செண்பக ஜெகதீசன்

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். (திருக்குறள்-333: நிலையாமை)

புதுக் கவிதையில்…
சேரும் செல்வம்
நிற்காது ஓரிடத்தில்
நிலைத்து.. 

அத்தகு செல்வம் பெற்றால்,
நிலைத்திடும்
அறச்செயல்களைச் செய்திடு…! 

குறும்பாவில்…

நிலைத்திடா செல்வம் நீபெற்றால்,
நிலைபெறு
நிலைத்திடும் அறச்செயல்கள் செய்தே…! 

மரபுக் கவிதையில்…

வந்து சேரும் செல்வமெலாம்
     -வாழ்நாள் முழுதும் நிலைப்பதில்லை,
எந்த நாளும் ஓரிடத்தை
   -ஏற்று நிலையாய் நிற்பதில்லை,
வந்து விட்டால் செல்வமது
  -வழியிது அதுதான் நிலைபெறவே,
சிந்தை நிறைவாய் அறச்செயல்கள்
  -செய்திடு வாழ்வில் வளம்பெறவே…! 

லிமரைக்கூ…

செல்வமோரிடம் நிற்பதில்லை நிலையாய்,
சேர்ந்தால் என்றுமது நிலைபெறும்வகையில்
செய்திடுவாய் அறச்செயல்கள் விலையாய்…! 

கிராமிய பாணியில்…

நிக்காது நிக்காது நெலயா நிக்காது
சேருஞ்செல்வம் நெலயா நிக்காது,
ஒரு எடத்தில நெலயா நிக்காது
ஓடுற செல்வம் நெலயா நிக்காது… 

செல்வம் ஏதும் வந்ததுண்ணா
சேத்துவைக்கப் பாக்காத,
அதவச்சி
நெலச்சி நிக்கிற நல்லகாரியம்
நெறய நீயும் செஞ்சிப்புடு… 

தெரிஞ்சிக்கோ,
நிக்காது நிக்காது நெலயா நிக்காது
சேருஞ்செல்வம் நெலயா நிக்காது…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *