மீனாட்சி பாலகணேஷ்

மறுபகிர்வு: தாரகை இணைய இதழ்

குழந்தையே ஆடு மரக்கிளையின் உச்சியில்
காற்றடிக்கும் போது தொட்டில் நன்றாக ஆடும்
மரக்கிளை உடைந்தால் தொட்டில் விழுந்து விடும்
தொட்டிலும் குழந்தையும் எல்லாமும் கீழே வந்து விடும்-
(நர்ஸரி ரைம்!)
^^^^^^^^^^^^^^^^^

குழந்தை கீதா தன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். பக்கத்தில் அமர்ந்து தான் படிக்கும் நாவலில் ஒரு கண்ணும், குழந்தை மேல் ஒரு கண்ணுமாக இருந்த ஷீலாவின் காதில் கீதாவுக்காகப் பாடிக் கொண்டு இருந்த காஸட்டில் இருந்து மேற்கண்ட ஆங்கில நர்ஸரி ரைம் பாடல் ஒலிப்பது விழுந்தது. நர்சரி ரைம்கள் எல்லாமே முக்கால்வாசி இந்த மாதிரி ஏன் அபத்தக் களஞ்சியங்களாக உள்ளன என்று எண்ணிக் கொண்டாள். முன் தலையிலும் லேசாகத் தட்டிக் கொண்டு, ‘அபத்தம்,’ என முனகினாள்.

எதையோ எழுதிக் கொண்டிருந்த ஜிம் ‘கட கட’வென்று அவளைப் பார்த்துச் சிரித்தான். “ஷீலா டியர், அந்தக் காஸட்டை நிறுத்தி விட்டு நீ தான் நம் கண்மணிக்காக ஒரு இந்தியப் பாட்டுப் பாடேன்,” என்றான்.

“ஆடாது அசங்காது வா கண்ணா,” என்று பாட ஆரம்பித்தாள் ஷீலா. கீதாக்குட்டி அம்மாவை வியப்புடன் நோக்கியபடி இருந்தவள், பாட்டு முடிந்ததும் ஜிம்மை முந்திக் கொண்டு ஒடோடி வந்து அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுத்தமாக ஒரு முத்தத்தைக் கன்னத்தில் பதித்தாள். ஜிம் இருவரையும் ஒருசேர அணைத்துக் கொண்டான். ஷீலாவின் உடல் சிலிர்த்து அடங்கியது. குழந்தையை அணைத்தபடி ஜிம்மை நோக்கிப் பொங்கிப் பிரவகிக்கும் காதலுடன் புன்னகைத்தாள்.

இவர்களுடைய இல்வாழ்வு ஒரு தெளிந்த நீரோடை போல சலனமற்று அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. பிறந்த குழந்தைக்குக் கூட இந்தியப் பெயராக வைக்க வேண்டும், அதற்கு ஒரு பொருளும் இருக்க வேண்டும் என ஜிம் விரும்பியதன் பயனாக, பெண் குழந்தைக்கு கீதாஞ்சலி என்று பெயரிட்டார்கள். இப்போது கீதாவுக்கு இரண்டு வயது நிரம்பி விட்டது.

இந்த இனிய நீரோடையில் கல்லெறிந்து சலனப் படுத்தவே சீனு திரும்பவும் இவர்கள் வாழ்வில் குறுக்கிட்டானோ?

இந்தியா சென்றவன், மாமா வெங்கடேசனைச் சந்தித்து, சைலஜாவைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டவன், திரும்பி வந்ததும் முதலில் அவளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

“லிஸா, குழந்தைகளுடன் இந்த ஈஸ்டர் வாரக் கடைசியில் சிகாகோ வரப் போகிறேன். உனக்கு சௌகரியம் ஆனால் உன்னையும் ஜிம்மையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்,” மேல் பூச்சாக இனிமையும் பணிவும் அப்பிய பேச்சு! மறுப்புச் சொல்லத் தெரியவில்லை. தெரியாமல் அல்ல- முடியவில்லை. ஏனென்றால் ஜிம்மிற்கு ஷீலா தன் உறவினர்களைச் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. வாழ்க்கை என்பது இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, மரங்கள் கிளைகளும் வேர்களும் விழுதுகளுமாகப் படர்ந்து அடர்ந்திருப்பது போல, மனித வாழ்வும் உறவு, நட்புக் கிளைகளால் தான் பலப்பட்டு நிற்கின்றதென்பதி ல் அவனுக்கு அசையாத நம்பிக்கை இருந்தது.

முதல் சந்திப்பு இரு குடும்பங்களுக்குமிடையே ஒரு சம்பிரதாயமான சந்திப்பாக இருந்தது. சீனுவின் இரு பெண் குழந்தைகளும் அமெரிக்க பாணியிலேயே வளர்க்கப் பட்டவர்கள்.

“மெட்ராஸ் ரொம்ப ஹாட். மகாபலிபுரம் இஸ் நைஸ். எனக்கு அந்த பீச் ரொம்பப் பிடித்தது,” இந்த ரீதியில் தான் லிஸா பேசினாள். பெண்கள் இருவரும் குழந்தை கீதாவுடன் ஒட்டவே இல்லை.

சீனுவும், “ஹாய் ஷீலா, ஜிம், நீங்கள் இரண்டு பேரும் நியூயார்க்கில் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். இப்போது ஸம்மர் வருகிறது. நன்றாக இருக்கும்,” என நுனிநாக்கு ஆங்கிலத்தில் அமெரிக்க உச்சரிப்பில் கூறியது மிகவும் செயற்கையாகப் பட்டது.

ஜிம் இவர்களை சட்டென்று எடை போட்டு விட்டான். ஷீலாவின் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று சிறிது கூடத் தனது வெறுப்பை வெளியிடாமல் சுமுகமாகப் பழகினான்.

அடுத்த முறை சீனு வந்தது ஏதோ மெடிக்கல் கான்ஃபரன்ஸ் என்று- “லிஸாவிற்கு ஹாஸ்பிடலில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறது. அதனால் வர முடியவில்ல,” என்றான்.
ஷீலா பண்ணியிருந்த பீன்ஸ் பொரியலையும் வெங்காய வற்றல் குழம்பையும் வக்கணையாக ஒரு கை பார்த்து விட்டு, “நான் சாதாரணமாக அமெரிக்கன் டைப் உணவு தான் சாப்பிடுவது. ஷீலா, எனக்கு ரொம்ப ஆச்சரியமக இருக்கிறது. யூ ஹாவ் நாட் கிராஜுவேட்டட் டு அமெரிக்கன் டைப் ஆஃப் லிவிங்- (அமெரிக்க பாணியில் வாழ நீ இன்னும் பழகிக் கொள்ளவில்லை). அமெரிக்கனைத் திருமணம் மட்டும் செய்து கொண்டிருக்கிறாய்,” எனச் சிறிது உரிமை எடுத்துக் கொண்டு கிண்டல் செய்யும் வரை வந்து விட்டான்.

‘அற்பத்துக்கு யோகம் வந்தால் அர்த்த ராத்திரி குடையோ?’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள் ஷீலா. “ஜிம்மிற்கு இந்திய உணவு, கலாச்சாரம் எல்லாவற்றிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு,”என்று கூறினாள்.

மூன்றாம் முறை சீனு வந்த போது ஜிம் ஏதோ ஒரு கான்ஃபரன்ஸுக்காக பாரிஸ் சென்றிருந்தான். பெட்டியோடு வந்து நின்ற சீனு, “சொந்தக்காரி நீ இருக்கும்போது நான் ஏன் ஹோட்டலில் தங்க வேண்டும்? இங்கேயே இரண்டு நாள் இருக்கிறேனே,” என்று ரொம்ப உரிமை எடுத்துக் கொண்டு கூறிய போது, “போடா வெளியே. எனக்கு உன்னுடைய நட்பே தேவையில்லை,” என்று வாசற் கதவில் இருந்து பிடித்துத் தள்ளவா முடியும்? ‘தொலைந்து போ,’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அனுமதித்தாள் ஷிவா. கண்ணியமாகத் தான் நடந்து கொண்டான் சீனு. ஆனால் அவன் பேச்சு தான் கண்ணியத்தின் எல்லையைப் பலமுறை கடந்து அவளைப் பொறுமை இழக்க வைத்தது.

“இந்தியனான என்னை மணந்து கொண்ட பிறகும் கூட இத்தனை வருஷங்களில் ஒரு முறையாவது லிஸா புடைவை அணிய ஆசைப் பட்டதில்லை. நீ என்னடாவென்றால் புடைவையில் மாமி வேஷம் போடுகிறாய். வெஸ்டெர்ன் மாடர்ன் ட்ரெஸ்ஸில் உன் ஃபிகர் எத்தனை நன்றாக இருக்கும் தெரியுமா?” என்றபோது, கோபத்தில் முகம் சிவக்க, “சீனு, எனக்கு இந்த மாதிரிப் பேச்சுகள், அவை புகழுரைகளே ஆயினும், ரசிப்பதில்லை,” என்று முகத்திலடிப்பது போலக் கூறினாள்.

மாலை டின்னர் தயாரிக்கும் பொழுது, “நீ ஏன் ரசம், சாதம், சப்பாத்தி என்று பண்ணிக் கொண்டு கஷ்டப்படுகிறாய்? உன் மடிசஞ்சி அமெரிக்க அகமுடையான் தான் ஊரிலில்லையே. வாயேன், போய் ஹாம்பர்கர் சாப்பிட்டு விட்டு வரலாமே,” என்றான்.
“நான் ஜிம்மிற்காகவோ, ஜிம் எனக்காகவோ எங்களை ஒன்றும் மற்றிக் கொள்ள முயலவேயில்லை சீனு. நாங்கள் இயற்கையாக எங்கள் சுபாவப்படி இருக்கிறோம். நீ உன்னுடைய கண்ணியமான பேச்சின் எல்லைகளை மிகவும் மீறுகிறாய். என்னைக் கோபப்படுத்தாதே,” என்றாள் ஷீலா.

சுரணையில்லாமல் “மன்னித்துக் கொள் ஷீலா,” என்றான். மனத்திற்குள் அவளை உயர்வாக ஒரு பீடத்தில் அல்லவோ அமர்த்தியிருந்தான். அதன் காரணமாகத் தானே அவளிடமிருந்து பயந்து ஓடினான். இன்னும் அந்தத் தாழ்வு மனப்பான்மையில் இருந்து அவன் விடுபடவில்லையே! அதன் வெளிப்பாடுகள் அல்லவோ இந்தப் போலி வேஷங்களும், அலட்டல் பேச்சுகளும்! தான் அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு இங்கேயே செட்டில் ஆகி விட்டதை வாழ்வில் ஒரு சாதனையாகக் கருதி இறுமாந்திருந்தான்.

இதென்னடாவென்றால் இவளும் அல்லவோ ஒரு அமெரிக்கப் பேராசிரியரை மணந்து கொண்டு இருக்கிறாள். போதாக் குறைக்கு, தன் இந்தியக் கலாச்சாரத்திலிருந்து இவளுக்கு அதிகம் ஒன்றும் மாற வேண்டியிருக்கவில்லையே. இப்படி ஒரு போட்டி மனப்பான்மையில் சீனுவின் உள்ளத்தில் ஆத்திரம் பிறந்து வளர்ந்து வந்தது. “இவளை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும்,” என்று நினைத்துக் கறுவிக் கொண்டான்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் தான் கரையுமே, ஷீலாவின் மனது மென்மையானது தானே- சீனுவைப் போன்ற வெற்றுப் பேச்சாளன் வாய்ச்சவடால் அடித்தே அவள் மனத்தில் ஒரு பெரும் புயலை உருவாக்கினான்.

எத்தனையோ முறைகள் ஷீலாவின் வீட்டிற்கு வந்து போனான். ஒரு முறை சொன்னான், “தத்துவமும் வேதாந்தமும் பேசிக் கொண்டே வாழ்நாளைக் கழிக்கத் தான் நீ அமெரிக்கா வந்தியா ஷீலா? இந்த நாட்டில் ரசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் எத்தனையோ இருக்கிறது. இங்கே ஒரு சுதந்திரப் பறவையாகப் பறப்பதற்கு இயலும். தளைகளை உடைத்தெறிய முடியும்….’புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை,’ என்ற பாட்டை நீ கேட்டிருக்கிறாயா?”

ஒருநாள் லேசான மதுவின் போதையுடன் இத்தகைய ஒரு வாக்குவாதத்தை ஷீலாவுடன் ஆரம்பித்தான். ஷீலாவுக்கு ஒருநாள் ‘சேஞ்ச்’ ஆக இருக்கட்டுமே என்று ஜிம் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து தனக்குத் தெரிந்த இந்தியச் சமையலைத் தயார் செய்து கொண்டிருந்தான்.

மூன்று வயது கீதா ஜிம்மின் அருகில் ஒரு குட்டி நாற்காலியில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தது.

“யாரைப் பற்றி இப்போது அந்தப் பாட்டை உவமை கூறுகிறாய்?’ என்று ஏளனமாக ஷீலா கேட்டதும், அடித் தொண்டையில் பேசினான் சீனு.

“உன்னைப் பற்றித் தான் ஷீலா. பெருமைப் பட்டுக் கொள்ளாதே. உன் புத்தியும் அறிவுக் கூர்மையும் நீ விரும்பிய மெடிக்கல் காலேஜ் அட்மிஷனை உனக்கு வாங்கித் தந்ததா? இல்லையே- உன் பாட்டும் நடனமும் எல்லாம் நீ கலைவானில் ஒரு தாரகை என நிரூபிக்க உதவியதா? இல்லையே- இங்கே வந்து ஏதோ அமெரிக்கன் புரஃபஸருக்கு சாம்பாரும் இட்லியும் பண்ணிப் போட்டுக் கொண்டு நீ உன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய். நீ எங்கே? உன் தனித்துவம் எங்கே? நான் உன்னிடம் கண்டு பயந்து ஓடிய சுடர் விடும் உன் புத்திசாலித் தனம் எங்கே?

“உன் முன்பு நான் ஒரு சராசரி ஆள் தான் என்று எண்ணி உன்னை நிராகரித்தேன். இந்த இதயத்துள் நீ உயர்ந்த ஒரு இடத்தில் இருந்தாய். உன்னை நிமிர்ந்து பார்க்கவே எனக்குக் கூசும். ஆனால் என் தேவதை வெறும் மண்பொம்மை தான் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

“தளைகளை உடைத்தெறி. சிறகுகளை விரித்துச் சுதந்திரமாக வானில் பறக்கக் கற்றுக் கொள்- நான் சொல்லித்………….”

“சீனு, ஷட் அப்,” வீறிட்ட ஷீலாவின் குரலைத் தொடர்ந்து, கண்ணாடித் தம்ளர் ஒன்று விசிறியடிக்கப் பட்டு ஆரஞ்சு ஜூஸுடன் உடைந்து கார்ப்பெட்டில் வழிந்தது. ஜிம் கிச்சனில் இருந்து ஓடி வந்தான்.

ஷீலாவின் உடல் ஹிஸ்டீரியா வந்தது போல ‘கிடு கிடு’வென்று நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் வெறுப்பும் வெறியும் தெரிந்தன. “கெட் அவுட் ஆஃப் மை ஹவுஸ், நௌ,” தடுமாறியபடி கைகளை ஆட்டிக் கொண்டு சீனுவை நோக்கிக் கத்தினாள். ஒன்றும் புரியாமல் நின்ற ஜிம்மிடம் சீனு ஏதோ விளக்கிக் கூற முற்பட்டான்.

“ஷீலா, அமைதியாக இரு,” என்று அவளை அணைத்துக் கொண்டான் ஜிம். “கெட் ரிட் ஆஃப் ஹிம்,” என்று திரும்பவும் கத்தினாள் ஷீலா.

“சீனு, தயவு செய்து நீ இப்போது இங்கிருந்து போய் விடு. அவள் மிகவும் ‘அப்ஸெட்’ ஆகி இருக்கிறாள். பிறகு பார்க்கலாம்,” அன்று அவனை வெளியே அனுப்பிய ஜிம், ஷீலாவை அமைதிப் படுத்த முயன்றான்.

மனத்தின் நிலவறையில் இட்டு மூடி வைத்த புண்களைக் குரூரமாகக் கிளறி விட்டதால் அத்தனை ஊமை வலியும், எரிமலை போல் பொங்கி வழிந்து, ஆத்திரமும் வெறியுமாக மாறி ஷீலாவின் மென்மையான மனம் பாதிக்கப் பட்டிருந்தது.

“ஜிம், நான் குழப்பத்தில் இருக்கிறேன். தலை சுற்றுகிறது. என்னை அணைத்துக் கொள்ளேன். யாரும் என்னை உன்னிடமிருந்து பிரிக்க முடியாதவாறு இறுகக் கட்டிக் கொள்ளேன்,” என்று பரிதாபமாக இறைஞ்சியபடி மயங்கிச் சாய்ந்தாள்.

பயந்தபடி மூலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த குழந்தை கீதாவை ஒரு கையில் பிடித்தபடி, “அம்மாவுக்குத் தலைவலி டார்லிங். டாக்டரைக் கூப்பிட்டுக் காட்டலாமா?” என்றபடி சமாதானம் செய்து, ஷீலாவின் மயக்கத்தைத் தெளிவித்து, குழந்தையை அணைத்தது போல் அவள் பக்கத்தில் உட்கார்த்தி வைத்து விட்டு டாக்டருக்குப் ஃபோன் செய்தான் ஜிம்.

ஜிம் எதிர்பார்த்த்து போல அது அவ்வளவு சாதாரணமான மயக்கமாக டாக்டருக்குத் தெரியவில்லை. எல்லாவற்றையும் விவரமாக ‘டிஸ்கஸ்’ செய்தவர், மனோதத்துவ நிபுணர் மற்றும் நரம்பியல் சம்பந்தமான டாக்டர்களையும் பார்க்கச் சொன்னார்.

அத்தனை மருத்துவ ஆலோசனைகளுக்குப் பின் என்னவெல்லாமோ முழநீளப் பெயரைச் சொன்னார் நியூரோ ஸ்பெஷலிஸ்ட். மனோதத்துவ நிபுணர் தம் பங்குக்கு இன்னும் சிலவற்றையும் பட்டியலில் சேர்த்து, ‘ஷீலாவுக்குத் தேவை மன அமைதி. பழைய சலனம் தரும் எண்ணங்களைக் கிளறக் கூடாது,’ என்று கூறி எச்சரித்திருந்தார்கள். ‘தேவையானால் மருந்து தரலாம். இப்போது கொஞ்சம் ‘டிப்ரஷன்’ என்று மனம் நொந்து போயிருக்கும் நிலையில் இருக்கிறாள். ஆதரவாகப் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றனர்.

ஷீலாவின் பாட்டும் பேச்சும் குறைந்து போயின. ஒரு பொம்மை போல, குழந்தையின் தேவைகளைக் கவனித்தாள். அடிக்கடி ஒரு வெறுமை நிறைந்த பார்வை.

ஜிம்மின் இதயம் துயரத்தில் கசிந்தது. வெங்கடேசனுக்கு ஒரு மாதிரியாக விவரம் தெரிவித்திருந்தான்.

ஒருநாள் ஜிம் வேலைக்குச் சென்றிருந்த போது சீனு ஃபோன் செய்து பேச முயன்றிருக்கிறான். அவன் குரலைக் கேட்டதுமே கோபத்தில் வெறிபிடித்தது போல் ஷீலா ஃபோனைத் தூக்கி எறிந்து உடைத்திருக்கிறாள். ஜிம் வீடு வந்ததும் மோட்டுவளையை வெறித்தபடி அமர்ந்திருந்தவள், அழுதாள், சிரித்தாள், அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள். திடீரென்று குழந்தை மீது முத்தமாரி பொழிந்தாள்.
ஜிம்மின் நிலை பரிதாபகரமானது. குழந்தையை பேபி ஸிட்டரிடம் விட்டு விட்டு, ஷீலாவை மருத்துவமனையில் சேர்த்தான்.

மருந்தும், ஓய்வுமாக நாட்கள் ஓடின. கிட்டத்தட்ட இரு மாதங்கள் கழிந்த பின்னரே, கொஞ்சம் கொஞ்சமாக சாதாரண நிலைக்குத் திரும்பினாள் ஷீலா.

*********************************

ஷீலா இப்போதெல்லாம் மிகவும் சிந்தனைக்கு உட்பட்டாள். மணிக்கணக்காக எதையோ யோசித்து மூளையைக் குடைந்து கொண்டிருந்தாள்.

ஒரு வெள்ளிக்கிழமை மாலை- வார இறுதி ஆரம்பம் என எல்லாருமே உற்சாகமாக இருந்தனர்.

“ஜிம், உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்,” என்றாள். ஜிம் வெளியே எட்டிப் பார்த்தான். குழந்தை கீதா பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் மணல் நிறைந்த தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தைகளின் தாய் ஜேன் அவர்களைக் கண்காணித்தபடி சிறிது தொலைவில் அமர்ந்து ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தாள்.

“ஹாய் ஜேன்! என் கீதாவையும் ஒரு அரை மணி நேரம் கவனித்துக் கொள்ள முடியுமா? ஒரு முக்கியமான வேலை திடீரென வந்து விட்டது,” ஜிம்.

“நோ பிராப்ளம்,” என்று ஜேன் சினேக பாவமாகப் புன்னகைத்தாள்.

ஷீலாவின் முகம் சீரியஸாக இருந்தது. கடந்த இரு மாதங்களில் ரொம்பவே மாறிப் போயிருந்தாள். கண்களின் கீழே கருவளையங்கள், காய்ந்த, லிப்ஸ்டிக் காணாத உதடுகள், முனைந்து தீட்டிக் கொள்ளும் மேக்கப் இல்லாத கண்கள், இந்தியப் பாரம்பரியப் பண்புகளிலேயே ஜிம்மிற்கு மிகவும் பிடித்த நெற்றிப் பொட்டு கூட வைத்துக் கொள்வதில்லை ஷீலா.

அவளையே சில கணங்கள் இரக்கத்துடன் பார்த்த ஜிம், “யெஸ், ஸ்வீட் ஹார்ட், டெல் மி, உன் ஜிம்மிடம் சொல், என்ன வேணும் சொல்…”

பார்த்தாள். அப்படி அவன் கண் வழியே புகுந்து இதயத்தையே துழாவும் பார்வை. புகுந்த கண்களிலும் தான் மட்டுமே இருப்பதைக் கண்டாளோ என்னவோ! தன்னைத் தாங்க, தான் நீந்த ஒரு அன்புப் பிரவாகம் இருக்கக் கண்டாள். அந்த இருப்பு தான் அவளைப் பயமுறுத்தியது! ‘இதற்கு எனக்கு அருகதை உண்டா? என் மனம் விட்டு விடுதலையாகி சிட்டுக் குருவியைப்போல் பறக்கத் துடிக்கிறதே, உன் அன்புக்கு எனக்கு இனித் தகுதி இல்லை. நான் என் வழியில் போகத் துடிக்கிறேன். எனக்கு விடுதலை தா. என்னையே நான் தேடப் போகிறேன். இது தான் என் தலையெழுத்து என்றால் என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும். நான் தயார். என்னைப் பரிந்து காத்துப் போற்றாதே. நான் அதற்குத் தகுதி அற்றவள். உன் உள்ளம் கடல் போல விசாலமானது. அத்தனை விசாலத்திலும் என்னை நிரப்பி வைக்காதே. என்னை விட்டுவிடு. என் அன்பின் சின்னமான குழந்தையையும் என் நினைவாக வைத்துக் கொள். என்னால் உன்னத்தனை அன்பைச் செலுத்தி அந்தக் குழந்தையை ஒரு நல்ல மனித உயிராக வளர்க்க முடியாது. உரமிடப் படாத செடியைப் போல அது வாடி நசித்து விடும்.’

எண்ணங்கள் பெரும் அலைகளென பொங்கிப் பொங்கி எழுந்தன.

“ஷீலா, டார்லிங், சொல்லம்மா,” அவள் கைகளைப் பற்றித் தன் நெஞ்சில் பதித்துக் கொண்டான்.

மெல்லத் தன் விரல்களை அவன் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டாள். “ஜிம், ஐ வான்ட் எ டிவோர்ஸ். உன்னை விட்டுப் பிரிய விரும்புகிறேன்,” அழுத்தமாக ஆனால் மெல்லிய குரலில் கூறினாள்.

இது அவன் எதிர்பாராதது. “ஏன் ஷீலா?”

“என்னால் விவரித்துச் சொல்ல இயலவில்லை. உன் வாழ்க்கையை நான் நரகமாக்கிக் கொண்டு இருக்கிறேன் என்று மட்டும் மிக நன்றாகத் தெரிகிறது எனக்கு. என் பாதை மாறி விட்டது ஜிம். என்னை நான் உணராததால் தான் இத்தனை கஷ்டங்களும் வந்தன. மனம் சிதைந்து போனேன். வாழ்வில் எனக்கு வேண்டியது என்ன என்று இனித்தான் நான் தேட வேண்டும். எனக்கு விடுதலை தா,” குழந்தையைப் போல யாசித்தாள்.

அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஜிம்மின் கண்களில் இனம் புரியாத ஒரு கலக்கம்

“நீ என்னிடமிருந்து ஓட வேண்டாம் ஷீலா. இப்படியே இருந்து கொண்டு உன் மனதில் உள்ளதைத் தேடி வெளிக் கொணரலாம் இல்லையா? நான் உன்னிடம் மனைவி என்ற உரிமைகளைக் கூட எதிர் பார்க்க மாட்டேன். தாயாகவும் நீ இருக்க வேண்டாம். இங்கு என் கண் எதிரே ஒரு தேவதையைப் போல் இருந்து கொண்டிரேன் அன்பே,” தழு தழுத்தன வார்த்தைகள்.

எத்தனை அழகாகச் சிந்தித்து வைத்திருந்தாளோ, “முடியாது ஜிம், இங்கு இருந்து கொண்டிருந்தால் என் பொருட்டு நீ படும் துயரம் என்னால்ல் காணச் சகிக்காது. நான் தனியாக வெளியேற வேண்டும். இன்று, இப்போது எனக்கு தயவு செய்து விடுதலை கொடு. என்றேனும் நான் தேடும் பொருளுக்கு விடை கிடைத்தால், உன்னிடமே திரும்பி வருகிறேன்,” அழுத்தமாகச் சொல்லி விட்டு எழுந்து கீதாவைத் தேடி வெளியே போனாள் ஷீலா.

ஜிம்முக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. அவள் திடமனதுடன் சிந்தித்து எடுத்த முடிவுடன் தான் இதைக் கேட்கிறாள்.

அவளை ‘ட்ரீட்’ செய்த மனோதத்துவ நிபுணருடன் கலந்து பேசி, அவள் கேட்டபடி செய்வது தான் உசிதம் என்று பலவிதமான ஆலோசனைகளின் பின்பு முடிவு செய்தான். ஷீலாவுக்கு விவாகரத்து கொடுத்தான். கடந்த ஆண்டில் மிகவும் மன நோயால் அவதிப்பட்டதாலும், ஜிம் மிகவும் வேண்டிக் கொண்டதாலும் குழந்தை கீதாஞ்சலி தந்தையிடமே இருக்க கோர்ட் தீர்ப்பளித்தது.

(தொடரும்)

***********************************************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *