சூழ்நிலைகளை அமைத்தலும் போற்றுதலும் அவசியமாகின்றது. இந்த நிலையில் மழலையர் என்ன கற்க வேணும் எவ்வாறு கற்கவேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *