லஞ்சம் – ஊழல் உருவாக முதல் காரணம் நமது நடவடிக்கைகளே…!

6

பெறுநர்

வல்லமை ஆசிரியர் குழு,

 

வணக்கம். எனக்கு அலுவலக வேலையாக பல அரசு இயந்த்திரங்களில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் இருந்திருக்கின்றன. ஆனால், இதுவரையில் அங்கெல்லாம் நான் எடுத்துச் சென்ற கோப்புகளில் உள்ள விவரங்கள் சரியாக இருக்கின்ற பட்சத்தில் ஒரு பிரச்சனையும் வந்ததில்லை. அது போல செல்லும் இடங்களில் நாம் நமது “பந்தா”வினை காட்டாமல் கொஞ்சம் அடக்கி வாசித்தாலே போதும். எல்லா அதிகாரிகளும் எல்லோரிடமும் லஞ்சம் கேட்பதில்லை. அதற்குரிய சூழ்நிலைதனை உருவாக்கிக் கொடுப்பது பொதுமக்களாகிய நாம்தான். எதையும் திட்டமிட்டு எதற்கும் கொஞ்சம் கால நேரம் கொடுத்து நமது கோப்புக்களை நகர்த்தினாலே போதும் பெரும்பாலான இடங்களில் நமது செயல்கள் செவ்வனே முடிந்துவிடும்.

அதை விட்டு விட்டு, நான் நாளைக்கி ஊர் விட்டுப் போக இருக்கிறேன்! இன்றே எனக்கு குடும்ப அட்டையினை மாற்றித் தாருங்கள் என்றும், வீடு கட்டத் துவங்கி விட்டு ஒரு கட்டத்தில் “முக்கியமான “அரசு அனுமதி வேண்டும் என்கின்ற சூழ்நிலயில் அரசு அலுவலகத்தை நெருக்கி இன்றே, இப்போதே, என்று அவசரப்படுத்தாமல் முறையான ஆவணங்களை  முன்னமே உருவாக்கி வைத்துவிட்டு, அல்லது குடும்ப அட்டையினை மாற்றுவதற்ககு ஒரு பதினைந்து நாட்கள் நேரம் இருக்கும் வகையில் நமது கோப்புக்களை முன்னமே சமர்பித்து செயல் பட்டால் கண்டிப்பாக லஞ்சம் லாவண்யங்களை ஓரளவுக்கு கட்டுபடுதிவிடலாம் என்பதே உண்மை நிலை.  இதுவரை நான் கூறியவைகள் எனது சொந்த அனுபவமே. நிறையபேர் என்னிடம் நான் அதற்கு இவ்வளவு கொடுத்தேன்! அவ்வளவு கொடுத்தேன்! நீ எப்படி லஞ்சம் கொடுக்காமல் சமாளித்தாய்? என்று கேட்டவர்களுக்கு நான் சொன்ன ஒரே பதில்… “நாம் மற்றவர்களிடம் எதிபார்க்கும் “நேர்மை” முதலில் நம்மிடம் இருக்க வேண்டும்” அப்போதுதான் மற்றவர்களும் நம்மை கண்டு கொஞ்சமாவது அஞ்சும் நிலைமை உண்டாகும் என்பதுதான்! இதில் நேர்மை என்று நான் சொல்லுவது… நம்மிடம் உள்ள “கோப்புக்கள்” நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதுதான்!  என்றும் “உண்மை”க்கு இன்று வரை மதிப்பும் மரியாதையும் குறைவில்லை என்பதே உண்மை.

உண்மையில் கலப்படம் செய்ய வேண்டுமென்றால் கண்டிப்பாக லஞ்சம் கொடுத்தே ஆகவேண்டும்! உதாரணமாக நமது பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது “பிறந்த நாள்” தேதியினை எடுத்துகொண்டால் சரியான தேதியினைக் கொடுத்து பிறந்தநாள் “சர்டிபிகட்” வாங்குவதை லஞ்சமின்றி பெற்றுவிடலாம். அதே நேரத்தில் நாமே, நமது தேவைக்காக தவறான தேதியினைக் கொடுத்து அதே பிள்ளைக்கு பிறந்தநாள் “சர்டிபிகேட்” வாங்க வேண்டுமென்றால் கண்டிப்பாக நாம் நேர்வழியில் செல்ல முடியாது.  குறுக்கு வழியில் தான் செல்ல வேண்டும்! சாதாரண நிலையில் இப்படி என்றால், பெரிய பெரிய நிலைகளில் நிலைமைக்கு தகுந்தவாறு நமது தவறுகளுக்கு தகுந்தவாறு லஞ்சமும் பெருகும் என்பதே இன்றைய உண்மை நிலை! என்ன நான் சொல்ல வருவது புரிகிறதா…..? முடிந்த அளவுக்கு உண்மையினைப் பேசி… உண்மையாக நடந்து…  நேர்வழியில் சென்றால் கண்டிப்பாக லஞ்ச – ஊழல் நிகழ்வுகளை அடிப்படையில் தடை செய்து விடலாம் என்பதே உண்மை.

 

 

சித்திரை சிங்கர்,

அம்பத்தூர்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “லஞ்சம் – ஊழல் உருவாக முதல் காரணம் நமது நடவடிக்கைகளே…!

  1. //எதையும் திட்டமிட்டு எதற்கும் கொஞ்சம் கால நேரம் கொடுத்து நமது கோப்புக்களை நகர்த்தினாலே போதும் பெரும்பாலான இடங்களில் நமது செயல்கள் செவ்வனே முடிந்துவிடும்.//

    நீங்கள் கோப்புகளை நகர்த்துவதில்லை! மரியாதைக்குரிய அரசு இயந்திரம் கோப்புகளை நகர்த்த வேண்டும்!

    எனது கோப்புகள் அனைத்தும் சரியாக இருந்தும் நான் பல இடங்களில் எனக்குத் தேவையான சான்றிதழ்களை இதுவரை பெறாமலே உள்ளேன்! நானும் ஒரு சட்டத்தைப் பின்பற்றும் ஒழுங்கான குடிமகன் தான்!

    நான் ஒழுங்காக எனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது என்னை வழிமறித்து “ஊது! நீ குடிச்சிருக்கே!” என்று சொல்லி என்னை நிறுத்தியது இதே காவல்துறை!

    “ஆர்மியிலே இருந்திருக்கே! உனக்கு குடிப்பழக்கம் இருக்காதா?” என்று கேள்வி கேட்டு எனது நாட்டுபற்றினை எள்ளி நகையாடிது காவல்துறை! என்னிடம் நீங்கள் சொல்லிடும் சட்டப்பூர்வமான கோப்புகள் அனைத்தும் இருந்தன! ஆனால் என்ன செய்ய?

    என்னை அரசு மருத்துவமனை அழைத்து சென்று எனது குருதியினை சோதனை செய்து நான் மது அருந்தவில்லை என தெரிந்த போதும் “ஏதவது கவனியுங்க சார்!” என்று சொன்னதும் அதே காவல் துறை!

    சும்ம ஜோக் அடிக்காதீங்க சார்!

    நானும் கடந்த பன்னிரண்டு வருடங்களில் இந்தியா முழுவதும் சுற்றியவன் தான்!

  2. என் அனுபவத்தில் – லஞ்சத்திற்கு முதல் காரணம், அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்குத் தொண்டு மனப்பான்மை இல்லாததோடு, தான் ஏதோ உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் தன்னை நாடி வநதவர் யாசகம் கேட்பதாகவும் நினைக்கும் மனப்போக்கே. புதிதாக வேலைக்கு வந்தவர் சுறுசுறுப்பாக வேலை செய்தால் பழைய ஆசாமிகள் அவரை மூளைச் சலவை செய்து தங்கள் வழிக்கு இழுத்து விடுவதை பல முறை கண்டிருக்கிறேன்.

    2003 இல் என்னுடைய குடும்ப அட்டையில் வீட்டு எண் தவறாகக் குறிக்கப்பட்டுவிட்து. அது அந்த அலுவலகம் செய்த தவறு தான். அதைத் திருத்துவதற்காக அங்கு சென்றேன். முதல் முறையிலேயே அவர்களுடை அலுவலகப் பதிவேட்டில் இருப்பதும் என் அட்டையில் இருப்பதும் மாறுபட்டிருப்பது தெரியவந்தது. இரண்டு நிமிடம் ஒதுக்கினால் அதை முடித்திருக்கலாம். ஆனால் இரண்டு நாள் கழித்து வாருங்கள், அடுத்த வாரம் வாருங்கள் என்று என்னைப் பதினைந்து முறை அலைய விட்டனர். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் அலைந்து தான் வாங்கினேன். எத்தனை பேருக்கு இது போன்று அலைய நேரமும் பொறுமையும் இருக்கும்?

    அண்ணா ஹசாரே சொல்வது போல, இன்னின்ன விஷயங்கள் இத்தனை நாளில் முடிக்கப்பட வேண்டும் எனற வரையறையுடன் கூடிய குடிமக்களின் உரிமை பற்றிய சாசனம் வெளியிடப்படவேண்டும். அது தான் லஞ்சத்தை வேரறுக்க வழி.
    சு.கோதண்டராமன்

  3. அரசு அலுவலகங்களில் இருப்பவர்களுக்கு தொண்டு மனப்பான்மை வேண்டும் என்ற உங்கள் கருத்து நல்ல கருத்து. அனைத்து வங்கிகளிலும் பணம் எடுக்க/போட டிராப்ட் எடுக்க எவ்வளவு நேரம் என்று நேரம் குறித்து விளம்பரங்கள் அறிவிக்கைகள் இருந்தாலும் அங்கு நிகழ்வது என்ன..? எனவே அரசு அலுவலகம்…. வங்கிகள் …. போன்ற பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் வேலை செய்யும் நபர்களுக்கு “தொண்டு” மனப்பான்மை அவசியம் வேண்டும்.

    சேது பாலன்.
    சென்னை.

  4. ஒரு சிக்கலான, நீண்டகால, எங்கும் வியாபித்திருக்கும் பிரச்னையை சித்திரை சிங்கர் அணுகிய முறையை, சற்றே ஆராய்ந்து பாராட்டுகிறேன். பந்தா, சிபாரிசு, க்யூவை புறக்கணிப்பது, இவை தான் ஆரம்ப பிரச்னை. லஞ்ச லாவண்ய காரணிகளை முளையிலே கிள்ளி விடவேண்டும். ரேஷன் கட்டுப்பாடு வந்தது உலக யுத்தத்தின் போது. ஆனால், பல வருடங்கள் அனாவசியமாக தொடர்ந்தது. எதிர்பாராத விதமாக, ஒரு நாள் ரேடியோவில். ‘இந்த நிமிடம் ரேஷன் ரத்து’ என்றார். ராஜாஜி. கடத்த்ல் மன்னர்களுக்கு லக்ஷக்கணக்கில் நஷ்டம்.

  5.  பந்தா, சிபாரிசு, க்யூவை புறக்கணிப்பது, இவை தான் ஆரம்ப பிரச்னை. லஞ்ச லாவண்ய காரணிகளை முளையிலே கிள்ளி விடவேண்டும். – உண்மையான வரிகள் சிந்திக்கவேண்டிய கருத்து.

  6. படிப்பதற்கும்,கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது  சித்திரை சங்கர் கட்டுரை ஆனால் ,  லஞ்ச லாவண்யம் என்பது ஒரு தீர்க்கமுடியாத நோயாக பரவி விட்டது 
    புற்று நோயால் தாக்கப்பட்டவரின்  வாழ் நாளை வேண்டுமானால் தள்ளிப்போடலாம்
    புற்று நோயை  தீர்க்க  மருந்து உண்டா? லஞ்ச    லாவண்யமும்  அப்படித்தான் ,  தீர்க்கபட்டால்  நல்லதுதான்  இந்த காலத்தில் லஞ்சம் வாங்காமல் இருக்கலாம்  கொடுக்காமல் இருக்க முடியாது என்பதே  உண்மை…      சரஸ்வதி இராசேந்திரன் 
                                                                                                                            மன்னார்குடி

Leave a Reply to சரஸ்வதி இராசேந்திரன்

Your email address will not be published. Required fields are marked *