படக்கவிதைப் போட்டி 105-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

momandchild

திருமிகு. ஷாமினியின் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். மங்கையர் இருவருக்கும் என் மனங்கனிந்த நன்றி!

இயற்கையின் படைப்பில் கடலும் மலையும் என்றுமே காணச் சலியாதவை. பாதங்களை வருடிச்செல்லும் கடலலையில் நின்றிருக்கையில் பெரியோரும் காலம்மறந்து குதூகலிக்கும் குழந்தைகளாவர்.

தாயும் சேயும் கடலோரம் களித்திருக்கும் இக்காட்சியைக் கவிஞர்கள் எப்படியெல்லாம் நோக்கியிருக்கிறார்கள் என்பதை அவர்தம் பாக்கள்வழித் தெரிந்துகொள்வோம்.

***

”அலையில் ஆடவேண்டும் எனும் சேயின் விருப்பை மறுக்காது நிறைவேற்றும் பாசத்துணை தாயன்றி வேறில்லை” என்று நெகிழ்ந்துரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

பாசத் துணை…

அழுது பிள்ளை அடம்பிடிக்கும்,
அலைகள் மோதும் கடலினிலும்
விழுந்து குளிக்க விருப்புடனே
வில்லாய் வளைந்து சத்தமிடும்,
மெழுகாய் உருகித் தாயவளும்
மெல்ல நனைப்பாள் கால்களையே,
பழுது யேதும் இல்லாத
பாசத் துணையது தாய்தானே…!

***

”பெயர்த்தியை உயர்த்திப் பிடிக்கும் பாட்டியின் பாசத்தோடு யாரும் போட்டியிட முடியாது” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

கடலினும் பெரிது இவர்களின் அன்பு;
மலையினும் பெரிது பாட்டியின் பாசம்;
உலகில் உயர்ந்தது பேத்தியின் நேசம்;
அன்பு அணைப்பில் ஆண்டவனைப் பார்க்கிறேன் ;
ஆனந்தத்தின் எல்லையை இங்கு தான் பார்க்கிறேன்;
கடல் மகள் அலை வந்து , தாயின் காலை
தொட்டு வணங்கிப் போவதைப் பார்க்கிறேன்;
மகனையும், தாயையும், இணைக்கும்
அன்புப் பாலம் இந்தப் பேத்தி!
பேத்தி காலில் நீர் பட்டால் கூட வலிக்கும் என
தூக்கிப் பிடிக்கும் அருமைப் பாட்டி!
மழலையும் , தாய்மையும், அன்பாய் சேர்ந்து!
இறைவனின் வடிவாய் கண்டேன் இன்று!
கடலருகே நிற்பது ஆபத்தன்றோ!
நிற்பது இரண்டும் குழந்தையன்றோ !
வயதானால் பெரியவரும் குழந்தையன்றோ!
இருந்தாலும் அஞ்ச வேண்டாம்!
கடலும் நமக்கெல்லாம் அன்னையன்றோ !
அன்னை, பிள்ளைகளை வெறுப்பதுண்டோ !
அலையாய் வந்து தான் அடிப்பதுண்டோ!

*** 

”பெண்ணென்று பிறந்துவிட்டால் மண்ணில் இல்லையே பாதுகாப்பு! நச்சரவுகள் உனைத் தீண்டி நாசம் செய்யாதிருக்க முத்தே உனைநான் காப்பேன் சிப்பியாய் இருந்து!” என்று பகரும் தாயைக் காண்கிறோம் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனின் கவிதையில்.

சிப்பிக்குௗ் இருக்கட்டும் முத்து.

அழகாய் மகௗ் பெற்று
ஆசை தீர வௗர்க்கிறேன்
இன்பம் பொங்குதடி உன் முகம் பார்க்கையிலே-இன்று
ஈர மணலில் தனியே துள்ளி குதித்தாட
உன் மனம் ஏங்குவதை அறிவேனடி!
ஊரெல்லாம் நச்சுப் பாம்புகௗடி
என் செல்வமே, மொட்டென்றும் பாராமல் கொத்திப் பார்க்குதடி
ஏன் இந்த அவலம் தெரியவில்லை
ஐயம் மட்டும் நெஞ்சினின்று அகலவில்லை
ஒப்பவில்லை மனம் உனை தனியே விட
ஓடி விளையாட ஏற்ற இடமில்லை உனக்குத் தர.. அட
ஔவை தோற்றத்தின் அர்த்தம் இன்றுதான் புரிகிறதடி!

சிப்பிக்குௗ் முத்தைப் போல
சிறு மலரே, கைக்குள்ளேயே இருந்துவிடடி
பகைவனை அறியும் பக்குவம் வரும் வரை…

***

தாயிவள் குழந்தையைக் கையிலேந்திக் கடலை நோக்கிப் போவது அதனைக் கடலில் வீசவோ என்று ஐயுற்று, “பெற்ற தாயே முந்தித் தவமிருந்து முந்நூறு நாள் சுமந்துபெற்ற அழகுச் செல்வத்தை ஆழியில் வீசலாமா?” என்று வெகுண்டு வினவுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

ஆங்காரி

பெற்ற தாயின் வாயைப் பார்!
எட்டியுள்ள கடலைப் பார்!
சிட்டு போன்ற
எளிய சிறுமியைப் பார்!
தாயின் வாய் சினம் காட்டுது!
கடலின் வாய்
விழுங்கப் பார்க்குது!
சேயின் மெய் துடிக்குது!
கை துடிக்குது!
உயிரென்ன வெள்ளரிக்காயா?
பிள்ளை என்ன
கிள்ளுக் கீரையா?
தவமிருந்து பெற்ற பிள்ளை
தவிக்குதடா!
அழுவாத பிள்ளை,
அடம் பிடிக்கா பிள்ளை
எழு பிறப்பிலும் உண்டோ?
கடலில் போடப் போகும்
மடந்தை இவள்
தாயா?
அல்லது பேயா?

***

சிந்திக்கவைக்கும் கவிதைகளைத் தந்திருக்கும் கவிஞர் குழாத்துக்கு என் பாராட்டுக்கள்!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது…

தாயின் மகிழ்ச்சி

பத்தியங்கள் பலயிருந்து பத்துமாதம்
பக்குவமாய் வயிற்றில்சுமந்த அன்னைநான்!

ஈன்றேடுத்த தாயெனக்கு இதைவிட
வேறென்ன மகிழ்ச்சி இருக்குதம்மா!

காலைப் பொழுதில் வேலைபலயிருந்தும்
பிள்ளை மகிழ்ச்சியில் கொள்ளைசுகம்காண்பேன்!

குடும்ப பாரம் சுமந்தாலும் அன்னையெனக்குக்
குழந்தைப் பாசம்தனில் சுமைபலகுறையும்!

ஆழ்ந்த வறுமையினால் உனை ஆள்
ஆக்க நாளெல்லாம் எதிர்நீச்சலிடுவேன்!

கள்ளச் சிரிப்பை மறைந்துரசிக்கக்
கரைவராமல் கடலலை கண்டுமகிழும்!

பெண்ணாகப் பிறந்தயென் பாக்கியமே!
எண்ணத்தில் நிறைந்திருக்கும் பெட்டகமே!

ஆண்மை ஆதிக்கத்தில் அகப்படாமல்
பெண்ணினம் தழைக்கப் பாடுபடு!

வன்முறைபல தாண்டியுன் வாழ்வினிலே
வழித்தடம்பதித்து வெற்றிபெற வேண்டுமம்மா!

புண்ணியமே பலசெய்து பெற்றிடினும்
பெண்ணியமே பெரிதென்று கொண்டுவிடு!

பெண்சிசுவதைக் கொல்வதைத் தடுத்திடு!
பெண்மையே மேன்மையெனப் போற்றிடு!

நானிலத்தில் பெண்ணைக் கேலிசெய்வோரை
நாவறுக்கும் வாளாய்நீ யெழுகவே!

பலநாளும்தாலாட்டிப் பண்புடன் வளர்த்ததாலே
உலகாளும் பெண்ணாக நீயொருநாள் வரவேணும்!

நவிலுகின்ற நற்பொருளை நன்கறிந்து
நவின்றுநாளும் பணிதுவக்கப் பணிகின்றேன்!

வளர்த்தவுனை வாய்பிளந்து பார்க்கையில்
களைப்பும் சோர்வும் களையிழக்கும்!

கடல்நீரில் ஒருசேரநாம் கால்நனைக்க யென்
கவலையெலாம் கரையுமம்மா உனைநினைக்க!

வாய்மைக்கு எடுத்துக் காட்டும் நீதான்!
வாழ்க்கையின் வழிகாட்டியும் நீதான்!

அன்னையெதை ஊட்டி வளர்த்தாளென
ஆருமுனைக்கேட்டால் அன்பூட்டினாள்
எனச்சொல்லு!

”மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்றார் மகாகவி. நானிலத்தில் பெண்ணை இழிவு செய்வோரின் நாவை அறுத்தெறியும் வாளாய் எழு!” என்று தன் பெண்மகவுக்கு மகத்தானதோர் அறிவுரை கூறும் மறத் தாயைப் பார்க்கிறோம் இக்கவிதையில்!

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளோடு, நிமிர்ந்த நன்னடை பழகும் செம்மை மாதரை உருவாக்கவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் இற்றைப் பெற்றோர்க்கு, குறிப்பாக, அன்னையர்க்கு இருக்கின்றது. அதன் அவசியத்தைப் பேசியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியின் பாடலைப் பாராட்டி, அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன்.

 

 

 

 

About மேகலா இராமமூர்த்தி

One comment

 1. தொடர்ந்து வெற்றிகரமாக 105 வாரமாக “படக்கவிதை” போட்டியை சிறப்பாக நடத்தி, வல்லமை இதழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக தொடர்ந்து புதிய முயற்ச்சிகளைக் கையாண்டுவரும் வல்லமை ஆசிரியர் குழுவுக்கு முதலில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  குறிப்பாக படக்கவிதைப் போட்டியை மிகச்சிறப்பாக நடத்திவரும் ஆசிரியர் பவள சங்கரி, பொறுப்பாசிரியர் சாந்தி மாரியப்பன் மற்றும் கவிதையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை திறமையுடன் செய்துவரும் நடுவர் மேகலா அவர்களுக்கும் என் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  105 வது படக்கவிதைக்கு, இவ்வாரம் சிறந்த கவிஞராக என்னைத் தேர்வு செய்தமைக்காக மகிழ்கிறேன்.

  ஒவ்வொரு வாரமும், இடம்பெறும் படத்துக்கு அனேக கவிஞர்கள் சிறப்பாக தங்களது கவித்திறனை வெளிப்படுத்திவருவதற்கு அனைவருக்கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஒரு படத்தைப் பார்த்தவுடன், சிந்தனையில் எழுகின்ற சிறப்பான எண்ணங்களை கவிதையாகத் தொடுக்கின்ற வல்லமை எழுச்சி பெற, படக்கவிதை என்கின்ற உத்தியாக வல்லமையில் செயல்பட்டுவருவதையும் நாம் பாராட்ட வேண்டும்.

  ஒரு சிறப்பான படத்தை வைத்து எழுதுவதைவிட, சாதாரணமாக இயற்கையாக எடுக்கப்பட்ட படத்தை வைத்து எழுத நினைப்பதால், எவ்விதத்திலும் நம்மால் எழுதமுடியும் என்கிற மேலான நம்பிக்கையும் பிறக்க வழிவகுக்கிறது என்பதை முன்பே நான் தெரிவித்து இருந்தேன்.

  அதேபோல “நம்மால் கவிதை எழுத முடியும்” என்கிற நம்பிக்கை பிறந்து, அதற்காக நாம் செலவிட்ட நேரத்தை சில சமயம் நினைத்துப் பார்த்தால், நேரம் போனது தெரியாமல் வியந்ததும் உண்டு.

  வல்லமை இதழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக தொடர்ந்து புதிய முயற்ச்சிகளைக் கையாளும் வல்லமை ஆசிரியர் குழுவுக்கு, குறிப்பாக ஆசிரியர் பவள சங்கரி, பொறுப்பாசிரியர் சாந்தி மாரியப்பன் மற்றும் நடுவர் மேகலா அவர்களுக்கும்..

  105 படக்கவிதைப் போட்டிக்கு படம் எடுத்து உதவிய ஷாமினி அவர்களுக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அன்புடன்
  பெருவை பார்த்தசாரதி

Leave a Reply to பெருவை பார்த்தசாரதி Cancel reply