நிர்மலா ராகவன்

யாவரும் வெல்லலாம்

நலம்-2-1-1-1
`நான் ஒரு சோம்பேறி!’

“எனக்கு சுறுப்பே கிடையாது. எந்தக் காரியத்தையும் ஒத்திப்போட்டுவிடுவேன்!”
நம் பலவீனங்களை நாமே வெளிப்படையாகச் சொல்லாவிட்டால், பார்த்தவுடனேயே பிறருக்குத் தெரியவா போகிறது! அடக்கம் என்று (தவறாக) எண்ணுவதால் வரும் வினை இது.

உண்மையில், இவ்வாறான நடத்தை ஒருவரது தாழ்வு மனப்பான்மையைத்தான் குறிக்கும்.

நீண்ட கதை

தன்னை ஒரு பயந்தாங்கொள்ளி என்று வாய்க்குவாய் சொல்லிக்கொண்ட எனது சக ஆசிரியை, மேரி, அப்படியில்லாத என்னை எப்போதும் வலுச்சண்டைக்கு இழுக்க, நான் அவளுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டேன்.

ஒரு நாள், பாவமன்னிப்புபோல மேரி என்னிடம் அவளுடைய தாயைப்பற்றிக் கூறினாள். ”எங்கம்மா சொல்றதைத்தான் நான் கேட்டாகணும். வீட்டிலே எல்லார்மேலேயும் ரொம்ப அதிகாரம் செலுத்துவாள். அப்பாவும் அம்மாவை எதிர்த்து ஒன்றும் கூறமாட்டார்!” இதைச் சொல்லி முடிப்பதற்குள் படபடப்பு அதிகரிக்க, பல்லிடுக்கில் விரலை வைத்து அழுத்தினாள்.

பல குழந்தைகள் இருக்கும் இல்லத்தில், அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை மனைவியிடமே விட்டுவிடுவார்கள் சில ஆண்கள். அப்போது ஒரு தாய் கொஞ்சம் கெடுபிடியாகத்தான் இருக்க நேரிடும். இல்லாவிட்டால் எல்லாரையும் எப்படி கட்டி மேய்க்க முடியும்?

சில குழந்தைகள் தைரியமாக அப்போக்கை எதிர்ப்பார்கள், இல்லாவிட்டால் அலட்சியம் செய்து தம் போக்கில் நடப்பார்கள். இவர்களுக்குத் தண்டனையோ, திட்டோ ஒரு பொருட்டல்ல.

மேரியைப்போன்ற சிலர் பயந்துபோய், `எனக்கு அம்மாவை எதிர்க்கத் தைரியம் இல்லையே!’ என்று தமக்குள் குமைந்து, சுயவெறுப்பை வளர்த்துக்கொள்வார்கள். அம்மாவைப்போல் இருப்பதாகத் தாம் நினைக்கும் பிற பெண்களை வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படித்தான் நான் மாட்டிக்கொண்டேன். இதை Transference என்கிறார்கள் மனோதத்துவத்தில்.

நான் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது, குறுக்கே புகுந்து மேரி சண்டைபோட்டதன் காரணம் புரிய, அவள்மீது எனக்குப் பரிதாபம் ஏற்படவில்லை.

குழந்தைப்பருவத்தில் எத்தனையோ இடர்கள். அவைகளைச் சமாளிக்கத் தெரியாததால் அப்போது குழப்பமும் வேதனையும் ஏற்பட்டிருக்கலாம். எப்போதோ நடந்தவற்றை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு, தன்னுடன் பிறரையும் வருத்துவானேன்! வயது வந்ததும், அவைகளை அலசி, சமாதானம் அடைந்திருக்கலாமே!

நடந்தது பத்து சதவிகிதமாக இருக்கும். ஆனால், மேரி போன்ற சிலர் அவைகளை நினைத்து, நினைத்து ஆத்திரத்தை வளர்த்துக்கொள்வது மீதி. இப்படிப்பட்ட மனப்போக்கினால், மனம் எளிதாகத் தளர்ந்துவிடும். இந்த தளர்ச்சி பயமாக, அல்லது நாணமாக எல்லாக் காரியங்களிலும் வெளிப்படுவதுதான் சோகம்.

மேரியின் தாழ்மை உணர்வு அவளுடைய கூனலிலும், சாயம்போன பழைய புடவைகளையே உடுத்திவந்து, `ஏன் என்னை மாணவிகள் மதிப்பதில்லை?’ என்ற குழப்பத்திலும் வெளிப்பட்டது. (பட்டதாரி ஆசிரியையான அவளுக்கு பணப்பிரச்னை எதுவுமில்லை).

ஒரு நாள், “என் அக்கா மகள், `இந்தமாதிரிப் புடவைகளையா கட்டிக்கொண்டு வேலைக்குப் போகிறாய்!’ என்று அதிசயப்பட்டுக் கேட்டாள்,” என்று என்னிடம் பேச்சுவாக்கில் சொன்னாள்.

“நான் சொல்லவேண்டாம் என்று பார்த்தேன்!” என்றேன், சிறு சிரிப்புடன்.

“அரதல் பழசா?”

`ஆள் பாதி, ஆடை பாதி’ என்பதுபோல், நம் நடை உடை பாவனைகளை வைத்துத்தான் உலகம் நம்மை எடைபோடுகிறது. நம் மனம் குழம்பியிருக்கும்போது ஆடையிலோ, நிமிர்ந்து நடப்பதிலோ நாம் கவனம் செலுத்தத் தவறிவிட்டுகிறோம். நம்மைக் கவனிப்பதில் நாமே அலட்சியமாக இருந்தால், பிறர் எப்படிக் கவனிப்பார்கள், அல்லது மதிப்பார்கள்?

`ஆம்,’ என்பதுபோல் தலையாட்டிவிட்டு, “இவை உன்னுடைய வார்த்தைகள். நான் சொல்லவில்லை,” என்றேன் அவசரமாக.

அன்றையிலிருந்து புதிய புடவைகளை உடுத்திவந்தாள்.

தாழ்ந்தவர்களா?
`தலித்’ என்றால் என்ன?
`ஒடுக்கப்பட்டவர்கள்,’ என்று எனக்கு விளக்கமளித்தாள் ஒரு தலித்திய பெண் எழுத்தாளர்.

நான் சற்று யோசித்துவிட்டு, “நாடுவிட்டு நாடு செல்பவர்கள் எல்லாருமே தலித்துகள்தாம்,” என்றேன்.

இவர்களைப் பிறர் சரிசமமாக ஏற்பதில்லை. ஊடகங்களிலும், ஏன் பாட புத்தகங்களிலும்கூட தாழ்மையானவர்கள் என்பதுபோல்தான் சித்தரிக்கப்படுகிறார்கள்.

கதை

மலேசிய ஆரம்பப்பள்ளியில், ஆங்கிலப் பாட புத்தகங்களில், `அகமது புத்திசாலி. ஆசிரியர் பாராட்டுகிறார்,’ என்ற ரீதியில் ஆரம்பித்து, சீனர்களுக்கு இரண்டாவது இடம் கொடுத்து, `முத்து முட்டாள், சோம்பேறி,’ என்று எழுதப்பட்டிருந்தது.

என் மகளுக்குச் சொல்லிக் கொடுக்கையில், அவள் ஏன் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல மறுத்தாள் என்பது புரிந்தது.

என் பள்ளியின் சார்பில் பாடத்திட்டத்துறைக்கு (Curriculum Department) அனுப்பப்பட்டிருந்தேன்.

“ஏனோ, இந்திய மாணவர்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள்,” என்று அங்கிருந்த ஓர் அதிகாரி சலிப்புடன் கூறினார்.

“பாட புத்தகங்களில் இப்படித் தாறுமாறாக எழுதியிருந்தால், பின் எப்படி அவர்கள் சுயகௌரவம் வளரும்?” என் குரலிலிருந்த ஆத்திரம் அவரை அதிரவைத்தது.

என்னிடம் வெகுவாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு, “இனிமேல் இப்படி நடக்காது பார்த்துக்கொள்கிறேன்! பதிப்பகங்களுக்குத் தெரிவித்து விடுகிறேன்,” என்று உறுதி அளித்தார்.

அடிக்கடி `நீங்கள் தாழ்மையானவர்கள்!’ என்று பிறர் ஒதுக்கினால், ஒருவர் அதை நம்பத் துவங்கி, தன்னையே மட்டமாக நினைக்க ஆரம்பித்துவிடுகிறார். (அந்த இயலாமை ஆத்திரமாக மாறி, தம் குடும்பத்தினரிடம் பாய்வதும் உண்டு).

தாழ்மை உணர்ச்சி ஏன்?

உயர்கல்வி, செல்வச்செழிப்பு, அல்லது அவர்கள் விரும்பும் ஏதோ ஒரு தன்மை இல்லாதவர்கள் தம்மை மட்டமாக எடைபோட்டுக்கொள்கிறார்கள். தமக்குள் ஏதோ திறமை இருக்கலாம் என்று அவர்கள் நினைத்துப் பார்ப்பதுகூடக் கிடையாது.
சமீபத்தில், “பரதநாட்டியத்தால் என்ன நன்மை?” என்று சில பெண்களிடம் கேட்டேன். அக்கலையில் பதினைந்து வருடங்கள் இடைவிடாது ஈடுபட்டிருந்தார்கள்.
`மன இறுக்கம் கிடையாது,’ என்றாள் அர்ச்சனா.
`Posture! (தோற்றப்பாங்கு)’ என்றாள் சவிதா.
அவளைப் பல காலம், `கூனாதே! தலையில் கனமான புத்தகத்தை வைத்துக்கொண்டு நிமிர்ந்து நட!’ என்று விரட்டியிருக்கிறேன். இருந்தும் அவளால் மாற முடியவில்லை.

விரக்தியுடன், `உனக்கு எவ்வளவுதான் சொல்வது! பிழையில்லாமல் எவ்வளவு அழகாக நீ ஆடினாலும், கூனல்தான் கண்ணுக்குத் தெரிகிறது; அதனால் பாராட்டத் தோன்றவில்லை,’ என்று நான் இறுதியாகக் கூறியபின், சவிதா விழித்துக்கொண்டாள். ஏழ்மை தன் குற்றமில்லை என்று தெளிந்தாள். நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தாள். உடலைப்போலவே தன்னம்பிக்கையும் உயர, கல்வியிலும் உயரமுடிந்தது.

தோல்வியா? ப்பூ!

தோல்வியைக் கண்டு சிரிக்கப் பழகினால், நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள மாட்டோம். பிறரையும் அப்படிச் செய்ய விடமாட்டோம்.

நான் ஏதோ விளையாட்டுப்போட்டியில் கலந்து வெற்றி பெறாதபோது, ஒரு மலாய் ஆசிரியை, “ஐயையே! தோத்துட்டியே!” என்று கேலிசெய்தாள். அவளை எனக்குப் பரிச்சயமில்லை. என்னுடன் முதன்முறையாக அன்றுதான் பேசினாள்.

நான் உடனே, “நானாவது தைரியமாகப் பங்குகொண்டேன். நீ அதுகூடச் செய்யவில்லையே!” என எதிர்த்தேன்.

என் முகம் அவமானத்தில் சுருங்கும் என்று அவள் எதிர்பார்த்தது நடைபெறாததால், அவளுக்கே அது திரும்பியது.

வெற்றி தோல்வியை சமமாகப் பாவித்து நடப்பவர்களின் பலமே அவர்களது துணிச்சல்தான். இதனால் பல புதிய காரியங்களில் ஈடுபடமுடிகிறது. அவர்கள் பல துறைகளில் கொண்ட ஈடுபாடும், அவைகளில் பெறும் வெற்றியும், `இவர்களுக்கு என்ன, ஒரு நாளில் இருபத்து நாலு மணிக்குமேல் இருக்கிறதா!’ என்று பிறரை வியக்கவைக்கும்.

வெற்றியா! எப்படி?

தோல்வியை அஞ்சி ஒரு காரியத்தில் இறங்காதிருப்பது கோழைத்தனம். அதை வெற்றிகரமாக முடிக்க நம்மால் முடியுமா, முடியாதா என்று பின் எப்படி அறிந்துகொள்ள முடியும்? `இது இல்லாவிட்டால் இன்னொன்று!’ என்று வேறொரு காரியத்தில் இறங்கி, நம் திறமையைப் பரீட்சை செய்துகொள்ளலாம்.

எந்த ஒரு காரியம் செய்ய ஆரம்பித்தாலும் அதில் ஆர்வம் காட்டவேண்டும். `இன்னும் எப்படி இதில் சிறப்பது?’ என்று சிந்தித்து, தேவையானால், ஆராய்ச்சியும் செய்யவேண்டும்.

`இந்தக் காரியத்தைச் செய்வதால் என்ன லாபம்?’ என்ற சிந்தனை எழுந்தால் விளைவு எப்படி திருப்திகரமாக இருக்கும்?

`ஏனோ எந்தக் காரியத்திலும் வெற்றி பெற முடியவில்லையே!’ என்ற தளர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும்தான் மிகும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *