கவிஞர் ஜவஹர்லால்

 

பிணைந்தார் நெஞ்சம் பிரிக்கவென்றே
பிறந்த கானல் வரிகேட்டும்
இணைந்தா ருள்ளம் நெருப்பாகி
இரண்டாய்ப் போன நிலைகண்டும்
இணைந்தார் வாழ்வில் திருப்புமுனை
இயக்கும் விதியின் செயல்கண்டும்
கனத்த இதயத் துடன்தானா
கிடந்தாய் வாழி காவேரி!

மனத்தில் இன்பப் பூப்பூக்க
மணக்கும் தமிழின் இசைப்பாட்டே
நினைக்கா வகையில் பிரிவினையை
நிகழ்த்தி வைத்த நிலைகண்டே
இனிக்கும் இசையே இவர்வாழ்வில்
இசையா இசையாய்ப் போனதென்ற
நினைப்பில் தானா முடங்கிப்போய்க்
கிடந்தாய் வாழி காவேரி!

தவித்த வாய்க்குத் தண்ணீரைத்
தரவே மறுக்கும் பிறந்தஇடம்
தவித்து நொந்து தாகத்தில்
தினமும் அலறும் புகுந்தஇடம்
புவிக்குள் இதுபோல் பெண்ணுக்குப்
போராட் டம்தான் வரலாமா?
கவிழ்ந்த நெஞ்சத் துடன்தானா
கிடந்தாய் வாழி காவேரி!

நதிநீர் அளிக்க மனமில்லை;
நடப்பில் ஒருமைப் பாடென்பார்.
நதியின் வறட்சி தானிந்த
நாட்டின் வறட்சி அறியாரா?
நதியின் நீரில் அரசியலை
நடத்தும் கொடுமை தனைக்கண்டோ
கதிவே றின்றி உளங்காய்ந்து
கிடந்தாய் வாழி காவேரி!

சைத்தான் வேதம் முழங்கிநிற்கச்
சரித்தான் என்றே பண்டிதர்கள்
கைத்தா ளத்தைப் போட்டுநிற்கக்
கண்முன் காட்சி பொய்யென்றே
சைத்தான் கூத்தும் ஆடிநிற்கச்
சகித்து நாடு பொறுத்திருக்கச்
செத்தாற் போதும் என்றாநீ
கிடந்தாய் வாழி காவேரி!

காக்கை கோட்டான் இசைபாடக்
கழுகும் பேயும் நடமாடக்
கூக்கூ என்றே குரலெழுப்பிக்
கூட்டாய்ச் சிலவே ஓலமிடச்
சேர்க்கை ஒவ்வாக் கூட்டணிகள்
சிரிப்பாய்ச் சிரிக்க இங்காரும்
கேட்கா இசையைக் கேட்டாநீ
கிடந்தாய் வாழி காவேரி!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *