மீனாட்சி பாலகணேஷ்

என் கனவுகளின் வானில் மிதக்கும் மாலைநேரத்து மேகம் நீ;
என் அன்பின் தாபங்களால் உனக்கு வண்ணங்களும் வடிவங்களும்
தருகிறேன்.
முடிவற்ற என் கனவுகளின் கருவான நீ எனக்கே சொந்தம், எனக்கே
சொந்தம்-
(-தாகூர்)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ameஅமுதா இன்னும் கொஞ்சம் உருளைக்கிழங்குப் பொரியலைக் கணவனின் தட்டில் போட்டாள். “என்னங்க, ரொம்ப யோசனையா இருக்கீங்க? தட்டிலே என்ன பதார்த்தம் இருக்குன்னே தெரியாம சாப்பிடறீங்களே,” என்றதும், மனைவியை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான் ஆடலரசு.

“அமுதா, நீயும் தான் சாப்பிட உட்காரேன். சேர்ந்தே சாப்பிடலாம். பசங்க தான் பக்கத்து வீட்டு பர்த்டே பார்ட்டிக்குப் போயிட்டங்களே,” என்று கரிசனத்துடன் கூறினான். இது எதற்கோ பீடிகை என்று அமுதாவுக்குப் புரிந்தது. இந்தப் பத்து வருடங்கள் தாம்பத்தியத்தில் அவனை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள் அவள். “சரி சாப்பிடறேன். ஏதோ பெரிய விஷயம் சொல்லப் போறீங்கன்னு தெரியுது. கேட்டுக்க நான் ரெடி,” ஆர்வத்துடன் அவனுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்தாள்.

அமுதா பி. ஏ. தமிழ் இலக்கியம் படித்தவள். ஆனால் தன் பெயருக்குப் பின்னால் முழ நீளத்துக்கு என்னென்னவோ மருத்துவ டிகிரிகளை அடுக்கிக் கொண்டிருக்கும் டாக்டரான கணவன் ஆடலரசுக்கு அவளுடைய அன்பும் பரிவும் தான் பெரிய மருந்து என்பது உண்மை. சிரித்த முகமும், கணவன் குறிப்பறிந்து, மனம் அறிந்து சமயத்துக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதிலும் அமுதா மிகவும் புத்திசாலி. ஆடலரசுக்குக் கிடைத்த மருத்துவப் பட்டங்களை விட மிகவும் உயர்வான பட்டம் அமுதாவின் வாழ்க்கைத்துணை என்பதும் மணியான இரு குழந்தைகளின் தந்தை என்பதும் தான்.
தன் மனதை ஏதாவது பாதித்தாலோ, சிந்தனையில் ஆழ்த்தினாலோ அவளுடன் அதைப் பற்றிப் பேசி ஒரு முடிவு காண்பது ஆடலரசின் வழக்கம். இன்றும் அப்படித்தான் பேச எண்ணியிருந்தான். எங்கே ஆரம்பிப்பது என்று யோசித்தபடி சோற்றைக் கிளறிக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் சனிக்கிழமை. மாலையில் ஹோட்டல் ‘தாஜ்’ல் சந்திக்கலாமா என்று ஷீலாவுக்கு இரண்டாவது முறையாகப் போன் செய்திருந்தான். “நான் மிகவும் ‘பிஸி’. ஊரிலிருக்க மாட்டேன். திரும்பவும் நானே உங்களைக் கூப்பிடுகிறேன். எப்போது சந்திக்கலாம் என்று கூறுகிறேன்,” என ஷீலா கூறியிருந்தாள்.

இரு தடவைகள் போன் செய்ததற்கு இடையே தன் நண்பர்கள் வட்டாரங்களில் இருந்து, சொஸைட்டியில் மேல் தட்டில் இருக்கும், தன்னை ‘கன்சல்ட்’ செய்ய வரும் ஓரிரு ஓட்டை வாயர்களிடம் இருந்து, அரசல் புரசலாக ஷீலா ராபர்ட்ஸைப் பற்றி என்னவெல்லாமோ கதைகள் கேள்விப் பட்டிருந்தான் ஆடலரசு.

ஷீலாவை நேரில் சந்திக்க ஆவலாக இருந்தான். அவள் தன்னைச் சந்திப்பதைத் தவிர்க்கப் பார்க்கிறாள் என்பது ஆடலரசுக்கு இப்போது உறுதியாகத் தெரிந்து விட்டது. பழைய நட்பின் உரிமையால் அவளுக்கு உதவி செய்ய விரும்பினான். அவள் தன் அமெரிக்கக் கணவனை விவாகரத்து செய்து விட்டு வந்து இங்கு பல ஆண்டுகளாகத் தன்னந் தனியாக பிஸினஸ் செய்து கொண்டு ‘ஏனோ தானோ’ என ஒரு வாழ்க்கை நடத்துவதும் அவனை மிகவும் பாதித்திருந்தது. இதைப் பற்றித் தான் அமுதாவிடம் பேச விரும்பினான்.

எல்லாவற்றையும், தங்கள் பள்ளிப் பருவம் ஆகியவற்றையும் பற்றி விலாவரியாக விளக்கிக் கூறியவன், “அமுதா, உனக்கு நான் முந்தியே சொல்லியிருக்கேனில்லையா? இந்த சைலஜா தான் காரணம், நான் மெடிக்கல் படிச்சு பெரிய டாக்டரா வரதுக்கு வழி வகுத்ததே இவள் தான். வாழ்க்கையிலே நான் உயர்ந்த கல்வியை ஒரு சவாலாவே எடுத்துக்கிட்டதுக்கும் இவள் தான் காரணம். ஏய், ஏய், கண்களை விரிச்சுப் பார்க்காதே- அப்படி எல்லாம் எங்களுக்குள்ள ஒண்ணுமே நடக்கலே. ‘காதலாவது கத்தரிக்காயாவது- அவங்க ஐயரு, நம்ப எல்லாம் முதலியார்- சின்ன வயசுக் கவர்ச்சி- அவ்வளவே தான்.

“அவளோட புத்திசாலித்தனமும் சமர்த்தும் என்னைக் கவர்ந்தது நிஜம் தான். அவளோட அத்தை பையன் ஒருத்தன் டாக்டருக்குப் படிச்சிட்டிருந்தான். அவன் எனக்குப் போட்டின்னு நானா நினைச்சு எரிச்சல் பட்டேன். நான் இதை விடப் பெரிய டாக்டரா ஆகிக் காட்டறேன்னு மனசுக்குள்ளேயே சவால் விட்டேன்.

“நான் மேலே படிக்க இங்கிலாந்து போனப்புறம் தான் தெரிஞ்சது. திலகா எழுதியிருந்தா- அந்த அத்தை பையன், யாரோ ஒரு அமெரிக்கப் பெண்னைக் கலியாணம் செஞ்சுக்கிட்டானாம். பாவம். சைலஜாவுக்கு மெடிக்கலுக்கு ‘சீட்’டும் கிடைக்கலியாம். அவ மனசு எப்படி ஒடிஞ்சு போயிருக்கும்?” இங்கே சிறிது நிறுத்தினான் ஆடலரசு. ‘கட கட’வென ஒரு தம்ளர் தண்ணீரை அருந்தினான்.

அமுதா தொடர்ந்து சொல்லலானாள். ‘இப்போ கட்டிகிட்ட அமெரிக்கப் புருஷனையும் விவாகரத்து செய்துட்டு இங்க தனியா இருக்காங்க. உங்களை, அதாவது சின்னப் புள்ளையில இருந்து தெரிஞ்சவங்களை சந்திக்க அவங்க விரும்பல. அதனால நீங்க அவளுக்கு எப்படியாவது உதவணும். அவங்களுக்கு ஏதாவது மனக்கஷ்டம் இருந்தா ‘ட்ரீட்மென்ட்’ குடுக்கணும்னு யோசிக்கிறீங்க இல்லியா?” என்றாள்.

“அமுதா, நீ பெரிய சைக்காலஜிஸ்ட். எப்படி என் மனசுல இருக்கிறதைக் கண்டு பிடிச்சே,” என்றான் வியப்பு பொங்க.

“இதுக்கென்ன பெரிய சைக்காலஜி வேணும்? அன்னிக்கு டாக்டர் சுவாமிநாதனோட மணிக்கணக்கா போன்ல பேசிட்டு பண்ணிட்டு இருந்தீங்களே- ‘என் பழைய குடும்ப நண்பர்’ என்றீர்கள். ஒண்ணும் ஒண்ணும் இரண்டு. சரி. எப்படி இதை ‘அப்ரோச்’ பண்ணப் போறீங்களாம்?” என்றாள் அமுதா.

“உன்னுடைய ஒத்துழைப்பு எனக்கு வேணும். நான் தனியா ஏதாவது செய்யப்போனா தப்பா எடுத்துக்கிட்டு இன்னும் ‘அப்ஸெட்’ ஆயிடப் போறாங்களோன்னு பயமா இருக்குது அமுதா. அடுத்த வாரத்தில ஒருநாள் திடீர்னு சொல்லாம கொள்ளாம- நல்லாத்தான் இருக்காது- என்ன பண்றது- அவங்க பங்களாவுக்குப் போயிடலாம் விஸிட் பண்ணறதுக்கு. பாதிக்கதை இப்போ தெரியும். மீதி அப்போ புரியும்னு நினைக்கிறேன்.

“அவங்க எனக்கு ஒரு தேவதை மாதிரி அமுதா- எட்டாத இடத்துல இருந்ததால, அவங்களைப் பார்க்கிறதே ஒரு வரம் என்று மனசில தோணியிருந்தது. ஒட்டடைக் குச்சி மாதிரி ஒரு அத்தை பையன் அவளைக் கட்டிக்கப் போறானேன்னு எனக்கு எரிச்சல். அவள் மேல இருந்த அன்பு- அதான் பாரதியார் பாடியிருக்காரே- லக்ஷ்மி காதல், சரஸ்வதி காதல் என்று- அது மாதிரி இதுவும் ஒண்ணுன்னு வைச்சுக்கோயேன். அது தான் என் லட்சியங்களை உருவாக்கி, பாதை காட்டியது.

“யாரோ அருண் சர்மாவாம்- ஒரு ஆர்டிஸ்டோட இரண்டு மூணு வருஷம் இருந்திட்டிருந்தாங்களாம். அவன் போனவாரம் திடீர்னு எங்கேயோ போயிட்டானாம். எதையோ இழந்து விட்டு சைலஜா தேடிக்கிட்டு இருக்காங்க மாதிரிப் படுது, பீடத்திலிருந்து இறங்கி விட்ட என் தேவதையைத் திரும்ப அலங்கரித்து, அழகு செய்து, பீடத்தில் ஏற்ற வேண்டும். நீ உதவுவாயா?” டேபிளின் குறுக்கே கரத்தை நீட்டி அவளுடைய கரத்தைப் பற்றித் தன் கன்னத்தில் பதித்துக் கொண்டான்.

“சரி, நல்லா பிளான் பண்ணனும். சாப்பிட்டு எழுந்திருங்க,” என்றாள் அமுதா.

——————————-%—————————————

நகரின் பிரபல சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் சுவாமிநாதனைப் பார்த்து விவரமாகப் பேசினான் ஆடலரசு. ‘தனக்கு மிகவும் வேண்டிய குடும்ப நண்பர், தங்கை போல,’ என்று விவரித்தான். தயங்கித் தயங்கி, பெயரைக் கூறியதும் டாக்டர் சுவாமிநாதன் ஆச்சரியத்தில் புருவங்களை உயர்த்தினார். “ரொம்ப நாளாகத் தெரியுமே. அவ்வப்போது கன்ஸல்டேஷனுக்கு வருவார்கள். அவர்கள் ஒரு மனநோயாயாளி. அவர்கள் மனது மிகவும் தளர்ந்து போயிருக்கிறது.

“இதில் என்ன ப்ராப்ளம் என்றால், டாக்டர் அரசு, அவங்களுக்கு நெருங்கிய குடும்பம் அல்லது உறவினர்களோ இல்லையோ அல்லது வேணுமென்றே இவர்கள் அவங்க உதவியை எதற்கும் நாடாமல் இருக்கிறார்களோ என்னவோ- மனம் திறந்து பேச நம் அனைவருக்குமே ஒரு துணை தேவை. அவங்க செக்ரெடரி ப்ரியான்னு ஒரு பெண் தான், ‘அப்பாயின்ட்மென்ட்’ வாங்கி, அவங்க கூட இங்க வருவாங்க….

“கடந்த கால நிகழ்ச்சிகளை, குழந்தைப் பருவ சந்தோஷ நாட்களை, நினைவு கூர்ந்தாலோ, அவற்றைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களையோ உறவினர்களையோ சந்தித்தால் கூட இவர்களை ‘ட்ரீட்’ செய்வது மிகவும் சுலபமாகி விடும். நீங்களும் உங்கள் மனைவியும் உதவினால் மிக நன்றாக இருக்கும்,” என்றார்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

திங்கட்கிழமை மாலை. ஏற்கெனவே பிளான் செய்திருந்தபடி ஆடலரசும் அமுதாவும் ஏழுமணி அளவில் ஷீலாவின் பங்களாவை அடைந்தனர். போர்டிகோவில் வந்து நின்ற காரைப் பார்த்ததும் ரமணி அம்மாள் வந்து விசாரித்தாள். “ஏழுமணிக்கு மீட் பண்றேன்னு போன் செய்திருந்தாங்க,” என்று பெரிய பொய் ஒன்றைச் சொன்னான் ஆடலரசு.

உள்ளே மெஸேஜ் கொடுக்கப் போனாள் அம்மாள். முதலில் ஷீலா மறுக்கப் பார்த்தாள். ஆனால் சிறிது யோசித்த பின்பு, வாசலிலேயே வந்து நிற்பவர்களைத் திருப்பி அனுப்புவது நாகரீகம் ஆகாது என்ற வெளிப்பூச்சுக்குக் கட்டுப் பட்டுப் போலியாக வரவழைத்துக் கொண்ட நட்புரிமையுடன், “ஹாய் டாக்டர் ஆடலரசு,” என்றபடி தடாலென்று வரவேற்பறையில் நுழைந்தாள்.

ஆடலரசு தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான். உடலைத் தழுவிய வெள்ளை நிறக் கஃப்தான்- தோளில் புரண்ட, பளபளக்கும் கற்றையான முடி, எடுப்பான நாசி, சுடர்விடும் கண்கள் சற்றே மங்கி இருந்தன. கை, காது, கழுத்து, நெற்றி எல்லாம் வெறுமை. ஒல்லியான உடல்வாகுடன் ஒரு தேவதை போல் நின்றவளின் கோலத்தை மனதில் பதித்துக் கொள்ள முயன்றான். ஆனால் அங்கே ஒரு பதினாறு வயது மங்கையல்லவா தகதகக்கும் பட்டுப் பாவாடை தாவணியில், சாட்டை போன்ற பின்னல் அசைந்தாட, பாதசரங்கள் கிணுகிணுக்க, கைவளைகள் கொஞ்ச, கோவை இதழ்கள் துடிக்க, ஜிமிக்கிகள் கன்னத்தை முத்தமிட்டு ரகசியம் பேச, ‘வேலன் வருவாரோடி, மானோடி வந்ததென நானோடி வந்தேனிங்கு,’ என்று அபிநயம் பிடித்தபடி ஆடிக் கொண்டிருந்தாள்.

கணங்கள் யுகங்களாகக் கழிந்தன- அமுதா தான் நிசப்தத்தைக் கலைத்தாள். “ஹலோ மேடம், நான் அமுதா ஆடலரசு. இவர் உங்களை ரொம்ப நாள் கழித்துச் சந்தித்ததிலே அப்படியே பேச்சிழந்து போய் விட்டார்,” கல கல வென நகைத்தபடி உரிமையுடன் ஷீலாவின் அருகே சென்று அவள் கரங்களைப் பற்றினாள்.

ஷீலா, ‘சடக்’கென்று எழுந்த எரிச்சலை உள்ளழுத்தி மூடியவள், “உட்காருங்களேன். ரொம்ப வருஷங்களாயிற்று இல்லையா? உங்கள் குழந்தைகள் எங்கே?” என்று சகஜ பாவத்துடன் உரையாட முயன்றாள். கண்கள் அலைபாய்ந்ததில் இருந்தும், மேல்பூச்சாகத் தோன்றிய பேச்சிலிருந்துமே ஆடலரசு “இவள் ‘நார்மலா’க இல்லை என்று உணர்ந்து கொண்டான். சிறு பறவை போல மனம் இங்கும் அங்கும் தாவுவதை உணர்ந்தான். கண்களின் வெற்று நோக்கும் உயிரற்ற பளபளப்பும் அவனைப் பயமுறுத்தியது. ஏதாவது பேச வாய் திறந்தால் அழுது விடுவோமோ என்று நினைத்தான்.

அமுதா தான் ஆபத்பாந்தவனாகப் பேச ஆரம்பித்தாள். “திலகாக்கா என் கிட்ட உங்களைப் பற்றி எத்தனை கதைகதையாச் சொல்லியிருக்காங்க- நல்லாப் பாடுவீங்களாம்- டான்ஸ் ஆடுவீங்களாம்- எதுக்கெடுத்தாலும் திலகாக்கா, ‘எங்க சைலஜா மாதிரி ஒரு பொண்ணு இனிமே பிறந்து தான் வரணும். அவளோட கொஞ்ச நாள் நட்பா இருந்ததுக்கே நான் இப்படி மாஞ்சு போறேன்னா, அவ எவ்வளோ உசத்தி என்று பாத்துக்கயேன்,’ என்று சொல்லிகிட்டே இருப்பாங்க

“பழைய சினேகிதத்தை நம்ப புதுப்பிச்சுக்கணும் மேடம்- நீங்க எங்க வீட்டுக்கு வரணும்,” அமுதாவை ஷீலா இடைமறித்தாள். முதல் முறையாகக் கடினம் நெகிழ்ந்து பூத்த சிறு முறுவலுடன், “முதல்ல நீ என்னை ‘மேடம்’ என்று கூப்பிடாதே. பேரைச் சொல்லிக் கூப்பிடறியா?” என்றாள்.
“சரி, சைலான்னு கூப்பிடறேன். அப்பத்தான் அந்த நாட்கள் போல இருக்கும். ஏங்க, அது தானே சரி?” கணவனை நோக்கினாள் அமுதா. இறுக்கம் தளர்ந்து வரும் சூழ்நிலையைச் சந்தோஷமாக அனுபவித்தபடி, “ஆமாம் சைலஜா, நாமெல்லாம் பழையபடி சிறுவர்களாகவே ஆகி விடலாமென்று தோன்றுகிறது. எத்தனை கவலையற்ற வாழ்க்கை,” என்றான்.

ஷீலாவைப் புண்படுத்தாத விதத்தில் நாசுக்காக அவள் கடந்த காலம் பற்றிய கேள்விகளைத் தவிர்த்து, தங்கள் குடும்பம், திலகா குடும்பம், பொழுது போக்கு, இளமைக்காலம் இவை பற்றி ஒரு மணி நேரம் அரட்டை அடித்து விட்டுக் கிளம்பும் போது அமுதா, “சைலா, எங்க குழந்தைகள் மகாபலிபுரம் பார்த்ததே இல்லை. அடுத்த ஞாயிறு போகலாம்னு இருக்கோம். ப்ளீஸ், நீங்களும் வாங்களேன்,” என அழைப்பு விடுத்தாள்.

கருமேகமென்ற திரை விலகி, கீற்று நிலா எட்டிப் பார்ப்பது போல, அந்த ஒரு சிறு பொழுதில் மனத்தில் இட்டிருந்த தாபத்திரை விலகி, மகிழ்ச்சிக் கீற்று சைலஜாவிடம் நிலாவென எட்டிப் பார்த்தது.

அவளுடைய பதிலை ஆவலாக எதிபார்த்திருந்தனர் இருவரும். “சரி, வர முயற்சிக்கிறேன்,” என்ற பதிலை நிச்சயம் வருவாள் என்று எடுத்துக் கொண்டு விடை பெற்றனர்.

——————————–%—————————————-

அமுதாவும் ஆடலரசும் ஏன் குழந்தைகள் சுரேஷும் சுமதியும் கூட ஆச்சரியப்பட்டனர். சைலஜாவுடன் இவ்வளவு உற்சாகமாக மகாபலிபுரத்துக்கு வந்து ரசிப்போம் என்று கனவு கூடக் காணவில்லை. கடந்த இனிமையான இளமைப் பருவத்தின் ஒரு நிழல் அது; அதற்காக ஒப்புக் கொண்டாள். தன் மனமும் லேசாகி பஞ்சு போல மேகக் கூட்டங்களிடையே மிதந்தாள்.

எத்தனை வெளிநாட்டுக்காரர்களை, அவர்கள் பிஸினஸ் நிமித்தம் வரும்போது அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள். மேல் பூச்சாகக் காட்டி விட்டு அவர்கள் காமிராவை ‘க்ளிக்’ பண்ணி நிரப்பிக் கொள்ளும்வரை காத்திருந்து பிறகு கிளம்பி விடுவாள். இன்று தான் அவளே முதல்முறையாகப் பார்ப்பது போலக் குதூகலம்- உற்சாகம்- போலி முகமூடி தேவையில்லாததால் ஏற்பட்ட விடுதலை உணர்வா அது?

“இதைப் பார் சுமதி, அதைப் பாரடா சுரேஷ்,” என்று குழந்தைகளிடம் காட்டியபடி தன்னை மறந்து அவள் பாறைச் சிற்பங்களிடையே நடந்தாள். சிற்பங்களின் அழகில் லயித்துத் தன்னை மறந்தபடி நடந்தாள்.

ஆடலரசும் அமுதாவும் ஒருவரை ஒருவர் நோக்கி மகிழ்வுடன் வெற்றிப் புன்னகை பூத்துக் கொண்டனர்.

தாகத்துக்கு வெள்ளரிப் பிஞ்சுகளை வாங்கி ‘வெடுக் வெடுக்’ என்று கடித்துச் சாப்பிட்ட போது தான் பழைய ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாள் சைலஜா. “அமுதா, அப்போ சின்னப் பசங்களா இருக்கிறப்போ, உங்க ஆடலரசு எங்க வீட்டு மாமரத்துல ஏறி உட்கார்ந்து எங்களுக்கெல்லாம் மாங்கா பறிச்சுக் கொடுப்பார். திலகா எப்போதும் சண்டை போடுவா. அவங்க வீட்டு மரம் என்பதாலே சைலாவுக்கு மட்டும் நல்ல பெரிய காய்களா பறிச்சுத் தரேண்ணா என்று கத்துவாள்,’ என்று நகைத்தாள்.

வாழ்க்கை இனிமையானது தான்- முட்களை மறந்து விட்டு ரோஜாக்களை மட்டும் ரசிக்கக் கற்றுக் கொண்டால், இனிமையானது தான். ஆனால் முட்கள் இருப்பதாலும், அவை குத்தும்போது வலிப்பதாலும் தான் ரோஜாவின் இருப்பும் அதன் மென்மையும் உயர்வாகத் தெரிகின்றன. சும்மாவா சொன்னார்கள்- வெயிலில் திரிபவனுக்குத் தான் நிழலின் அருமை தெரியுமென்று?

அது போலத் தான் சைலஜாவின் வாழ்க்கை என்னும் வறண்ட பாலைவனத்தில், அதில் அவ்வப்போது அவள் கண்டு ஏமாந்த கானல் நீரில் உணர்ந்த வெறுமை, அமுதா ஆடலரசின் வரவால் திடீரென்று பசுமை நிறைந்ததாக மாறி விட்டது போலிருந்தது.

இருந்தாலும் கூட ஒரு பெரிய கேள்வி ஷீலாவின் முன்பு விசுவரூபம் எடுத்து நின்றது. குழப்பத்திலும் அலட்சியத்திலும், போலித்தனமாக வாழ்ந்த வாழ்வில் நிறைய ஒட்டடைகள், அழுக்குகள் சேர்ந்து இப்போது அவளுக்கே ஒருவிதமான அருவருப்பை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன. அவற்றைச் சீர் செய்து சுத்திகரிக்க வேண்டும். தன் பாதையைச் செப்பனிட வேண்டும்.

ஒரே கல்லும் முள்ளுமாக இருக்கிறதே- எப்படித் தொடர்ந்து நடப்பது? எங்கே போவது? முடிவில்லாத அந்தகாரம் தான் தெரிந்து கொண்டிருந்த பாதையில் இப்போது ஒளி கீற்றாகத் தெரிகின்றது. ஆனாலும் தனியாகத் தொடர்ந்து பயணிக்க, இருட்டில் பயணம் செய்த போது ஏற்படாத பயம், இந்த ஒளியில் ஏன் ஏற்படுகிறது? யார் துணைக்கு வருவார்கள்? ஜிம் வருவானா? இத்தனை நாட்களின் பின்பு வருவானா? வேண்டாம் என்று பிடிவாதமாகப் பிரிந்து வந்த அவளை மதித்து வருவானா?

இரவின் தனிமை பயமுறுத்துகின்றதே- என் பயணம் இனி எப்படித் தொடரும்? எங்கே தொடரும்? யாருடன் தொடரும்? சிந்தனை வலையிலகப்பட்டு உள்ளம் பதற, மனது பரிதவிக்கும் போது வெட்கமே இன்றி ‘சூப்பர் உமன்’ ஷீலா அழுதழுது தலையணையை இரவெல்லாம் நனைத்தாள். அழுது களைத்து உறங்கினாள்.

இது யார் ஜிம்மின் அருகே ஒரு பெண்? அவனுடைய இரண்டாவது மனைவியாகத்தான் இருக்க வேண்டும். ஷீலாவின் நெஞ்சை அடைத்தது. அவள் எல்லாம் இழந்து நிற்கும் போது தானா ஜிம் இப்படி அவள் முன்பு தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்?
உறக்கத்திலேயே விம்மி விம்மி, கண்ணைத் திறந்து விழிப்புக் கொடுத்த போது அது கனவு தான் என்று தெரிந்ததில் பெரும் நிம்மதி ஏற்பட்டது. அப்படி ஏற்பட்ட நிம்மதி அவளுக்கே ஆச்சரியத்தை விளைவித்தது.

(தொடரும்)

மறு பகிர்வு: தாரகை இணைய இதழ்

^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *