நிர்மலா ராகவன்

பொறுமை எதுவரை?

நலம்
ஒரு மலேசியப் பத்திரிகையில் வந்த கேள்வி: `திருமணமான முப்பது வருடங்களில் என்னை என் கணவர் அடிக்காத நாளே கிடையாது! எலும்புகள் நொறுங்கி, மருத்துவச் சிகிச்சைக்கு அடிக்கடி போனதும் உண்டு. இதற்கு நான் என்னதான் செய்வது?’

பதில்: உங்கள் பொறுமைக்கு நல்ல பயன் கிடைக்கும்.

சம்பந்தப்பட்ட பெண்ணைப்போல் என்ன விளைந்தாலும் பொறுமை காத்தவர்கள் முன்பற்களை இழந்து, காலைச் சரியாக ஊன்றமுடியாது நடப்பதைக் கண்டிருக்கிறேன். வதையால் சிலர் இறந்துகூடப் போயிருப்பார்கள்.

`பொறுமை’ என்பது பெண்களின் அணிகலன் என்று தப்பாகச் சொல்லிவைத்துவிட்டார்களோ என்றுதான் தோன்றுகிறது.

பொறுமை என்றால் அறவே யோசிக்காமல் ஒரு நிகழ்வை ஏற்பதாகாது. ஏன் அப்படி நிகழ்கிறது, பொறுத்துக்கொண்டே போனால் இறுதியில் என்ன ஆகிவிடும் என்றெல்லாம் சிந்தித்தால் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது புலனாகும். இதில் ஆண்-பெண் வித்தியாசம் கிடையாது. எவராக இருந்தாலும், அளவுக்கு மீறிய பொறுமையால் பாதிப்புதான்.

கதை

ஒன்றாகப் படித்த, ஆனால் தன்னைவிடச் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற கல்லூரி அழகு ராணி மேகலாவை காதல் கல்யாணம் செய்துகொண்டான் ரகு.

எண்ணற்ற கனவுகளுடன், இந்தியாவிலிருந்து அவனுடன் வெளிநாட்டிற்குப் பயணமானாள் மேகலா.

(பெரும்பாலான ஆண்களுக்குத் தாம் மணக்கப்போகும் பெண்ணைப் பிறரிடம் காட்டி பெருமைப்படலாம் என்ற பேராவல் எழுவது இயற்கை. ஆனால், கல்யாணத்திற்குப் பின்னரோ, தம்மைவிட எந்த விதத்திலாவது அவள் சிறந்திருந்தால் பொறுக்க முடியாது போய்விடுகிறது. எப்படியாவது அவளை அடிபணிய வைக்கவேண்டுமென்று பெருமுயற்சி செய்வார்கள்).

சில வருடங்களுக்குப்பின் அவள் உத்தியோகம் பார்ப்பதற்குத் தடை விதித்த ரகு, அவளுடைய அழகையும், குணத்தையும் பிறர் புகழ்ந்ததைச் சகிக்க முடியாது, அவளைப் பலவாறாக துன்புறுத்தினான். அவளுடைய பொறுமை இருபத்து ஐந்து வருடங்களுக்குமேல் நீடித்தது.

அத்தனை காலம் மேகலா ஏன் விட்டுக்கொடுத்தாள் என்ற கேள்வி எழுகிறது.

மேகலாவின் தந்தை அவளைப்போலவே பரமசாது. அந்த நல்ல மனிதரை பலர் முன்னிலையில் தன் தாய் தலைகுனிவாகப் பேசியதைப் பார்த்து வளர்ந்திருந்த பெண் தானும் அப்படி இருக்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தாள். ஒரு முறை உடல்வதையின் உக்கிரம் தாங்காது, காவல்துறையை அழைக்கத் துணிந்தாள்.

விளைவு: ரகுவின் கைகளுக்கு விலங்கு மாட்டப்பட்டது. ஆத்திரத்துடன் மேகலாவை விவாகரத்து செய்தான் அவன். அப்போதும், `என்னைக் கைவிடாதீர்கள்!’ என்று அவள் கெஞ்சி அழுதாளாம்.

இப்படி ஒரு பொறுமை பெண்களுக்கு அவசியம்தானா?

ஆணைச் சார்ந்திருந்தால்தான் பெண்ணுக்குக் கௌரவம் என்று பொறுத்திருந்தாளோ!

அல்லது, தன்னைப்பற்றிப் பெருமையாக நினைத்திருந்த உறவினர்கள் தன்னைத் தாழ்மையாக நினைத்துவிடக்கூடாதே என்ற பதைப்போ?

மேகலாவிடம் படிப்பிருந்தது. சொந்தக்காலில் நின்றிருக்க முடியும்.

கணவனின் வதையிலிருந்து ஒரு பெண் விடுபட நினைத்தால், அதில் என்ன கேவலம்?

இன்னொரு கதை

அவளும் அவளை மணந்தவரும், இருவருமே, பொறுமை அற்றவர்கள். அவள் அன்பான, செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு வாய்த்தவரோ சிறு வயதில் எந்த ஆசையும் நிறைவேறாது. ஏமாற்றமும் அதனால் விளைந்த ஆத்திரமும் கொண்டு வளர்ந்தவர்.

மனைவியைத் தன் ஆதிக்கத்தில் கொண்டுவர முயற்சித்து, அவள் தனக்குமீறி எதுவும் செய்யக்கூடாது என்பதுபோல் அப்படி ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

`கணவன் சொற்படி நடப்பதே ஒரு பெண்ணுக்குப் பெருமை,’ என்று போதிக்கப்பட்டு வளர்ந்திருந்த அவள் முதலில் பொறுத்துப்போனாள். பிறகு, `ஏன் முன்போல் எதிலுமே வெற்றி பெற முடியவில்லை?’ என்று யோசித்து, வாக்குவாதம் செய்தாள். இருவரும் மோத, சிக்கிமுக்கி கற்களைப்போல் நெருப்பு வளர்ந்தது.

தான் பெற்ற குழந்தைகளுக்கு ஒரு அப்பா வேண்டும் என்று பொறுத்துப்போன அவள், பொறுமையின் எல்லையைக் கடந்தாள்.

யோசித்துப் பார்க்க, சிறு பிராயத்தில் அடைந்த துன்பங்களைக் கணவரால் மறக்க முடியவில்லை, அதனால் அவரைத் தன்னால் மாற்ற முடியாது என்று புரிந்துகொண்டாள். ஆகவே, தான் மாறினாள். அவர் எது சொன்னாலும் வாய்திறவாது கேட்டுவிட்டு, பின் தனக்குச் சரியென்று பட்டதைச் செய்ய ஆரம்பித்தாள். அவள் எதிர்த்து வாயாடாததால், அவருக்கும் சண்டையில் சுவாரசியம் இல்லாது போயிற்று! அவள் போக்கில் விட்டார்.

பொறுமை இல்லையே!

கேக் செய்த கதை

அத்தம்பதிகள் புதிதாக மணந்தவர்கள். எது செய்தாலும் ஒன்றாக இணைந்து செய்வதில் இன்பம் காண விழைந்து, கேக் செய்ய முயற்சித்திருக்கிறர்கள்.

”ஏனோ நாங்கள் எப்போது கேக் செய்தாலும், உதிர்ந்து போகிறது!” என்றார் அந்த மலாய் நண்பர். பக்கத்து வீட்டுக்காரர்.

“சூடு ஆறுவதற்குள் வெட்டியிருப்பீர்கள்!” என்றேன்.

அவர் அசட்டுச்சிரிப்புச் சிரித்தார். “பார்க்க நன்றாக இருந்ததா! எங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை!”

தெருவில் வாகனமோட்டிச் செல்பவர்கள் சிவப்பு விளக்கு பச்சையாக மாறும்வரை பொறுமை இல்லாமல் விரைந்து, எதிர்ப்படும் வாகனத்தில் மோதி உயிர் இழப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

காதுகொடுத்துக் கேள்!

ஒரு மாது என்னிடம் சொன்னாள், “என்னிடம் யாராவது தங்களைப்பற்றிப் பேச வந்தால், `உங்கள் கஷ்டம் எனக்கெதற்கு? என் வாழ்வே சிரிப்பாய் சிரிக்கிறது!’ என்று கத்தரித்து விடுவேன்!” என்று.

தன் கஷ்ட நஷ்டங்களையே சிந்தித்துக் கொண்டிருந்தால் உற்சாகம் குன்றிப்போகாதா! பிறருக்கு நம்மாலான உதவியைச் செய்ய முற்படும்போது மனநிறைவு, தன்னம்பிக்கை எல்லாம் கிடைக்குமே! அத்துடன், பிறர் நம்மைவிடத் துன்பப்படுகிறார்கள் என்று அறியும்போது நிம்மதியும் பிறக்கும்.

கதை வேண்டுமா?

ஒரு சிலரிடம், அவர்கள் கேளாமலேயே, பலரும் தம் கதையைச் சொல்லிக்கொள்வார்கள். பிறர் சொல்வதை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்கவும் பொறுமை அவசியம், அல்லவா?

எழுத்தாளராகவோ, நடிகராகவோ ஆக விருப்பம் இருப்பவர்கள் பிறரை ஆழ்ந்து கவனித்து, முடிந்தால் அவர்கள் கதையையும் அறிந்துகொண்டால்தானே கற்பனை பெருகும்!

பொறுமையற்ற பிள்ளைகள்

பெற்றோரில் ஒருவர் பொறுமையற்றவராக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்களைப் பார்த்தே எதையும் கற்கும் அவர்களது குழந்தைக்கும் அதே தன்மை வரும் சாத்தியம் உண்டு.

மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைக்கும் எல்லாவற்றையும் பொறுமையாக ஏற்கமுடியாது. விதையை மண்ணில் நட்டுவிட்டு, முளைத்துவிட்டதா என்று தினமும் முதல் வேலையாக மண்ணை விரலால் தோண்டிப் பார்க்கும்.

குழந்தைகள் பொறுமையாக இல்லாதிருப்பது அவர்களுடைய அனுபவக் குறைவால்தான். மூத்தவர்கள் நிதானமாக விளக்கினாலோ, செய்துகாட்டினாலோ தானே அவர்களைப் பின்பற்றுவார்கள்.

எழுத்தாளர்களுக்குப் பொறுமை

ஆரம்ப எழுத்தாளர்கள் எதையாவது அவசரமாக எழுதி பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு, தங்கள் படைப்பு பிரசுரமாகவில்லையே என்று மனமுடைந்து போனால், அவர்கள் இத்துறையில் நிலைத்து இருக்கமுடியாது.

ஒருவரது படைப்பு சிறப்பாக அமைய வேண்டுமென்றால், பல முறை திருத்தி எழுதும் பொறுமை வேண்டும். எழுதியதை அப்படியே வைத்துவிட்டு, சில நாட்கள் கழித்துப் படித்துப் பார்த்தால், யாருடையதையோ படிப்பதுபோல் இருக்கும். பல குறைகள் தென்படும்.

`எவ்வளவு பிரயாசைப்பட்டு எழுதினேன்!’ என்று சுயபச்சாதாபம் கொள்ளாமல், இரக்கமின்றி அடித்துத் திருத்த வேண்டியதுதான். இப்போது கணினியால் அந்த வேலை எளிதாகிவிட்டது. ஆங்கிலத்தில் சொல்வார்கள், `You don’t write. You rewrite!’ என்று.
படித்து முடித்துவிட்டீர்களா?

உங்கள் பொறுமைக்கு ஒரு பாராட்டு! நீங்களே முதுகில் தட்டிக்கொள்ளுங்கள்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *