பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

17965287_1295239283863601_1167131361_n
134429018@N04_rராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – (108)

  1. நாம் நிலைக்க நீர்: உயிரின் ஆதாரம் உணவாகும்
    உணவின் ஆதாரம் பயிராகும் !
    பயிரின் ஆதாரம் நீராகும் !
    நீரின் ஆதாரம் மழையாகும்!
    மழையின் ஆதாரம் மரமாகும்!
    மரம் நிழல் தரும்!
    பசிக்கு கனி தரும்!
    நச்சுக் காற்றைத் தான் ஏற்று!
    நல்ல காற்றை நமக்குத் தரும்!
    தாயும், மரமும் ஒன்றாகும்!
    கொடுப்பதில் கடவுளுக்கு நிகராகும் !
    நீர் நிலைக்க மரம் வளர்ப்போம் !
    நாம் நிலைக்க நீர் காப்போம் !
    கேணியில் நீர் இறைத்துக் குளித்ததுண்டா!
    அருவியில் தலை வைத்துக் குளித்ததுண்டா !
    பயிருக்கு நீர் இறைக்கும் இறைப்பானில்
    குளித்துக் களித்ததுண்டா !
    குவளையில் நீர் எடுத்துக்
    குளித்தது முடியட்டும் !
    அலை பேசியில் அனுதினமும் தான் பேசி
    வாழ்க்கையை தொலைத்தது இன்றோடு போகட்டும் !
    இன்பம் தரும் இல்லத்தில் தனித் தீவுகளாய்
    இருந்ததெல்லாம் இன்றோடு தீரட்டும் !
    கிராமத்து வாழ்க்கையை நகரப் பிள்ளைகள்
    உணரட்டும் !
    நெல்லில் இருந்து தான் அரிசி வரும் என்று
    கட்டாயம் தெரியட்டும் !
    நெல் விளைவது மரத்தில் அல்ல என்ற
    உண்மை விளங்கட்டும் !
    உணவு தரும் உழவர்களின் உழைப்பு
    புரியட்டும்!
    இயந்திர வாழ்க்கையை இன்றோடு
    மறக்கட்டும் !
    விளை நிலங்கள், மனை நிலமாய்
    மாறாமல் இருக்கட்டும்!

  2. உயிர் நீர்…

    அருவியில் உருகிடும் நீரினிலே
    ஆடிப் பாடிக் குளிப்பதிலும்,
    உருவினில் பெரிய அலைகடலின்
    உப்பு நீரில் குளிப்பதிலும்,
    அருகினில் ஆறு குளங்களெனும்
    ஆயிரம் தீர்த்தம் அமிழ்வதிலும்,
    பெருமை மிக்கது நம்வயலில்
    பாயும் நீரில் குளிப்பதுவே…!

    -செண்பக ஜெகதீசன்…

  3. நீரின்றி அமையாது உலகு

    தலையசைக்கும் நாற்று
    தாலாட்டும் காற்று
    வயல்வெளியின் குளுமை
    வாலிபனின் கும்மாளம்
    சுட்டெரிக்கும் அனலில்
    பசுமைக் குடைபிடித்துக் குதூகலக் குளியல்
    காட்சிப் படிமங்கள் காலச் சுழற்சியில்
    கனவுகளாய்…….
    விவசாயி செய்யும் வேளாண்மையை
    விவரமறியாய் தலைமுறைக்குக் கற்பிப்பது யாரோ?
    கைவிடப்பட்ட இயற்கை
    தரிசு நிலமாக,
    தாரை வார்க்கப்பட்ட விலைநிலங்களாக,
    கிணறு தோண்டி சேகரித்த நீரெங்கே?
    நதிகள் ஓடிய பாதைகளெல்லாம் களவாடிய
    நரியின் தடங்கள்
    மணல் கூட மிச்சமில்லை
    ஊற்றுநீர் ஊற்றெடுக்க மரமில்லை
    மரம் வளா்க்கவோ மனமில்லை
    பாராள நினைக்கும் மனிதனே!
    பணம் பாதாளம் வரை பாயும்
    பள்ளம் பாய நீருண்டா?
    பாதாளம் தோண்டினாலும் நீரில்லை 
    பகுத்தறிய வேண்டுமையா நீயும்
    நாகரிக மனிதா!
    மாளும் இயற்கையை மீட்டெடுத்தால்
    பூமியின் மார்பகங்களில் நீரமிர்தம் நீளும்
    பூபாளம் பாடலாம் நாளும்.

  4. பசுமைப் புரட்ச்சி ஓர் கனவு?..
    ========================

    பச்சை வயல் பசுமைக் கதிர்..!
    பாய்ந்தோடும் குழாய்த் தண்ணீர்..!

    பயிர்கள் குவிந்த யிடம்…பசுமைக்கு..
    பச்சைத்தண்ணீர் ஒருகொடை..!

    பசிபோக்கும் நிறமும் இதுவே…நிலைக்கும்..
    பாரினிலோர் தொழிலிதுவே ..!

    மின்னும் நிறத்தில் பச்சை வண்ணம்..!
    கிள்ளைமொழி பேசும்கிளியின்நிறம்..!

    பச்சை சூழ்வயல் பார்க்கையில் நெஞ்சில்..
    பரவசம் தோன்றிடும்..!

    கொஞ்சும் செழுமை பசுமை எழுச்சியாய்..
    நெஞ்சம் நிறைந்திடுமின்பம்..!

    கால மாற்றத்தால் இயற்கை அழகையினி..
    =======================================
    காண்ப தரிது..!
    ============

    கனிந்த நீர் ஓடையெலாம் இப்போது..
    கழிவுநீர் ஓடையானது..!

    வானுயர்ந்த கட்டிட மதன்கீழ் மரம்போலே..
    வரிசையாய் வாகனங்கள்..!

    அளவற்ற அறிவியலின் மதி வளத்தால்
    பிளாஸ்டிக் கழிவுகள்..!

    சேறுகளில் நீரிரம் வற்றி விளைநிலத்துக்கு..
    ஊறுவிளை விக்குமவலம்..!

    கயல் கழனி கட்டிட மயமாக..
    வயலெங்கே போனது..!

    ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து..
    ஒழுகுகிற அமிலமழை..!

    தடுப்பணை கட்டி நேசத்தையும் பாசத்தையும்..
    தடுக்கின்றனர் அண்டைமாநிலத்தார்..!

    பெருங்கடன் சுமையெனும் தாகத்தைப் போக்க..
    சிறுநீர்குடிக்கும் போராட்டம்..!

    செயற்கை இரசாயன தீங்கின்றி மக்கள்வாழ
    இயற்கையை நேசிநீ..!

    வானத்தின் கனிந்த கண்ணீர் ஒன்றேநம்..
    ஆனந்தமெனக் கொள்வோம்..!

    வான் பொய்க்கா நிலை வேண்டும்..நலம்
    வாழும் வரம்வேண்டும்

    பசுமைப் புரட்ச்சி தழைத் தோங்க..
    பாரினில் மழைபொழியவேண்டும்..!

    எங்கும் பசுமை எதிலும் பசுமையென..
    பொங்கும் புரட்ச்சியாய்..

    தொலைந்து போன எண்ணங்கள் மறுபடி..
    உலர்ந்திடாது மலர்ந்திடுமா?..

    அன்புடன்
    பெருவை பார்த்தசாரதி

  5. பெருவை பார்த்தசாரதி wrote on 22 April, 2017, 23:21
    பசுமைப் புரட்ச்சி ஓர் கனவு?..

    நண்பர் பெருவை பார்த்தசாரதி,

    புரட்ச்சி, கற்ப்பனை, முட்க்கள், சொற்க்கள், கட்ச்சி – இப்படி வல்லின ஒற்றுக்கள் இரண்டு சேர்ந்து வாரா.

    புரட்சி, கற்பனை, முட்கள், சொற்கள், கட்சி என்று எழுதுவதுதான் சரி.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *