–மீனாட்சி பாலகணேஷ்

மோகத்தைக் கொன்று விடு -அல்லால் என்றன் மூச்சை நிறுத்தி விடு
தேகத்தைச் சாய்த்து விடு -அல்லால் அதில் சிந்தனை மாய்த்து விடு–‘

**************************

காரை விட்டிறங்கி மாடியை அண்ணாந்து பார்த்தாள் ஷீலா. அவளுடைய செல்வச் செழிப்பைப் பறைசாற்றுவது போல பளிங்குக்கல் வாசலும் வராந்தாவும், அகன்ற பால்கனிகளும், அடர்ந்த தோட்டமுமாகக் கம்பீரமாக நின்றது அந்தப் பங்களா. ஆனால் இன்றென்னவோ வெறுமை வழிவதை உணர்ந்தாள் ஷீலா. காரணமும் தெரியும்.

அருண் வெளியேறி இருப்பான் என்பது அவள் எதிர்பார்த்தது தான். ஆனால் ஏற்றுக் கொள்ள இயலாமல் மனம் தவித்தது.

மொட்டையாக நான்காக மடிக்கப்பட்ட ஒரு கடிதம். ‘ஷீலா’ என்ற பெயரெழுதப்பட்டு டெலிஃபோனின் அருகே இருந்தது. “ஷீலா, வாழ்க்கைப் பயணத்தில் நீயும் நானும் சந்தித்து சில காலம் இன்பமாக இருந்தோம். இனிமை கசப்பாக மாறும் முன்பே பிரிவது தான் சரி- நான் என் எதிர்காலத்தை நோக்கி ஓடும் திசை வேறாக இருக்கிறது. உலகம் உருண்டையானது. என்றேனும் எங்காவது சந்திப்போம். எல்லாவற்றுக்கும் உன் அன்புக்கும் நன்றி. அருண் சர்மா.”

கையில் பிடித்திருந்த காகிதம் கையுடனும் உதடுகளுடனும்சேர்ந்து சில நொடிகள் படபடவெனத் துடித்தது.

தொண்டைக் குழியில் அடைத்துக் கொண்ட பந்தை அழுந்த ஒருமுறை விழுங்கித் தன் தவிப்பையும் விழுங்கப் பார்த்தாள். தலை திடீரென்று ‘விண் விண்’ணென்று தெறித்தது. வயிற்றைப் புரட்டியது. அவ்வப்போது அழையாத விருந்தாளியாய் வரும் ‘மைக்ரேன்’ இது என உறைத்தது. கைப்பையைத் திறந்து இந்தத் தலைவலிக்காகப் பிரத்தியேகமாக டாக்டர் பரிந்துரைத்திருந்த மாத்திரையை எடுத்து விழுங்கினாள். மெல்ல மாடியேறி அருண் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த அறையை நோக்கி நடந்தாள். கதவை எப்போதும் போல- அதாவது அருண் சித்திரம் தீட்டிக் கொண்டிருக்கும் சமயங்களில் தான் உள்ளே புக நேர்ந்தால் நாசுக்காக மெல்லத் தட்டி விட்டு நுழைவது போலத் தட்டி விட்டுத் தள்ளித் திறந்தாள்…. காலியாக இருந்த அறை ‘ஹோ’வென அவளைப் பார்த்து அரக்கத்தனமாக இளித்தது.

சுவரில் அவள் மாட்டியிருந்த ஒரு ‘ஃப்ரென்ச் இம்ப்ரெஷன்’ பெயின்டிங், இந்தப் பக்கம் ஒரு ‘பிகாஸோ’வின் நகல் ஆகியவை மட்டும் அப்படியே இருந்தன. தனது ஒரே ஒரு சித்திரத்தை மட்டும் அறையின் ஒரு மூலையில் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டுப் போயிருந்தான் அருண்.

சென்ற ‘வாலன்டைன்ஸ் டே’ அதாவது காதலர்கள் தினத்தன்று அவளுக்கு அருண் பரிசாக அளித்தது அது. எப்போதும் போலவே இப்போதும் கூட, இத்தனை மனச்சஞ்சலத்திலும் ஒரு அரை நிமிடமாவது அதில் லயிக்க அவள் மனது மறக்கவில்லை. அத்தனை உணர்ச்சிகளை அந்தச் சித்திரம் அவளுக்கு உண்டு பண்ணியது. இத்தனைக்கும் ஒரு சாதாரணச் சித்திரம் அது.

அலைவீசும் கடல் ஒருபுறம், பெரும் காற்றில் அலைபாயும் மரங்கள், அடர்ந்த, தொலைதூர மலைப் பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு நிற்கப் பளிச்சிட்டு அலறும் ராக்ஷஸ மின்னல்கள், பயந்தோடும் பறவைக் கூட்டங்கள், ஊழித்தாண்டவம் போன்ற ஒன்றின் விசுவரூப தரிசனங்கள் தத்ரூபமாக அமைந்த பெரிய சித்திரத்தின் ஒருகோடியில் ஆணா பெண்ணா என்று அறிய இயலாத ஒரு மனித உருவம், இலக்கின்றி, ஆனால் உறுதியுடன் நடைபோட்டு முன்னேறி வருவதாக வரைந்திருந்தான். கருமேகங்களிலும் மின்னல்களிலும், பொங்கி ஆர்ப்பரிக்கும் கடலலைகளிலும் ஊடாடி ‘ஸிலுவெட்’ எனும் நிழலாக ஒரு முகம்- உணர்ச்சியற்றது போல் இருந்தாலும், ஒரு கோணத்தில் ‘கல் மனதை’ப் பிரதிபலிக்கும் அலட்சிய முகபாவம் எல்லாமாகத் தெரிந்தது.

இதற்கு ஷீலா தன் மனத்தினுள் வைத்திருந்த பெயர்- ‘முடிவற்ற தேடல்’. தன்னை, தன் வாழ்வை, மனநிலையைப் பிரதிபலிப்பதாக அச்சித்திரம் இருப்பதாக அவள் கருதியதால் தான் ஒரு ரகசியமாக அதை இவ்வளவு ரசித்தாள்.

‘நான் எங்கே போகிறேன்? எதைத்தேடுகிறேன், ஏன் இங்கு வந்தேன்? நான் செய்யும் காரியங்களின் பொருள் என்ன?,’ என்று எப்போதோ ஒருமுறை மனதில் கேள்வி எழுமே, அதற்கான விடை இந்தச் சித்திரத்தில் பொதிந்துள்ளதாக எப்போதும்போல் எண்ணி, இயலாமை கலந்த ஆவலுடன் அவசரமாக இப்போதும் தேடினாள்.

அரை நிமிஷம் கூட இல்லை. திறந்து பார்த்த வாசனைத் திரவிய பாட்டிலை வாசனை போய்விடப் போகிறதே என்று பயந்து அவசரமாக அழுந்த மூடிவைப்பது போலப் படீரென்று அவளுடைய மனக்கதவு மூடிக் கொள்ள, அதன் மேல் அழுத்தமாக நாதாங்கியை இழுத்துச் சார்த்தினாள் ஷீலா. வழக்கமான ஒரு தலைச்சிலுப்பலுடன் அறையை விட்டு வெளியேறினாள். ‘குக்கூ’ கடிகாரம் ஆறுமுறை கூவி நேரத்தை அறிவித்தது.

பங்களாவின் பின்புறம் இருந்த ஒரு சிறிய கட்டிடத்தை நோக்கி நடந்தாள். ராஜு நாய்களுக்கான உணவை அவைகளின் தட்டில் பரிமாறிக் கொண்டிருந்தான். ஷீலா உயர்ஜாதி நாய்களை வளர்த்துப் பராமரிப்பதில் நகரில் முதலிடம் வகித்தாள். அவளுடைய நாய்கள் பரிசு வாங்காத ‘டாக் ஷோ’ கிடையவே கிடையாது. அவற்றை அன்போடு பராமரிக்கவும், உணவளித்துக் கருத்தோடு கவனித்துக் கொள்வதற்காகவும் ராஜு அவன் மனைவி வனஜா இருவரும் வேலையில் அமர்த்தப் பட்டிருந்தனர்.

‘கிரேட் டேன்’ என்ற மிக உயர்த்தி ஜாதி இனத்தைச் சேர்ந்த, கன்றுக்குட்டி போன்ற நாய்கள் ஆணும் பெண்ணுமாக இரண்டு, ‘பாக்ஸர்’ இனத்து நாய்கள் இரண்டு, ‘ஐரிஷ் ஸெட்டர்’ என்ற வகையில் ஒன்றுமாக அந்த நன்றியுள்ள ஜீவன்களால் அந்தப் பெரிய அறை ‘கலகலப்பா’க இருந்தது.

“டெபீ, எப்படி இருக்கே?’, என கிரேட் டேன் பெண் நாயைக் கட்டிக் கொண்டு முகத்தோடு முகம் பதித்து முத்தாடினாள் ஷீலா. டெபி குட்டி போடப் போகிறது. நாய்ப்பிரியர்களின் வட்டாரம் இந்தக் குட்டிகளுக்காக ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது.

“சாப்பிடத் தகராறு செய்யுது மேடம். வழக்கத்தை விட ஏனோ கம்மியாத்தான் சாப்பிடுது. இதுக்கு மட்டும் மட்டன் ஜாஸ்தியாகவே தான் தர்றேன். நாளன்னிக்கு டாக்டர் வரப்ப டானிக் எதாச்சும் தரச்சொல்லணும்,” என்றான் ராஜு.

‘இந்த மாதிரி சாயந்திர வேளையில் மேடம் நாய்களைப் பார்க்கவே வர மாட்டாங்களே. ஞாயிறுகாலை பதினோரு மணிக்கு வந்து ஒரு அரைமணி நேரம் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுப் போயிடுவாங்களே. இன்னிக்கு என்ன ஆச்சு,’ என மனதிற்குள் வியந்து கொண்டான்.

நான்கில் ஒரு குழந்தையைக் கொஞ்சியதும் எல்லாம் ஓடி வந்து தாயின் அன்புக்காகப் போட்டியிடுவது போல எல்லா நாய்களுமாக வந்து ஷீலாவைச் சூழ்ந்து கொண்டன. ஒன்று அவள் முகத்தை நக்கியது. இன்னொன்று கையைச் செல்லமாகக் கவ்விற்று.

எல்லாவற்றையும் தட்டிக் கொடுத்தும், தடவியும் குசலம் விசாரித்த பின்பு, “வரேன் ராஜு. பத்திரமாப் பார்த்துக்கோ,” என்றபடி திரும்பப் பங்களாவை நோக்கி நடந்தாள்.

உள்ளே நுழைந்ததும் டிராயிங் ரூமின் ஒரு புறத்தில் ஐரோப்பிய பாணியில் அமைக்கப் பட்டிருந்த ‘மினி பாரை’ நோக்கிப் போனவள், சிறிய ஃப்ரிஜ்ஜைத் திறந்து கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஐஸ்கட்டிகளை நிரப்பிக் கொண்டாள். “நான் எனக்காக வாழ்கிறேன். ஹூ இஸ் அருண்? வாட் இஸ் லைஃப்?” என முணுமுணுத்தபடி ‘ஷிவாஸ் ரீகலை’க் கையில் எடுத்தாள்.

ஏதோ ஞாபகம் வரவே, டேபிள் மீது அப்படியே வைத்து விட்டுத் தன் ‘அப்பாயின்ட்மென்ட்ஸ்’ டயரியைப் பிரித்து, மாலை ஏழு மணிக்கான குறிப்பைப் பார்த்தாள்.

ஸ்டோர்ஸ் சூபரின்டெண்ட் சுந்தரமூர்த்தியின் பெண்ணுடைய பரத நாட்டிய அரங்கேற்றம் நகரின் பிரபல ஆடிட்டோரியத்தில் நடைபெறுகின்றது. செக்ரெடரி ப்ரியா நூறு தடவை நினைவுபடுத்தி அனுப்பி இருந்தாள். சுந்தரமூர்த்தி நல்ல மனிதர் பாவம், மேடம் போகாவிட்டால் மிகவும் மனவருத்தப் படுவார். அவர் மனைவி மாலதியோ அதை விட வெகுளி. அடுத்த முறை சந்திக்கும் பொழுது அழுதேவிடுவாள். இவள் போனால் ஏதோ கடவுளே வந்துவிட்டது மாதிரி சந்தோஷத்தில் மிதப்பார்கள். ‘ஒரு மாறுதலுக்காகப் போய்ப் பார்க்கலாமே,’ என நினைத்தாள் ஷீலா. அருண் அவள் வாழ்வில் புகுந்த பிறகு அவள் தனக்குத்தானே போட்டுக்கொண்ட திரையும், தன் கடந்த காலப் பயணத்தின் நிழல் கூட அண்ட விடாமல் கட்டிக்காத்த போலிவேஷங்களும் ரொம்பவே அதிகமாகி விட்டிருந்தன.

இப்போது மனதில் பாறாங்கல்லாகக் கனத்த சுமையைச் சிறிது நேரம் கீழிறக்கி வைக்க இது ஒரு வடிகால் என்ற எண்ணம் பிறக்கவே, ‘ஷிவாஸ் ரீக’லைத் திரும்ப அதன் யதாஸ்தானத்தில் வைத்து விட்டு, எப்போதும் அவளுடைய உத்தரவின்படி சமையல்காரரால் தயார் செய்யப்பட்டு ரெடியாக ஃப்ரிஜ்ஜில் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸை கிளாசில் நிரப்பிக்கொண்டாள்.

அப்படியே வெளியே செல்ல தயாராவதற்காகத் தன் அறையை நோக்கி நடந்தாள். அலமாரியைத் திறந்து நோட்டமிட்டாள். தான் வருடக் கணக்காகச் சீந்தாத வண்ண வண்ணப் புடைவைகள் கண்ணில் பட்டன. அவற்றில் ஒன்றை எடுப்பதற்குக் கை நீண்டது. ஜிலீரென்று தொண்டையில் இறங்கிய ஆரஞ்சுச்சாற்றின் குளிர்ச்சியும் புளிப்பும், சிறிது இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவையில் உடல் சிலிர்த்தது.

உடல் சிலிர்க்கும் போதெல்லாம். தலையைச் சிலுப்பிக் கொண்டு மனமூடியை அழுத்தப் பழகிக் கொண்டிருந்தவளாதலால் இப்போதும் அதையே செய்தாள். புடைவையை எடுக்க நீண்ட கை பின்வாங்கியது.

ஒரு அழகான பெண்ணின் உடலழகைச் சிறப்பாக எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்த ‘கஃப்தான்’ போன்ற கருநீல ‘ரா ஸில்க்’கினாலான உடையை எடுத்து அணிந்து கொண்டாள். அதற்குப் பொருத்தமான ஒரு இளநீல வண்ண ஸ்கார்ஃப் கழுத்தைச் சுற்றியது.

சின்ன ஒரு கறுப்பு நிறப் புள்ளியை நெற்றியில் பதித்துக் கொண்டவள், ரத்தச்சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை அணிந்து ‘பெர்ஃப்யூம்’ ஸ்பிரே செய்து கொண்டதும் கிளம்பத் தயார்.
தன் அந்தரங்கங்களில் குறுக்கிடாமல் டீஸன்டாக எட்டி நின்ற படியே அந்தப் பங்களாவிலேயே கீழே ஒரு அறையில் குடியிருந்த வண்ணம் பங்களாவை நிர்வகித்து வரும் ரமணி அம்மாளைக் கூப்பிட்டு, “நான் டான்ஸ் புரோக்ராமிற்குப் போய் விட்டு வருகிறேன். டின்னர் தேவையில்லை. ஒரு கிளாஸ் பால், சில பழங்கள், சில பிஸ்கட்ஸ் போதும், பை பை,” என ஒரு ஸ்வீட் ஸ்மைலுடன் காரில் ஏறிக் கொண்டதும், மாத்யூ காரைக் கிளப்பினார்.

******************************

ஷிவா மேடத்தைப் பார்த்ததும் சுந்தரமூர்த்திக்கும் மாலதிக்கும் உச்சி குளிர்ந்து விட்டது. ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்காத குறையாக விழுந்து விழுந்து உபசரித்து முதல் வரிசையில் கொண்டு அமர்த்தினார்கள். நிகழ்ச்சி துவங்கியிருந்தது. அலாரிப்பு முடிந்து அடுத்த அயிட்டம் ஆடிக் கொண்டிருந்தாள் பெண்- பதினைந்து வயதிருக்கலாம். நன்றாகவே லயித்து ஆடினாள். நட்டுவாங்கமும் வீணை புல்லாங்குழலுடன் பாடிய ஆண்குரலின் கம்பீரமும் இனிமையும் மனதைக் கொள்ளை கொண்டன.

ame
மேடையில் வீணா என்ற பெண் ஆடிக் கொண்டிருக்க சைலஜா என்ற பதின்மூன்று வயதுப் பெண் ஷீலாவின் மனமேடையில் ஆடினாள்.

இது என்ன விந்தை! அடுத்தபடி சைலஜா என்ன ஆடுவாள் என்று ஷீலாவுக்கு நன்றாகத் தெரியும். உள்ளம் படபடக்க, ஒருவிதமான பதட்டம் நிறைந்த எதிர்பார்ப்பில் அமர்ந்திருந்தாள்.

வீணையும் குழலும் ஒரு சுருக்கமான மாஞ்சி ராக ஆலாபனையைக் குழைத்தன. உருக்கமான ஒரு சூழ்நிலை உருவாகியது. கணீரென்றிருந்த பாடகரின் குரல் இப்போது குழைவுடன், ‘வருகலாமோ அய்யா’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடலைத் துவங்கியது. முகத்தில் தவிப்பு, பக்தி, ஏக்கம், சோகம் அத்தனையுமாக சைலஜா (வீணா தான்) வெளியிட்டு அபிநயித்தாள். ஷீலா தனது கடந்த காலத்தில் சஞ்சரித்தாள்.

ஜிம்மின் அமைதி நிறைந்த முகம் மனக்கண்ணில் தோன்றியது. பரிவோடு வருடும் பார்வை, வேதனையோடு அவளைத் தொட்டுத்தொட்டு மீண்டது. ஷீலா ஒரு நைந்த துணி பொம்மையென மாறித் தன் சக்தி எல்லாம் உறிஞ்சப்பட்டு விட்டது போல ஸீட்டில் தொய்ந்தாள். மனசு பால் போலப் பொங்கி, மூடியைத் தள்ள எத்தனித்தது. ‘எதைத் தேடி என் பயணம்?’ திரும்பவும் வினா உள்ளத்தில் விஸ்வரூபம் எடுத்தது. பணம், புகழ், பதவி, வசதி எல்லாம் அனுபவித்தாயிற்று. அன்பைக் கூட இவற்றால் வாங்கி அனுபவிக்க முடிந்ததே! இன்னும் எதைத் தேடுகின்றேன்- உள்ளம் பொருமியது- மனமேடையில் ஆடிய சைலஜா, நிஜ மேடையிலிருந்த பெண்ணுக்கு ஜோடியாக அபிநயம் பிடித்தாள், தன் உணர்வுகளைக் கொட்டிக் கலந்த வண்ணம்…….. பெருமூச்செறிந்தாள்.

அவள் தானே ஜிம்மின் அன்பைத் துறந்து, தங்கள் ஒரே மகளின் மழலையையும் மறந்து அமெரிக்காவிலிருந்து ஓடி வந்தாள். எதைத் தேடி வந்தாள்? அந்தத் தேடல் இன்னுமே தொடர்கிறது. தேடுவது என்னவென்று புரியாததால் தான் இந்தத் துக்கமும், உணர்ச்சிகளும் பொங்குகின்றன. தான் திசைதெரியாமல் தடுமாறுவதை மறைக்கத்தான் இந்தப் போலி வேஷங்கள். அடைத்து அடைத்து மூடி வைக்கும் மனது ஒரு நாள் எரிமலையென வெடித்துக் குமுறுமோ? வேஷதாரியாகி மமதையும் கர்வமும் பொங்க, ‘என்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்,’ என்று ஒரு ஒழுங்கு முறையற்ற வாழ்வை அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்- ஆனால், பொய்மை மிக்க மனது அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே!

மனமூடியை அழுத்தித் தாளிட்டவள், கும்பலுடன் சேர்ந்து கை தட்டினாள். உபசாரமாக, சுந்தரம் குடும்பத்தினருடன் ஐந்து நிமிடங்கள் பேசி விட்டு, பெண்ணைப் பாராட்டிப் பரிசும் அளித்துவிட்டு, வீடு திரும்பினாள் ஷீலா.

‘இன்று மாலை ஏதேதோ உணர்வுகள் பொங்கி என் மனதை அலைக்கழிக்கின்றன.’ சிந்தனைகளின் ஊடே அவசரமாகத் தன் சொற்ப உணவை முடித்துக் கொண்டவள் ‘வாக்மேனை’த் தேடி எடுத்துக் கொண்டாள். காஸட் அலமாரியைக் குடைந்து நாட்டியப் பாடல்கள் நிறைந்த காஸட்டுகளை எடுத்துப் பக்கத்தில் அடுக்கிக் கொண்டாள்.

இரவின் யாருமற்ற தனிமையில், முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு சுயரூபத்துடன் உலவ அவள் தயங்கவில்லை. ‘நடனமாடினார்’ என்ற பாடலைக் கேட்டபடி உடலும் மனமும் இசைந்து ஆட, கால ஓட்டத்தை மீறிய மன ஓட்டத்தில் மிதக்கலானாள் ஷீலா என்ற சைலஜா.

(தொடரும்)

*********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *