பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

17857476_1286974304690099_879041747_n

132443801@N02_rசரவணன் ரவி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (15.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி – (107)

  1. திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும்,திருமதி.பவள சங்கரி அவர்களுக்கும்,நிழற்படத்திற்கு அழகான கவிதைகள் படைத்துக் கொண்டிருக்கும் என் உடன் பிறப்புகளுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

  2. பறவையைக் கண்டேன்

    சி. ஜெயபாரதன், கனடா

    கடவுள் படைப்பிலே நமது
    கண்ணைக் கவர்வது,
    நெஞ்சில் நிலைப்பது
    பறவையினம்.
    நீர்க்கோள் தோன்றி
    பலயுகம் கடந்து
    நாலறிவு பெற்ற புள்ளினம்
    நீல வானில் பறந்தன !
    பறவைகள்
    பலவிதம், பல்லினம், பலநிறம் !
    ஆறறிவு மானிடர்க்கு
    வெறும் நாரில்
    வீடு கட்டச் சொல்லிக் கொடுக்கும்
    கூடு கட்டும்
    தூக்கணாம் குருவி !
    பறந்து செல்லும் பருந்து
    வானூர்தி ஆக்க விதி வகுக்கும் !
    பஞ்சவர்ணக் கிளி
    சொன்னதைச் சொல்லும் !
    ஆண், பெண் புள்ளினம்
    ஒன்றாய்
    இல்லறம் நடத்திக் காட்டும் !
    மானிடர் போல்
    ஆணும், ஆணும் கூடா !
    பூத்தேன் சேர்க்கும்
    தேனீக்களும் பறவை இனமே !
    உயரப் பறக்கும் கழுகு
    உள்ளவ தெல்லாம் உயர்வாய்
    எண்ணிடச் சொல்லும் !
    வண்ண வண்ணப் பறவைகள்
    வானில் பறப்பதே
    காணக் கிடைக்கா காட்சி !

    +++++++++++

  3. பறவை விடு தூது : விண்ணில் பறக்கும் வண்ணப் புறாவே !
    சிறகடித்துப் பறக்க உள்ளம் ஏங்குதம்மா!
    சிகரம் தொட சிந்தை விரும்புதம்மா !
    நிலவில் உறங்க ஆசை வந்ததம்மா !
    நீ சிறகடிக்கும் ஓசை, லயம் சேர்ந்த இசையம்மா!
    உயரப் பறப்பதினால் உன் எண்ணமும் உயர்ந்ததம்மா !
    புத்தருக்கு ஞானம் வந்தது போதி மரத்தடியில்!
    எங்களுக்கு ஞானம் வரும், நீ காட்டும் வழியில்!
    நீ செல்லாத தூரம் இல்லை!
    சொல்லாத சேதி இல்லை!
    அமைதித் தூது செல்ல உனக்கு நிகர் யாருமில்லை!
    நீ சென்ற தூது ஒரு போதும் தோற்றதில்லை !
    அமைதிக்கு பரிசு, வெற்றியன்றி வேறில்லை!
    காதல் தேவதை, உண்மையில் நீ தான்!
    நீ சென்ற காதல் தூது எத்தனை எத்தனை!
    உன்னால் இனைந்த காதலர் தான்
    எத்தனை எத்தனை!
    நீ எனக்காக தூது சென்றிருந்தால்!
    எனக்கொரு காதலி கிடைத்திருப்பாள்!
    இருந்தாலும் என்ன ! அழகுப் புறாவே!
    எனக்கு இப்போது தூது செல்வாயா?
    மனைவியின் மனதறிந்து வேண்டியதைச்
    சொல்வாயா!
    பாரதியிடம் தூது சென்று கவிதை ஒன்று
    கேட்பாயா ?
    தமிழை இழிவு செய்யும் மனிதரெல்லாம்
    ஊமையாய் போவதற்கு கவிதை கேட்பாயா!
    பெண்ணை இழிவு செய்யும் கயவரெல்லாம்
    செத்தொழிந்து போவதற்கு கவிதை ஒன்று
    கேட்பாயா?
    கண்ணால் துகில் உரியும் , துச்சாதன ஆண்களெல்லாம் !
    குருடாய் போவதற்கு வழி கேட்டுச் சொல்வாயா?
    பிள்ளைகள் மனதினிலே பாசத்தை விதைப்பாயா!
    ஈன்றவரைப் பேணாத பிள்ளையெல்லாம்
    முதியவராய் உடன் மாற வரம் பெற்று வருவாயா?
    மாமியார், மருமகள் இணக்கமாய் இருப்பதற்கு
    வழி ஒன்று சொல்வாயா!
    உழவுத் தொழில் தான் உலகில் உயர்ந்ததென்று
    ஊரெங்கும் சொல்வாயா?
    ஆறறிவு பெற்றதினால் அகந்தை மிகக்
    கொண்டு அழிந்து வரும் மனித இனம்
    மீண்டு வருவதற்கு நல்ல வழி சொல்வாயா!
    நான் விரும்பும் கோகிலமே !

  4. தெரிந்துகொள்…

    சிறகை விரித்தது பறவை,
    சின்னதாகிப்போனது வானம்..

    உழைப்பு எழுதிய கவிதை,
    உயரம் தாண்டுது வனப்பு..

    துணிச்சல் போட்ட பாதை,
    துச்சமானது தூரம்..

    இயற்கை எழுதிய கவிதை,
    இன்னும் வனப்பானது வையம்..

    தெரிந்துகொள் மனிதா,
    தேவைப்படுகிறது உனக்கு-
    பறவையின் திறமை…!

    -செண்பக ஜெகதீசன்…

  5. மனிதனும் புறாவும்
    ==================
    ஒருவனுக்கு ஒருத்தியென்ற உறுதி கொண்ட
    உயிரினமாம் அரியபுறா..!

    கோவிலுயர் கோபுரமதில் வாழும் புள்ளின..மது
    கூடிவாழும் கூட்டினம்..!

    பறவையில் தனிப் பிறவியது தண்ணீரை
    உறிஞ்சிக்குடிப்பதோர் அற்புதம்..!

    கூட்டமாய் கூரை தரையிலும் உலவும்
    வட்டமாய்ப்பறந்து வானிலேகோலமிடும்..!

    படபடக்கும் ஓசையுடன் ஜோடியாக ஜன்னலோரம்
    கடகடவெனக் காதல்மொழிபேசும்..!

    உண்டதை உமிழ்ந்துதன் உயிர்க் குஞ்சின்
    குடல்நிரப்பும் தாய்ப்புறா..!

    பெட்டை யிட்ட முட்டையை அன்புடனே
    அடைகாக்கும் தந்தைப்புறா..!

    பகுத்துண்ணும் எண்ணத்துடன் பலதும் கூடி
    தொகுத்துண்ணும் பரந்தகுணம்..!

    ஆடல் கலையில் வல்லவன் நானே..யென
    பாடல்போன்ற முனகலோடு..

    ஒருகாலைத் தூக்கி நடராசன் போலே
    மறுகாலைமறைக்கும் தன்சிறகாலே..!

    பறக்க ரெண்டு இறக்கை உண்டுனக்கு
    பலமைல்பறக்க சக்தியுண்டு..!

    வழித்தடமில்லா வானத்திலே போகும்வழி..வந்த
    வழியறியும் நுண்ணறிவுமுண்டு..!

    உண்ணாமல் பறந்து ஓராயிரம் மைல்கடக்கும்
    உன்னததிறன்பெற்ற அற்புதபறவை..!

    அறுகாதஆதி தகவல் தொடர்புநான் தானென
    அரசனுக்கு ரகசியதூதுசெல்லும்..!

    விரோதத்தின் விளைவான வன்முறைக்குச் சமாதானமென
    வீரமாகப்பறக்கும் வெள்ளைப்புறா..!

    தன்மானம் காத்திடும் பண்பிற்கு..தலைதாழ்த்தி
    தன்னையே வளையவரும்..!

    வெண்சாம்பல் வெள்ளை கரு நிறமென
    பன்னிறவண்ண முன்பகட்டு..!

    வேற்றுமைக்கு பலநிற முன்னில் இருக்கு..மது
    ஒற்றுமையை எடுத்துக்காட்டும்..!

    பகுத்தறிவு முனக்குண்டு..மனிதரோடு நெருங்கிப்
    பழகிடுமடிமைப் பண்பு..!

    அன்புடன்
    பெருவை பார்த்தசாரதி

  6. புறாக்களின் சிறகுகளிலிருந்து வரும் காற்று இதய நோயை குணப்படுத்துமாம் ஆகவே இதயத்தை இதமாக வருடும் கவிதை படைத்திருக்கிறார் திரு பெருவை பார்த்தசாரதி அவர்கள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  7. கற்றுக்கொௗ்..

    சிறகடித்து சிகரம் தொடும்
    சிறு பறவை., இளைப்பாராமல்..
    கற்றுக்கொௗ்.. அதே போல உழைத்து சிகரம் தொட..

    வெட்ட வெளியில் சலிப்பின்றி
    வெயில் பாராமல் சுற்றித் திரியும்..
    கற்றுக்கொௗ்.. அதே போல உழைத்து முன்னேற..

    தடைகளை தட்டி எறிந்து
    இலக்கை எட்ட அயராது உழைத்தால்
    தொடலாம் வானை.. வண்ணப் பறவையைப் போலே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *