க. பாலசுப்பிரமணியன்

இறைவன் எப்படிப்பட்டவன்?

திருமூலர்-1

திருமந்திரத்தைப் படித்து அதன் உட்பொருளை அறிந்து உள்வாங்கி வாழ்தல் என்பது வாழ்க்கையில் ஒருவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.  வாழ்வின் மிகப் பெரிய தத்துவங்களை அவ்வளவு அழகாக சிறிய பாடல்கள் மூலம் நமக்கு தெள்ளத்தெளிவுற அளித்திருப்பது  நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒரு அறிய செயல்.!!

நமக்கு சில எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும்போதும், நமக்கு விருப்பத்திற்கு மாறான செயல்கள் நடக்கும் போதும், துயரத்தில் சிக்கி நாம் வாடும் போதும் நாம் நம்முடைய விதியை மட்டும் நொந்துகொள்வதில்லை; கூடவே இறைவனையும் சேர்த்துச் சாடுகின்றோம்.

 “ஏன், எனக்கும் மட்டும் இப்படி ஏற்பட்டது? இறைவன் மற்றவர்களுக்கெல்லாம் நன்மையைச் செய்துவிட்டு எனக்கு மட்டும் ஏன் துயரத்தைத் தருகின்றான்? உண்மையிலே அவன் இருக்கின்றானா? அவன் நியாயமானவன் தானா? – என்றெல்லாம் மனத்துள் கேள்விகள் எழுகின்றன.

மோனத்தில் உள்நின்று தன் தவச்சிறப்பால் இறைநிலையை உணர்ந்து அடைந்த திருமூலர், அந்த இறைவனின் கருணை வடிவத்தை  அழகாக எடுத்துரைக்கின்றார்.

“தீயினும் வெய்யன், புனலினுந் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருளறிவார் இல்லை

சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.”

இறைவனின் கருணையை எடுத்துரைக்கும் திருமூலர், ஈசனை “சேயினும் நல்லன்” என்பது ஒரு மிகச்சிறப்பான வெளிப்பாடு. குழந்தைகளை  வெகுளித்தனத்திற்க்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் பிரதிபலிப்பாக நாம் பார்க்கிறோம். ஆனால் அந்தக் குழந்தைகளைவிட நல்லவன் என்று உணர்த்தும்போது இறையின் உண்மைநிலை வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றது.

“அணியன் நல் அன்பர்க்கு” என்று சொல்லும்போழுதில், தன்பால் அன்பு செய்வோருக்கு அவர்களுடைய உள்ளத்திற்கு அணிகலனாகவும், அவர்கள் செய்யும் அன்பை அழகுபடுத்துவனாகவும் இறைவன் காட்டப்படுகின்றான்.

“தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை” என்று எடுத்துறைக்கும் உலகில் இறைவனைத் “தாயினும் நல்லன்” என்று சொல்லி அவனைத் தாயுமானவனாக மட்டுமின்றி அதனிலும் சிறந்ததோர் நிலையில் நமக்கு முன் காட்டுகின்றார்.

இவ்வளவு நல்ல குணங்களின் உறைவிடமாக இருக்கும் ஈசனை, நிலையற்ற மனம் கொண்ட மனித மனம் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி, இந்தப்  புவியில் இருக்கும் நிலையற்ற ஆசாபாசங்களளையும் செல்வத்தையும் நம்பி   கை விட்டு விடுகின்றது.!

“ஈசன் அருளறிவாரில்லை”என்று வருந்தும் திருமூலர், நம் மனம் நிலைப்பெற கொடுத்த இந்த  நம் நல்வாழ்விற்கு ஒரு வழிகாட்டி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *