க. பாலசுப்பிரமணியன்

மழலையர்களும் கற்றலும்

education

மழலையர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பது பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் உலகின் பல நாடுகளில் செய்யப்பட்டுள்ளன. இதைப் பற்றிய ஆராய்ச்சிகளின் ஒட்டுமொத்தமான கருத்து என்னவெனில் –

1.மழலையர்களின் கற்றல் ஒருமுகமானதாகவோ அல்லது ஒருமுனைப்பட்டதாகவோ இருப்பதில்லை.

  1. மழலையர்களின் கவனயீர்ப்புக்களின் நேரம் மிகக்குறைவு.
  2. மழலையர்களின் அறிவுத்தேடல் அபரிமிதமானது.
  3. சுற்றுச்சூழலின் பல்முனை ஈர்ப்புக்கள் தேடலையும் கற்றலையும் அதிகமாக பாதிக்கின்றது.
  4. வண்ணங்கள், ஒலிகள், ஒளிப்பரிமாணங்கள், அளவுப்பரிமாணங்கள் ஆகியவை கவனத்தையும் தேடலையும் அதிகப்படுத்துவது மட்டுமின்றி ஆர்வப்படுத்துகின்றன.
  5. தேடலிலும், கற்றலிலும் உணர்வுபூர்வமான, செயல்சார்ந்த கற்றல் வகைகள் அதிகம் ஈர்க்கப்படுகின்றன.
  6. மாறும் வெப்பச்சூழ்நிலைகள், பசி, தாகம், தூக்கம், உறவுகளின் தாக்கங்கள் ஆகியவை கற்றலின் நேரத்தையும், தாக்கத்தையும் பாதிக்கின்றன.
  7. பயமான, மனஅழுத்தங்களை உடைய சூழ்நிலைகளில் கற்றல் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமல் போகவோ வாய்ப்புக்கள் அதிகம்.
  8. விளையாட்டான போக்கில் கற்றலின் ஆர்வமும் தாக்கமும் அதிகமாக இருப்பது மட்டுமின்றி, வளர்கின்றது.
  9. கற்றலின் பரிமாணங்கள் சிறிய அளவிலும் கால அவகாசங்களுக்கு இடையிலும் மாறவும் மற்றும் தொடரவும் வாய்ப்புக்கள் உள்ளன.

இந்த கருத்துக்களை வலுப்படுத்தும் வகையிலும் அதனை முன்னிறுத்தியும் கல்வி முறைகள் வழிவகுக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் பல சிறிய வியாபார நோக்கத்தில் நடத்தப்படும் பள்ளிகளில் மேற்கொண்ட எந்தக்கருத்தும் முன்னிலை படுத்தப்படுவதில்லை. அவை குழந்தைகளின் காப்பகங்களாக மட்டும் இருப்பது மட்டுமின்றி, உடல்- மன நலன்களை பேணும் கல்வியாக இருப்பதில்லை. பல இடங்களில் வேலைகளில் அமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு இதை பற்றிய போதுமான அறிவோ அல்லது இதனைச் சார்ந்த கற்பித்தல் திறனோ இருப்பதில்லை.

பொதுவாக மழலைகளின் கற்றலில் ஒளி. ஒலி மற்றும் செயல்களின் தாக்கங்கள் அதிகமாக இருப்பதால் – பார்வைகள், கேட்டல் மற்றும் உணர்வு சார்ந்த செயல்களால் கற்றல் அதிகமாக நிகழ்வது மட்டுமின்றி உணர்வு சார்ந்த கற்றலாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

வண்ணங்கள், பெரியது- சிறியது போன்ற மாற்றத் தோற்றங்கள், நீண்டது – குறுகியது போன்ற அமைப்புக்கள், வளைவுகள், வட்டம்-சதுரம் போன்ற பரிமாண மாற்றங்கள் பார்வைகளால் ஈர்க்கப்பட்டு தேடலை ஊக்குவிக்கின்றது.

அதேபோல் இசை, அதிர்வுகள், ஒலிகளின் மாறும் போக்குகள், ஒலிப்படுத்தும் பொருள்கள், இசைக்கருவிகள், பேசும் முறைகள் ஆகியவை கற்றலை வளர்ப்பதுமட்டுமின்றி அதன் பரிமாணங்களை பாதிக்கின்றன.

அதேபோல் விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டு முறைகள், ஆட்டங்கள், உடலின் செயல் சார்ந்த ஈடுப்பாடுகள் ஆகியவை கற்றலை பாதிக்கின்றன.

ஒரு தவழும் குழந்தை விளையாடும் போக்கை சற்றே உன்னிப்பாகவும கவனமாகவும் பார்த்தால் முதலில் குழந்தை அருகிலுள்ள ஒரு விளையாட்டு பொருளைத்  தேடும் பொழுது வண்ணங்கள் மிக்க பொருளைத் தேடுவதோ அல்லது, பெரிய பொருட்களால் ஈர்க்கப்படுவதோ சாதாரண நிகழ்வு. அந்தப்பொருளை நோக்கி நகரும் அந்தக் குழந்தை அடுத்து அதனை நகர்த்தியோ அல்லது அசைத்தோ வரும் ஒலிகளில் கவனம் செலுத்துகின்றது. சிறிது நேரத்தில் அந்தப்பொருளை வாயினில் வைத்து விளையாடுகின்றது. இத்தனை போக்குகளும் அதன் மூளையினாலும் உள்மனதினாலும் உந்தப்பட்டு நடக்கும் செயல்களே.

ஆகவேதான்,மழலையர் பள்ளிகளில் இந்த மூன்றையும் இணைப்படுத்தியோ தேவைக்கும் நேரத்திற்கும் உகந்தாற்போல் முன்னிலைப்படுத்தியோ கற்றல்களுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தல் அவசியமாகின்றது.

கற்றலின் முக்கியமான அம்சம் – புரிதல். கற்றுக்கொள்கின்ற மாணவனுக்கு சொல்லப்படுகின்ற, பார்க்கப்படுகின்ற அல்லது செயல்படுத்தப்படுகின்ற கற்றலின் பொருள் புரியாதவரை கற்றல் நிறைவுபடுவதில்லை. இது சிறப்பாவதற்கு மொழி மிகத்தேவையானது. இதனால்தான் கற்றலின் முதல் தேடல்கள் தாய்மொழியில் மட்டும் இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. பொதுவாக, ஆராய்ச்சியின்படி மனித மூளையின் வளர்ச்சியின் முதல் சில ஆண்டுகளில் மூன்று அல்லது நான்கு மொழிகள் கற்றுக்கொள்வதற்கான வாப்புக்கள் அதிகம் இருந்தாலும், தாய்மொழியில் கற்றல் ஏற்படும்பொழுது அதன் தரமும் வலுவும் சிறப்பாக உள்ளதாக ஆரய்ச்சிகள் கூறுகின்றன. மற்றும் கற்றலின் பொது மூளையுடன் உடலின் பல உறுப்புக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்த ஒருங்கிணைப்பின் தாக்கத்தினால் கற்றலின் பரிமாணங்களும், திசைகளும் வழிகளும் அவ்வப்போது மாறுபடுகின்றன. பொதுவாக மழலைப் பருவத்தில் இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பை கீழ்கண்டவாறு வகைப்படுத்துவர்:

  1. கண் – மனம் ஒருங்கிணைப்பு (eye-mind coordination)
  2. செவி- மனம் ஒருங்கிணைப்பு (Ear-mind coordination)
  3. செயல்(கை) -மனம் ஒருங்கிணைப்பு (Hand- mind coordination)
  4. கண்-செவி ஒருங்கிணைப்பு’ (Eye-Ear coordination)
  5. கண் -செயல் (கை) ஒருங்கிணைப்பு (Eye-hand coordination)
  6. செவி-செயல் ஒருங்கிணைப்பு (Ear-hand coordination)
  7. கண்-கண் ஒருங்கிணைப்பு (Eye-Eye coordination)

இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த கற்றலினால் வாழ்க்கைமுறையில் செயல்களும் திறன்களும் ஒருங்கிணைந்ததாகவும், திறன்படைத்ததாகவும் நேர-கால பரிமாணங்களை மேன்மைப்படுத்துவதாகவும் அமைகின்றன..

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *