aj

அங்கம் -2 பாகம் -9

“ஓவ்வோர் அங்கமும் தன்னிடமுள்ள முழுமையற்ற தன்மையை நீக்கிப் பூர்த்தியாகத் தனது முழுமையை நோக்கிப் பிணைந்திட விரைந்து கொண்டு செல்கிறது!”

லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519)

“கிளியோபாத்ரா பல்வேறு நாட்டுத் தூதர்களோடு அவரவர் மொழியிலே பேசித்தான் பதிலளிப்பாள். சிறுபான்மையான சில காட்டுமிராண்டி நாட்டு அரசரோடு உறையாற்றும்போது மட்டும், அம்மொழி விளக்குநரின் உதவியை நாடுவாள். எதியோப்பியன், ஹீபுரூஸ், அரேபியன், சிரியன், பார்த்தியன், டிரோகிளோடைட்ஸ், மீடேஸ் [Troglodytes, Medes] மற்றும் சில தேசத்துத் தூதருடன் பேசும் போது அவரவர் சொந்த மொழியில் பேசித் தன் நண்பராக்கிக் கொள்வார். அவளுக்கு முன்னாண்ட எகிப்திய அரசருக்குஎகிப்திய மொழியில் உரையாடும் அறிவு கூட கிடையாது! அவர்களில் பலர் மாஸிடோனியா மொழியைக் கூடப் பேச விருப்பமின்றிப் புறக்கணித்தவர்!

புளூடார்க், கிரேக்க வரலாற்றுப் பதிவாளர் [Plutarch (46-120) A.D.]

“சில மாதர் கொண்டுள்ள ஆத்மாவில் சீஸரின் ஆங்கார உணர்ச்சியை நீ காண முடியும்.”

ஆர்டிமிஸியா ஜென்டிலெஷி ரோமானிய ஓவிய மாது (1593-1653)

“பேராசைக் குணம், கொண்டவரையே முடிவில் கொல்கிறது!”

டால்முட் புனிதநூல் [The Talmud: Yomah 86 b]

“அளவற்ற ஆசை, பேராசை, காமம் அனைத்தும் பைத்தியக் குணத்தின் கார மசாலாக்கள்.”

பெனிடிக் ஸ்பைனோஸா, ஒழுக்கவியல் (1632-1677)

“பேராசைத்தனமே ஒரு துர்குணம் ஆயினும், அதுவே நன்னெறிக்கும் தாயாக உள்ளது.”

குயின்டில்லியன் ரோமானியக் கல்வி மேதை (கி.மு.35-கி.பி.95)

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர், கிளியோபாத்ரா, கம்பள வணிகன், பணியாளி.

காட்சி அமைப்பு:

பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரசஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின்தாமும் உட்காருகின்றனர். சிறிது நேரம் கழித்து ஆங்கே ஜூலியஸ் சீஸர், அவரது அரசாங்கச் செயலாளர் பிரிட்டானஸ் மற்றும் ரோமானியக் காவலர் சிலரும் நுழைகிறார். டாலமியிடம் சீஸர் கப்ப நிதி பற்றிப் பேசும் போது கம்பள வணிகன் ஒருவன் விலை உயர்ந்த கம்பளத்துடன் அவர் முன்பு வருகிறான். கம்பளச் சுருளிலிருந்து எழுந்தகிளியோபாத்ரா, தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக்கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப்படுகிறார்.

அக்கில்லஸ்: [சீஸரை அணுகி வருத்தமுடன்] இதோ பாம்ப்பியின் அடையாள மோதிரம்!

ஜூலியஸ் சீஸர்: [சோகத்துடன் கையில் வாங்கிக் கொண்டு அழுகிறார்] இந்த மோதிரத்தைப் பாம்ப்பியின் கைவிரலில் முதன்முதல் போட்டவள் என்னருமைப் புதல்விஜூலியா! ரோமாபுரித் தளபதி கை மோதிரமிது! பரிசும், பாராட்டும் பெற வேண்டிய மோதிரமிது! கொலைகாரர் களவாடினாலும் விலை மதிப்பில்லா மோதிரமிது! … யாரங்கே! ரூஃபியோ! விலங்கோடு வா! கொலைகாரர் யாவரையும் கைது செய்! முதலில் போதினஸை இன்றே சிரச்சேதம் செய்ய வேண்டும்! டாலமியைக் கைது செய்து சிறையில்தள்ளு! அரண்மனை அனைத்தும் ரோமானியக் காவலரை நிறுத்து! கிளியோபாத்ராவுக்கு மட்டும் முழுப் பாதுகாப்பு அளித்திடு!

கிளியோபாத்ரா: [மனமுடைந்து சீஸரை அணுகிக் கண்ணீரைத் தன்னுடையால் துடைத்து விட்டு] என்ன அதிர்ச்சியான சேதி! என் நெஞ்சமும் கொதிக்கிறது! உங்கள்மருமகன் ரோமாபுரித் தளபதியைக் கொன்றவர் மூர்க்கவாதிகள்! உங்கள் அருமைப் புதல்வியின் கணவரைக் கொன்றவர் கொடூரவாதிகள்! எப்படித் தாங்கிக் கொள்ளும்உங்கள் நெஞ்சம்? எகிப்திய மாதான என்னால் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! எப்படி உங்களுக்கு நான் ஆறுதல் சொல்ல முடியும்? உங்களுக்கு அமைதி உண்டாக்கஎன்னிடம் உருக்கமான வார்த்தைகளில்லை! உங்கள் குடும்பத் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்!

aj1

ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவை அணைத்துக் கொள்கிறார்] நன்றி கிளியோபாத்ரா! என் கண்களில் கொட்ட வேண்டிய கண்ணீர் மழை, அருவிபோல் உன் கண்களில்பெய்கிறது! உன் பாச உணர்ச்சி என்னை நெகிழச் செய்கிறது. [போதினஸைப் பார்த்து சினத்துடன்] மூர்க்கனே! ரோமாபுரிக்கே நீ தீ வைத்து விட்டாய்! முரடனே! ரோமுக்கும், எகிப்துக்கும் தீராப் பகைமையை வளர்த்து விட்டாய்! மூடனே! ரோமாபுரித் தளபதி வீர மரணம் அடையாது, அடிமை நாட்டுப் பொடியன் ஒருவனால் கொல்லப் பட்டான்என்னும் செய்தி ரோமாபுரியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கப் போகிறது! நீங்கள் ரகசியமாய்ப் பாம்ப்பியைக் கொன்றது அவருக்குத் தெரியாது! என் ஆணைப்படிபாம்ப்பியை உங்கள் மூலம் பலிவாங்கிக் கொண்டேன் என்று ரோமானியர் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். என் மருமகனைக் கொன்றது மில்லாமல் என்னைப் பிறர்வெறுப்பதற்குக் காரணமானீர்! என் பகைவர் என்னை ஒழித்துக் கட்ட முனைவதற்கும் வழி வகுத்தீர்!

போதினஸ்: உங்கள் பகைவரை ஒழித்த எங்களைப் போற்றுவதற்குப் பதிலாக நீங்கள் தூற்றுகிறீர்! செய்நன்றி மறந்தீர்! பலிவாங்கும் பணியை நீங்கள் புரிந்தால் என்ன, நாங்கள் புரிந்தால் என்ன? ஒரே முடிவு தானே நிகழ்ந்தது! பாம்ப்பியின் மரணம்!

ஜூலியஸ் சீஸர்: ஒரே முடிவென்றாலும் ஆயுதமற்ற ரோமானியனைக் கொன்றது குற்றம்! அதுவும் ஆக்கிரமிப்பு நாட்டான் ஆதிக்க நாட்டானைக் கொன்றது முன்னதைவிடப் பெருங்குற்றம்! பாம்ப்பி எனது பூர்வீக நண்பன்! என்மகளை மணந்தவன். என் மருமகன்! ஈருபத்து ஆண்டுகளாய் ரோமாபுரியின் மாவீரன் எனப் பெயரெடுத்தவன்பாம்ப்பி! முப்பது ஆண்டுகளாய் மாபெரும் போர்களில் வெற்றிமாலை சூடியவன் பாம்ப்பி. அவன் பின்னால் நின்று ஒரு கோழை வீழ்த்தியது மாபெரும் கொடூரத்தனம்! [லூசியஸைப் பார்த்து] …. ஒழிந்துபோ! என்முன் நிற்காதே! அனைவரும் வெளியே செல்லுங்கள்.

[டாலமி, போதினஸ், அக்கிலஸ் அனைவரும் ரோமானியக் காவலர் பின்தொடர வெளியேறுகிறார்]

ரூஃபியோ: தளபதி அவர்களே! குற்றவாளிகளை எப்படித் தண்டிக்காமல் விடுவது? அப்படியே தப்பிச் செல்ல விட்டுவிட்டால், ரோமாபுரி மாந்தர் உங்கள் மீது வெறுப்புக்கொள்வார்! அதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ரோமாபுரின் சட்டப்படிக் கொலைகாரர் தண்டிக்கப்பட வேண்டும்!

ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] போதினஸைச் சிரச்சேதம் செய்! அக்கிலஸைச் சிறையிடு! டாலமியை நாடு கடத்து!

ரூஃபியோ: அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை. யாரையும் நான் சிறைப்படுத்தப் போவதில்லை. அவரைச் சிரச்சேதம் செய்யப் போகிறேன். [சீஸருக்கு வணக்கமிட்டுவெளியே செல்கிறான்]

கிளியோபாத்ரா: [சீஸரை நெருங்கிக் கனிவுடன் கன்னத்தைத் தடவி] என் கனவு பலித்தது! ஒரு கணத்திலே எகிப்தின் பட்டத்து ராணியாக என்னை ஆக்கி விட்ட உமதுதிறமையைப் பாராட்டுகிறேன். அதற்கு ஆயிரம் முத்தங்கள் பரிசு! [சீஸரை மீண்டும், மீண்டும் முத்தமிட்டு அணைத்துக் கொள்கிறாள்] … ஆனால் ஒரு வேண்டுகோள். டாலமியை நீங்கள் அவிழ்த்துவிடக் கூடாது! அந்தக் காளங் கன்றை வெளியே அலைய விடக் கூடாது! எனக்கெதிராக படை திரட்டுவான்! டாலமியின் கால்நிழல் எகிப்தில்மீண்டும் ஊர்ந்து செல்லக் கூடாது!

ஜூலியஸ் சீஸர்: டாலமியை என்ன செய்ய வேண்டும் என்பது பிரிட்டானஸ் ஒருவனுக்குத்தான் தெரியும்! பிரிட்டானஸ்! டாலமியைப் பின்பற்று! [பிரிட்டானஸ்டாலமியைப் பின்தொடர்கிறான்] [பரிவுடன் கிளியோபாத்ராவை நோக்கி] கண்ணே, கிளியோபாத்ரா! உனக்கும் நான் தக்க தண்டனை தர வேண்டும்! சதிகாரன் டாலமியின்மனைவி நீ! கொலைகாரன் டாலமியின் தமக்கை நீ! உன்னை என்ன செய்ய வேண்டுமென்று நீயே சொல்லிவிடு!

கிளியோபாத்ரா: [சற்று சினத்துடன்] பாலை வனத்துக்கு என்னைத் துரத்திய டாலமி என் கணவன் அல்லன்! கூடப் பிறந்த தமையனும் அல்லன்! எகிப்தை ஆள்பவரும், அவரது மனைவியும் ·பாரோ மன்னரின் பரம்பரையாக இருக்க வேண்டும் என்பது பூர்வீக விதி! என்னை விலக்கி வைத்து விரட்டியன் என் கணவன் என்பது என்றோ முறிந்துவிட்டது! நானிப்போது மணமாகாத ஒரு தனி மாது! எகிப்தின் ராணியாகிய பிறகு மறுமணம் செய்து கொள்வேன்! டாலமி தமக்கையான எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கொள்கிறேன்! [நடந்து போய் டாலமி விட்டுச் சென்ற அரச ஆசனத்தில் அமர்கிறாள்] மகாவீரர் சீஸர் அவர்களே! நீங்கள் ரோமாபுரிக்குப் போகும் முன்பு, நான்தான் எகிப்தின்ஏகபோக ராணி என்று எனக்குப் பட்டம் சூடி உலகுக்கு அறிவிக்க வேண்டும்.

ஜூலியஸ் சீஸர்: [மகிழ்ச்சியுடன் நோக்கி] அப்படியே செய்கிறேன், கண்மணி கிளியோபாத்ரா! உனக்கு மகுடம் சூட்டிய பிறகுதான் நான் ரோமாபுரிக்குச் செல்வேன். அதுமட்டும் உறுதி! …. ஆமாம், பட்டத்து ராணியாக முடி சூடிய பிறகு, யாரை நீ மணந்து கொள்ளப் போகிறாய்? யாரந்த அதிர்ஷ்டசாலி? நான் தெரிந்து கொள்ளலாமா?

கிளியோபாத்ரா: [எழுந்து நின்று தன்னைச் சிங்காரித்துக் கொண்டு] நான் வரப் போகும் கணவரைத் தேர்ந்தெடுத்து விட்டேன்! அவரொரு மாவீரர்! யாரென்று உமக்குச் சொல்லமாட்டேன்! நீங்களே அந்த திருமணத்தில் பங்கெடுத்து எம்மைப் பாராட்டுவீர்! என்னை நீங்கள் ராணி ஆக்கியதற்கு முதலில் நான், உமக்கு மாபெரும் பரிசை அளிக்கப்போகிறேன்!

ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவின் அருகில் அமர்ந்து] என்ன வெகுமதி எனக்கு அளிக்கப் போகிறாய்? சொல்ல மாட்டாயா கிளியோபாத்ரா? யாரந்த மாவீரன்?

கிளியோபாத்ரா: உமது வெகுமதி என்ன என்பது ரகசியம். அதை நான் உமக்குச் சொல்லப் போவதில்லை! அவை எல்லாம் சொல்லித் தெரிவதில்லை! நீங்களே கண்டுகொள்வீர்!

aj2

ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன் நெருங்கி] முதலில் நான் கேட்கும் பரிசை நீ கொடுப்பாயா?

கிளியோபாத்ரா: [சீஸரின் மார்பில் சாய்ந்து காதை வைத்து] மகாவீரர் சீஸரின் நெஞ்சம் ஏனிப்படிப் போர் முரசம் அடிக்கிறது? உமது மார்புத் துடிப்புக்கள் எனது மார்பில்ஏனிப்படித் தாவி வருகின்றன? உங்கள் கைகள் ஏன் நடுங்குகின்றன? மங்கை எவளும் உம்மருகில் அமர்ந்ததில்லையா? என்ன? என்னவாயிற்று? உங்கள் தொடைஆடுகிறதே! உடம்பு முழுதும் நடுங்கிறதே! கண்ணிமைகள் ஏன் மூடுகின்றன? நில நடுக்கம் போல் உடல் நடுக்க மாகிறதே! [கவலைப் பட்டு சீஸரைப் பிடித்துக் கொள்கிறாள்]

[கைகள் நழுவ நாற்காலியிலிருந்து சரிந்து சீஸர் தரையில் விழுகிறார்! கண்கள் மூடிப் போய் கைகால்கள் வெட்டி வெட்டி யிழுக்கின்றன. கிளியோபத்ரா எழுந்து மணியைஅடித்து சேடிகளை விளிக்கிறாள். சில ரோமானிய வீரர்களும், கிளியோபாத்ராவின் சேடிகளும் ஓடி வருகிறார்கள்.]

ரோமானியப் பாதுகாவலன்: [தயங்கிக் கொண்டு] மகாராணி! .. சீஸருக்கு .. காக்காய் வலிப்பு! [ஓடிச் சென்று ஒரு பெட்டியிலிருந்து இரும்புத் துண்டை எடுத்து வந்து சீஸரின்வாயைப் பிளந்து பற்களுக்கு இடையே வைக்கிறான். மெதுவாக சீஸரின் உடற்துடிப்பு நிற்கிறது!]

கிளியோபாத்ரா: [கவலையுடன் கண்ணீர் பொங்க] மகாவீரர் சீஸருக்கு இழுப்பு நோயா? [சூரியக் கடவுளின் முன்னின்று] சூரியக் கடவுளே! உன்னை வணங்குகிறேன்! ஜூலியஸ் சீஸரைக் காப்பாற்று! எனக்காகவும், எகிப்துக்காகவும் அவர் உயிருடன் வாழ வேண்டும். நீண்ட நாள் வாழ வேண்டும். அவருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது. … [ரோமானியரை விளித்து] சீஸரை விருந்தினர் அறைப் படுக்கையில் கிடத்துங்கள். [சேடிகளைப் பார்த்து] அரண்மனை மருத்துவரை அழைத்து வாருங்கள்! [ரோமானியரைப்பார்த்து] உங்கள் இராணுவ மருத்துவரைக் கூட்டி வாருங்கள்! உம், சீக்கிரம்! …

[ரோமானியர் சீஸரை மெதுவாகத் தூக்கிச் செல்கிறார்கள். சிலர் மருத்துவரை அழைத்துவரச் செல்கிறார்]

*********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *