-மீனாட்சி பாலகணேஷ்

ஷீலா விருந்தினர்களை எப்படியோ சமாளித்தாள். அவர்கள் விடை பெற்றுப் போனதும் பூகம்பம் வெடித்தது.

“அருண், உனக்கு என்ன திமிர் இருந்தால் விருந்தினர்கள் முன்பு இப்படி உளறியிருப்பாய்,” வார்த்தைகள் நாகரிகத்துக்கு இடமின்றி இடம் பெயர்ந்தன.

தானும் கலையுலகில் அங்கீகரிக்கப்பட்டு விட்டோம் என்ற உற்சாகம், பெருமை,  இதன் பொருட்டு ஏற்படும் கர்வம் இவை அளவு மீறியதால், தன் வளர்ச்சிக்கு முழுப்பொறுப்பும் ஷீலாவினுடையது தான், அவளும் தானும் பரஸ்பரம் கொண்ட காதலால் தான் என்பதை அலட்சியம் செய்து விட்டான் அருண் சர்மா.

“வாயை மூடு. வரவர உன் அதிகாரம் ரொம்பத்தான் கொடிகட்டிப் பறக்கிறது. நீ போடும் பிஸ்கட்டுகளுக்காக உன் பின்னால் ஓடி வரும் நாய் என்று என்னை நினைத்தாயா?,” என்று ஆத்திரமாகக் கத்தியவன், விடுவிடுவென்று மாடியேறித் தன் அறைக்குப்போய், கதவை அறைந்து சாத்தித் தாளிட்டுக் கொண்டான்.

‘இது திரும்பவும் ஒரு நீண்ட தனிமையின் துவக்கம்,’ என்று ஷீலாவின் உள்மனது கூறியது. தலையைச் சிலிர்த்து உலுக்கிக் கொண்டு கண்ணீரைச் சுண்டி எறிந்தவள், ஒரு ‘ஜின் அண்ட் டானிக்கை’க் கலந்து எடுத்துக் கொண்டு தன் அறையை நோக்கித் தளர்ந்த மனத்துடன் நடந்தாள்.

Artistநடு இரவில், பாதி உறக்கத்தில் விழித்தபோது, திடீர் எனத் தனிமையின் வெறுமை அவளை அறைந்தது. தூக்கம் பறந்தது. விடியா இரவு நீண்டது. இன்னொரு ‘ஜின்’னுக்காகப் பறந்த நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டு, படிக்க ஏதாவது தத்துவ சம்பந்தமான புத்தகத்தைத் தேடினாள். அத்தனை வெறுப்பிலும், துயரிலும் தத்துவ சம்பந்தமான விஷயங்கள் மனதுக்குச் சற்று ஆறுதலளிக்கக் கூடும் என அவளது கூர்மையான புத்தி கணக்குப் போட்டது.

ஒரு சிறிய புத்தகத்தை  அலமாரியின் மேல்தட்டிலிருந்து உருவினாள். தாகூரின் கீதாஞ்சலி-மனத்தினுள் பெரிய பெரிய அலைகள் ஆரவாரித்து ஓசையிட்டன. பிரித்த பக்கத்தில் இருந்த வரிகள் மனத்தை ஈர்த்தன.

‘நாளின் தொடக்கத்திலேயே அந்த ரகசியம் அறிவிக்கப்பட்டு விட்டது. நீயும் நானும் மட்டுமே ஒரு படகிலேறிப் பயணம் செய்வோம். நம்முடைய முடிவும் இலக்குமில்லாத இந்தப் புனிதப் பயணம் பற்றி வேறு ஒரு ஆத்மாவுக்கும் தெரியாது.’

தன் வாழ்க்கைப் பயணம் தொடங்கியதை எண்ணிப்பார்த்தாள். மனமெல்லாம் வலித்தது. நினைவுகள் கூரம்புகளாக எல்லாப் பக்கங்களிலிருந்தும் வந்து தைத்தன.

படிப்பதை நிறுத்திப் புத்தகத்தை மூடினாள். அதைப் பரிசளித்தது யார் என்று தெரியும். மெல்ல, தயக்கத்துடன் முதல் பக்கத்தைத் திறந்தாள். ‘டு ஷீலா- என் மனதைத் திறந்து காட்ட, இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெது நிகராகும்? ஷீலா, நான் உன்னை வழிபடுகின்றேன் என் தேவதையே- அன்புடன், ஜிம் ராபர்ட்ஸ்,’ என்ற எழுத்துக்கள் மீது விரல்களால் மெல்ல வருடினாள்.

உடலின் சக்தி எல்லாம் வடிந்து பஞ்சு மிதப்பது போல் இருந்தது. புத்தகத்தைத் திரும்ப எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வந்து படுக்கையில் விழுந்தவள், தலையணையை அழுத்திக் கொண்டு, நினைவுகளை அழுத்தி உள்ளே தள்ள முயன்றவாறு உறங்கி விட்டாள்.

காலையில் எழுந்த போது, வீடு நார்மலாக இருந்தது போலத் தோன்றியது. அருண் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாற் போல இருந்தது. யோகா செய்து முடித்து விட்டு, லைட்டாகக் காலை உணவைப் பழங்கள் ப்ரெட் டோஸ்ட் என முடித்துக் கொண்டாள். உறங்கிக் கொண்டிருந்தாலும் கூட அருணை எழுப்பி விடைபெற்றுக் கொண்டு கிளம்புபவள் இன்று காலை அதைச் செய்யாமலே கிளம்பி விட்டாள்.

இப்போது வீடு திரும்பியதும் அருணை எதிர்கொள்ளும்போது எப்படி, என்ன பேச வேண்டும் என்று யோசித்து மனதிற்குள் தயார் செய்து கொண்டாள்.

*****

அரைமணி நேரம் ஊறி விட்டதால், தாரா திரும்ப அந்த அறையின் வாசலில் தோன்றிப் புன்னகைத்தாள். “ஷாம்பூ போட்டுக்க ரெடியா மேடம்?”என்றபடி.

தாரா இரண்டாவது முறையாகக் கருவுற்றிருக்கிறாள். ஆறேழு மாதங்கள் இருக்கும். வயிற்றைச் சுமந்தபடி ‘துரு துரு’வெனப் பம்பரமாகச் சுழலுகிறாள். முதல் குழந்தைக்கு ஐந்து வயதாகிறது. கணவன் டிராவல் ஏஜன்சி வைத்து நடத்துகிறான். ஷீலாவின் உள் வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்து தருவது அவன்தான்.

டவலை எடுக்க முன்பக்கம் சென்ற தாராவைப் பார்த்து, ” ஹவ் இஸ் ரமேஷ்?” என்று கேட்டாள் ஷீலா. “மிகவும் நன்றாக இருக்கிறார்,” என்றபோது தாராவின் கண்களில் தாரகைகள் சுடர்விட்டன. அது ஷீலாவின் பார்வைக்குத் தப்பவில்லை. கழிவிரக்கத்தில் உள்ளம் சிறுபொழுது திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து பொருமியது.

‘என் கண்களில் எவ்வளவு தாரகைகள் சுடர்விட்டன தெரியுமா? தாரா…. வாழ்வே வண்ண மயமாக இருந்தது. ஆனால் மிகச் சில நாட்களுக்கே,’ என்று தாராவின் கரங்களைப் பிடித்துக் கொண்டு கதறவேண்டும் போல இருந்தது.

முடியுமா?  முடியாதே.  டாக்டர் ஷீலா ராபர்ட்ஸ் என்றால் இரும்பைப் போன்ற உறுதியான மனமும், உழைப்பும், எறும்பைப் போல சுறுசுறுப்பும் கொண்டு, பெண்மையின் நளினமும், நாகரிகமும் பொங்கி வெளிப்படும் ஒரு சூப்பர் வுமனாகத்தான் அவளை இந்த ஊரே உலகே அறியும். அந்த கணிப்பை மாற்றிவிடச் சுலபத்தில் முடியுமா என்ன?

தாராவின் விரல்கள் தன் தலை முடியினுள் நுழைந்து பரந்து ஷாம்பூவை நுரைத்துக் கொண்டிருந்த சுகானுபவத்தில் ஷீலாவின் காலக்கப்பல் பின்னோக்கி ஓடி விட்டிருந்தது.

*****

5

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா
பங்கயக் கைந்நலம் பார்த்தல்லவோ இந்தப் பாரில் அறங்கள் வளருமம்மா…

சனிக்கிழமை மாலை. வெங்கடேசனின் வீடு கல்யாணக்களை கட்டியிருந்தது. நாளைக்காலை ரயிலில் ஜானகி தன் குடும்பத்தினருடன் வருகிறாள். அலமேலுவும் பாட்டியுமாகச் சமையலறையில் வெகு மும்முரமாகப் பட்சணங்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

“சைலு, இங்கே வா. இந்த முந்திரிப் பருப்பை விண்டு உடைச்சுக் கொடு,” என்று பொட்டலத்தை அவளிடம் நீட்டிய பாட்டி, “அலமு, அடுத்தபடியாக நெய்யை விட்டு முந்திரிப் பருப்பை வறுத்தெடுத்துக்கோ. பர்பியைக் கிளறிக் கொட்டி பரப்பப் போற தட்டிலே முதல்லே அந்த வறுத்தெடுத்த பருப்பைக் கொட்டிப் பரப்பு. மேலே பர்பியைக் கொட்டிப் பரப்பினால், கட்டிகளா வெட்டி எடுக்கிறப்போ முந்திரி எல்லாம் மேலே இருக்கும். பார்க்க அழகா இருக்கும்,” என்று கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தாள். ஏலமும் பச்சைக் கற்பூரமும் மணத்தன.

“அம்மா,” வாசலில் பியூனின் அழைப்பு. “புதுசாக் காய்கறி கிடைச்சா நிறைய வாங்கிட்டு வான்னாரு அய்யா. பிஞ்சா அவரைக்காயும் கத்திரிக்காயும் இருந்திச்சு. தக்காளி, முருங்கைக்காய் ரெண்டும் பக்கத்திலே ஒரு தோட்டத்திலே இருந்து பறிச்சுக் கொடுத்தாங்க,” என ஒரு பெரிய பையை வாசல் திண்ணை மீது வைத்தான்.

“என்ன முருகேசா, காயெல்லாம் கிடைச்சுதா?” என்றபடி வந்த வெங்கடேசன், “அலமு, இந்தக் காபிப் பொடியைத் தனியா வை. ஸ்பெஷல் பிளான்டேஷன் மிக்ஸ். புதுசாப் பொடிபண்ணி வாங்கிண்டு வந்திருக்கேன். ஜானகி, அத்திம்பேர் எல்லாரும் அசந்துடணும் காபி வாசனையிலே,” என உற்சாகமாக ஆர்ப்பரித்தார்.

“அட குட்டி மாமி, என்ன பண்ணறேள் நீங்களும் சமையல் கட்டிலே,” எனச் சைலாவிடம் விளையாட்டாக விசாரித்தார்.

“ஒண்ணுமில்லேப்பா. நான் கொஞ்சம் திலகாவோட பேசிட்டு வரேம்பா,” என்று செல்லமாகக் குழைந்த மகளைப் பாசமிகுந்த பார்வையால் வருடியவர், “தாராளமாகப் போயிட்டு வாம்மா,” என உத்தரவு கொடுத்தார்.

“விளக்கேத்தினப்புறம் என்ன ஊர்சுற்றல், வயசுக்கு வந்த பொண்ணு,” என்று முணுமுணுத்த அலமுவிடம், “பக்கத்து வீடுதானே, ஏன் கிடந்து அலட்டிக்கிறே,” என்று கடுகடுத்து விட்டு, “அம்மா, ஒரு அரை தம்ளர் காபி தாயேன். இலை போட இன்னும் அரைமணி ஆகும் இல்லையா? நான் இங்கே கூடத்திலே ரேடியோ நியூஸ் கேட்டுண்டு இருக்கேன்,” என்றார்.

காபியைப் பருகிவிட்டு ஏழேகால் நியூஸ் கேட்டவர், பேப்பரைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நாள் முழுதும் ஆபீஸில் வேலை செய்த களைப்பு. சாயங்காலம் மார்க்கட், கடைத்தெரு என்று சுற்றிய அலுப்பு. பேப்பர் மார்பில் தவழத் தலை சாய்த்தபடி, ஈஸிசேரில் லேசாகக் குறட்டை விட்டபடி உறங்கியே போனார்.

ரேடியோவில் திரைகானம் ஒலிக்க ஆரம்பித்தது. வழக்கமாக அந்த வீட்டில் ‘திரைகான’த்துக்கு அனுமதி கிடையாது. பெண்டிர் இருவரும் சமையல் கட்டில், பர்ஃபி கிளறிக் கொட்டியான பின், ஜானகி பிள்ளை சீனுவுக்குப் பிடித்த பொருள்விளங்கா(!) உருண்டையைச் சுடச் சுட பிடித்துக் கொண்டிருந்தார்கள். திரைகானம் கேட்க ஆளில்லை.

(தொடரும்)

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *